இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் - 08.05
முற்குறிப்பு
20007ம் ஆண்டு சென்னையில் நடந்த மாநாடே இஸ்லாமிய தமிழ் இலக்கியம் அரசியலுக்கு அடிமைப்பட வழிகோலியது என்று நாம் ஏற்கனேவே சொல்லியிருக்கிறோம். அந்த அடிப்படையில் அம்மாநாடு பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகளும் நமது தளத்தில் இடம்பெற்று வருகின்றன. அந்த மாநாட்டின் செயலாளராகவிருந்த ஹிதாயத்துல்லாஹ் இலங்கை இணைப்பாளர்கள் மீது வைத்த குற்றச் சாட்டுகளுக்கு டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் கொடுத்த பதிலறிக்கையைத் தந்திருந்தோம்.
இது தவிர, சமநிலைச் சமுதாயம் இதழில் மலேசியப் பார்வை என்ற தலைப்பில் திரு மலையாண்டி அவர்களும் இலங்கைப் பார்வை என்ற தலைப்பில் நானும் இந்தியப் பார்வை என்ற தலைப்பில் மரியாதைக்குரிய அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்களும் கட்டுரைகள் எழுதியிருந்தோம். திரு மலையாண்டி அவர்களின் கட்டுரை ஏற்கனவே நமது தளத்தில் இடப்பட்டு நீங்கள் படித்திருப்பீர்கள்.
இங்கே அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்கள் “இலக்கிய தர்பார்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை இடம் பெறுகிறது. கட்டுரையின் நீளம் கருதி சில பகுதிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதற்காக மரியாதைக்குரிய நண்பர் அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்கள் என்னைக் குறை சொல்லமாட்டார் என்பது எனது நம்பிக்கை.
இதைத் தொடர்ந்து எனது “இலங்கைப் பார்வை” கட்டுரையின் சில பகுதிகளும் ஆகஸ்ட் 2007 இதழில் இக்கட்டுரைகள் பற்றி தமிழ்நாட்டு வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களும் மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா பற்றிய தொடர் கட்டுரைகளுடே இடம் பெறும்.
------------------------------------------------------------------------------------------------------
இலக்கிய தர்பார்
இலக்கிய மாநாடுகள் இனி தமிழகத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று என்னைப் போன்றவர்கள் கருதிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் பெயரில் ஒரு மாநாடு நடந்து முடிந்த விட்டது என்பதில் மகிழ்ச்சிதான். மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளில் காணப்பட்ட லட்சணங்களை வைத்து இம்மாநாட்டில் குளறுபடிகள் மலிந்து கிடக்க வாய்ப்புண்டு என்ற ஒரு தயாரிப்பு மனநிலையில் சென்ற எனக்கு மார்க்க அறிஞர் அரங்கை ஏற்பாட்டாளர்கள் புறக்கணித்ததைத் தவிர்த்து மற்ற அரங்குகள் எப்படியோ நடந்தேறிவிட்டதில், குறிப்பாக கலைஞர் கலந்து கொண்ட நிகழ்வில் அரங்கு நிறைந்து காணப்பட்டதில் அப்பாடா ஒரு வழியாக இலக்கிய மாநாடு முடிந்து விட்டது என்ற திருப்தி எனக்கும் ஏற்பட்டது.
அத்தி பூத்தாற் போல் நடைபெறுகிற அனைத்துலக இலக்கிய மாநாடுகள் இலக்கியச் செழுமையையும் இனிய நினைவுகளையும் மணம் வீசச் செய்ய வேண்டும் என்பது அறிஞர்கள் மற்றும் கலைஞர்களுடைய எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை மாத்திரமல்ல, ஓர் அனைத்துலக மாநாட்டிற்கான இலக்கணத்தையும் சிதறடித்துவிட்ட மாநாடாக இம்மாநாடு அமைந்து விட்டது. மூன்று நான் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட ஒருவர் கூட தங்களது அதிருப்தியை வெளியிடாமல் செல்லவில்லை என்பது ஏழாம் மாநாட்டின் பொதுப் பண்பு. எங்காவது ஓர் ஊரில் ஷரீஅத் மாநாடோ, தப்லீக் இஜ்திமாவோ நடந்தால் இம்மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் அதை ஒரு முறை போய்ப் பார்த்து விட்டு வரவேண்டும் என்றுபேசிய போது அதை மறுக்க முடியவில்லை.
இந்த அனைத்துலக மாநாடு வெற்றி பெற்றதா? தோல்வியடைந்ததா, என்று அலச வேண்டிய நேரத்தில் ‘இதயங்கள் இணைப்புக்கு இலக்கியம்’ என்ற முத்திரை வாசகம் இந்த மாநாட்டுக்குப் பொருந்துமா என்றொரு பெரிய பட்டிமன்றம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அந்த வகையில் இந்த மாநாடு தோல்வி மாநாடு மட்டுமல்லாமல் தொல்லை மாநாடாகவும் ஆகிப் பலருக்கு வேதனை அளித்தது.
ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக நடத்தப்படுவதாக, ஜாம்பவான்களால் தம்பட்டம் அடிக்கப்பட்ட மாநாடு ஒரு மாநாடு எப்படி நடக்கக் கூடாது என்பதற்கான முன்னுதாரணமாகி விட்டது. அந்த முன்னுதாரணம் சென்னையில் நடைபெற்ற ஓர் அனைத்துலக மாநாட்டில் நடந்து விட்டது என்பது தமிழக முஸ்லிம்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் புரவலர்களுக்கும் ஏற்பட்ட தலைக்குனிவு.
இதைப் புரிந்தும் உணர்ந்தும் கொள்ள வேண்டியது, இதன் தோல்விக்கான காரணிகளை ஆராய வேண்டியது, இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று நினைக்கின்ற இலக்கியவாதிகள், புரவலர்களது கடமையாகும். இனிவரும் மாநாடுகளில் அத்தகைய தவறுகள் நிகழாமல் கவனித்துக் கொள்ள அது உதவும்.
மாநாட்டின் தோல்விக்கு முதன்மையான காரணம், இலக்கிய ஆர்வத்தை விடமேலோங்கியிருந்த தனியாவர்த்தன மனப்போக்கும் சுயவிளம்பரச் சிந்தனையுமேயாகும். அலட்சிய மனப் போக்கும் பாரபட்ச உணர்வும் இதன் துணையாகச் சேர்ந்து கொள்ள, மாநாடு ‘களை’ கட்டிக் கொண்டு விட்டது. இஸ்லாம் என்ற சமய அடையாளம் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கிராஅத் ஓதியதற்கு அடுத்த படியாக பர்வீன் சுல்தானாவின் பர்தாவில் வெளிப்பட்டது. வெல்டன்!
மாநாட்டுத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட விதமும் அதன் உள்ளடர்த்தியும் மாநாட்டின் தோல்விக்கு எடுத்துக் காட்டத் தகுந்த போதுமான ஒரே உதாரணமாகும்.
ஓர் அனைத்துலக மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட போதும் புரியவில்லை. அது பிரசுரமாகவும் தரப்படவில்லை. அடுத்த நாள் பத்திரிகையிலும் வரவில்லை. மாநாடு குறித்துப் பக்கம் பக்கமாக வினக்கம் எழுதிய ஏற்பாட்டாளர்கள், ஒரு மாநாடு அதன் தீர்மானங்களால் மதிப்படைகிறது, அத்தீர்மானங்கள் வெற்றி பெறுவதில்தான் அது உயிர் வாழ்கிறது என்ற தத்துவத்தை எப்படி அறியாமல் போனார்கள்?
வெத்து அறிக்கைகள் வெளியிடுவதற்கு அல்லது தன்னிலை விளக்கப் பேட்டிகளை அச்சேற்றுவதற்கு முயற்சி எடுத்தவர்கள், மாநாடு முடிந்து ஒரு மாதமாகிவிட்ட சூழ்நிலையில் - இன்று வரை அத்தீர்மானங்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சேர்க்கவில்லை. அவர்களது அறிக்கைகளையும் விளம்பரங்களையும் வெளியிட்ட பத்திரிகைகள் கூட அத்தீர்மானங்களை வெளியிடவில்லை. ஒரு வேளை இந்த மாநாடு பேராளர்களுக்கு மட்டும்தான் என்று அறிவித்தது போல தீர்மானமும் கலைஞருக்கு மட்டும்தான் என முடிவு செய்து விட்டார்களா என்பதும் தெரியவில்லை.
ஆய்வரங்குகள்தாம் இம்மாநாட்டின் சிறப்பம்சம் என்று பெரிதாகப் பேசப்பட்டது. நிறைய அரங்குகள் இருந்தது சரிதான். நிறைவாக இருந்ததா என்பதுதான் கேள்வி. ஒரு பிடிவாதத்திற்காக இத்தகைய அரங்குகளை ஏற்படுத்திய ஏற்படுத்திய அதே நேரத்தில் மாநாட்டு மைய அரங்கில் அருமையான தலைப்பில் அருமையான தலைப்பில் ஒரு கருத்தரங்கமோ விவாத மன்றமோ நடத்தியிருந்தால் பொதுமக்கள் பலர் பயன் பெற்றிருப்பார்கள். மார்க்க இலக்கிய அரங்கு, மகளிர் அரங்கு உள்ளிட்ட சில அரங்குகளில் கூட்டம் இருந்தது. அரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் பல பிரசுரிக்கப்படவில்லை என்று குறை கூறப்பட்டது. முஸலிம் அல்லாதோர் பலர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தது இவ்வரங்குகளின் சிறப்பம்சமாகும். திருவனந்தபுரத்திலிருந்து வந்திருந்த திருமலர் மீரான் அவர்கள் சொன்னது போல இலக்கிய கர்த்தாக்கள் பலருக்கு அது மட்டுமே மாநாட்டின் திருப்திக்குரிய விஷயமாக இருந்தது.
ஆனால், பொதுப் பார்வையாளரைப் பொறுத்த வரை எங்கே செல்வது என்ற குழப்பத்தில் அங்கும் இங்குமாக அல்லாடிக் கொண்டிருந்தார்கள். பொதுவான பார்வையாளர்கள் பலருக்கும் சனிக்கிழமை சனி பிடித்த கிழமையாக இருந்தது. அவர்களது அறிவுக்கோ, ரசனைக்கோ, இலக்கிய ஆர்வத்திற்கோ எந்தத் தீனியும் அன்று கிடைக்கவில்லை. ஒரு நுட்பமான அல்லது பல்கலைக் கழகங்கள் அளவில் மட்டுமேயான மாநாடு இப்படி ஆய்வரங்குகள் நிரம்பியதாக நடத்தப்படுவது பொருத்தமானதாக இருக்கலாம். பொதுமக்கள் மத்தியில் இலக்கிய தாகத்தை வளர்த்தாக வேண்டிய காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஒரு மாநாடு இத்தகைய ஆய்வரங்குகளால் கவனம் பெறத் தவறிவிட்டது என்பது உண்மை. பொது மக்கள் பயன் பெற்றுவிடக் கூடாது என்பதில் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மிக எச்சரிக்கையாக நடந்து கொண்டிருப்பதைக் காட்டுகிறது என்று அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருந்த ஒருவர் சொன்னது காதில் விழுந்தது.
சனிக்கிழமை மாலை என்ற பிரதான நேரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தனியாக சுவரொட்டி விளம்பரமும் செய்யப்பட்டிருந்த மார்க்க அரங்கம் ரத்துச் செய்யப்பட்டது மாநாட்டின் முகத்தில் பூசப்பட்ட கரி. கரியைப் பூசியது ஏற்பாட்டாளர்களா அல்லது முந்தைய நிகழ்ச்சியை நடத்தியவர்களா என்பதுதான் ஆராயப்பட வேண்டிய கேள்வி.
நிகழ்ச்சியில் பெயரிடப்பட்டிருந்த ஆலிம்களைக் குற்றம் சுமத்த முடியாது. அழைக்கப்பட்டிருந்த ஆலிம் பெருமக்கள் நால்வரில் ஒருவர் கூட நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் வராமல் போனதற்குக் காரணம் தகுந்த ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாததே. குறைந்த பட்சம் அவர்களுக்காக டிக்கற் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. மார்ச் மாதத்தின் மத்தியில் அவர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகு நிகழ்ச்சி நடப்பதற்கு ஏழு நாட்கள் முன்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களையே ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டு வரச் சொல்லுங்கள் என்று ஏற்பாட்டாளர்களால் சொல்லப்பட்டுள்ளது. மேமாதத்தில் போக்குவரத்து எப்படியிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். அதிலும் அழைக்கப்பட்ட அனைவரும் மிக மூத்த ஆலிம்கள்.
பொன்னம்பல அடிகளாருக்கும் அவரது உதவியாளருக்கும் விமான டிக்கற் வழங்கிய அளவிற்கு இல்லையென்றாலும் அதில் கால்வாசி முக்கியத்துவமாவது இந்த மூத்த ஆலிம்களுக்குத் தரப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவர்கள் நிகழ்ச்சியைத் தவிர்த்திருக்க மாட்டார்கள். ‘கவிக்கோவை யாராவது மூன்று மாதங்களுக்கு முன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கு ஒப்புதல் பெற்ற பிறகு வேறு எந்தத் தொடர்பும் கொள்ளாமல் இருந்து விட்டு நிகழ்ச்சியன்று ‘வந்துவிட்டீர்களா’ என்று கேட்டால் கவிக்கோ என்ன செய்வார்’ என்று ஓ.எம். அப்துல் காதிர் பாக்கவி கேட்டதில் நியாயம் இல்லை என்று சொல்ல முடியுமா? சென்னையிலே இருக்கின்ற ஷப்பீர் அலி ஹஸ்ரத் அவர்களை அழைத்து வரவும் எந்த ஏற்பாடும் இல்லை. வெள்ளிக்கிழமை வரை தமக்கு அழைப்பிதழே வரவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். முறையான அழைப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால்தான் ஆலிம்கள் வரவில்லை. எனவே நிகழ்ச்சி ரத்தானதற்கு அவர்களைக் காரணம் சொல்வது, பழி போடுவதன்றி வேறில்லை. மார்க்க அறிஞர் அரங்கம் ரத்தானதற்குக் காரணம் வேறு.
புதுக் கல்லூரியின் புல்வெளி அரங்கில் சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கவேண்டிய பாராட்டரங்க நிகழ்ச்சி இரவு 7.30க்குத் தொடங்கப்பட்டது. அது மார்க்க அரங்க நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நேரம். சுமார் இரண்டரை மணிநேர கால தாமதத்தை ஏற்பாட்டாளர்கள் கண்டு கொள்ளவேயில்லை. 5 மணியிலிருந்து மைதானத்தில் கூடியிருந்த மக்கள் ஏதாவது சிறு அறிவிப்பாவது செய்யப்படுமா என்று காத்திருந்து ஏமாந்தனர். அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கூடச் சலித்துப் போய்க் காத்திருந்தார். காலம் கடந்து தொடங்கப்பட்ட பாராட்டரங்கம் இரவு பத்து மணிவரை நீண்டது. பின்னால் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்காகத்தான் கூட்டம் காத்திருக்கிறது என்ற பிரக்ஞை ஏற்பாட்டாளர்களுக்கு சிறிதும் இருக்கவில்லை.
முதல்நாள் நிகழ்ச்சியில் தொடக்க விழாவில் ஏற்பட்ட பலமணிநேரத் தாமதம், இரண்டாம் நாள் மாலை நிகழ்ச்சியில் சில மணிநேரத் தாமதம், மூன்றாம் நாள் காலை நிகழ்ச்சி பல மணிநேரத் தாமதம் என்று கணக்கற்றகாலதாமதம் தமிழகப் பார்வையாளர்களையே சோர்வடையவும் வெறுப்படையவும் வைத்தது என்றால் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என்ன மனோ நிலைக்கு ஆளாகியிருப்பார்கள்? எனவே ‘சாதாரண பள்ளிக் கூட விழாவை விட மோசமாக ஓர் மாநாட்டை நடத்தினார்கள்’ என்ற இலங்கைக் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுதீனின் விமர்சனம் பொருத்தமானதாவே படுகிறது.
மூன்றாம் நாள் காலை இரண்டு மணிநேரத் தாமதத்திற்குப் பிறகு தொடங்கிய கருத்தரங்கின் தலைப்பு ‘இஸ்லாம் பயங்கரவாத மதமா?’. “இந்தத் தாமதம்தான் பயங்கரவாதம்” என்று பின்னாலிருந்து ஒருவர் கிண்டலடித்தார்.
பலமுறை யோசித்துப் பார்த்தும் இத்தலைப்பு இலக்கியத்தோடு எப்படி சம்பந்தப்படுகிறது என்பது புரிபடவில்லை. அந்தக் கூட்டத்திலிருந்து இலக்கியத்தின் வாடை நுகரச் செய்யும் ஒரு கவிதையோ அல்லது சிறு மேற்கோள் எதுவும் நம் செவிகளில் விழவில்லை. கேள்விக் குறியாக தலைப்பைச் சூடியது சரியா என்று கவிக்கோவைக் கேள்வி கேட்டு சேம்சைடு கோலடித்து இந்த மாநாட்டின் காரியங்கள் எதுவும் எங்கள் எல்லோரையும் கலந்து கொண்டு செய்யப்பட்டதில்லை என்பதைப் புத்திசாலித்தனமாக வெளிப்படுத்திய திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியர் மன்சூர் அவர்கள் கூட இது இலக்கியம் சார்ந்த தலைப்பா என்ற கேள்விக்குள் ஏன் செல்லவில்லை என்பதுதான் எனக்கும் இதுவரை புரியாத புதிர்.
தொடர்ந்து நடந்த மற்றொரு கருத்தரங்கம் இலக்கியத்தில் மனித நேயம் என்ற தலைப்பில் நடைந்து கொண்டிருந்த போது பெரும்பாலும் வெளிநாட்டுப் பேராளர்களே அரங்கில் இருந்தனர். நாங்கள் பலரும் உணவருந்திக் கொண்டிருந்தோம்.
அந்நிகழ்ச்சி முடிந்த போதே முதல்வர் வருகைக்கான கெடுபிடிகள் தொடங்கிவிட்டிருந்தன. அடுத்து திட்மிடப்பட்டிருக்கிற கவியரங்கம் எங்கே நடக்காமல் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை கவியரங்கு நடந்து. அது முடிந்த பிறகு தான் எதற்கு இப்படி ஒரு கவியரங்கம் நடந்தது என்று என்ற கேள்வி பிறந்தது. கவியரங்கத் தலைப்பு உவமையிலா உத்தம நபி.கவியரங்கத் தலைவர் மு.மேத்தா பெருமானாரை பற்றி கவிதை படித்தது தினமலர் கவிதைகளை விட சுமாராக இருந்தது.
ஒருக்கால் கவிக்கோ அந்தக் கவியரங்கிற்னகுத் தலைமை ஏற்றிருந்தால் அது ஏழாம் மாநாட்டிற்கும் அதில் பங்கேற்றவர்களுக்கும் கவிக்கோ செய்த ஒரே பெருங் கொடையாக அமைந்திருக்கும். கவியரங்கில் பாடப்பட்ட அஷ்ரப் சிஹாபுதீனின் கவிதையை தவிர மற்ற கவிதைகளும் அனைத்தும் பெருமானர் புகழ் பாடுவதில் இவர்களை இப்படி சிரமப்பட வைப்பது எது என்று யோசிக்கத் தூண்டியது. மேத்தா போன்றோர் கலந்த கொண்ட கவியரங்கிற்கு சமூகத்தை பிரதிபலிக்கிற வேறு ஏதேனும் தலைப்பு தரப்பட்டிருந்தால் அந்த அரங்கில் குழமியிருந்தோர் கவிதைகளை ரசித்திருக்கக் கூடும்.
நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது சிலர் அஷ்ரப் சிஹாப்தீனின் முஹம்மது என்று எழுதிவிட்டு முகர்ந்து பார்த்தேன் என் கலிமா விரலில் கூடக் கஸ்தூரி வாசம் என்ற கவிதையை உச்சரித்துக் கொண்டு போனது அந்தக் வரிகளின் வெகுஜன ஈர்ப்பை வெளிப்படுத்தியது. உற்சாகம் ததும்பும் நூற்றுக்கணக்கான கவியரங்குகளின் கர்தர்க்காளக இருந்தவர்கள் அனைத்துல மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த கவியரங்கம் சற்று ஏமாற்றத்தையே அளித்தது.
அதை தொடர்நது பிரதானமான நிறைவு நிகழச்சி தொடங்கியது. தமிழ் முஸ்லிம்களின் பெருதனக்காரர்கள் மாநாட்டின் புரவலர்கள் பெரும்பாலோர் மொத்தமாக அமர்நதிருந்து அழகு சேர்த்தனர். கிராஅத் என்ற அறிவிப்பை தொடாந்து இரண்டு பெயர்கள் அறிவிக்கப்பட்ட பொது இரண்டு பேரும் அங்கு இல்லை. முதல்வர் உட்டபட பலரும் புருவம் சுருக்கினர். இது ஒரு அனைத்துலக மாநாடு? என்ற முணுமுணுப்பு ஒவ்வொருவரிடமிருந்தும் வந்தது. வரவேற்புரைக்கு பெயர் போடப்பட்டிருந்த மாநாட்டின் பொருளாளர் ஏ.வி.எம் ஜாபர்தீன் மாநாட்டு மேடையிலேயே இல்லை. முறையான திட்டங்கள் எற்பாடுகள் குறித்து தன்னுடைய கருத்துக்கள் அலட்சியப்படுத்தப்பட்டதாலும் தொடர்நது கைகொள்ளப்பட்ட சர்வதிகாரப் போக்கினாலும் மனம் வெறுத்து அவர் அரங்கின் ஓர் மூலையில் உட்கார்ந்திருந்தது எனக்குத் தெரியும் என்பதால் அதில் ஆச்சரியம் எதுவும் எழவில்லை. ஆனால் அவரை பலரும் அந்த இடத்தில் பார்த்து அதிர்ந்ததை நான் உணர்ந்தேன்.
வரவேற்புரை நிகழ்த்திய இதாயதுல்லாஹ் கலைஞருக்கு முன்னிலையில் பேசுவதாலோ அல்லது பல நாட்கள் பாடுபட்ட நிகழ்ச்சியின் நிறைவு என்ற நெகிழ்ச்சியினாலோ என்னவோ தடுமாறினார். அவர் எழுதி வைத்துப் பேசி இருக்கலாம். உணர்ச்சி வேகத்தில் இடஒதுக்கீட்டை பிச்சையாகவாவது தரும்படி கேட்டார். சில இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும் வாழ வைத்துக் கொண்டிருந்த இட ஒதுக்கீடு கோஷம் இந்த முறை இலக்கிய கழகத்தையும் வாழ வைத்திருக்கிறது. இலக்கிய மாநாடு நடத்தினிர்களே என்ன சாதித்தீர்கள்? என்ன தீர்மாணம் நிறைவேற்றினீர்கள் என்று கேட்டால் இடஒதுக்கீடு பிச்சை கேட்டோமே அதுவும் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் தனியாக செய்து விடக் கூடாது என்ற அழுத்தமான பிடிவாதததில் இருக்கிற கலைஞரிடம் கேட்டோமே என்பதைத்தான் சொல்வார்கள். பிறை கூட ஒரு பிச்சை பாத்திரம் போலத்தான் இருக்கிறது என்று கவிக்கோ சொன்ன போது அதன் இலக்கிய தரத்தை மக்கள் ரசித்தாலும் அதன் எதார்த்தத்தை அவர்கள் ரசிக்கவில்லை.
இடஒதுக்கீடு கோஷத்தை இயக்கங்கள் தங்கள் லாபத்தற்காக காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்கின்றன. இடஒதுக்கீடு மட்டுமே முஸ்லிம் சமுதாயத்திற்கு தேவைப்டுகிற பிரதான விசயம்.அந்த ஒரு மாத்திரையில் சமுதயத்தை பீடித்துள்ள அனைத்து வியாதிகளுக்கும் திர்வு கிடைத்துவிடும் என்று நடைபாதையில் கடைவிரித்திருக்கும் மருந்து வியாபாரியை போல் அவை குரல் எழப்பிக் கொண்டிருக்கின்றன. நீண்ட காலத்திற்கு யாராலும் நிறைவேற்றப்பட முடியாத ஒரு கோரிக்கையை கையில் எடுத்தக் கொண்டால் போராடுவதற்கு நீண்ட காலத்திற்கு வேறு தலைப்பை தேட வேண்டிய அவசியம் இருக்காது என்ற காரணத்திற்காகவே இயக்கங்கள் அந்த கோஷத்தை உடும்புப்படியாக பிடித்திருக்கின.
சமுதாயம் அந்தக் கோஷத்தை தாண்டி நடக்கத் தொடங்கிவிட்டது என்பதை அந்த நிகழ்ச்சியிலேயே மக்கள் உணர்த்தினார்கள். 12 ம்வகுப்புத் தேர்வில் நான்கு பாடப்பரிவுகளில் 200 க்கு 200 மதிப்பென் பெற்ற மாணவிக்கு விருது வழங்கப்பட்ட போது மொத்த அரங்கும் ஒன்று சேர கரவொலி எழுப்பியது. சாதாரணமாக தனது உரையில் அதிகமாக கைதட்டல் பெறுகிற கலைஞருக்கு கூட அந்த கைதட்டல் கிடைக்க வில்லை. எந்த அரசியில் வாதியின் தயவை நம்பியும் நாங்கள் இல்லை என்று உரத்து கூறுவதாக அந்தக் கைத்தட்டல் அமைந்தது.
கவிக்கோவின் உரையின் போக்கு சிலருக்கு புரிய வில்லை என்றாலும் அதில் தஃவாவின் ஒரு நெடி இருந்தது. இலக்கிய மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சிக்கு பொருத்தமாகவே இருந்தது. கவிக்கோவின் உரையின் இரண்டாம் பகுதி அவரது கவித்துவ மேதமையை எடுத்துக்காhட்டியது.
மூன்றாம் நாள் அரங்கில் பெரிதும் பாராட்டப்பட்டது பாராளுமன்ற துணை சபாநாயகர் ரகுமான் கான் அவர்களின் உரை. இந்திய முஸ்லிம்கள் இரண்டு வகையான சூழ்நிலையில் இருக்கிறார்கள். மதஅடிப்படையில் அவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் என்ற அடிப்படையில் அவர்கள் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. அவர்களை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். குர்ஆனும் நபிவழியும் அவர்களை கொடுப்பவர்களாக இருக்கவே சொல்கிறது. சமுக ரீதியில் அவர்கள் பிற்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட வர்கைள கைதூக்கிவிடுவதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை செய்கிறது. அந்த நன்மைகள் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை. கலைஞர் போன்ற இன்றைய அரசாங்கத்தில் சொல்வாக்குள்ள தலைவர்கள் அதற்காக முயற்சித்தால் அது கிடைக்கும் என்று அவர் பேசியது மரியாதையான பேச்சாக இருந்தது.
நிறைவுரை ஆற்ற வந்த கலைஞர் இடஒதுக்கீட்டு கோரிக்கையால், அதுவும் பிச்சை என்று கேட்டு விட்டதால் ஒருவகை தர்மசங்கடத்திலும் எரிச்சலிலும் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். என்னய்யா உங்களோட இதே ரோதனையாப் போச்சு இட ஒதுக்கீடு தருகிற நிலையில் நான் இல்லை. அதை புரிஞ்சுக்காம பிச்சை கிச்சை என்றல்லாம் பேசி என்னை பேச வைக்கிறீங்களே என்ற கடுப்பில் தான் அது கா்நாடகா வில் இருக்கும் என்றால் நாளைக்கே நான் உத்தரவிடத்தயார் என்றார். ஆந்திரா என்பதற்கு பதில் கர்நாடகா என்ற வார்தை தவறாக வந்து விட்டது. இதை புரிந்து கொள்ளாமல் இதோ நாளைக்கே உத்தரவிடப்போகிறார் என்று நினைத்துக் கொண்டு சிலர் கைதட்டியது முஸ்லிம் சிலரின் பேதமைய காட்டியது.
தினமணி பத்ரிகை கூட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டுக் அவசர சட்டம் என்று செய்தி வெளியிட்டது ஆச்சரியமாக இருந்தது. மானுக்குப் பிணைநின்ற பழைய கதை ஒன்று மட்டுமே கலைஞர் உரையிலிருந்த இஸ்லாமிய இலக்கிய தொடர்பு. மாநாட்டு நிறைவு நாள் பேச்சுக்கள் இலக்கிய மாநாட்டை வாழ்வுரிமை மாநாடாக மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கலைஞர் மிகப் பெருந்தன்மையோடு சதாவதானி சேகுத்தம்பிப்பாவலருக்குத் தபால் தலை வெளியிட ஆவன செய்வதாக அறிவித்தார்.ஓரு தபால் தலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே ஒரு சர்வதேச மாநாட்டின் பிரதான தீர்மானமாகிவிட முடியும் என்றால் ஆட்சியாளர்கள் வெகு சீக்கிரத்தில் அதை நம் முகத்தின் மீது குத்தி நமக்கு நல்லது செய்து விடமாட்டார்களா என்ன?
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகின் நட்சத்திரங்களுக்கும், மாநாட்டின் விஷேச பிரமுகர்களும் எந்த ஒரு தனி மரியாதையும் தரப்படவில்லை. கலைஞர்; கரத்தால் விருது பெறும் இரண்டு சாகித்ய அகாதமியாளர்கள் பார்வையளர்கள் பகுதியிலிருந்து மேடையேறி வந்ததும் காவலர்கள் அவர்களை மேடை ஏற விடாமல் தடுத்து விசாரித்ததும் இலக்கியத்திற்கு நிகழ்ந்த அவமதிப்புகள்.
மாநாட்டில் ஆய்வாளர்கள் பலரும் பாரட்டப்பட்டது சிறப்பு. ஆனால் படைப்பிலக்கிய வாதிகள் இதில் கண்டு கொள்ளப்படவில்லை. அவர்களது படைப்புக்களை வைத்து ஆய்வு செய்து எம் பில், பிஎச்டி படட்டம் பெற்றவர்கள் பாராட்டப்பட்டார்கள். படைப்பாளிகள் ஓரங்கட்டப்பட்டார்கள். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ஹிமானா செய்யத் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து நிகழ்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார் அவ்வளவே! நிறைவு நாள் நிகழ்சியில் விருதுகளுக்கு தேர்வு செய்ய்பட்டவர்கள் குறித்து பலத்த ஆட்சேபம் எழுந்தது. மாநாட்டின் துணைச் செயலாளர் என்று அறிவிக்கப்படடிருந்த திருமலர் மீரான், இவ்விருதுகள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தங்களிடம் எந்தக் கருத்தும் கேட்கப்படவில்லை என்றார்.
இது தவிர, உணவு தரமாகவும் போதுமானதாகவும் இருந்தபோதும் உபசரிப்பு இல்லாதததால் அது ருசிக்கப்பட்ட போதும் பாராட்டை பெறவில்லை. பேராளர்களுக்கு உணவு உறையுள் ஏற்பாடு செய்வதில் காணப்பட்ட அலட்சியம் கைகொள்ளப்பட்ட மெத்தனம் ஏதோ ஏற்பாடு பண்ணியிருக்கோம்ல எப்படியோ தங்கிகிக்க போ! எப்படியோ சாப்ட்டுக்க போ! நீ கொடுக்கிற இருநூத்தம்பதுக்கு இதுவே ரொம்ப அதிகம் என்ற மனோபாவத்தை வெளிப்படுத்தியதாக பலரும் குறை கூறினர்.
நவீனம் புதுமை குறித்து வாய்கிழிய் பேசுவோர் சமுதாயத்தின் மிகப் பெரிய தொகை செலவழித்து நடத்திய மாநாடு பழைய பஞ்சாங்கமாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். புதிய காற்றின் ஆசிரியர் ஹாமீம் முஸ்தபா சொன்னது போல 1980 களில் இப்படி ஒரு மாநாடு நடந்திருந்தால் அதை சரி பரவாயில்லை என்று சொல்லலாம் 2007 க்கு இந்த மாநாடு பொருத்தமானல்ல. நவீனத்துவத்தின் ஒரு சிறு அடையாளம் கூட மாநாட்டில் இல்லை. பத்திரிகை, தொலைக்காட்சி, இணைய வழி இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கூறுகள் எதுவும் கண்டு கொள்ளப்படவில்லை.
ஒரு வழியாக இலக்கியம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளவோ கலந்து கொண்டீடாரிடம் ஒரு இலக்கிய மலர்ச்சியை ஏற்படுத்தவோ தவறிய நிலையிலும் இனி இலக்கிய மாநாடு என்ற சொல்லிக் கொண்டு எவனாவது வந்தால்... என்று பலர் பல்லைக் கடிக்கிற அளவிலும் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இத்தனை குறைகள் இருந்தாலும் இலக்கியவாதிகள் அனைவரையும் ஓரிடத்தில் சந்திக்கிற வாய்புக்கிடைத்ததில் அனைவரும் மகிழ்ந்தனர். அதை சிரமப்பட்டு ஏற்பாடு செய்தவர்களை பாரட்டவே செய்தனர். நிகழ்சிகள் பெருந் தாமதமான போது கூட அமைதி காத்தனர். நூல்கள் வழங்கும் பணியில் தொண்டூழிர்களிடமோ அல்லது பேராசியர்களிடமோ ஒப்படைக்காமல் ஒரு பதிப்பகத்திடம் ஒப்பபடைத்தது ஏன் என்று கடுமையாக பேசிக் கொண்ட போதும் அது பற்றியோ வேறு அசௌகரியங்களைப் பற்றியோ எவருடைய நெஞ்சுச் சட்டையை பிடித்து யாரும் கேள்வி கேட்ட வில்லை. தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை தங்களது மனங்களுக்குள் வைத்துப் பூட்டியவாட்களாக அக்கம் பக்கத்தில் இருந்தோரிடம் புலம்பியவர்களாகவே அனைவரும் திரும்பிச் சென்றனர்.
ஆனால் பத்திரிகைகளில் இது குறித்து விமர்சனங்கள் வருகிற போது பொறுப்போடும் பொறுமையோடும் பதிலளிக்க வேண்டியது ஏற்பாட்டாளர்களின் கடமை. ஓரு நிழ்ச்சி பொதுமக்களை பொறுத்தவரை நன்றியுரையோடு முடிந்து போய்விடும். ஏற்பாட்டாளர்களைப் பொறுத்தவரை அதற்குப் பின்னரும் பொறுப்பாக நடந்து கொள்ள கடமைப்படடிருக்கிறார்கள். இம்மாநாட்டை பொறுத்தவரை மாநாடு முடிந்த பிறகும் சர்ச்சைகள் தொடர்வது வேதனையானது. இலங்கை பத்திரிகைகளில் வந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில் இலங்கை குழுவினர் இரண்டு குழவினரா வந்திருந்தனர். அதிலம் பலர் தங்களது குழந்ததைகள் குட்டிகளுடன் சுற்றுலாவுக்கு வருவது போல் வந்தனர். அவர்களுக்குள்ளும் சண்டை இருந்தது அமைச்சர்களுக்குள்ளும் கூட மோதல் இருந்தது என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் விமர்ச்சித்திருப்பது கேடுகெட்ட விமர்ச்சனமாகும். தமிழக அரசியலின் கீழ்த்தமான அரசியல் பாணி அது.
அவர்கள் எப்படி வந்திருந்தாலும் மாநாட்டின் அரங்குகள் அத்தனையிலும் அவர்கள் தான் முழுமையாக உட்காந்து மாநாட்டில் கூட்டத்தை காட்டினர் - ஒரு பார்வையாளர் சொன்னது போல வெளிநாட்டு பேராளர்கள் மட்டும் இல்லை என்றால் அரங்குகள் பலவற்றிலும் 50 க்கும் குறைவான இருக்கைகளே நிறைந்திருக்கும். இந்நிலையில் அவர்கள் தங்களது அதிருப்தியை இங்கிதமற்றோ கோபமாகவோ வெளிப்படத்தியிருந்தாலும் கூட ஆரோக்கியமற்ற பதில்கள் பேசப்படுவது மாநாட்டின் பொருமையை மேலும் மங்கவைத்துவிடும்.
அடுத்த மாநாடு மலேஷியாவில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து செல்லும் இலக்கியப் பிரதிநிதிகள் எல்லோரும் ஒரே ஒரு கழுவாக சொன்று வருவார்கள், அவர்களுக்கிடையே சண்டையே இருக்காது, அவர்களில் யாரும் சுற்றிப் பார்ப்பதற்காக போக மாட்டர்கள் என்று தமிழக இலக்கிய வாதிகள் யாரேனும் உத்தரவாதம் தருவர்களா என்ன?
டாக்டர் ஜின்னாஹ் ஷர்புத்தீன் சொல்வது போல ஒரு சர்வதேச மாநாட்டை திட்டமிடத் தெரியமல் நடத்திவிட்டு வாயாடுவது நமது முதுகை மேலும் புண்ணாக்கி விடும். கசப்புணர்வை கலைந்து அடுத்த இலக்கிய மாநாட்டிற்குள் ஒரு நல்ல சூழலை ஏற்படுத்த இலக்கிய ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும். மண்டல அளவில் இலக்கியப் பேரவைகள் அமைக்கப்பட்டு அதற்கு ஒரு மைய அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக இலக்கிய மாநாடுகள் நடக்க தொய்வின்றி தொடர வழிசெய்யப்பட வேண்டும். அல்லாஹ் அருளட்டும்.
மாநாட்டு நிகழ்சிகளை எல்லாம் வரிவிடாமல் கேட்டுக் கொண்டிருந்து விட்டு என் நண்பர் ஒருவர் சொன்னார்:அப்படியானால் இது மாநாடு அல்ல. கவிக்கோ ராஜாவாகவும் இதயதுல்லாஹ் இளவரசராகவும் கப்டன் அமிர் அலி மந்திரியாகவும் இருந்து நடத்திய தர்பார் என்று சொல்லலாமா என்று கேட்டார்.
என்ன பதில் சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்
நன்றி - அப்துல் அஸீஸ் பாக்கவி - சமநிலைச் சமுதாயம்
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
3 comments:
"இந்த மாநாடு தோல்வி மாநாடு மட்டுமல்லாமல் தொல்லை மாநாடாகவும் ஆகிப் பலருக்கு வேதனை அளித்தது."
அப்பாடா .........!!!!! இலக்கிய தர்பார் மூச்சு விடாமல் வாசித்தேன்..முதலில் இவ்வளவு பெரிய அலசலை விலாவாரியாகச் சொல்லிக் கொண்ட திரு.அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்களுக்கு
நன்றிகள்.. அத்தோடு அதனை இணையத்திற்குள் பதிவேற்றம் செய்த சேர் உங்களுக்கும் நன்றிகள்...
மலேசிய இலக்கிய தர்பார் அலசல் வாசிப்பதற்காக நான் ஆவலாக waiting....
எல்லாவற்றையும் பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை,
தரமான இலக்கியம் படைக்கின்றவர்களிடம் தரமான
வேறு திறமைகள் இல்லையோ, கண்ணியமான நடத்தைகள்
இல்லையோ என்றெல்லாம் சந்தேகப்படச் செய்கின்றன.
மிகவும் மனக்கிலேசத்தை ஏற்படுத்தும் விடயங்களாக
இருக்கின்றனவே.
"நல்ல குணங்களுடன் மனிதன் பிறந்தாலும் கொஞ்சம் சாத்தானின் குணவியல்புகளும் கூடவே இருந்து வருகின்றன!"
சில பேரை சாத்தான் முழுமையாக ஆட்கொள்ளும் போது தான்.. மனிதன் குணவியல்புகளில் , நடத்தையில் மாற்றத்தைக் ஏற்படுத்தி வானுக்கும், மண்ணுக்கும் தைய தக்க போடவைக்கும்..அப்படியானவர்களின் கையில் அதிகாரம் போகும் போது சூழ இருப்பவர்கள் பாடு திண்டாட்டம் தான்.. இது எல்லாத்துறைக்கும் பொருந்தும்.பலவீனத்தின் மொத்த உருவமே மனிதன் தானே ! இதனை ஜெயிக்கிறவர்கள் மனசாட்சியுடன் வாழ்கிறார்கள்...அடுத்த சாரார் நிலவரம் நான் சொல்லத் தேவையி்ல்லையே !! சேர்
ஆக்கங்களில் பார்க்கிறோமே..
நன்றிகள்..
..
Post a Comment