இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் - 10.06
ஒரு பேராளரின் பார்வையில்
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான அனுபவங்கள், கருத்துக்கள் கடந்த பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. இவற்றை ஆமோதிக்கும் அதே வேளை சில கருத்துக்களை முன் வைப்பது எதிர்கால் ஏற்பாட்டாளர்களுக்கு பயன் தரலாம் என நினைக்கிறேன்.
மலேசியாவில் நடைபெற்ற இ;த மாநாட்டை ஏற்பாட்டாளர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் என்பதை எம்மால் மறுக்க முடியாது.
இலங்கையிலிருந்து 200 பேராளர்கள் மட்டில் கலந்து கொண்டதாக இறுதி விழாவில் அறிவிக்கப்பட்டது. இது மற்றைய நாடுகளை விட மிக அதிகம். பெருந் தொகை முஸ்லிம்கள் வாழும் இந்தியாவிலிருந்தாவது இவ்வளவு தொகையினர் கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறு பெருந்தொகையினர் கலந்து கொண்ட போதும் அவர்களை அன்புடன் வரவேற்று தங்குவதற்கு வசதியான இடம் தந்து பயண ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்த மலேசிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதேபோன்று அவர்களுக்கு உதவியாக இருந்த பல்கலைக் கழக, கல்லூரி மாணவர்களின் தியாக சிந்தையும் பாராட்டுக்குரியது.
எனினும் இவர்களது கட்டுப்பாட்டுக்கு உடபடாத சில நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
இது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடக இருந்த போதிலும் முஸ்லிம்கள் அல்லாதோரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆயவுரை சமர்ப்பித்தனர். இவர்களில் அநேகர் கல்விமான்கள், இலக்கியவாதிகள். இந்து, கிறிஸ்தவ பெருமக்களை அமர வைத்துக் கொண்டு எம்மவர் சிலர் ஆற்றிய உரைகள், வழங்கிய விளக்கங்கள் சற்றுக் கசப்பானவை. நாம் இஸ்லாத்தைத் தூக்கிப் பிடிக்கத்தான் வேண்டும். எமக்கு அதுதான் உயர்வு. அதற்காக மற்றைய மதங்களை, மற்றைய இனங்களை அவர்களது மனம் நோகும்படி பேசக் கூடாது. இதை இஸ்லாமும் அனுமதித்ததாகத் தெரியவில்லை.
ஓர் ஆய்வரங்கிலே தமிழ் சகோதரர்களும் இருந்தார்கள். அங்கு பேசிய எமது இஸ்லாமிய ஆய்வாளர் இந்துக்களுக்கு உண்ணக் கற்பித்தவர்கள் முஸ்லிம்கள். உடை அணியாத அவர்களுக்கு உடையணியக் கற்பித்தவர்கள் நாங்கள் என அடுக்கிக் கொண்டே போனார். அவர்கள் நாகரிகம் இல்லாது இருந்தார்கள். முஸ்லிம்களே அவர்களுக்கு நாகரிகம் கற்பித்தார்கள். அதாவது முறையாக உண்ண, உடுக்கக் கற்பித்தவர்கள் நாமே என்று கூறினால் அவர்களது மனம் புண்படாதிருக்குமா? இதில் நாம் என்ன இன்பத்தைத்தான் அனுபவிக்கிறோமோ நானறியேன்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என வேறாக பிரித்து எடுத்ததன் நோக்கமே இஸ்லாத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே. உனவே அது இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது இஸ்லாமிய இலக்கியமாகும். இஸ்லாமியக் கொள்கைகளுக்கு, அதன் போதனைகளுக்கு மாற்றமானவைக்கு இஸ்லாமிய இலக்கியம் என்று கூற முடியாது.
இதை அறியாமலோ என்னவோ ஒரு படித்த பெண்மணி பேசிய பேச்சிலே இஸ்லாமிய அடிப்படைக் கருத்துக்கு மாறான விடயங்கள் இடம் பெற்றிருந்தன. இதை சிலர் அவரிடம் சுட்டிக் காட்டியதை அறிய முடிந்தது. ஆனால் அவர் அதை ஏற்றதாகத் தெரியவில்லை.
எம்மவர்களில் சிலரும் சில விடயங்களில் ஒத்துழையாமையைக் காண முடிந்தது. சாப்பாடுகளுக்கு நேரக் கெடு விதித்திருந்தார்கள். சாப்பிட்ட பின் தமது பாத்திரங்களை எடுத்துச் சென்று உரிய இடங்களில் வைக்கும் படி வேண்டு கோள் விடுத்தார்கள். ஆனால் எம்மில் சிலர் இவற்றுக்குச் செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. இதனால் சாப்பாடு ஏற்பாட்டாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. எனினும் அவர்கள் இதுபற்றி எதுவுமே கூறாதது அவர்களது பெருந் தன்மையைக் காட்டியது.
இலங்கை ஏற்பாட்டுக் குழுவினால் நியமிக்கப்பட்ட பிரயாண முகவரைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும். கசப்பான நிகழ்ச்சிகளிவே மிகவும் கசப்பான நிகழ்ச்சிகளை இப்போது கூற விளைகிறேன். சம்பவத்தைக் கூறிக் காரணியைப் பின்னால் கூற நினைக்கிறேன். விழா ஏற்பாட்டாளர்களின் நிகழ்ச்சி நிரல் 23ம் திகதி இரவுடன் முடிவடைகிறது. மாநாடு 22ம் திகதி இரவுடன் முடிய 23ம் திகதி ஏற்பாட்டாளர்கள் சுற்றுலாவுக்கு ஏற்பர்ட செய்திருந்தனர்.
ஆனால் சிலருக்கு இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. இலங்கை ஏற்பாட்டுக் குழுவை விட பிரயாண முகவர் அதிகாரம் பொருந்தியவராக இருந்ததே இதற்குக் காரணமாகும். பயணம் தொடர்பாக ஏற்பாட்டுக் குழுவே தீர்மானிக்க வேண்டும். எப்போது செல்வது, எப்போது திரும்புவது என்பதை ஏற்பாட்டுக் குழுவே தீர்மானிக்க வேண்டும். ஆனால் எவரொருவர் எப்போது திரும்புவது என்பதை பிரயாண முகவர் தீர்மானித்து விட்டார். எனவே சிலர் மாநாட்டு நிகழ்ச்சி முடிய முன்னரே இலங்கை திரும்ப வேண்டி ஏற்பட்டது. இது துர்ப்பாக்கியமே. இவர்கள் 23ம் திகதி அதிகாலையே விமானம் ஏறவேண்டியேற்பட்டது.
திரும்பும் தினத்தை பிரயாண முகவரிடம் கதைத்து ஏற்பாடு செய்து கொள்ளும்படி ஏற்பாட்டுக் குழு பேராளர்களுக்குக் கடிதம் மூலம் அறிவித்திருந்தது. அதன்படி, பேராளர்கள் திரும்ப விரும்பும் தினத்தை எழுத்து மூலம் பிரயாண முகவருக்கு அறிவித்திருந்தனர். ஆனால் அதை மதிக்காத பிரயாண முகவர் மாநாட்டு நிகழ்ச்சி நிரல் முடிய முன்னரே சில பேராளர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
இதை விட பணம் செலுத்திய சிலருக்கு இறுதி நேரத்தில் விமான டிக்கற் இல்லை எனக் கூறி வேறு விமானத்தில் செல்வதற்கு மேலதிக கட்டணம் அறவிடப்பட்டது.
இதற்கு முழுப் பொறுப்பும் பிரயாண முகவரே. விமானக் கட்டணத்தை ஏற்கனவே பெற்று விட்டு இறுதியில் டிக்கற் இல்லை என்று கூறிய முகவரை மன்னிக்கவே முடியாது.
விமானக் கட்டணத்திலும் பிரச்சினைகள் உண்டு. தாமாக டிக்கற் பெற்றவர்கள் சிலர் 18500 ரூபாவே செலுத்தியிருந்தனர். ஆனால் குறித்த முகவரோ 26500 ரூபா அறவிட்டார். விசாக் கட்டணம் வேற தொகையும் அறவிட்டார்.
இவ்வாறான ஒரு பயண முகவரை ஏற்பாட்டுக் குழு ஏன் தெரிவு செய்தது என்பதுதான் புதிராக உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------
மேலே நான் தந்திருக்கும் கட்டுரை ஜூன் 16 அன்று விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியிருந்தது. இக்கட்டுரை பற்றி இதனை எழுதிய சகோதரர் சட்டத்தரணி வைஸ் அவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு மேலும் சில தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். தான் எழுதிய கட்டுரையில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருப்பதா சகோதரர் வைஸ் எனக்குச் சொன்னார்.
எது எவ்வாறிருப்பினும் மாநாடு பற்றிய நிறைகளுடன் குறைகளையும் குறிப்பாக இலங்கை ஏற்பாட்டுக் குழுவின் குறைகளை ஓரளவுக்கேனும் வெளியே சொன்னவை இரண்டு பத்திரிகைகளே. 1. எங்கள் தேசம். 2. விடிவெள்ளி. இந்த இரண்டு பத்திரிகைகளுக்கும் இந்த விடயங்களை ஓரளவுக்கேனும் தைரியத்துடனும் நேர்மையுடனும் வெளியே சொன்ன சகோதரர்கள் பஷீர் அலி, சட்டத்தரணி வைஸ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------
இனி சட்டத்தரணி வைஸ் அவர்களது எழுத்தின் பின்னணியில் சில விடயங்களைச் சொல்ல வேண்டும்.
இயல்பாகவே தமது எல்லா விடயங்களும் ஏற்பாட்டுக் குழுவினரால் கவனிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் இலங்கை முஸ்லிம்கள். இவ்வாறான ஒரு பெரு நிகழ்வின் போது நூற்றுக்கு நூறு எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் 50 வீதம் திருப்திப்படுத்த முடியும். அப்படித் திருப்திப் படுத்தினால் ஏனைய 50 வீதமும் மறைந்து விடும்.
இங்கே அந்த 50 வீதமும் கூட கவனிக்கப்படவில்லை. அதற்குக் கரணம் விமானச் சீட்டுப் பிரச்சனையே. அங்கு வேறு எந்தப் பிரச்சினையும் எழுந்ததாக நான் அறிய வரவில்லை. சிலரது கேள்விகளுக்குக் கவலையுடன் காது கொடுத்த ஒரேயொரு நபர் சகோதரர் என்.எம். அமீன் மாத்திரமே என்று ஒரு ஊடக நண்பர் எனக்குச் சொன்னார்.
சிறந்த வரவேற்பு, சிறந்த உபசரிப்பு, கவனிப்பு யாவற்றையும் மலேசியர் திறம்படச் செய்திருக்கிறார்கள். ஆனால் பிரச்சினை விமானப் பயணச் சீட்டுகளினால்தான் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை மலேசியப் பயணத்துக்கு முகவருக்குக் காசு செலுத்த இலங்கைக்குழு அறிவித்த அடுத்த வாரமே ஆரம்பித்து விட்டிருந்தது. இவற்றை இலங்கை ஏற்பாட்டுக் குழுவும் தெரிந்தே இருந்தது.
ஆனால் நியமிக்கப்பட்ட இந்த ஏற்பாட்டுக் குழு ஒரு வித்தியாசமான குழு. ஒவ்வொரு துறைக்கும் சிலர் நியமிக்கப்பட்டிருந்தனர். பயண ஏற்பாட்டைக் கவனிப்பவர்கள் என சகோதரர் கௌரவ. ஹஸன் அலி அவர்களும் ஹாஜி ஹாஷிம் உமர் அவர்களும் குறிப்பிடப்பட்டிருந்தார்கள். (ஏற்பாட்டுக் குழு அனுப்பிய கடிதத்தில் இந்த விபரம் உள்ளது) கடைசி நான்கு கூட்டங்களுக்கு ஹாஜி ஹாஷிம் உமர் அழைக்கப்படவில்லை என்று என்னிடம் தெரிவித்தார். ஆக, இதை முழுக்க முழுக்கக் கவனித்தவர் கௌரவ ஹஸன் அலி அவர்களேயாவார். அதற்காகக் குழுவில் உள்ள ஏனையோர் சாட்டுச் சொல்லித் தப்பிக்க முடியாது.
குறிப்பிட்ட நிறுவனத்தில் பணத்தைக் கட்டுமாறு ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும் செயலாளரும் கையெழுத்திட்டு பேராளர்களுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“இவ்வாறான ஒரு பயண முகவரை ஏற்பாட்டுக் குழு ஏன் தெரிவு செய்தது” என்று சகோதரர் வைஸ் வினாவெழுப்புகிறார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டார் மலேசிய மாநாட்டுக் குழுவின் தலைவர் குப்பப்பிச்சை முகம்மது இக்பால். கட்சியில் முக்கியஸ்தராக உள்ள ஒரு நபர் விமான பயணச் சீட்டு நிறுவனம் வைத்திருக்கும் போது அதை எவ்வாறு வேறு ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். கட்சியிலுள்ள திருப்திப்படுத்தப்பட வேண்டியவர்களை அழைத்துச் சென்று மலேசியா காட்டுவதற்கு வசதியாகச் செய்யப்பட்ட ஏற்பாடாகவே அது தெரிகிறது.
இது தவிர பிரயாண முகவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மிக அண்மையில்தான் பதவி உயர்த்தப்பட்டார் என்று ஒரு தகவலும் உண்டு. எதிர்காலத்தில் ஒரு வேளை ஓர் அவசியம் ஏற்பட்டால் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் இவரே முடிவு எடுப்பவராக இருக்கவும் கூடும்.
இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. முஸ்லிம்களின் தனிப் பெரும் கட்சி என்று சொல்லப்படுகின்ற, முஸ்லிம்கள் நலனுக்காகவே செயற்படுவதாகச் சொல்லப்படும் கட்சி முஸ்லிம்கள் விடயத்தில் எவ்வாறு செயற்படும் என்பதை இந்த மலேசிய ஏற்பாடுகளின் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
அதேவேளை 19.06.2011 அன்றைய நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு பேசுகிறது.
“தனி முஸ்லிம் அரசியல் கட்சிகளாக இருந்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அதன் பெயரை மாற்றி இன்று தேசிய அமைப்பில் செயற்படத் தயாராகி உள்ளது. அமைச்சர் அதாவுள்ளா தலைமையிலான தேசிய காங்கிரசும் தனி முஸ்லிம் கட்சியாக அன்றி தேசியக் கட்சியாக இயங்க முற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனி முஸ்லிம் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே இக்கின்றது. எனவே முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களில் பிரதானமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_டனே பேசவேண்டியுள்ளது.”
இந்திய உயர் தூதுக் குழு இலங்கை முஸ்லிம் தலைவர்களுடன் யாருடன் பேச வேண்டும் என்பது பற்றிக் கருத்துத் தெரிவத்த ‘நவமணி’யின் ஆசிரிய கருத்துக் குறித்து தற்கால முஸ்லிம் அரசியல், எதிர்கால முஸ்லிம் அரசியல் பார்வைக@டாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. இப்போதைக்கு இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த முகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் என்பதே நவமணியின் கருத்து.
இந்த அடிப்படையில் ஒரு 210 பேரை ஒரு மாநாட்டுக்குச் சரியாக அழைத்துச் செல்ல முடியாத கட்சி இலங்கை முஸ்லிம்களின் முகமாக எவ்வாறு செயற்பட முடியும் என்றும் நாம் கேள்வி எழுப்ப வேண்டியது நியாயம்தானே. இந்த ஒரு சின்ன விடயத்துக்குள்ளேயே கட்சியிலுள்ளவர் நலன்களை மட்டுமே சிந்திப்பவர்கள், கட்சியிலுள்ளவர்களின் நன்மைக்காக மற்றவரைச் சிக்கலுக்குள்ளாக்குபவர்கள் எவ்வாறு முஸ்லிம்கள் பிரச்சினகளைத் தீர்க்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
எது எவ்வாறிருந்த போதும் ஓர் அரசியல் கட்சியிடம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின் இலங்கைப் பொறுப்பை ஒப்படைத்த குப்பப் பிச்சை முகம்மது இக்பால்தான் இத்தனை சீரழிவுகளுக்கும் காரண கர்த்தாவாவார். அவரது அந்தஸ்துக்காக அவர் இவ்வாறு நடந்து கொண்டாரே தவிர, இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்காக அல்ல என்பதே நமது கருத்து.
ஆனால் குழுவில் உள்ளவர்கள் இந்த விடயத்தில் மௌனமாகவே இருந்தார்கள் என்பது தெளிவு.
இன்னும் சொல்லப்போனால் நடைபெற்ற விரும்பத் தகாத விடயங்கள் குறித்து எந்த விதமான கிலேசமும் இன்றி, நாமும் இதற்கு ஜவாப்தாரிகளல்லவா என்ற எந்த வித உறுத்தலும் இன்றி மலேசிய மாநாட்டுப் பின்னணியில் நடந்து கொண்டிருக்கும் விழாக்களில் மலேசிய மாநாட்டில் சாதனை புரிந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுப் பொன்னாடையுடன் இவர்கள் பத்திரிகைகளில் போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதுதான் பெரும் வேடிக்கை!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment