Thursday, April 7, 2011

தலைக்கறி மான்மியம்

தலைக்கறியில் எனக்கு ரசனையை ஏற்படுத்தி உசுப்பேற்றி விட்டவன் ரவீந்திரன்.


“அண்ணை... உங்களுக்குத் தெரியுமா... மீன் தலை சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது, கொலஸ்ட்ரோலையும் கட்டுப்படுத்தலாம்” என்கிற மேலதிக வைத்தியத் தகவலையும் சேர்த்துத் தலைக்கறியின் ருசியை அவன் விளக்கிய போது நாக்கில் ஜலம் ஊறியது. அப்படித்தான் அவன் சொன்னான்.

திணைக்களத்தில் என்னோடு கடமை செய்த ரவீந்திரன் தகவல்களை அச்சொட்டாகச் சொல்லுவான். எங்கள் குழுவில் அவன் வயதில் குறைந்தவன் என்ற போதும் எதையும் சுவையாகவும் உரிய சொற்களையும் பயன்படுத்திப் பேசத் தெரிந்தவன் என்பதால் ஒரு சமவயதுத் தோழனாகவே இருந்தான்.

முதன் முதலாக மீன் தலை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் நான் ஒரு பெரிய சிக்கலை எதிர் நோக்கினேன். என்னைத் தவிர வேறு யாரும் அந்தக் கறியில் கரிசனை காட்டவில்லை. வீட்டிலுள்ள ஏனையவர்கள் தமக்கென வேறு கறி ஆக்கிக் கொள்ள நான் தலைக் கறியில் புகுந்து விளையாடுவேன். ஒரு பெரிய மீன் தலையை நான் மட்டும் சாப்பிட்டாக வேண்டியிருந்தமையாலும் அதன் ருசியில் என்னை மறந்திருக்க வேண்டியிருப்பதாலும் சாப்பிட உட்காரும் போது ஒரு போர் வீரனைப் போல் அல்லது ஒரு விளையாட்டு வீரனைப் போலத் தயார் பண்ணிக் கொண்டே களத்தில் இறங்குவேன். சாப்பிட்டு முடியும் வரை உலகத்தின் எல்லாத் தொடர்புகளை விட்டும் என்னை அறுத்துக் கொள்வேன். போனில் என்னை யாரும் அழைத்தாலும் அதற்கு நான் பதில் சொல்வதில்லை என்றால் என் ஏற்பாடுகள் எப்படியிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.

இப்படியாக நான் இன்புற்றிருக்கும் காலத்தில் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு ஒரு சுற்றுலா செல்லக் கிளம்பினேன். முதலில் போய் இறங்கியது மலேசியாவில். எனது மலேசிய நண்பர் அவ்வேனை கனடாவில் இருந்தமையால் விமான நிலையத்தில் எம்மை வரவேற்கத் தனது மைத்துனரையும் அவரது நண்பரையும் அனுப்பியிருந்தார். கோலாலம்பூர் சென்று இறங்கிய போதே பகல் ஒரு மணி ஆகிவிட்டது. அவர்கள் எம்மை ஏற்றிக் கொண்டு கோலாலம்பூர் பெரு நகரத்துக்குள் இருந்த ஒரு மாபெரும் உணவகத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

அங்கே சோறு, மரக்கறி எல்லாம் வைத்து விட்டு கடைசியாக முழுதாகச் சமைக்கப்பட்ட ஒரு பென்னம் பெரிய மீன் தலையைக் கொண்டு வந்து மேசை நடுவில் வைத்தார்கள். பிள்ளைகளுக்கு சதைப் பகுதிகளைப் பிய்த்துக் கொடுத்து விட்டு மீதியில் பெரியவர்கள் கை வைத்தோம். நம்பமாட்டீர்கள்! பிள்ளைகள் மூவர் தவிர பெரியவர்கள் ஐவர் சாப்பிட்டும் மீன் தலையை முற்று முழுதாகச் சாப்பிட்டு முடிக்க முடியவில்லை.

அதன் பிறகு மீன் வாங்கப் போகும் போதெல்லாம் மீன் வெட்டும் இடத்துக்கு எனது பார்வை செல்லும். அந்த இடத்தில் மீன் தலை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் ஏனைய மீன்களில் கவனம் செலுத்துவேன். எனது வீட்டுக்கு முன்னாலுள்ள மீன் தட்டுப் பிரபல்யமானது. அங்கேயே தொடர்ந்து நான் மீன் வாங்குவதாலும் அதற்கு அண்மையில் வாழ்வதாலும் மீன்காரர் எனது மீற்றரைப் பிடித்து வைத்திருந்தார். கடைக்குள் நுழைந்ததும் மீன் தலை இருந்தால் ‘தொர... நல்ல்ல மீன் தலை இருக்கு!’ என்று சொல்லியபடி எனது பதிலுக்குக் காத்திருக்காமலே வெட்டிப் பார்சல் பண்ணி விடுவார்.

நண்பர்களுக்கிடையே கதைக்கும் போதும் உணவு பற்றிய கதையோ, கொலஸ்ட்ரோல் கதையோ வந்து விட்டால் உடனே நான் மீன் தலையைச் சிபார்சு செய்ய ஆரம்பித்தேன். இன்று வரை இந்த இலவச மருத்துவக் குறிப்பை நான் தொடர்ந்து வழங்கி வருகிறேன். ஆகக் குறைந்தது நூறு பேரளவிலாவது எனது குறிப்பைப் பயன்படுத்தி இதயத் தாக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டிருக்கலாம் என்பது எனது கணிப்பு.


இந்த இடத்தில் இதயத் தாக்கிலிருந்து தவிர்ந்து கொள்ளும் புதிய மருத்துவக் குறிப்பு ஒன்றையும் தந்து விட நினைக்கிறேன். மலேசிய பல்கலைக் கழகத்தின் உயிரியல் விஞ்ஞானப் பிரிவுப் பேராசிரியை டாக்டர் எஸ்.விக்னேஸ்வரி தெரிவித்துள்ளதாக இந்தக் குறிப்பு எனக்கு மின்னஞ்சலில் வந்தது. இதய நரம்புக் குழாய்களின் அடைப்பு மூலமே இதயத் தாக்கு ஏற்படுகிறது. பின்வரும் மருந்தை உபயோகித்து வந்தால் இதய அறுவை சிகிச்சைக்கோ நரம்புகளின் அடைப்பை நீக்கும் ‘என்ஜியோகிராம்’ செயற்பாட்டுக்கோ ஒரு போதும் அவசியமில்லை என்கிறது அந்தக் குறிப்பு.

தேசிக்காய்ச் சாறு , இஞ்சிச் சாறு , வெள்ளைப் பூண்டுச் சாறு , அப்பிள் வினாகிரி ஆகியவற்றை தலா ஒரு குவளை எடுத்து ஒன்று சேர்த்து அரை மணி நேரத்துக்கு மத்தியமான சூட்டில் காய்ச்ச வேண்டும். அதன் பிறகு இறக்கி நன்றாக ஆறவிட வேண்டும். நன்கு ஆறிய பிறகு சுத்தமான தேன் மூன்று குவளை சேர்த்துக் கலக்கி ஒரு போத்தலில் இட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை உணவுக்கு முன்னர் இதிலிருந்து ஒரு மேசைக் கரண்டி அளவில் எடுத்துச் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான நரம்புக் குழாய் அடைப்பும் நேராது என்று பரிசோதனைக் குழாயில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார் டாக்டர்!

மேற்குறிப்பிட்ட தகவலின் உண்மைத் தன்மை எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதில் சொல்லப்படும் பொருட்களைப் பார்க்கும் போது உண்மையாகத்தான் தெரிகிறது. பயன்படுத்த நினைப்பவர்கள் பேராசிரியையுடன் தொடர்பு கொண்டு ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. அப்படித் தொடர்பு பட நினைப்பவர்கள் “இதைச் சாப்பிட்டு வந்தால் நூறு வருடம் தாண்டியும் வாழலாமா?” என்றெல்லாம் கேனத்தனமாகக் கேள்வி கேட்டு நாட்டு மானத்தைப் போக்காமலிருந்தால் நல்லது.

நாம் நமது மருந்துக்கு வருவோம். மீன் தலையைப் பால் கறி சமைக்காமல் மசாலாவெல்லாம் போட்டுச் சமைத்தால் அதன் ருசி அந்த மாதிரி இருக்கும். மீனின் கண்பகுதி, அதன் மூளைப் பகுதிகளை உறுஞ்சுவது உச்ச ருசி. மீன் தலைகளில் அறுக்குளா மீனின் தலை ஏனையவற்றை விட ருசியானது. ஏனைய மீன் தலைகளும் ருசியானவைதாம். ஆனால் அறுக்குளா தவிர்ந்த ஏனைய மீன் தலைகளைச் சாப்பிட்ட பிறகு மற்றவர்களின் மேல் னாரணமின்றி எந்நேரமும் குறை சொல்வோரின் செயற்பாட்டைப் போல் தொடர்ந்து நாற்றமாயிருக்கும். நான்கு முறை சவர்க்காரம் போட்டாலும் நாற்றம் போகாது. ஆனால் எல்லா மீன் தலைகளும் ருசியானவைதான். நாற்றம் வருகிறது என்பதற்காகச் சுவையான உணவைத் தவிர்க்க முடியுமா?

தமிழ் நாட்டுக்குச் சென்றால் மதிய, இரவு உணவுக்காக தலைக் கறி தேடித் திரிவது எனக்கு வழக்கமாகிவிட்டது. நண்பர்களுடன் கடைசியாகச் சென்ற போது கிடைத்த விருந்துகளைத் தவிர நாமே வாங்கிச் சாப்பிட்ட அனைத்துச் சாப்பாடுகளிலும் தலைக்கறி இருந்தது. தமிழகத்தின் ஒடுக்கத் தெருக்களில் ஆங்காங்கே சிறிய சிறிய உணவுக் கடைகள் இருக்கும். இந்தக் கடைகளில் தலைக் கறியோடு சாப்பிடும் சாப்பாட்டுக்கு நிகரான உணவு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் கூடக் கிடைக்காது. இப்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் கூட ஓலை மட்டை வேய்ந்து மண்பானை வைத்து நாட்டுப் புறப் பெண்கள் சமைக்கிறார்கள் என்பது நீங்கள் அறிந்ததே. வெளிநாட்டவர்கள் இந்த உணவுகளை டொலர்களுக்கும் யூரோக்களுக்கும் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

கொழும்பில் உள்ள மிகப் பிரபலமான, சுவையான சீன உணவகத்துக்கு அண்மையில் உணவருந்தச் சென்றோம். அங்கு கணவாய் மீன் கொண்டு மிக ருசியான உணவு வகை ஒன்று தருவார்கள். அதைக் கேட்ட பிறகு என்ன விசேடமான உணவு இருக்கிறதெனக் கேட்டேன். பெரிய மீன் தலை ஒன்று சமைத்துத் தரட்டுமா என்று கேட்டார் வெயிட்டர். எனது பதில் என்னவாயிருந்திருக்கும் என்று நிங்கள் தீர்மானித்திருப்பீர்கள்தானே. அந்த உணவகத்துக்கு தென்னாசிய நாடுகளிலிருந்து மட்டுமல்ல மேற்கத்தைய வியாபாரிகளும் கூட உணவருந்த வருவார்கள். இதன் மூலம் நான் உணர்த்த வருவது தலைக் கறியின் மகிமையைத்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் ‘டியூப் லைட்’ நோய் தீர்க்கும் நாட்டு வைத்தியரைப் பார்ப்பது நல்லது.

தலைக்கறி உடம்புக்கு நல்லது என்றிருந்தும் அது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் முக்கிய உணவாக மாறிவிட்டது என்று அறிந்தும் இன்னும் கூட அதை ஒரு மிக அற்பமான உணவாகக் கருதும் பலர் இருக்கிறார்கள். அது ஒரு வெற்று கௌரவம்தான். இவ்வாறான நபர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றால் மீன் தலையை முழுசாகவே முழுங்கி விடுவார்கள்.

மீன் தலை கௌரவக் குறைவு பற்றி இரண்டு சம்பவங்களை நான் இப்போது சொல்ல வேண்டும்.

நண்பர் கிண்ணியா அமீர் அலி என்னைப் போலவே மீன் தலையபிமானி. வீட்டில் மீன் தலை சமைத்த ஒரு தினத்தில் நண்பர் யூனுஸ் கே. ரஹ்மான் அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அன்றிரவு மீன் தலை விருந்து சாப்பிட்டு விட்டுத் திரும்புகையில் கலைவாதி கலீலைச் சந்தித்து மீன் கறி விருந்து பற்றிச் சொல்லியிருக்கிறார். கலைவாதி நவமணி பத்திரிகையில் அவரது கிண்டல் பாணியில் ஒரு கடுகுக் கதை எழுதி விட்டார். அமீர் அலி பொங்கி எழுந்து கொஞ்ச நாள் கலைவாதியைத் தேடியலைந்து திரிந்தார். அண்மையில் அமீர் அலி இந்த முழுச் சம்பவத்தையும் என்னிடம் சொல்லிச் சிரித்தார்.

கடைசியாக தமிழகம் இருந்து திரும்பியதும் தலைக் கறி சாப்பிடுவது ஒரு மேனியாவாகவே மாறி விட்டது. இன்று இருவர் விருந்துக்கு வருகிறார்கள் என்று சொல்லி ஒரு முறை, ஒரு பெரிய மீன் தலையைக் கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்தேன். வரும் இருவருமே மீன் தலை அபிமானிகள், எனவே இதை மட்டும் சமைத்தால் போதும் என்றேன். விருந்துக்கு வருவோருக்கு மீன் தலை சமைத்துக் கொடுப்பதா? உங்களுக்கு வெட்கமில்லையா? என்று கேட்டு மறுத்தே விட்டாள். எனக்குப் பெரிய பிரச்சினையாகப் போய்விட்டது. அப்படியானால் கோழியும் வாங்கித் தாருங்கள், இரண்டையும் சமைத்துத் தருகிறேன் என்று ஒத்துக் கொண்டாள். வேறு வழியில்லாமல் கோழியும் வாங்கிக் கொடுத்தேன். கடைசியில் விருந்துக்கு வந்த டாக்டர் ஜின்னாஹ்வும் கவிஞர் அல் அஸ_மத்தும் நானும் மீன் தலையை வேட்டையாடி முடித்தோம். கோழிக்கறிக் கோப்பை மேசையில் தேமேயென்று சும்மா கிடந்தது.

இப்போதும் டாக்டர் ஜின்னாஹ் வீட்டிலும் என் வீட்டிலும் எங்களுக்குள் விருந்து என்றால் அது மீன் தலைக் கறிதான். அஸ_மத் வீட்டில் அற்புதமான கோதுமை ரொட்டி கிடைக்கும். வாரத்துக்கு ஒரு வீட்டில் இந்த தலைக் கறி கிளப் கூடி மீன் தலையோ, முறுகச் சுட்ட கோதுமை ரொட்டியோ இலக்கியம் பேசியபடி சாப்பிடும். அதாவது மிக எளிமையான முறையில் சுவையான உணவைப் பகிர்ந்து கொண்டு இலக்கியம் பேசுதல் என்பது இதன் பின்னணி. இந்தக் கிளப்பில் யாராவது சேர விரும்பினால் அவர் மீன் தலைக்கறி அபிமானியாக மாற வேண்டும். எளிமையா உணவுதானே என்று பரோட்டாவை வாங்கிச் சீனியுடன் தொட்டுச் சாப்பிடக் கொடுத்தால் சரி என்ற எண்ணத்தில் இந்த கிளப்பில் சேர யாரும் முயற்சிக்க வேண்டாம்.

ரவீந்திரன் மறைமுகமாகக் கிண்டலடிப்பதிலும் கடும் கெட்டிக்காரன். மீன் தலைக்கறி கொலஸ்ட்ரோலுக்கு நல்லது என்று அவன் எனக்குச் சொன்ன காலப்பிரிவில் நான் மிகவும் ஒல்லியாகவேயிருந்தேன். எனக்கு உடம்பெல்லாம் கொழுப்பு என்று எவனாவது ரவீந்திரனிடம் போட்டுக் கொடுக்க அதற்காகவே ரவி என்னைத் தலைக்கறி சாப்பிடச் சொன்னானா என்று ஒரு சிறிய சந்தேகம் இப்போது எனக்குள் எட்டிப் பார்க்கிறது.

ரவி, இப்போது அமெரிக்காவில் இருக்கிறான். அநேகமாக இப்போது நன்றாக உடம்பு வைத்துப் பெரிய ஆளாக இருப்பான். மீன் தலையபிமானியான அவன் ஓர் அப்பாவிச் சிரிப்போடு அங்குள்ள மீன் சந்தைகளுக்குள் மீன் தலை தேடி அலைந்து கொண்டிருப்பான் என்பதை நினைக்கச் சந்தோசமாயிருக்கிறது.

(தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

sharthaar said...

தலைக்கறிக்கு என்னைப்போலாவே உயிரைக்கொடுக்கக்கூடிய இன்னும் பலர் இருக்கின்றார்கள் என்று தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி