Tuesday, June 21, 2011

“நம்பிக்கை"யும் வம்புக் “கை"யும்!இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் - 11

இது வரை உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் பல நடந்துள்ளன. அவை பற்றிய பாராட்டுக்கள், விமர்சனங்கள் யாவும் அம்மாநாடுகள் முடிவடைந்த பின்னரேயே வெளிவந்திருக்கின்றன. ஆரம்பிப்பதற்கு முன்னரே விமர்சனத்துக்குள்ளான ஒரே மாநாடாக குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழுவினர் மலேசியாவில் நடத்திய இலக்கிய விழா அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

இந்த விழா பற்றிய இதே போன்ற மேலும் சிறப்புகளை ஒட்டு மொத்தமாகத் தொகுத்து நாம் இக்கட்டுரைத் தொடரின் இறுதிக் கட்டுரையில் பார்க்கலாம்.

குப்பப்பிச்சை ராவுத்தர் முகம்மது இக்பால் “நம்பிக்கை” என்றொரு சஞ்சிகையை நடத்தி வருகிறார் என்பதை நமது கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் நபர்கள் தெரிந்திருப்பீர்கள். இந்த இதழின் ஜூன் மாத இதழில் குப்பப் பிச்சை இக்பாலின் சகபாடிகளில் ஒருவரான கவிஞர் மைதீ சுல்தான் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் தமது பரிசுத்தத்தை நிரூபிப்பதற்காக சிலரைக் குறை கண்டிருக்கிறார். அவர்களில் ஒருவர் ஹாஜி. ஏவி.எம்.ஜாபர்தீன் அவர்கள். மற்றவர் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள்.

இந்தக் கட்டுரைக்கு இவர்கள் இருவரும் பதில் எழுதி - உரியவருக்கும் கட்டுரை பிரசுரமான சஞ்சிகைக்கும் அனுப்பியிருக்கிறார்கள். அவற்றில்  பிரதிகள நமக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. (இவ்விழா துவங்கிய போது பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவினர் நமக்கும் அனுப்பியிருந்தனர்.)

இதுவரை பலரும் அறியாதிருந்த ஒரு சஞ்சிகைக்கு நமது வலைப்புவின் மூலம் சர்வதேச ரீதியில் பெரிய விளம்பரம் கிடைக்கிறதே என்ற கவலை இருந்த போதும் மலேசியா இலக்கிய விழா பற்றிய தொடர் கட்டுரை வருவதாலும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும் சம்பந்தப்படுவதாலும் அவற்றை இங்கு தரவேண்டியிருக்கிறது. முதலில் திருவாளர். மைதீ சுல்தான் அவர்களது கட்டுரை.

கட்டுரைப் பக்கம் - 1


கட்டுரைப் பக்கம் - 2
 

கட்டுரைப் பக்கம் - 3


கட்டுரைப் பக்கம் - 4


இனி -
இந்தக் கட்டுரைக்கு ஹாஜி. ஏவி.எம்.ஜாபர்தீன் அவர்கள் எழுதியனுப்பியுள்ள பதில்.ஹாஜி. ஏவி.எம்.ஜாபர்தீன்

டத்தோ ஹாஜி முகம்மது இக்பால்

கோலாலம்பூர் 20.6.2011

அன்புள்ள டத்தோ,

பிதா வந்தார். தாங்கள் கொடுத்தனுப்பிய இலக்கிய மாநாட்டு ஆய்வுக் கோவையையும் மலரையும் கொடுத்துச் சென்றார். அத்துடன் ஜூன் 2011 நம்பிக்கை இதழையும் தந்தார்.

நம்பிக்கை இதழில் 13ம் பக்கத்தில் வலம் வருவோம் வாருங்கள் என்ற கட்டுரையில் மைதீ சுல்தான் என்னை சிறுமைப்படுத்தி எழுதியுள்ளார். நம்பிக்கையில் வரும் எழுத்துக்கள் தங்கள் பார்வைக்குப்பிறகு தான் அச்சுக்குப் போகும் என்று எனக்கு தெரியும். உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியை அவர் எழுத தாங்கள் எப்படி அனுமதித்தீர்கள் என்று புரியவில்லை.

இஸ்லாமிய இலக்கிய ஏழாவது மாநாட்டில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மீண்டும் கிளற வேண்டாம். இருப்பினும் வெளிநாட்டு பேராளர்கள் அப்போது நடத்தப்பட்ட விதம் மறக்க முடியாது, மலேசிய பேராளர்களுக்காக ஹோட்டல் பிரசிடெண்டில் இடம் ஒதுக்கி இருப்பதாக உங்களிடம் ஹிதாயதுல்லா கூறியதை வைத்து பிடிவாதமாக ஹோட்டல் பிரசிடெண்டில் அறைகள் ஒதுக்கி அவைகளின் சாவியயும் எடுத்துக் கொண்டுவந்து சென்னை விமான நிலையத்திலேயே கொடுத்ததால் மலேசிய பேராளர்களின் தங்கும் இடப் பிரச்சனை தீர்ந்தது.

அதையே இலங்கை பேராளர்களுக்கு செய்ய முனைந்தபோது கடைசி வரை தங்குமிடம் எது என்பதை சொல்லாமல் பஸ் டிரைவரிடம் சொல்லியுள்ளோம் அவர் அழைத்துச் சென்று விடுவார் என்று கூறி திப்பு தெருவில் லாட்ஜ்களில் தங்கவைத்து அவர்களை அவதிக்குள்ளாக்கினர். இதற்கு முன்பே நான் அமைப்புக் குழுவிலிருந்தும் பொறுளாளர் பதவியிலிருந்தும் விலகி விட்டேன். நானே தன்னிச்சையாக வெளிநாட்டு நண்பர்களுக்கு உதவ முன்நின்றேன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் போறவர்களை அழைத்துச் சென்று நீங்களும் நானும் உணவளித்தோம். அதேபோல அன்றிரவு அமைச்சர் அமீர் அலிக்கு விருந்தளித்தபோது தாங்களும் கலந்துக் கொண்டது நினைவிருக்கலாம் அம்மாநாட்டில் மலேசிய பேராளர்கள் அடைந்த மன வேதனையைதாங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

மலேசிய அமைச்சர் பழனி வேலுவுக்கு அவர்கள் கொடுத்த மரியாதையையும் நேரில் நாம் பார்த்தோம். மாநாட்டில் பெற்ற அனுபவங்களை மலேசியாவிலிருந்து பிதா மலையாண்டி என்ற பெயரில் ஒரு கட்டுரை அனுப்பினார். அதே போல இலங்கை கவிஞர் அஷ்ரப் ஷிஹாபுதீனும் தமிழ்நாட்டிலிருந்து அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்களும் எழுதிய கட்டுரைகள் சமநிலை சமுதாயத்தில் வெளிவந்தது.

அதனால் வெகுண்ட கவிக்கோ நான் பெரும்புலவர் நைனார் முகம்மது தந்த பணத்தின் வட்டியை நான் எடுத்துக் கொண்டுவிட்டதாக தனது சம உரிமை இதழில் எழுதினார். அதே சமயம் என்னைப் பற்றி மோசமான மொட்டைகடிதம் ஒன்றை சமவுரிமைக் குழுவினர் வினியோகித்தனர். அக்கடிதம் மலேசியாவுக்கும் கூட அனுப்பி வினியோகித்தனர். என் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பினர், கூத்தாநல்லூரில் வீட்டுக்கு வீடு வினியோகிக்கப் பட்டது. அந்த மொட்டை கடிதத்தை அப்படியே அன்னை கதீஜா என்ற சிற்றிதழில் முழுமையாக பணம் கொடுத்து வெளியிட வைத்தனர்.

நான் உடனே சட்ட நடவடிக்கை எடுத்தேன். கிரிமினல் வழக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டு முதலில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு யாரும் வராததால் வாரண்ட் அனுப்பப்பட்டது. அன்னை கதீஜா ஆசிரியர் குழு மட்டும் வந்தனர். கவிக்கோவும் ஹிதாயத்துல்லாவும் வரவில்லை. அதனால் இப்போது காவல்துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஹிதாயத்துல்லா நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டார். விசாரணை அடுத்த மாதம் 13ம் தேதி என்று நீதி மன்றம் தேதி குறிப்பிட்டுள்ளது. கவிக்கோ தன்னை யாரும் ஏதும் செய்ய முடியாது என்று இதுவரை நீதிமன்றத்தின் வாரண்டுக்கு மதிப்பளிக்காமல் இருக்கிறார், 13ம் தேதி வராவிட்டால் நீதிமன்றம் அவரைக் கைது செய்ய உத்தரவிடக் கூடும்.

ஏழாவது இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடந்து முடிந்தவுடன் ஏற்கனவே ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்ட கழத்தை அப்படியே விட்டுவிட்டு புதிதாக இஸ்லாமிய இலக்கிய கழகம் என்ற தமிழ் பெயரிலேயே புதிய கழகத்தை பதிவு செய்து பழைய கழகத்தின் வங்கி கணக்கில் இருந்த தொகையை அப்படியே மாற்றிக் கொண்டதோடு புதிய நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அதன் பிறகு முழுக்க முழுக்க அரசியல் இயக்கம் போலவே கழகத்தை மாற்றி விட்டனர்

நாம் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் அப்போது தான் நம் உறவுப் பாலம் நீடிக்குமென்ற கோரிக்கை இலங்கையிலிருந்து வந்தது. தங்களிடமும் கூறினேன். தாங்களும் ஆதரவு தெரிவித்தீர்கள். தாங்கள் முதல் அமைப்புக் கூட்டத்திலும் கலந்துக் கொண்டதாக நினைக்கிறேன். அப்போது மலேசிய ஒருங்கிணைப்பாளராக தங்களைத்தான் தேந்தெடுத்தோம். அதன் பிறகு நடைபெற்ற நாயக காவியங்கள் ஒருநாள் கருத்தரங்கில் தாங்கள் கலந்துக்கொண்டு மேடையில் பேசியதோடு அடுத்த மாநாடு மலேசியாவில் 2011 மே மாதம் நடத்த திட்டமிடுவதாகவும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் முழு ஒத்துழைப்பும் தர வேண்டும் என்றும் அப்போது அறிவித்தீர்கள்.

அதன் பிறகு மலேசியாவுக்கு நான் வந்தபோதெல்லாம் மாநாடு பற்றி விவாதித்து வந்தோம். பிரதமர் தேதி உறுதி ஆகும் வரை அறிவிப்பு செய்ய வேண்டாம் என்றும் கூறினீர்கள்

திடீரென ஒருநாள் தாங்கள் தொலைபேசியில் தாங்கள் சென்னை வருவதாகவும் மாநாட்டு அமைப்புக் குழு தமிழ்நாட்டில் உள்ள எல்லா இலக்கிய அமைப்புகளையும் முக்கியமாக கவிக்கோவை கவியரங்கத்திற்கு தலைவராக இருக்க வேண்டும் என்று பெரும்பான்மையோர் விரும்புவதால் தாங்கள் மூன்று அமைப்புகளையும் அழைக்க இருப்பதாக கூறினீர்கள் நேரில் வந்தபோதும் அதிகாரபூர்வ அழைப்பைக் கொடுத்து விட்டு அதையே மீண்டும் கூறினீர்கள்.

நான் கவிக்கோவும் ஹிதாயத்துல்லாவும் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள இயலாது என்று கூறினேன் கழகம் கமிட்டி கூடி கழக உறுப்பினர்கள் கலந்துக்கொள்வது பற்றி முடிவு செய்து தெரிவிப்பதாக தங்களிடம் செயலாளர் சேமுமு கூறினார்

அதன் பிறகு தங்கள் வருகையின் தொடர்ச்சியாக கவிஞர் சீனி நெய்னா முகம்மது,புலவர் ப மு அன்வர், மைதீ சுல்தான் ஃபிதாவுல்லா ஆகியோர் சென்னை வந்து இங்குள்ள இலக்கியவாதிகளுடன் தொடர்புகொள்ள வந்ததாக கூறினர் என் வீட்டிற்கு வந்தபோது நான் அம்மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். நான் என் இயலாமையைக் கூறவேண்டி வந்தது கவிக்கோவுக்கும் ஹிதாயத்துல்லாவுக்கும் எனக்கும் நீதிமன்றத்தில் நான் தொடுத்த கிரிமினல் வழக்கு இருக்கும் சமயம் அவர்களை நான் சந்திக்க விரும்பவில்லை என்பதையும் கவிக்கோ என்னை கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஹோட்டல் பிரசிடெண்ட் அபுபக்கர் மகள் திருமணத்தின் போதும் அவர் எப்படி என்னிடம் நட்ந்துக்கொண்டார் என்பதையும் விளக்கி நான் மாநாட்டுக்கு வந்தால் கவிக்கோவினாலும் ஹிதாயத்துல்லாவினாலும் நான் அவமானப் பட நேரிடும் அதனால் நான் வர இயலாது என்று விவரித்தேன்.

கவிக்கோவும் நானும் சந்திக்காமலே ஒரு திரை போட்டு உங்கள் கௌரவத்தை காப்பற்றுவோம் என்றார் சீனி. இதெல்லாம் ஆகாத காரியம். மாநாட்டை நடத்துங்கள். கழக சார்பில் யாரும் கலந்துக் கொள்வார்களேயானால் தங்களுக்கு தெரிவிப்போம் என்று முடித்தோம்.

அதே போல தாங்களும் கழகத்தை சேர்ந்த மூன்று உறுப்பினர்களை தனியாக அழைத்து கணக்கை நேர் செய்து விட்டீர்கள் அச்சமயம் யார் யாரை அழைப்பது என்ற பேச்சே வரவில்லை. பிறகு காரணம் புரிந்தது. ஏற்கனவே கவிக்கோ பட்டியல் தந்த பிறகு எங்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்துள்ளார்கள். அப்போது நானோ அல்லது அங்கிருந்த கழக உறுப்பினர்களோ யாரை அழைக்கக் கூடாது என்ற பட்டியல் ஏதும் கொடுக்கவில்லை. அப்படியிருக்க என்னை சிறுமைப்படுத்தும் நோக்கத்தோடு தங்கள் நம்பிக்கை இதழில் மைதீ சுல்தான் எழுதுகிறார்

“அதற்கு மறுநாள் ஹாஜி ஏவிஎம் ஜாஃபர்தீன் அவர்களின் இல்லத்திற்கு சென்றபோது ஜின்னாஹ் அவர்கள் ஏற்படுத்திய அதிர்ச்சி அங்கே வேறு ரூபத்தில் எழுந்து நின்றதைக் கண்டோம்.நாங்களோ மாநாட்டிற்கு யார் யாரை அழைப்பது என்ற எண்ணத்தில் சென்றோம்.அவர்களோ யார் யாரை அழைக்கக்கூடாது என்ற பட்டியலை நீட்டிக் கொண்டிருந்தார்கள்” என்று.

 இது முற்றிலும் தவறான பொய்யான தகவல். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றும் சிறுமைப்படுத்த வேண்டும் என்பதே எழுத்தாளரின் நோக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு தாங்களும் துணை போய் இருக்கிறீர்களே என்பது தான் எனக்கு வேதனையாக இருக்கிறது. அழைத்தீர்கள். அழைப்பை ஏற்றுக்கொள்ளாமலி ருப்பதற்கு எனக்கு உரிமை உண்டு. அதற்காக நம்பிக்கை இதழில் என்னைப்பற்றி எழுத என்ன முகாந்திரம் உள்ளது.

நமது 40 வருட கால நட்பை இந்நிகழ்வு முறித்துவிடாது என்று நம்புகிறேன்.

வஸ்ஸலாம்

அன்புடன்

ஏவி எம் ஜாபஃர்தீன்

------------------------------------------------------------------------------------------------------------

இனி -
டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் எழுதியனுப்பியுள்ள பதில்.


டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்


கவிஞர் மைதிசுல்தானுக்கோர் விளக்கம்

மலேசியாவின் “நம்பிக்கை” பத்திரிகையில் என் அன்புக்கும் மரியாதைக்குமுரிய நண்பர் கவிஞர் மைதி சுல்தான் அவர்களின் “வலம் வருவோம் வாருங்கள்” என்ற கட்டுரையினைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இக்கட்டுரையை எனது மரியாதைக்கும் நன்றிக்கும் உரிய ஹாஜி டத்தோ முஹம்மது இக்பால் அவர்களோ, எனது அன்புக்கும் நன்றிக்கும் உரிய தம்பி பிதாஉல்லா கான் அவர்களோ எழுதியிருந்தால் கட்டுரை வேறு மாதிரியாக அமைந்திருக்கும்.

இவ்வாறு நான் கூறுவதற்கு ஆழ்ந்த பொருளுண்டு.ஏனெனில் இறைவனை அடுத்து இவ்விடயமாக முற்றும் அறிந்தவர்கள் அவர்கள் இருவருமே. ஒன்றாக இருந்து பாடுற்று வரலாற்றுப் பதிவுற்ற (பலவகையிலும் “அரசியல் உட்பட”) ஒரு மாநாட்டின் வெற்றிக்கு அவர் உறுதுணையாக இருந்தார் என்ற உண்மையோடு, சில சமாச்சாரங்களை அவர் அறியாதும் இருந்திருக்கின்றார் என்பதும் உண்மையாகும். தவிர அவை பின்னர் இலங்கையில் பொதுமேடையில் எடுத்துச் செல்லப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களால் சத்தியம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டும் நண்பர் “பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருண்ட” கதைபோல பேசுவது ஏனென்று எமக்குப்புரியவில்லை.

கவிஞர் என் அன்புக்குரியவர். என் நன்றிக்குரியவர். வந்திருந்த மற்றவர்களும் அவ்வாறேதான். நான் மலேசியாவில் தங்கியிருந்தபோது என்னைக் கண்ணியப்படுத்திப் போஷித்த நல்லவர்கள். இருந்தும் இம்முறை மாநாடு சமபந்தமாக நடைபெற்ற நிகழ்வுகளை உண்மைக்கு முரணான வகையில் தம்மைத் தூய்மைப் படுத்த அவர்கள்; முயலும்போது சத்தியத்தை விளம்ப வேண்டிய கட்டாயத்துக்குள் நான் தள்ளப்பட்டுள்ளேன்.

நண்பரின் கூற்றுப்படி டிசெம்பர் மாதத்தில் மலேசிய மாநாடுபற்றிய விபரங்களை இலங்கை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் எனக்குக் கிடைக்கச் செய்திருந்தனர். அக்கால கட்டத்தில் நான் எனது நூல் வெளியீடு சம்பந்தமாக இந்தியா செல்லவிருந்தேன். பொறுப்புவாய்ந்த ஒருவரான கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செலாளராக இருந்ததால் மாநாடு தொடர்பான விடயங்களை அவர் மேற்கொள்வார் என்ற நிலையில் ஆவணங்களை அவரிடம் தந்துவிட்டு நான் இந்தியா சென்றுவிட்டேன்.

மாநாட்டுக் குழுவின் தீர்மானத்தின்படி இலங்கைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது இரண்டு ஆய்வுக் கட்டுரைகளும், இரண்டு கவிதை வாசிப்பு மட்டுமே. ஏற்கனவே உலக மாநாடொன்றை வரலாற்றுப் பதிவாக 2002ம் ஆண்டில் செய்துமுடித்த எங்களிருவருக்கும் இப்போது நடந்துள்ளது போல் ஊர்கூட்டித் தேரிழுத்து மூக்குடைபடும் காரியமல்ல. தவிரவும் பேராளர்களைத் தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்வதும் சாதித்துவிட்டதாகப் பொன்னாடை போர்த்திக்கொள்ளும்படியான பணியுமல்ல. ஏனெனில்; முன்னர் இருமுறை இறையருளால் இப்பணியைச் செவ்வனே செய்த அனுபவம் எமக்கிருந்தது.

நான் இந்தியாவில் இருந்தபோது கவிஞர் அவர்கள் சொல்லுவது போல பேராசிரியர்களுடன் மலேசியக்குழுவினரை அவர்கள் விடுதியில் சந்தித்தேன். அப்போதுதான் நான் எனது கருத்தொன்றை வெளியிட்டேன். அதுவோர் அதிர்ச்சி வைத்தியமாக இருந்திருக்குமென நான் எண்ணவில்லை. இந்தியாவில் நடைபெற்ற ஏழாவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இலங்கைப் பேராளர்களுக்கு நடந்த பெருத்த அவமானத்தின் சூத்ரதாரிக்குப் பக்கபலமாக இருந்த கவிக்கோஅப்துல் றகுமான் அவர்கட்கு முன்னுரிமை வழங்கும் மாநாட்டு நிகழ்வில் மானமுள்ள இலங்கையர்கள் பங்குகொள்ள மாட்டார்கள் எனவே இலங்கையர்கள் பங்குகொள்ளும்படி செய்யுங்கள் என்றேன். (அவ்வாறாயின் பங்குபற்றிய இலங்கையர்கள் மானமற்றவர்களா எனக் குதர்க்கம் பேசாதீர்கள்) அவ்வாறு நான் சொன்னபோது எனது உணர்வுகளை மதிப்பதாக ஒப்புக் கொண்ட அவர்கள், அதனைத் தவிர்க்கும் விதமாக எந்தவித உத்தரவாதமும் அன்று தரவில்லை.

ஹாஜி ஏவி.எம்.அவர்கள் வீட்டில் நடந்த சந்திப்பிலும் இதனைத்தான் நான் வற்புறுத்தினேன். கவிஞர் அவர்கள் பன்னாட்டு இஸ்லாமியக் கழகம் பங்குபெறக் கூடாதவர்கள் பட்டியலைத் தந்ததாகச் சொல்லியிருந்தார். ஆனால் அதில் சத்தியமில்லை. அங்கும் விரல் சுட்டப்பட்டவர் கவிக்கோ அவர்கள் மட்டுமே. அதன்பின் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் மலேசியா திரும்பிவிட்டனர்.

பின்னர் ஒருநாள் பிதாஉல்லாக்கான் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். டத்தோ அவர்கள் பேச விரும்புவதாகக் கூறினார். நானும் பேசினேன். எப்போது நாடு திரும்புகின்றீர்கள் என வினவினார். நான் இரண்டாம் தேதி புறப்படுவதாகக் சொன்னேன். அவர் என்னிடம் நீங்கள் போகும் நாளைக் கருத்தில் கொண்டு மலேசியக் குழு நான்காம் தேதி இலங்கை செல்லவிருக்கின்றது என்றும் ஒரு ஒன்றுகூடலுக்கு ஆயத்தம் செய்யும்படியும் கூறினார். நான் நல்லது என்றும் அழைத்துவர நான் விமான நிலையத்துக்கு வருவதாகவும், தங்குவதற்கான ஹோட்டல் ஏற்பாடு செய்வதாகவும் சொன்னேன்.


அதற்கு அமைச்சர் ஹக்கீம் நட்பு ரீதியாகத் தனக்கு வாகனம் அனுப்புவதாகவும், தங்கும் ஹோட்டல் ஏற்பாடுகளைத் தாங்களே செய்து கொண்டதாகவும் டத்தோ இக்பால் சொன்னார்.

நான் இலங்கை வந்ததும் இங்கு நிலைமைகள் வேறுவிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததை அறிந்தேன். அமைச்சர் ஹக்கீம் ஆய்வகத்திக்கான பொறுப்புக்களைத் தனதாக்கிக் கொண்டு காரியத்தில் தம்மவர்களை ஊக்கிவித்துக் கொண்டுமிருந்தார். முற்றாக ஆய்வகம் புறக்கணிக்கப்பட்டு (செயலாளரைத் தவிர்த்ததன் மூலம்) தனி மனிதனான எனக்கு முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து நான் உடனடியாக மலேசியாவுடன் இரண்டுமுறை தொடர்பு கொண்டேன். இறுதியாக டத்தோ அவர்கள்
“அமைச்சர் மாநாட்டு விடயத்தில் ஒரு நாட்டின் அமைச்சராக மட்டும் அல்லது ஒருபுரவலர் என்ற வகையில் மாநாட்டில் கலந்து கொள்ளுவார். ஆனால் நீங்கள் எங்களது முகமாக இருப்பீர்கள்” என்றார். தவிரவும் எமது வேண்டுகோளுக்கிணங்கி, அமைச்சர் கூட்டும் ஒன்றுகூடலில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமே இம்மாநாட்டின் அனைத்துப் பொறுப்புகளுக்கும் உரியது எனப் பிரகடனம் செய்வதாகவும் பிதாவுல்லா கான் ஊடாக ஒப்புதல் தந்தார். அதன் பொருட்டே நாங்கள் அழைப்பை ஏற்று அங்கு சென்றோம்.

ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது.

எமது ஆய்வகத்தில் பொறுப்பான பதவிகளிலிருந்த இரு புல்லுருவிகள் பதவி ஆசைகொண்டு ஆய்வக அழிவு முயற்சிகளில் ஈடுபட முயன்றனர். இயலாது தோற்ற நிலையில் புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு மலேசியா வரை காவடி தூக்கித் தோற்று, அமைச்சரின் கால்பற்ற, அதற்கு அவரும் இணங்கியிருக்க வேண்டும். அதன்விளைவே பின்னர் நடைபெற்ற சீரழிவுகளாகும்.

விமான நிலையத்தில் தங்களை மாலை மரியாதையுடன் வரவேற்றார்கள் எனப் புளகாங்கிதம் கொள்ளும் கவிஞர் அதற்குப் பின்னாலிருந்த கீழ்மட்ட அரசியலைப் புரிந்திருக்க நியாயமில்லை. அமைச்சர் சார்பில் இலக்கியவாதிகளை வரவேற்கும் தகுதி வந்தவர்களை விட அமைச்சரின் சகோதரர் வீராவேசக் கவிஞன் ஹஸீர் அவர்களுக்கே இருந்தது. அவ்வாறு நடைபெற்றிருந்தால் டத்தோ அவர்கள் சொன்னது போல் அது நட்பு ரீதியான வரவேற்பாக இருந்திருக்கும். இலக்கிய உலகில் விலாசத்துக்காக அலைபவர்களை முன்னிலைப் படுத்தி (பின்னிலைப் படுத்தி) ஒரு அரசியல் நாடகம் அன்று அவையேறியதை அறிந்திருந்தால் பண்பட்ட இலக்கியச் சிகரங்கள் இரண்டு (கவிஞர்கள் சீனி நைனார், மைதீ சுல்தான்) மாலைக்காகத் தலை குனிந்திருக்கமாட்டா.

இலக்கிய உலகில் விலாசமற்ற சிலரும், சமூகத்தில் சரிந்துவரும் தத்தமது செல்வாக்கைச் சீர்செய்யச் சிலரும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயன்றுள்ளனர். மலேசியாவில் இருபது நீண்ட வருடங்கள் ஒன்றுபடாதிருந்த இதயங்களை இணைத்து வெற்றிகரமாக நடைபெற்றுள்ள
இந்த மாநாட்டின் பக்க விளைவுகள் மற்றைய இரு நாடுகளில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியத்தின் மூலம் இதயங்களை இணைப்பதற்குப் பதிலாகஇலங்கையிலும் இந்தியாவிலும் இணைந்திருந்த இதயங்களைப் பிரித்துவிட்ட பழியையும் அது ஏற்றுள்ளது.

அமைச்சரின் ஒன்று கூட்டலின் தொகையைக் கண்டு பூரித்துப்போன கவிஞருக்கு வந்திருந்தவர்களில் பாதிப்பேர் அரசியல் கட்சி சார்ந்த உறுப்பினர்கள் என்பதை அறிந்து கொள்ள வாய்பில்லாதிருந்திருக்கலாம். ஆனால் இலக்கியவாதிகளான தங்களோடு அமர்ந்திருந்தவர்களில்
ஒருவரேனும் இலக்கியவாதிகளல்லாத அரசியல் பிரமுகர்கள் என்பது அறிமுகப்படுத்தப்பட்ட போதிலுமா அறிந்துகொள்ள இயலாது போயிற்று.

இலங்கையிலிருந்து 228 பேராளர்கள் வந்ததாகப் பிரகடனம் செய்துள்ள கவிஞரவர்கள் இலவச விமானச் சீட்டுக்காக ஆள் சேர்த்துக் கொண்ட யாதர்த்தத்தைப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்தான். மாநாட்டின் காரணமாய் இலகுவாக விசா பெற்று நாடு சுற்ற வந்து பார்க்கமுடியாமல் மாநாட்டின் இறுதிநாளே நாட்டுக்குத் திரும்பும் பரிதாபத்துக்குள்ளானவர்கள் பற்றியும் அவர் அறிந்திருக்க இயலா.


ஆனால் எழுபத்தைந்து வீதம் வர்த்தக நோக்கம் கொண்டவர்களையும் அழைத்து வந்திருந்தார்கள் என்பது மாநாட்டில் வெளியிடப்பெற்ற பெறுமதிமிக்க மாநாட்டுக் கடடுரைக் கோவையையும் மாநாட்டுச் சிறப்பு மலர்களையும் சுமையென்றெண்ணி தங்கியிருந்த விடுதிகளின் குப்பைக் கூடைகளை நிரப்பிவிட்டு வந்ததிலிருந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

தமக்கான பொன்னாடைகளுக்காகப் பதறித் திரிந்த ஏற்பாட்டுக்குழுவினர், இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வின் சூத்திரதாரியான மருதமுனை செய்யது ஹஸன் மௌலானா அவர்கள் ஒரு அனாதைபோல் கேட்பாரற்று அலைந்து திரிந்ததைக் கண்டுகொள்ளவில்லை. அதற்குக் காரணம், மலேசிய ஏற்பாட்டாளர்கள் அவரை அறிந்திருந்தால் போர்த்திக் கொண்டவர்களைப் புறந்தள்ளிவிட்டு அவருக்கல்லவா செங்கம்பளம் விரித்திருப்பர்.

உபசரணையில் உன்னதம் காட்டி வந்தவர்களை திணறடித்துள்ளீர்கள். அது உங்கள் பண்பு. ஆனால் ஒரு அற்புதமான இலக்கிய மாநாட்டை திருஷ்டி பரிகாரம்போல் அரசியல் கறைபூசி அவலம் செய்யவும் வாய்ப்பளித்துள்ளீர்களே.

ஒரு நிகழ்வை நடத்தி விட்டுக் குறைகளை மறைப்பதற்காக மற்றவர் மீது குறை சொல்லித் தப்பிக் கொள்ள நினைப்பது கண்ணியத்துக்குரிய மனிதர்களுக்குள்ள பண்பு அல்ல என்பதை மட்டும் நான் அறிந்திருக்கிறேன்.


”உண்மை”யுள்ள

ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
----------------------------------------------------------------------------------------------------------

அன்புக்குரிய வாசகர்களே....

குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவினரின் படத்தின் டைரக்ஷன் ஸ்டைல் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

எனது கருத்து என்னவெனில் - நம்பிக்கையில் இடம்பெற்ற கட்டுரை குப்பப் பிச்சை முகம்மது இக்பாலுடையது என்பதே. அல்லது அவர் சொல்லச் சொல்ல உட்கார்ந்து மைதீ சுல்தான் எழுதியிருக்கலாம்.

இந்தக் கட்டுரைக்கான பதில்களை நமது கட்டுரைத் தொடரின் முதலாவது கட்டுரையில் நாம் இந்த விழாவுக்கு முன்னரே சொல்லி விட்டோம். மறந்து போனவர்கள் அக்கட்டுரையை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ள முடியும்.

ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன் இன்னும் 40 வருட நட்பைப் பற்றிப் பேசுவது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 40 வருட நட்பை வைத்திருக்கும்  ஒரு நண்பருக்கு தனது சஞ்சிகையில் இப்படி எழுத இடமளிப்பாரா ஒரு நண்பர்? என்ன நட்பையா இது?


இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் மாத்திரமே இலக்கியவாதிகளாவர். ஏனையோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதிகளும் வியாபாரிகளுமாவார். இலங்கை ஏற்பாட்டுக் குழுவால் மாநாட்டுக்கு முதலே அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்ட சகோதரர் முகைதீன் சாலி எனது முகப் புத்தகத்தில் பின்வருமாறு ஒரு குறிப்புத் தந்துள்ளார். அதை அப்படியே படமாகத் தருகிறேன். (படத்தின் மேல் சொடுக்கிப் பெரிதாக்கி வாசிக்க முடியும்)


அந்த விழாவில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைக் கோவை கிறீம் ஒப் வேர்க். மிக அழகாக அது தொகுக்கப்பட்டுள்ளது. மிகவும் கனதியான ஒரு நூல். இந்த கட்டுரைத் தொகுதியைக் குப்பைக் கூடைக்குள் எறிந்து வருபவன் எப்படிப்பட்டவனாக இருந்திருப்பான் என்பேது குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவுக்குப் புரியாமலா போய்விட்டது. அதிலிருந்தே கௌரவ அமைச்சர் நியமித்த குழுவும் அவர்கள் அழைத்து வந்த நபர்களின் தன்மையும் புரிந்திருக்க வேண்டுமே.

ஆனால் அவற்றையெல்லாம் வெளியே சொல்லவோ காட்டிக்கொள்ளவோ முடியாது. அதைச் சொல்லவே கூடாது என்று தனது கட்டுப்பாட்டிலேயே இயங்கும் குழுவுக்கு கட்டளையிட்டிருப்பார் குப்பப் பிச்சை முகம்மது இக்பால். அது வெளியே வருமென்றால் தனது நண்பரும் அரசியல் பிரமுகருமான கௌரவ அமைச்சரின் குழுவில் வந்தவர்கள் பலர் இலக்கியத் தற்குறிகள் என்பது வெளியே தெரிந்துவிடுமல்லவா? கௌரவ அமைச்சரின் நட்புத்தான் அவருக்கு முக்கியமே தவிர, இஸ்லாமிய இலக்கியமாவது மண்ணாவது?

அப்படி இஸ்லாமிய இலக்கியத்தில் உண்மையான மரியாதை இருந்திருக்குமெனில் ஹஸன் மௌலானா கண்டு கொள்ளாதிருக்கப்பட்டிருப்பாரா. அவரை தமக்குத் தெரியவில்லை என்று அவர்கள் சொல்வார்களாயின் அவர்களுக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் அரிச்சுவடியே தெரியாது என்று அர்த்தம். குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவுக்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்பதற்கு ஆதாரமாக இது ஒன்று போதாதா?

குப்பப் பிச்சை முகம்மது இக்பாலின் நோக்கமே வேறு. அவரது விழா முடிந்து இரண்டு வாரங்களுக்குள் மலேசியாவில் “டான்ஸ்ரீ” கொடுத்து முடித்து விட்டார்கள். அதில் இக்பால் கிடையாது. அவதானியுங்கள். இப்பட்டங்கள் கொடுக்கப்படும் கால எல்லைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் விழா நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் வருவார். இலங்கை அமைச்சர் வந்துள்ளார், சர்வதேசத்தையே கூட்டி வைத்துள்ளேன்  என்று காட்டினால் விழா முடிந்ததும் டான்ஸ்ரீ கிடைக்கும் என்பது அவரது எதிர்பார்ப்பாக இருந்திருக்கக்கூடும்.

மிக இலகுவாக ஆட்களைச் சேர்ப்பதற்கு சுலபமான வழி இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்தான் என்பதும் ஏமாளிகள் இலக்கியக்காரர்தான் என்பதும் ஒரு பொன்னாடையைக் காட்டினாலே விரும்பியவாறெல்லாம் ஆட்டுவிக்கக் கூடிய கல்விமான்கள் மரைகள் எல்லாம் இருக்கின்றன என்பதும் அவருக்கும் தெரியாதா என்ன?

ஆனால் என்ன செய்வது... நோக்கம் நன்றாக இருக்கவேண்டுமே! அது சரியாக இல்லை என்பதற்கு மைதீ சுல்தானின் கட்டுரையே போதுமே!

எனிவே... பெட்டர் ட்ரை நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் இக்பால்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: