Sunday, June 26, 2011

ஏன் எனக்கு இப்படி...?

ஆர்த்தர் ஆஷே ஆபிரிக்க வழி அமெரிக்கர். உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர். மூன்று முறை கிரான்ட் ஸ்லாம் விருது வென்றவர்.

1943ம் ஆண்டு ஜூலை பத்தாம் திகதி வேர்ஜினியா மாநிலத்தில் உள்ள ரிச்மன்ட் என்ற இடத்தில் பிறந்தார். தனது டென்னிஸ் விளையாட்டுத் திறமையாலும் சமூக ஈடுபாட்டுச் சேவைகளாலும் பெரும் புகழ் ஈட்டியிருந்தார். இவரது பெயரில் நிவ்யோர்க்கில் உலகின் மிகப் பெரிய டென்னில் விளையாட்டரங்கு உள்ளது என்றால் அவர் எத்தகைய புகழ் கொண்டவராகவும் திறமையாளராகவும் இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆஷே, எய்ட்ஸ் நோயினால் 1993ல் இறந்து போனார். அந்த நோய் அவருக்கு வந்தது அவரது கெட்ட நடத்தையினால் அல்ல என்பதுதான் சோகத்துக்குரிய விடயம். இதயத் தாக்கு ஏற்பட்ட பிறகு 1983ம் ஆண்டு இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இந்தச் சிகிச்சையின் போது அவரது உடலுக்குள் செலுத்தபட்ட இரத்தத்தில் எய்ட்ஸ் கிருமிகள் இருந்துள்ளன. இதனாலேயே அவர் எய்ட்ஸ் நோயாளியானார்.

உலகம் முழுவதுமிருந்து அவருக்கு அவரது விசிறிகளிடமிருந்தும் விளையாட்டு ரசியர்களிடமிருந்தும் ஆயிரமாயிரம் கடிதங்கள் வந்து குவிந்தன. அவற்றில் ஒரு கடிதம் ஒரு கேள்வியுடன் வந்திருந்தது. இதுதான் அந்தக் கேள்வி. “இந்த மோசமான வியாதியைக் கடவுள் உங்களுக்குத் தந்தது ஏன்?”

ஆஷே அக்கடிதத்துக்குப் பின்வருமாறு பதில் எழுதினார்.

“உலகம் முழுவதிலும் 50 மில்லியன் சிறார்கள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவர்களில் ஐந்து மில்லியன் சிறார்கள் டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொள்கிறார்கள். தொழில் ரீதியாக ஆடுவதற்கு ஐந்து லட்சம் பேர் கற்கிறார்கள். ஐம்பதாயிரம் பேர் டென்னில் விளையாட்டு வீரர்களாக வருகிறார்கள். ஐயாயிரம் பேர் க்ரான்ட் ஸ்லாம் போட்டிகளிலும் ஐம்பது பேர் விம்பிள்டன் போட்டிகளிலும் ஆடுகிறார்கள். நான்கு பேர் அரை இறுதிக்குத் தேர்வாகி அவர்களில் இருவர் இறுதியாட்டத்தில் மோதுகிறார்கள்.


போட்டியில் வென்று வெற்றிக் கோப்பையைக் கைகளில் ஏந்தியிருந்த நேரங்களில் “ஏன் எனக்கு இப்படி?” என்று நான் ஒருபோதும் இறைவனிடம் கேட்கவில்லை.

இன்று வருத்தம் நிறைந்த இந்த வேளையில் “ஏன் எனக்கு இப்படி?” என்று என்னால் எப்படிக் கேட்க முடியும்?

மனிதர்களாகிய நாம் பிரச்சனைகள் இல்லாத வேளைகளில் இறைவனை மறந்து விடுகிறோம். பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தால் ‘ஏன் எனக்கு இப்படி?’ என்று இறைவனைக் கேட்பவர்களாக இருக்கிறோம். உண்மையில் நமக்கு அருளப்பட்ட விடயங்களையிட்டு நாம் என்றும் இறைவனுக்கு நன்றியுடையோராக இருக்க வேண்டாமா?
-------------------------

சகோதரர் ஏ.ஜே. ஸன்ஹிர் அவர்கள் ஆஷே பற்றி அனுப்பிய தகவலைக் கொண்டு இது எழுதப்பட்டது. அவருக்கு நன்றி!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

rajamelaiyur said...

Yes . . He was a great sportsman