ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்- ஓர் பயணக் கட்டுரை!
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
(இந்தக் கட்டுரை மே மாதம் சகோதரர் முகம்மது அலி அவர்களால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தனிப்பட்ட ஒரு பயணத்தை அவர் மேற் கொண்டிருந்ததாகச் சொன்ன போதும் அங்குள்ள முஸ்லிம்கள் பற்றிய ஒரு தேடலை அவர் மேற் கொண்டது பாராட்டத் தக்கது. இந்தக் கட்டுரை நமது வாசகர்களில் யாருக்காவது உதவும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் திருத்தங்கள் ஏதுமிருப்பின் உரியவர்கள் ஆதாரங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.)
ஆஸ்திரேலியா நாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் தங்களுடைய நாடுகளின் கலாசாரங்களுடன், மொழிகளுடனும் வேறு பட்டு இருந்தாலும் இஸ்லாம் என்ற மார்க்க பாசக் கயிறால் இணைக்கப் பட்டு ஒரே சமூகமாக உள்ளனர் என்பதினை 2011 வருடம் பிப்ரவரி மாதத்திலிருந்து மே முதல் வாரம் வரை மேற்கொண்ட பயணத்தில் தெரிய வந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன.
30 சதவீத முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். மற்றவர்கள் ஐரோப்பியாவில் இஸ்லாத்தினை தழுவியவர்கள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா, மற்றும் தென் கிழக்கு ஆசியாவிருந்தும் குடி பெயர்ந்தவர்கள் ஆவர். பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் ஆங்கில மொழியினையும், மற்றவர் துருக்கி மற்றும் அரேபிய மொழிகளை பேசுகின்றனர். ஆஸ்திரேலிய மொத்த ஜனத் தொகை 2.2 கோடியில் இஸ்லாமியர் இரண்டு சதவீதத்தில் உள்ளனர். அதாவது கிட்டத் தட்ட 2,50,000 மக்கள் ஆவர். அதில் பெரும்பாலோர் சிட்னியிலுள்ள அபர்ன், கீரீனேக், பேங்க்ஸ்டன், லக்கம்பி, பஞ்சபவுள், மெல்போனிலுள்ள மீடோ ஹெட்ஸ், ரிசர்வான், டல்லாஸ், நோபள் பார்க்,கோபர்க், டாஸ்மானியா, அடிலேடு, கியூன்ஸ்லேண்டு ஆகிய பகுதியில் வசிக்கின்றனர்.
பெரும்பாலோனோர்; பல்வேறு வேலைகளில் உள்ளனர். 27 சதவீதம் மேனேஜர்களாகவும், நிர்வாகிகளாகவும், தொழிழ் நட்ப வல்லுநர்களாகவும் உள்ளனர். அதில் ஆங்கிலம் தெரியாத முஸ்லிம்கள் தான் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர்.
இந்திய நாடு, பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்கள் தொழிழ் நட்பவாதிகளாக இருப்பதால் மற்ற தேசிய முஸ்லிம்களை விட வேiலை வாய்ப்பில் சிறந்து விளங்குகின்றனர். பெரும்பாலான முஸ்லிம்கள் சுன்னி மதகினைச் சார்ந்தவர்களாகவும் மிக குறைந்த அளவே ஷியா இனத்தவர் உள்ளனர்.
காலூன்றிய வரலாறு: இந்தோனேசியாவினைச் சார்ந்த மெக்காசான்ஸ் என்ற மீனவர்கள் வட ஆஸ்திரேலியா கடற்பகுதிகளில் கிடைக்கும் டிரப்பாங்க் என்ற வகை மீன்களைப் பிடிக்க 1750 ஆம் வருடங்களில் காலடி வைத்தனர். அவர்கள் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினருடன் சுகுமமான உறவு கொண்டனர். ஆனால் மேற்கத்திய நாடுகளின் வருகையால் இந்தோனேஷியா மீனவர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானிய முஸ்லிம்கள் தான் முதன் முதலில் குடி பெயர்ந்து அவர்களைத் தொடர்ந்து லெபனான், துருக்கி, போஸ்னியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்தனர்.