Monday, June 20, 2011

நம்முடைய வாழ்வியலைத்தான் நாம் பேச வேண்டும்!


நேர்முகம்…


தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுக்கொண்டவர் அஷ்ரப் சிஹாப்தீன். எந்த ஒரு விடயத்தையும் தன் எழுத்தாற்றல் மூலம் மக்களை சிந்திக்க வைப்பதில் இவர் கைதேர்ந்தவர். ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவருடைய தந்தை ஒரு மார்க்க அறிஞர். இவரது பாட்டனார் ஒரு தமிழ்ப்புலவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய ஒட்டுமொத்த அறிவும் இவருக்கு கிடைக்கப்பெற்றிருப்பது இறைவன் அருளிய கொடை என்றும் சொல்லாம்.

வந்தாறுமூலை மத்திய கல்லூரியில்தான் தன் கல்வியை தொடர்ந்தார். இப்போது அது கிழக்குப் பல்கலைக்கழகமாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பாடசாலையில் கல்வி கற்ற இவருக்க ஏராளமான தமிழ் நண்பர்கள். இப்படி திரும்பும் இடமெல்லாம் தமிழையே கண்டு வளர்ந்ததும் தமிழ் மீதான இவரது காதலை அதிகரிக்க காரணமாயிருந்தது.

 ஒலி,ஒளி பரப்புத்துறையிலும் நீண்ட காலம் தனக்கென ஒரு; இடத்தை உருவாக்கி நேயர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர் அஷ்ரப் சிஹாப்தீன். இவர் மேடையில் பேசும்போது கேட்போரைக் கட்டிப்போடும் அளவுக்கு பேச்சுவன்மை கொண்டவர்.

கவிதை இலக்கியம், சிறுவர் இலக்கியம், கட்டுரை, கவிதைத் தொகுப்பு என இதுவரை 9 நூல்களை வெளியிட்டிருக்கிறார். யாத்ரா சஞ்சிகையின் ஆசிரியரான இவரது ஸெய்த்தூன் என்ற கவிதை சர்வதேச புகழ்பெற்று பலரால் விமர்சிக்கப்பட்டது. அதனால் அவருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டது. இவருடைய படைப்புகள் இன்று பரவலாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

அண்மையில் உள்ளத்தை உறைய வைக்கும் உண்மைக் கதைகளைக் கொண்டமைந்த ‘ஒரு குடம் கண்ணீர்’ என்ற பதிப்பை வெளியிட்ட திருப்தியில் திளைத்திருந்த பல்துறை சார்ந்த, பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இவரை எமது அலவலகத்தில் சந்தித்தோம். இப்படிப்பட்ட ஒரு கலைஞர் எந்தவிதமான ஆர்ப்பாட்டமுமின்றி வந்தமர்ந்தார். அவருடைய தமிழ் மீதான ஆழ்ந்த ஈடுபாடு பற்றி அவரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டோம்.

‘சின்ன வயசில இருந்தே வாசிப்புப்பழக்கம் இருந்தது எனக்கு. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் என் பாட்டனார் ஆர்வம் மிக்கவர். அவர்கூட நிறையப் புத்தகங்கள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள், ஏன் காவியங்கள் கூட எழுதியிருக்கார். இதெல்லாம் படிச்சுக்காட்டினால் அவர் எனக்கு பரிசு தருவார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பின்னேரமும் நான் அவருக்கு அதைப் படிச்சுக்காட்டுவன். ஒரு பக்கத்தை படிச்சுக்கட்டினன் எண்டு சொன்னால் எனக்கு 25 சதம் காசு தருவார். பிற்காலத்தில எனக்கு தமிழ் இலக்கியத்தின் மீதான காதலை வளர்த்ததற்கு அதுவும் ஒரு காரணம்.

இரண்டாவது எனது தாயார் நல்லா தாலாட்டுப்பாடுவா. அந்த நாள்ல எல்லா வீடுகளிலும் ஊஞ்சல்கள் இருந்தன. இண்டைக்கும் காத்தான்குடில போய்ப்பாத்தீங்க எண்டால் ஊஞ்சல் இருக்குது. எங்கட ஊர்லதான் இல்லாமப் போயிட்டுது. அந்த ஊஞ்சல்ல பிள்ளைகளை வைத்துக்கொண்டு தம்பி தங்கைகளை நித்திரையாக்கிற நேரம் அவங்க அழகான தமிழ் தாலாட்டு பாடல்கள பாடுவாங்க. அவையும் கூட இரத்தத்தோட சேர்ந்த விசயம் இல்லையா? அப்படித்தான தமிழ் மீதான காதல் இருந்தது’ என்று சிரித்துக்கொண்டே கூறிய இவர் 80 வரையான காலப்பகுதிகளில் மரபுக் கவிதைகளையே எழுதிவந்தார். புதுக்கவிதையில் இலங்கையிலும் ஒரு எழுச்சி ஏற்பட்ட காலப்பகுதியில் இவரும் புதுக்கவிதைக்குள் பிரவேசித்து இன்றும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்.

கவிதை மொழியில் தமிழ் மொழியின் ஆளுமை இப்போது எந்தளவுக்கு இருக்கின்றது?

‘அதுக்கு ஒரு நல்ல உதாரணம் சொல்றன். என்னுடைய மடிக் கணணியைப் பழுதுபார்க்க ஒரு நண்பர் வந்திருந்தார். அப்போது தொலைக்காட்சியில் இரவு எட்டுமணிக்கு செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஆபிரிக்கா வழியாக வந்த கப்பலில் கடற்கொள்ளைக்காரர்ககள் பணயக் கைதிகளாகப்பிடித்துக்கொண்டு போனார்கள் என்று சொல்றத்துக்குப் பதிலாக பயணக் கைதிகளாக என்று சொல்ல ‘இங்க பாருங்க பிழையாகச் சொல்றான்’ என்று நான் சொன்னன். அதுக்கு என் நண்பர்’ சொல்றார் ‘விசயம் விளங்குதுதானே..’ நமக்கு விசயம் விளங்கினால் சரிதானே என்றார். இந்த லெவல்லதான் தமிழ் இருக்குது.

ஒரு காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வேறு இலத்திரனியல் ஊடகங்களில் குரல் கொடுக்கவேண்டுமாக இருந்தால் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் குரல் பரீட்சையில் சித்தியடைந்தவராக இருக்க வேண்டும். அது விளம்பர நிகழ்ச்சியாக இருந்தாலும்கூட. இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஒரு நிலை உருவாகியிருக்கிறது. இதுதான் இன்றைய தமிழ் மொழியின் நிலை’ என்று கூறி தமிழின் நிலை குறித்து வருந்தினார்.

வறுமை என்பது கவிஞர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒன்றா என்று என்னை சிந்திக்க வைத்தது. காரணம் 83 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எல்லா கவிதைகளையும் தொகுத்து வைத்திருந்தும் பணபலம் ஒன்று இல்லாமல் 83 ஆம் ஆண்டு வெளிவர வேண்டிய இவரது கவிதைத் தொகுப்பு 99 ஆம் ஆண்டுதான் ‘காணாமல் போனவர்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. அதற்கு பிறகு பல படைப்புகளை வெளியிட்டிருந்தார்.

இன்றைய சூழலில் வாசிப்பவர்களைவிட கவிஞர்கள் அதிகரித்துவிட்டனரே என்று கேட்டபோது

‘கவிதை என்பது கவிதை மாதிரி இருக்குமென்றால் வசிக்கலாம். புதுக்கவிதைக்கு வந்தா பிறகு ஒரு பிரச்சினை வந்தது. என்னெண்டால் எப்பிடி வேணுமெண்டாலும் எழுதலாம். நீங்களோ நானோ ஒரு நாலு வசனத்தை எழுதிப்போட்டு இதுதான் கவிதை என்று அந்த வடிவமைப்பில் எழுதிப்போட்டு அனுப்பினால் ஏராளமான பத்திரிகைகள் இருக்கின்றன பிரசுரிப்பதற்கு.

அந்தக்காலத்தில அப்பிடி வசதி இல்ல. மரபுக்கவிதையா இருக்கவேணும். புதுக்கவிதையா இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு செய்தி இருக்கணும். சுள்ளெண்டு ஒரு ரெண்டு வசனம் இருக்கணும். அதெல்லாம் பார்த்துத்தான் போட்டாங்க. இப்ப நிறைய இடமிருக்கு. சில இடங்களில பத்திரிகையில இருக்கிறவங்களுக்கே ஒழுங்காத் தமிழ் தெரியாது. எல்லாரையும் சொல்லல. அப்பிடி ஒரு நிலை இருக்கு’ என்றவரிடம் ஒரு அனுபவம் மிக்க எழுத்தாளர்கள் என்ற வகையில் ஆரம்ப நிலையிலிருக்கும் எழுத்தாளனோ கவிஞனோ தங்கள் திறமையை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டேன்.

‘நிறைய வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வாசிப்பவனாக இருந்தால் தான் நல்லா எழுதுபவனாக இருக்க முடியும். என் நண்பர் எனக்கு அடிக்கடி சொல்வார். நீ எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி படிக்காமல் எழுதாதே. நாளைக்கு ஒன்றை எழுதுவதாக இருந்தாலும் குறைந்தது இருக்கின்ற பத்திரிகைகளையாவது படித்து விட்டு எழுது என்பார். ஆகவே நல்லா வாசிக்கவேணும். வாசித்தால் தான் நிறைய அறிவு வளரும், மொழி வளம் வரும், மனதில பதியும். மொழி வளம் வரல்ல எண்டு சொன்னா அந்த எழுத்துல எந்தப் பிரயோசனமும் இருக்காது.

அடுத்தது நாம எதைச் சொல்றம் யாருக்கச் சொல்றம் எப்பிடிச்சொல்றம் என்பதுதான் இப்ப உள்ள பிரச்சினை. எழுத்தாளர் சுஜாதா குறகிய காலத்திற்குள் பிரபல்யத்தை அடைந்தாரென்றால் எதை எப்படிக் கொடுக்க வேண்டுமென்ற இரகசியத்தை அவர் தெரிந்திருந்தார். மிகப் பழைய படைப்பாளிகளால் கூட அந்த நிலையை அடைய முடியவில்லை. ஆகவே சொல்லுகின்ற விசயத்தை தெளிவாகவும் இரசனையாகவும் சொல்லத் தெரிந்தால் நிச்சயமாக அந்த எழுத்து வெற்றி பெறும்’



உங்களுடைய கவிதைகள் மற்றும் ஏனைய படைப்புகள் எந்தவிதமான போக்கைக் கொண்டிருக்கின்றது?


‘நம்முடைய வாழ்வியலைத்தான் நாம் பேச வேண்டும். ஆகவே நான் அதைத்தான் பேசுகின்றேன். என்னுடைய கவிதைளும் சரி எழுத்துக்களும் சரி அதைத்தான் பேசுகின்றன. மிக அண்மைக் காலமாக எனது கட்டுரைகளும் பார்வையும் சர்வதேச ரீதியான ஒரு பார்வைக்குள் வந்திருக்கிறது. அது சில வேளை எனது வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். இப்போது உலகம் சுருங்கி விட்டது. நாங்களெல்லாம் விரும்பியோ விரும்பாமலோ மேற்கத்தேய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்று யதார்த்தத்தைக் கூறினார்.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகியிருக்கின்ற நிலையில் தமிழர்களின் வாழ்வியல் தொடர்பில் எழுத்தாளர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கின்றது என்று கேட்டேன்.

‘உங்களுக்குத் தெரியும் சில நேரங்களிலே நேரடியாக சில விசயங்களைப் பேச முடியாது. உங்களுடைய நிலைதான் இன்று எழுத்தாளர்களுக்கும் இருக்கின்றது. ஆகவே அதை வேறு விதமாக சொல்லாம். என்னுடைய அண்மைய வெளியீட்டில் உள்ள முகவுரையைப் பாருங்கள். நான் அதிலே சொல்லியிருக்கிறேன் இதன் மூலம் இலங்கையில் நடைபெறாத துன்பமும், துயரமும், சித்திரவதையும் விட வேறு எங்கேயுமே நான் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை எம்மால் நேரடியாக பேச முடியாது என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள். அப்படி நேரடியாகப் பேசினால் பிறகு என்னைப்பற்றிப் பேசுவதற்கு இன்னொருவர் தேவைப்படுவார்.. அதைப் பிரசுரித்தவரைப் பற்றி பேசுவதற்கு இன்னொருத்தவர் தேவைப்படுவார். ஆகவே இந்த நிலையை முன்னுரையில் சொல்லியிருக்கிறேன். இதன் மூலமாக கடந்த முப்பதாண்டு காலத்தில் இலங்கையை நாம் தரிசிக்கலாம்.’

ஒவ்வொரு கவிஞனும் தன் வாழ்நாளில் பாதியை அர்ப்பணம் செய்து தன் படைப்புகளை வெளிக்கொண்டு வருகின்றான். அதை வெளியிடுவதற்கோ பதிப்பதற்கோ இன்றும் ஒரு நல்ல நிலை கிடைக்கவில்லை. இதற்கு என்ன காரணம்?

‘இந்த நிலமைக்கு படைப்பாளிகள்தான் காரணம். இப்ப கணணி வசதி வந்த பிறகு எல்லோரும் பத்திரிகையாளரும் குறைஞ்சு போயிட்டாங்க. மாசத்துக்கு எப்பிடியும் நாலைந்து புத்தகம் வந்துடுது. முதற் காலத்தில ஒரு புத்தகத்தை ஒரு இளம் படைப்பாளி எழுதிக்கொண்டு வந்து அதை 2 மூத்த எழுத்தாளர்களிட்ட காட்டி அவங்க திருத்தச் சொல்லுவாங்க. அவர்கள் சொல்வதை நாங்களும் கேட்டுக்கொள்வம். இப்ப அப்படி இல்ல. அப்படியும் காட்டி எதுவும் சொன்னால் இவன் என்ன பெரியாளா? இவன் என்னத்தை எழுதிக் கிழிச்சிட்டான் என்ற மனநிலை. அப்படி இருக்கக் கூடாது. குப்பைகளை நாம் புத்தகமாக கட்டி வைக்கக்கூடாது. அப்பிடியொரு நிலை இப்ப வந்திட்டுது. இந்தியாவில வரக்கூடிய புத்தகங்களை இண்டைக்கும் வாங்கிப் படிக்கலாம். அந்த லெவலுக்கு எங்கட கடந்தகாலம் இல்லையோ என்ட சந்தேகம் எனக்கிருக்கு. அதாவது எங்கட கடந்த கால எழுத்துக்கள் அந்த லெவலுக்குப் போகல்லையோ என்ற சந்தேகம். அல்லது அதுக்குரிய மார்க்கட் கிடைக்கல்ல.

 நாங்க முழுக்க முழுக்க இந்தியாவிலே தங்கி இருந்திட்டம். சரியாக எழுத்தாளனை கையாளவில்லை. சரியான மொழிநடையைக் கொண்டு வரவில்லை என்கிறதுவும் இருக்கு. ஆனால் சினிமாவோடு சம்பந்தப்பட்டு வருகின்ற இந்திய சஞ்சிகைகளிலே கதைகள் படித்துப் பழக்கப்பட்டுப்போன நம்முடைய சனங்கள் எல்லாமே அப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள்’ என்று கூறி ஆதங்கப்பட்டார்.

இன்று எத்தனையோ திறமைசாலிகள் எமது நாட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்டார்கள். அவர்களுள் நல்ல கவிஞர்களும் அடக்கம். இது பற்றி அவரிடம் கேட்டபோது…

‘ஒரு மனிதனுக்கு எழுதுற ஆர்வமும் வேகமும் வயசு போகப் போக குறைந்து போகும். ஏனென்டால் வாழ்கையில் பிரச்சினைகளாலும் நெருக்கடிகளாலும் அவதிக்குள்ளாகிறான். ஆகவே அந்த மாதிரியான பொது விசயங்களை இறங்கிச் செய்வதற்கு அவனுக்கு வாய்ப்பு இருப்பதில்லை. உண்மைக்குண்மையாக உழைக்க நினைப்பவனுக்கு ஆதரவு கிடைப்பதில்லை. சிலர் சுயநலத்திற்காக செயற்பட முயற்சிக்கிறார்கள். அவர்களை சனங்கள் விளங்கிக்கொண்டு ஆதரவு வழங்குவதே இல்லை. எல்லாமே கிடப்பில் கிடக்கின்றன. இதுதான் காரணம்’

இணையத்தின் வளர்ச்சி வாசிப்பின் மீதான ஆர்வத்தை குறைத்துவிட்டதே…

‘என் வெப்சைட்ல ஒரு கதையைப் போட்டன். இரண்டாவது கதையெழுதி அதையும் போட்டுவிட்டு நான் யோசிச்சன். வெப்சைட்ல கதையைப் போட்டால் சும்மா படிச்சுப்போட்டு விட்டுருவான். வெப் ஒரு காலத்தில எப்பிடி ஆகும் எண்டு ஒருத்தருக்கும்; தெரியாது. ஆனால் நூல் வடிவாக இருக்கும் போது பலருடைய கைகளுக்கு அது செல்லும் நூலகத்தில் பாதுகாக்கப்படும். இதனால் நான் இரண்டு கதைகளையும் போட்டுவிட்டு நிறுத்திக் கொண்டேன். நான் பன்னிரெண்டு கதைகளையும் போட்டேன் என்றால் அது நூல் வடிவமாக வரும்போது நான் இதை நெற்றில் படித்துவிட்டேன் என்று வாங்கமாட்டார்கள்.

சில சொல்ல முடியாத விசயங்கனை தைரியமாக இணையத்திலே நாங்கள் சொல்லலாம்தான். அதை மறுக்க முடியாது. ஒரு பதிவை போட்டால் ஆயிரக்கணக்கானோர் உலகம் முழுக்கவும் இருந்து படிக்கிறார்கள். இன்று வாசகர்கள் நல்ல எழுத்துக்களை அடையாளம் காணுகிற ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக எனக்குத் தெரிகிறது. தமிழிலே இப்போது பல்கலைக்கழகங்களிலே நிறைய இளைஞர்களும் யுவதிகளும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே எதிர்காலத்தில முன்பிருந்த நிலை மீண்டும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் விரைவில் ஏற்படும் என்று நினைக்கிறேன்’ என்றவர் எந்த ஒரு இலக்கியமும் எழுத்தில் இருப்பதைப் போல வேறு எதிலும் நிரந்தரமாக இருக்கமுடியாது என்றார் பெருமையுடன்.

கடந்த கால சூழ்நிலைகள் எல்லாம் சேர்ந்து எம்மவர்களை நூலகங்களில் தேடிப்படிப்பதையும் குறைத்துவிட்டது. அதற்கு கடந்த கால சூழ்நிலைகளும் ஒரு காரணம் என்பது இவரது கருத்து. அது உண்மையும் கூட. கடந்த எழுத்தாளர் மாநாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டமை இதற்கு நல்ல உதாரணம்.

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற முஸ்லிம் இலக்கிய மாநாட்டைப்பற்றி பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சகைளும் எழுந்தன. இதுபற்றி அவரிடம் கேட்டோம்.

‘இலக்கியத்தில பெரிசா அங்க ஒண்டும் நடந்ததா எனக்குத் தெரியல்ல. இவ்வளவுதான் பேசப்போகின்றோம் என்று ஒரு சட்டகத்திற்குள் நின்று கொண்டார்கள். இந்த சட்டகத்தைப் போடலாம் ஆனால் அதனால் வரும் பின் விளைவுகள், பின்னூட்டம் அல்லது பிரதிலாபம் பெறுமதியானதாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவர்களுடைய நாட்டை பேஸ் பண்ணித்தான் எல்லாமே செய்தார்கள்.

இலங்கைக்கு இரண்டு கட்டுரைதான். அதை நான் மறுத்தேன். மற்றப்படி அதை ஓர் அரசியல் மயமானதாக்கி விட்டார்கள். ஒரு இலக்கிய குழு அதைச் செய்திருக்க வேண்டும். மாறாக ஒரு கட்சியிடம் அது ஒப்படைக்கப்பட்டு அதன் மூலம் நிறையப் பிரச்சினைகள் நடந்திருக்கின்றன. அவை விரும்பத்தக்கதாக இல்லை.

காலத்திற்கேற்ற மாதிரி பழைய வடிவங்களிலிருந்து புதுவகையான சிந்தனைகளினூடாக போக வேணும். அதிலிருந்து பெற்றுக்கொள்கின்ற விசயம் அதிகமாக இருக்க வேண்டும். தவிர ஒரு அரசியல்வாதியைத் திருப்திப்படுத்துவதற்காக அல்லது எனக்கொரு முன்னிலை கிடைக்கவேண்டும் என்பற்காக திட்டம் தீட்டி லட்சக்கணக்கில் காசைச் செலவழித்து மூன்று நாளைக்கு உட்கார்ந்து சாப்பிட்டுப்போட்டு வாறதால எந்தப் பிரயோசனமும் கிடையாது’ என்று கூறினார்.

‘அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி ஒரு சில கலைஞர்களாக இருந்தாலும் சரி இதை எப்படி பணமாக மாற்றலாம் என்று தான் யோசிக்கிறார்கள்’ என்றவர் இன்று பல்கலைக்கழகங்களிலும் சரி ஊடகங்களிலும் சரி எழுத்தாளர்கள் மத்தியிலும் சரி ஒருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ளாமை காணப்படுவதையும்; இங்கு சுட்டிக்காட்டினார்.



உங்களது ஒரு குடம் கண்ணீர் பற்றிக் கூறுங்களேன.

‘குறோஸ் பயர் என்று ஆங்கிலத்திலே ஒரு உண்மைக் கதையைப் படித்தேன். அதை நான் தமிழுக்கு கொண்டு வந்தேன். தமிழுக்கு கொண்டு வந்த பிறகு இதே மாதிரி ஒரு சம்பவம் பாகிஸ்தானில் நடந்திருந்தது. ஒரு பிரிவினரைச் சார்ந்த ஒரு பெண்ணை மற்றொரு இனத்தைச் சார்ந்த ஒரு பையன் விரும்பினான் என்பதாற்காக அந்தப் பையனுடைய சகோதரியை பட்டப்பகலில் நான்கு பேர் கதறக்கதற கற்பழித்தார்கள். இந்த மாதிரியான விசயங்களை சட்டென்று மேற்கு நாடுகளின் மீடியாக்கள் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. அதில் எந்த இனம் சம்பந்தப்பட்டிருக்கிறது. எந்த மொழி பேசுபவன் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று பாராமல் மனிதாபிமானத்தோடு பார்க்கவேண்டும். அதனால் அந்த சம்பவத்தை தொடர்ந்து நான் தேடத் தொடங்கி நிறையத் தகவல்களைச் சேகரித்துக்கொண்ட பிறகு ஒரு கதையாக எழுதலாம் என்று நான் நினைத்தேன். அந்தப் பெண் வாழ்நத பிரதேசத்தில்; படிப்பதற்கு பாடசாலை கிடையாது. இன்று மேற்கத்தேய ஊடகங்களின் வெளிச்சம் காரணமாக பிரபல்யம் அடைந்து சர்வதேச செய்தியில் கவனம் பெற்று இன்றைக்கு அவர் ஒரு தன்னார்வத் தொண்டர் நிறுவனமொன்றை நிறுவி இரண்டு பாடசாலைகளை நிறுவி அந்தப்பிரதேசங்களுக்கு மின்சாரம் பெற்றுக்கொடுத்து ஒரு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிலையில் வாழ்கிறார்.

இவ்வாறான சம்பவங்களை நான் தேடத் தொடங்கினேன். சில நாடுகளில் இனங்களுக்கிடையிலான சண்டைகள் நடபெறுகின்ற போது நிறையக் கற்பழிப்புக்கள் அநியாயங்கள் கொலைகள் சித்திரவதைகள் என்று நிறையத் தகவல்கள் எனக்குக்கிடைத்தது. ஆகவே நாற்பதுக்கு மேற்பட்ட கதைகளை நான் தேடியெடுத்து அதிலிருந்து இருபத்தியைந்து கதைகளை, தகவல்களை எடுத்து ஆங்கிலத்திலிருந்து உள்வாங்கிக்கொண்டு அதைத் தமிழிலே எழுதியிருக்கிறேன். மேலதிகமான வார்த்தைகளை சேர்க்கவில்லை. கற்பனை சேர்க்கவும் இல்லை. எமக்குள் எவ்வாறெல்லாம் பிரிவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்ற விசயத்தை அறிந்துகொள்ள் எனது நூல் ஓரளவிற்கு உதவுமென்று நினைக்கிறேன்’

இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது….


‘சர்வதேச எழுத்தாளர் மாநாட்டிற்குப் பிறகு யாழ்ப்பாணத்தில இருந்து வந்த நிறைய இளவட்டங்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் மிகத் தெளிவாக எல்லாவற்றையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் பதவிகளுக்குப் போனால் எப்படி மாறுவார்கள் என்று தெரியாது. படிங்க வாசியுங்க. எழுத்துக்களைத் தேடி வாசிங்கள் வாசிக்காவிட்டால் எழுதவே போக வேண்டாம் என்றுதான் சொல்வேன். நல்ல எழுத்துக்கள் வரக்கூடிய பத்திரிகைகள் நல்ல தகவல்கள் வரக்கூடிய பத்திரிகைகள் அதை எப்படி அவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். வித்தியாசமான எழுத்துக்களை தேடிப் படிக்கவேணும். அதே மாதிரி முக்கியமான தகவல்களை பத்திரிகை சஞ்சிகைளில் தேடிக் கண்டு பிடித்து வாசிக்கவேணும். வாசிக்காவிட்டால் ஒரு போதும் எழுத்தாளனாக முடியாது.

ஒரு நல்ல விசயத்தை ஏற்றுக்கொள்கிற பக்குவம் இன்னும் எம் இளம் சமுதாயத்தினரிடையே இல்லை என்றுதான் கூறவேண்டும. அஷ்ரப் சிஹாப்தீன் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பலவகையான பரிமாணங்களில் பல்வேறு விடயங்களை தரக்கூடியவை. அத்தோடு வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் எவவ்வாறு ரசனையுடனும் ஆழமாகவும் ஒரு விடயத்தை கையாளலாம் என்பதற்கு இவரது எழுத்துக்கள் நல்ல உதாரணங்கள்.

-------------------------------------------------------------------------------------------------------
இருக்கிறம் சஞ்சிகை - ஜூன் 13ம் திகதி வெளியான இருக்கிறம் வார இதழின் விருந்தினர் பக்கத்தில் வெளியான பேட்டி இது. பேட்டி கண்டவர் - அருளானந்தம் சஞ்சீத் - படங்கள் - சாஹித்யா - நன்றி - இருக்கிறம்.
-----------------------------------------------------------------------------------------------------------

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

பி.அமல்ராஜ் said...

அருமையிலும் அருமை அண்ணா.. நிறைய யதார்த்தமான விடயங்களை எளிதாக கொட்டியிருக்கிறீர்கள். அதிலும் இளம் எழுத்தாளர்கள்
மீதுள்ள அக்கறை நன்றாகவே தெரிகிறது..இளம் எழுத்தாளர்களிலும் தங்கள் படைப்புக்களை மூத்த படைப்பாளிகளிடம் கொண்டு சென்று
அறிவுரை கேட்டு பின்னர் அதை வெளியிடுபவர்களும் இன்னும் இருக்கிறார்கள்.இளம் எழுத்தாளர்களின் எதிர்பார்ப்புக்களை சரியாக புரிந்துகொள்ளும் மூத்த எழுத்தாளர்களின் பட்டியலில் நீங்கள் முதலிடம் பெறுவது எம்மைப் போன்றோருக்கு மகிழ்ச்சியே.. இதிலும் எல்லா மூத்த எழுத்தாளர்களும் இவ்விடயத்தில் உங்கள் கொள்கையைக் கொண்டவர்களா என்பதும் கேள்விக்குறியே..
தொடர்ந்தும் சிறுவர்கள் எங்களை வளர்த்துவிடுங்கள்.

RIPHNAS MOHAMED SALIHU said...

நிறைய வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வாசிப்பவனாக இருந்தால் தான் நல்லா எழுதுபவனாக இருக்க முடியும். என் நண்பர் எனக்கு அடிக்கடி சொல்வார். நீ எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி படிக்காமல் எழுதாதே. நாளைக்கு ஒன்றை எழுதுவதாக இருந்தாலும் குறைந்தது இருக்கின்ற பத்திரிகைகளையாவது படித்து விட்டு எழுது என்பார். ஆகவே நல்லா வாசிக்கவேணும். வாசித்தால் தான் நிறைய அறிவு வளரும், மொழி வளம் வரும், மனதில பதியும். மொழி வளம் வரல்ல எண்டு சொன்னா அந்த எழுத்துல எந்தப் பிரயோசனமும் இருக்காது.

Junaid M Haris - SLBC said...

யதார்த்தத்தைப் பேசுவதாக இலக்கியம் இருக்க வேண்டும் என்பதை ஒரு குடம் கண்ணீருக்குள் அடக்கியிருக்கின்றீர்கள். நாம் அன்றாம் கேள்விப்படும் செய்திகளும் கூடு இலக்கியமாக வடிவம் பெறலாம் என்பதை நீங்கள் தெளிவாக புரிய வைத்திருக்கின்றீர்கள். உங்களின் பதில் நீயும் எதையாவது யதார்த்தபூர்வமாக எழுது என என்னை பலவந்தப்படுத்துகிறது. உங்களின் இலக்கியப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.