Monday, March 28, 2016

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்

------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர். தாஸிம் அகமது

வாழ்வோரை வாழ்த்துவோம் எனும் மகுடத்தின் கீழ் இலங்கை கலை இலக்கிய கர்த்தாக்களை கௌரவித்து வரலாறு கண்ட பெருந்தகை கௌரவ ஏ.எச்.எம். அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆவார். முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சராக அவர் இருந்த போது, 1994களில் பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு மணிவிழா ஒன்று அவ் அமைச்சினால்; கொழும்பில் வெகு விமரிசையாக எடுக்கப்பட்டது. அந்நிகழ்வில் பேராசிரியர் உவைஸ் அவர்களை கௌரவிக்கும் முகமாக மணிவிழா மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அம்மலரின் ஆசிரியர் கல்விமான் அல்ஹாஜ். எஸ்.எச்.எம். ஜெமீல் ஆவார்.

பாராட்டு, மணிவிழா மலர் வெளியீடு ஆகியவை மண்டபம் நிறைந்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு இலக்கிய ஜாம்பவான்கள் மத்தியில் நிகழ்ந்தது. அந்நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேட்டத்தில் பெரு வெற்றி கண்டு, அயராது உழைத்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய படைப்புக்களை உலகறியச் செய்த பெருமகன் பேராசிரியர் உவைஸ் அவர்கள் அவ்விழாவின் போது மிகவும் அடக்கத்துடன் அமர்ந்திருந்தார். அறிஞர்களின் வாழ்த்துரைகளும், பேருரைகளும் அன்னாரை எவ்வித சலனத்துக்கும் உட்படுத்தவில்லை. அப்பெருந்தகையின் பெரும் சேவை அவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட வேண்டிய ஒன்றே.

பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்கள் 1922ம் ஆண்டு கொழும்பு, காலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொறக்கானை எனும் சிற்றூரில் பிறந்தார். தகப்பன் பெயர் மகுமூது லெப்பை தாயார் பெயர் சைனம்பு நாச்சியார் இவ்விருவருக்கும் இவர் ஒரே மகனாவார். ஆரம்ப கல்வியை ஹேனமுல்ல அரசினர் முஸ்லிம் பாடசாலையில் கற்றார். ஆங்கிலக் கல்வியை சரிக்க முல்லையில் அமைந்திருந்த தக்ஸலா வித்தியாலயத்தில் கற்றார். அதே விததியாலயத்தில் சிங்களத்தையும் பாளியையும் பயின்றார். புhளியைக் கற்றதன் விளைவு பிற்காலத்தில் இலக்கிய ஈடுபாட்டுக்கு வழி வகுத்திருக்கலாம். 1938ம் ஆண்டு தமிழ் மொழி மூலம் கல்வி பெற்ற பேராசிரியர் உவைஸ் 1946ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேரும்வரை தமிழை ஒரு பாடமாக படிக்கும் வாய்ப்பை பெறவில்லை. ஆசிரியர் எவரும் இல்லாமலே தமிழ் கற்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

1945ம் ஆண்டில் முக்கியமான நிகழ்வு ஒன்று உவைஸ் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்றது. அதே ஆண்டில் பல்கலைகழக நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்வு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை தோற்றுவிக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது. நேர்முகத் தேர்வுக்குழுவில் சுவாமி விபுலானந்தர் அவர்கள் ஒரு உறுப்பினராக இருந்தார். நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட உவைஸிடம் சுவாமி விபுலானந்தர் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய ஒரு காப்பியத்தைக் குறிப்பிடும்படி கேட்டார். உவைஸுக்கும்  பதிலளிக்க முடியவில்லை. சீறாப்புராணத்தைப் பற்றி விபுலானந்த அடிகள் அவர்கள் கூறியது உவைஸுக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேடலுக்கு வித்திடும் சவாலாக மாறியது.

Tuesday, March 8, 2016

அஷ்ரஃப் சிஹாப்தீனின் அழகியல் மீள்நடுகை!


மன்ஸூர் ஏ. காதர்

ஈழத்துக்கான போராட்டத்தின் கடந்தகாலப் போக்கில் 1985இல் ஏற்பட்ட தடுமாற்றத்தினால் விளைந்த உள்ளகச் சச்சரவு நமது காலத்தின் ஒரு கறை படிந்த பயங்கரமாகும். அந்த அதிர்ச்சி உப தேசியவாதத்தின் தோற்றுவாயாக ஈழத்து முஸ்லிம் மக்களிடம் பிரதி பலித்தது. பிரதிபலித்த அந்த உப தேசிய வாதத்தின் அச்சொட்டான குறியீடே 'ஸெய்த்தூன்' என்ற கவிதையாகும். அன்றைய நிலைவரத்தில் அது ஒரு முதன்மையான படைப்பாகவும் அமைந்திருந்தது. இந்தக் கவிதையின் சொந்தக்காரன் யார் என்ற விசாரணையும் ஆச்சரியமும் அஷ்ரப் சிஹாபுத்தீன் என்ற ,இலக்கிய ஆளுமையைப் பற்றிய தேடலை தமிழ் இலக்கிய உலகிலே உண்டாக்கிற்று. அவரின் கவிதா ஆளுமையின் வீச்சு பிற்காலத்தில் ஒரு குடம் கண்ணீரையே கொண்டு வந்து தந்துள்ளது. இந்த ஆரம்பமானது ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளனின் ஆடம்பரங்களை விடவும் ஒரு படைப்பாளிக்கான கனதியையும் தன்னடக்கத்தையும் அவருக்கு வழங்கிற்று.

அஷ்ரப் சிஹாபுத்தீன் சமகாலங்களில் மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் தன்னுடைய ஆற்றல் முழுவதையும் செலுத்த முனைந்துள்ளார். பலஸ்தீனக் கவிதைகளை மொழி பெயர்க்க பேராசிரியர் நுஃமான் மற்றும் பண்ணாமத்துக் கவிராயர் முதலியோர் செலுத்திய அதே உத்வேகத்தை அஷ்ரப் சிஹாபுத்தீன் அரபு மொழி மூலம் ஆங்கிலத்துக்கு வந்த சிறுகதைகளில் செலுத்தியுள்ளார்.

இத்தொகுதியில் சிறியதும் பெரியதுமான எட்டுச் சிறுகதைகள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தன்னுடைய தகைசான்ற ஆங்கிலப் புலமை மட்டுமன்றி இக்கதைகளின்  மூலமொழியான அரபியில் இவருக்கிருந்த பரிச்சயமும் நாட்டமுமே இம்முயற்சிக்கான முழுத் தைரியத்தையும் இவருக்கு வழங்கியிருத்தல் வேண்டும்.


மன்ஸூர் ஏ. காதர்

இலக்கியங்களை மொழி பெயர்ப்புச் செய்தல் என்பது பிரத்தியேக மான மண் வளத்தையும் கால நிலையையும் தன்னுள் பவித்திரப்படுத்தி உருவாகிய தாவரத்தின் ஓர் இளம் கன்றை வேறொரு மண் வளத்தையும் வேறொரு கால நிலையையும் கொண்ட இன்னொரு வித்தியாசமான சுற்றாடலுக்குக் கொண்டுபோய் மீள் நடுகை செய்வது போன்ற ஒரு முயற்சியாகும். இந்த ' மீள் நடுகை'யின் பின்னர் அத்தாவரத்தின் தப்பிப் பிழைத்தலை ஒத்ததுதான் மொழி பெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் நிலையுமாகும். அதுவும் கிழக்கத்தைய கலாசாரங்களுடன் பிசையப்படாத ஒரு மொழியின் இலக்கியங்களை கிழக்கத்தைய கலாசார மொழிகளுடன் ஊடுபாவச் செய்வது மிகுந்த சிரம சாத்தியமாகும்.

முதலில் இந்தச் சிரமத்தை பொறுப்புணாச்சியுடன் சிந்தைக்கு எடுத்தவர்களால் மாத்திரமே மொழிபெயாப்பு இலக்கியங்களின் ஆன்மா வைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை நாம் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் மொழியியல் சார் பலங்கள் அல்லது பலவீனங்கள் யாவை என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதன் மூலம் இந்தத் தொகுதி பற்றிய எமது சிந்தனைப் போக்கிற்கு நாம் கடிவாளம் இட்டுக் கொள்ள முடியும். மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் மொழியியல்சார் பலமும் அதேவேளை அதன் பலவீனமும் பின்வரும் எல்லைக்குள் மட்டுப்படுத்தத் தக்கதாகும்.

இலக்கியங்களை மொழிபெயர்த்தல் தொடர்பான புலமைசார் அறிஞராகக் கருதப்படும் யங்ஃபாங் ஹூ இது பற்றிக் குறிப்பிடும்போது நடைமுறைப்படுத்தப்படும் நோக்கங்களுக்காக ' மூலமொழியைச் சார்ந்து செல்லும்' (source language oriented) மொழிபெயர்ப்புக்கள் என்றும், மொழிபெயர்க்கப்படும் ' இலக்கு மொழியைச் சார்ந்து செல்லும்' (target language oriented)  என்றும் மொழிபெயர்ப்புக்களின் அவசியமான அம்சங்களைக் கட்டுப்படுத்திக் கூறுகின்றார்;.

மொழிபெயர்ப்பாளன் இந்த இரண்டு நிலைகளையும்; முழு அவதானத்துடன் கடைப்பிடிக்க வேண்டிய தவிர்க்க முடியாமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான். தவறும் பட்சத்தில் விளையும் ஆபத்து, வித்தைக் காரனுக்கு ஏற்படும் ஆபத்தைப் போன்றதே. இந்த சமநிலைத் தன்மையில் காட்டப்பட வேண்டிய அதீத கவனம் மூலமொழி ஆசிரியனின் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு வாசகனைக் கொண்டுவந்து சேர்க்கும்.

மொழி பெயர்ப்பு இலக்கியங்களுக்கான மேற்படி வரையறை களைக் கொண்ட இந்த பரிசோதனைக் குழாய்க்குள் அஷ்ரப் சிஹாபுத்தீன் என்பவரும் போடப்பட்டே ஆகவேண்டி உள்ளது.

அத்துடன் மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் மூலமொழிக்கும் மொழி பெயர்க்கப்படும் மொழிக்கும் இடையிலான முழுமையான மனவெழுச்சிசார் நெருக்கடிகள,; ஒருமைப்பாடுகள,; பழக்கங்கள், வழக்கங் கள், ஒழுக்கங்கள், நம்பிக்கைகள், பெறுமானங்கள், சம்பிரதாயங்கள் ஆகிய வற்றுக்கான ' வெளிப்பாட்டுத் திறனுடன்கூடிய வெளிப் படைத்தன்மை' பிரதான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.

அஷ்ரப் சிஹாபுத்தீன் அவர்களின் இந்த முயற்சி பற்றிக் கவனக் குறைவாக கருதுபவர்களுக்குத் தழிழ் வகுப்பொன்றில் பேராசிரியர் சிவத்தம்பி தந்த ஒரு பயிற்சியை வாசகர்களிடம் கொடுக்க விரும்பு கின்றேன். அதாவது ' அவள் பூவோடும் பொட்டோடும் வாழ்கின்றாள்' என்பதனை வெறுமனே மொழியியல் ரீதியான தொடர்ச்சியுடன் ஆங்கிலமாக்குவதும் அதனைத் தமிழர் வாழ்வியல்சார் அல்லது இந்திய கலாசாரம்சார் தெளிவான அறிவுடன் ஆங்கிலமாக்குவதும் ஒரே வகை யான மொழிக் கையாளுகையுடன் நடைபெறமாட்டாது. இரண்டும் இரண்டு வகையான ஆங்கில மொழித் தொடர்களைக் கையாள மொழி பெயர்ப்பாளனைத் தூண்டும்.

இந்த அடிப்படை நியமங்களை வைத்துக்கொண்டு அஷ்ரப் சிஹாபுத்தீன் அவர்களின் இந்த எட்டு சிறுகதைகளையும் எனது தராசில் போட்டு நிறுத்துப் பார்க்க நான் ஆசைப்படுகின்றேன்.

Tuesday, December 29, 2015

வில்பத்துவும் விவாதமும்!


வில்பத்துக் காடு அழிக்கப்படுவது நாட்டின் சுக, சுவாத்தியங்களுக்கு தீர்க்கவே முடியாத பிரச்சனையாகும் என்று கதையாடிய ஆனந்த தேரோவிடம் 'யார் யாராலோவெல்லாம் சிதைக்கப்படுகின்ற, சீரழிக்கப்படுகின்ற ஏனைய காடுகளைப் பற்றி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பத்திரிகை ஆதரங்களைச் சுட்டிக் காட்டிய போது வில்பத்துப் பிரச்சனைக்குப் பின்னால் மறைகரங்கள் பல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைப் புத்தியுள்ள எவராலும் புரிந்து கொள்ள முடியுமாக இருந்ததைத் தொட்டுக் காட்டலாம்.

நேற்றிரவைய விவாதம் அல்லது பிரச்சனை பற்றிய ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சி விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட வடபுல முஸ்லிம்களின் குடியேற்றம் குறித்து முழு நாட்டுக்கும் நாட்டுக்கு வெளியில் உள்ளவர்களுக்கும் ஒரு தெளிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறது.

அமைச்சருக்கெதிராக ஆனந்த தேரர் முன்வைத்த விடயங்களில் சில அமைச்சருக்கெதிரான அரசியல் வன்மம் கொண்டவர்கள் கடந்த காலங்களில் கூவித்திரிந்தவையும் அடங்குகின்றன. குறிப்பாக இந்தக் குழுவுக்குள் ஆனந்த தேரருக்கு ஆதாரம் சமர்ப்பித்தவர்களில் அமைச்சருக்கெதிரான முஸ்லிம் அரசியல் போராளிகளும் உள்ளார்கள் என்பதையும் புரியக்கூடியதாக இருந்தது. அமைச்சருடனான தனிப்பட்ட பொறாமையும் இதற்குள் அடங்குகிறது.

சட்டப்படியான ஏற்பாடுகளுடன் முஸ்லிம்களில் ஒரு பங்கினரே குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்பதுவும் மீதி நான்கு பங்கினர் இன்னும் அகதி முகாம்களிலும் சொந்த இடங்களுக்கு வெளியேயும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மைக்கு தேரரிடமோ வினாவெழுப்பியவர்களிடமோ பதில் இருக்கவில்லை. அங்கு எந்தவிதப் பிரச்சனையுமே கிடையாது, இது அமைச்சராகவே தனது பிரபல்யத்துக்காக ஏற்படுத்திக் கொண்டது என்ற அவரது அரசியல் எதிரிகளது கூற்றும் பொய்யாகியிருக்கிறது.

மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் சட்டபூர்வமாகத் தமிழர்களைக் குடியேற்றியதைப் பற்றியோ சட்டத்தை மதியாமல் வேறு இடங்களில் சிங்களவர்களை அரசு குடியேற்றியதை எதிர்க்காமல் இருந்தமை பற்றியோ சர்ச்சைகள் எழவில்லை.

கடந்த காலங்களில் அப்பிரதேச முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான காணி உறுதிகள், ஒப்பினைகள், உடைந்து சிதைத்திருக்கும் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள் நிறுவப்பட்ட காலங்கள் பற்றிய ஆதாரங்கள் அனைத்தையும் காட்டிய பிறகும் உரிய மக்கள் அங்கு வாழவில்லை அல்லது அப்படியான கிராமங்கள் இருக்கவில்லை என்பவனும் அவனுக்கு ஒத்துழைப்பு வழங்குபவனும் ஒன்றில் குருடனாக, செவிடனாக புத்திசுவாதீனம் அற்றவனாக இருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு சக்தியின் பின்னணியில் இயங்குபவனாக இருக்க வேண்டும்.

மீள்குடியேற்ற அமைச்சராக இருந்து தமது மக்களைக் குடியேற்ற முடியாமல் குழப்பியடித்துக் கொள்கிறார் என்று குற்றம் சுமத்தியவர்கள் விவாதம் நடைபெறப் போகிறது என்றதும் 'இது வீண் வேலை, மற்றொரு தேரரை அரங்குக்கு கொண்டு வரும் தவறை அமைச்சர் செய்யப்போகிறார், மேலிடத்துடன் பேசி முடித்துக் கொள்ள வேண்டிய கருமம்' என்று புதுப்பாட்டுப் பாட ஆரம்பித்திருந்தார்கள். இவர்களுடை கவலை துரத்தப்பட்ட முஸ்லிம்கள் பற்றியதோ அவர்களது எதிர்காலம் பற்றியதாகவோ அவர்களது பரம்பரையின் கல்வி நடவடிக்கைகள் பற்றியதோ அல்ல. அமைச்சர் முஸ்லிம் அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத தடத்தைப் பதிந்து விடுவார் என்பதே.

விடுதலைப் புலிகளின் முஸ்லிம் வெறுப்பு மற்றும் முஸ்லிம் நிராகரிப்புக் கொள்கைளை முன்னெடுத்துச் செல்வோரின் கையாட்கள் என்று சந்தேகிக்கப்படும் முஸ்லிம்கள் ஒரு சிலரின் முகநூல் பதிவுகள் மற்றும் கருத்துப் பரிமாறல்களிலிருந்து 'அமைச்சர் தேவையற்ற காரியத்தில் இறங்கியிருக்கிறார்' என்பதை மட்டுமே படித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

முஸ்லிம்களின் குடியேற்றம் பற்றி உக்கிரமாக எதிர்ப்புக் காட்டிய இரண்டாவது தேரர் ஆனந்த தேரர். முறைப்படி ஞானசார தேரரே இதை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அவரைச சந்தைப் படுத்த முடியாத நிலைமை இருக்கின்ற காரணத்தால் புதிய ஒரு தேரரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

முஸ்லிம்கள் எங்கெல்லாம் சென்று வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இரண்டு பெரும்பான்மைளிலும் சில குழுக்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றன, பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் இந்த நிகழ்ச்சி சொல்லிச் சென்றிருக்கிறது.

டெய்ல் பீஸ்;:- நான்கைந்து அரசியல் பிரமுகர்களைக் கொண்டு விவாதம் நடத்த் தொலைக் காட்சி சார்பில் பெரும்பாலும் ஒருவரே நியமிக்கப்படுவதுண்டு. இந்த நிகழ்ச்சிக்கு மூவர் வந்திருந்ததானது ஒரு வகைப் பயத்தின் வெளிப்பாடாவே தெரிந்தது.

Tuesday, December 22, 2015

அழகு!


கடந்த மாத வலம்புரி கவிதா வட்ட நிகழ்வில்  வாசிக்கப்பட்ட 
நான் மொழிபெயர்த்த கவிதை. படம் - நன்றி மேமன்கவி.

அழகு

பார்த்தவ் நாதிரி
(ஆப்கானிஸ்தான்)

தூரக் கிராமப் பெண்ணைப் போன்றது
உனது குரல்

அவள் 
மலைகளில் உள்ள 
பைன் மரங்களும் அறிந்த
உயரமும் உடல் நேர்த்தியும் கொண்டவள்

அந்திக் கருக்கலில்
நிலவின் சிறு குடையின் கீழ்
சுவர்க்கத்தில் குளித்த
பெண்ணைப் போன்றது 
உனது குரல்

அவள் அதிகாலையில்
வீட்டின்
சுத்தமான ஓர் ஒளிக் குடுவையொத்தவள்

அவள் சூரிய அருவியிலிருந்து
மிடர் மிடராக அருந்துபவள்

தூரக் கிராமப் பெண்ணைப் போன்றது
உனது குரல்

அவள்
சிற்றருவியின் பாடல்களால் ஆன
கொலுசு அணிந்தவள்

அவள்
மழையின் கிசுகிசுப்பைக் கொண்டு
உருவாக்கப்பட்ட 
காதணி அணிந்தவள்

அவள் 
ஒரு நீர் வீழ்ச்சியின் 
பட்டு கொண்டு நெய்யப்பட்ட 
கழுத்து மாலை அணிந்தவள்

இவையனைத்துமே
பல்வர்ணங் கொண்ட
காதலின் மலர்ச்சிக்கு
சூரியனின் தோட்டத்துக்குக் கிடைத்த
கருணையாகும்

நீயுங்கூட அழகானவள்தான் -
உனது குரலைப் போல!





Sunday, November 29, 2015

“சுயமி” - சிந்திக்கத் தூண்டும் சிந்துகள்!


லறீனா அப்துல் ஹக்கின் 'சுயமி' ஒலித்தகட்டை ஒரு முறைக்கு இருமுறை ஒலிக்க விட்டுக் கேட்டேன்.

நான் இசை உபாசகன் அல்லன். பாடல்களதும் பாடல்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்படும் இசையினதும் இரசிகன்.

கவிதைகளில் எனக்குள்ள ஈடுபாட்டுக்கு அப்பால் ஓர் ஒலிபரப்பாளனாகவும் நீண்ட காலம் வாழும் பாக்கியம் கிடைத்த காரணத்தால் கர்னாடக இசை, சினிமாப் பாடல்கள், இஸ்லாமிய கீதங்கள், வாத்தியங்களின் இசை, வாய்ப்பாட்டு, மெல்லிசைப் பாடல்கள் போன்றவற்றில் கொஞ்சம் ஆர்வம் இருக்கிறது.

இதற்கு அப்பால் கஸல், கவாலி, நஃத், நஷீத், ஹம்த், ஸூபி இசை ஆகியவற்றை இரசிக்கும் மனமும் உண்டு.

இவை போக - உலகத்தில் எந்த மூலையிலாயினும் மக்கள் எழுச்சியில் பாடல்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன என்பது குறித்த அவதானமும் உண்டு.

இந்த அனுபவங்களுடன்தான் லறீனாவின் 'சுயமி' பாடல்களையும் நான் கேட்டேன்.

தானே எழுதி, தானே இசையமைத்துத் தானே பாடும் திறமை இவருக்கு எங்கிருந்து வந்தது என்று சிந்தித்தேன்.

அவருடை தந்தையார் கலகெதர அப்துல் ஹக் ஒரு காலத்தில் சிங்களச் சினிமாத் துறையில் புகழ் பெற்றவர். அவர் சுஜீவா, சுனேத்ரா, கீதா, ஒபய் மமய், ச்சூக்கிரி கெல்ல ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர்.

அவரது தாயார் மாத்தளை பர்வீன் மிகவும் பிரபல்யமான எழுத்தாளராக விளங்கியவர். பல சிறுகதைகள், தொடர்கதைகளைப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தவர். அவரது எழுத்துக்களை நானும் படித்திருக்கிறேன்.

பெற்றோரிடமிருந்து கடத்தப்படும் பரம்பரை அலகுகள் எல்லோருக்கும் வெற்றிகரமாகச் சித்திப்பதில்லை. அதைப் பெற்றுக் கொள்வதற்கும் கூட நிறையப் பிரயத்தனங்கள் தேவை. அந்த முயற்சியும் ஈடுபாடும் லறீனாவிடம் இருக்கிறது.

லறீனா அப்துல் ஹக் நிகழ்கால முஸ்லிம் பெண் ஆளுமைகளும் மிகவும் முக்கியமானவர். ஒரு கவிஞராக, எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக, கல்வியாளராக, வளவாளராக, சமூகச் செயற்பாட்டாளராக, பாடகியாக, இசையமைப்பாளராக என்று ஒரு பெரும் ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார். இவ்வளவையும் ஒரு நல்ல மனைவியாகவும் ஒரு நல்ல தாயாகவும் குடும்பங்களைப் பராமரிக்கும் நல்ல நிர்வாகியாகவும் இயங்கியபடி நான் மேலே குறிப்பிட்ட அத்தனை துறைகளிலும் பிரகாசிக்கிறார் என்பது அவதானத்துக்குரியது.

இந்த ஒலித் தகட்டில் அல்லது இறுவட்டில் ஒன்பது பாடல்கள் அடங்கியிருக்கின்றன.

இசையும் ராகமும் எவ்வளவுதான் சிறப்பாக இருந்த போதும் பாடல் வரிகள் நன்றாக இல்லையென்றால் அந்தப் பாடல் எழுச்சி பெறாது. இதற்கு பல நூறு பாடல்களை நம்மால் உதாரணங்களாகக் கொள்ள முடியும்.

லறீனாவின் பாடல் வரிகள் ஆங்காங்கே கவித்துவத்தோடும் அர்த்தங்களோடும் வந்து விழுவதற்கு ஒரு சில உதாரணங்களைச் சொல்லலாம்.

அடையாளம் தொலைத்து விட்டோம்
அடிவாங்கிகிக் களைத்து விட்டோம்
முடிவற்ற கொடுமைகளால்
முகவரிகள் இழந்து விட்டோம்

மேடைகள் மீதேறி அமைதிதான் நோக்கமென்று
நாடகம் ஆடிடுவார்
வேடங்கள் போட்டிடுவார்
எம் துன்பம் உணர்ந்தது போல்
அழுதழுது பேசிடுவார்
நம் கண்கள் மறைந்து விட்டால்
நடு முதுகில் குத்திடுவார்.

இது மண்ணிலே.. இந்த மண்ணிலே என்ற பாடலில் வரும் வரிகள். இந்த இநுவட்டில் அடங்கியுள்ள பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடலும் இதுதான்.

'எங்கள் வாழ்வும் மலரும் காலம்
நாளையேனும் புலரக் கூடும்'

(வையம் மீதிலே என்ற பாடலில் வரும் வரிகள்)

'காற்றுக்கு இல்லை வேலியடி - என்
சிறகுக்கு இல்லை எல்லையடி'

(இசைப் பாடல் ஒன்று பாடினேன் என்ற பாடலில் வரும் வரிகள்)

முன்னால் நான் சொன்ன வரிகள் பாடல்கள் எப்படி எழுதப்பட்டிருக்கின்றன என்று கூர்ந்து அவதானித்துப் பொறுக்கியவை அல்ல. பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே எனது கவனத்தைத் தானாக ஈர்த்த வரிகளில் சில.

கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் வித்தியாசம் உண்டு. கவிதைகள் அனைத்தும் பாடல்களாக முடியாது. ஆனால் பாடல்கள் கவிதையாகும். கவித்துவம் உள்ள பாடல்கள் காலத்தை வென்று வாழக் கூடியன.

லறீனாவின் பாடல்களில் சில பொதுப் பண்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமாகச் சொல்லப்பட வேண்டிய விடயம் என்னவெனில் நம்பிக்கை ஊட்டும் பண்பு. அநேகமாக எல்லாப் பாடல்களுமே இந்தப் பொதுப் பண்பைக் கொண்டிருக்கின்றன.

பாடல்களை ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டு செல்லும் போது ஒவ்வொரு பாடலின் வரிகளுக்கு அப்பால் அவர் தேர்ந்தெடுத்த ராகங்கள் மூலம் என்னை ஆச்சரியப்படுத்தினார் என்பதை நான் முழுமையாக ஒப்புக் கொண்டாக வேண்டும். குறிப்பாகச் சில பாடல்கள் இது கர்னாடக பாணியா, கஸல் பாணியா என்ற மயக்கத்துக்குள் என்னைத் தள்ளிக் கொண்டு போய் விட்டன.

பாடல்கள் பற்றியும் ராகங்கள் பற்றியும் அவருக்கு இருக்கும் தேர்ச்சியை அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாடலை வித்தியாசமாக இப்படியும் பாட முடியும் என்று சொல்வது போலவுமிருந்தது. வையகம் மீதினிலே என்ற பாடலை இதற்கு உதாரணமாக முன் வைக்கலாம்.

ஒளியெங்கே என்று ஒரு பாடல் உண்டு. ஒரு புதுக் கவிதை வரி வடிவத்தை அல்லது கவிதையே இல்லாத வரி வடிவத்தைக் கூட லறீனாவால் பாடலாகப் பாட முடியும் என்பதைச் சொல்லி நிற்கிறது அந்தப் பாடல்.

ஒரு காலம் என்ற பாடலில் தனக்குக் கற்பித்த ஆசிரயர்களை நினைவு கூர்ந்து பாராட்டுகிறார். இந்த நூற்றாண்டில் அருகி வரும் பண்பு இது. லறீனாவுக்குக் கற்பித்தவர்கள் பாக்கியவான்கள் என்ற எண்ணமே இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்குத் தோன்றியது.

ஒரு சில பாடல்களில் வரும் ஹம்மிங் மற்றும் ஆலாபனை ஆகியவை பற்றியும் குறிப்பிட வேண்டும். பாடல்களுக்கு முன்பு வரும் ஆலாபனைகளும் பாடல்களுக்கு இடையில் வரும் ஹம்மிங்களும் நன்றாக இருக்கின்றன.

அன்னை மடியில் என்று ஆரம்பமாகும் பாடலில் பாடலின் ஒரு சில சொற்களுக்குரிய இடத்தை ஹம்மிங் மூலம் நிரப்பியிருக்கிறார்;. இது கவனத்தைக் கோரும் உத்தியாகத் தெரிகிறது. இந்தப் பாடலில் ஒலிக்கும் லறீனாவின் குரல் சிறு பிள்ளையொன்றின் குரலாகவும் ஒலிக்கிறது.

பொறு மகனே என்ற ஒன்பதாவதாக இருக்கும் பாடலில் லறீனா தனது துயரக் குரலையும் அழுகுரலையும் பதிவு செய்கிறார். வானொலி நாடகத்துக்கான ஒரு நடிகை கூட அவருக்குள் மறைந்து கிடப்பதை உறுதி செய்யும் பாடல் இது.

பொதுவாக இப்போது வரும் இசைப்பாடல்கள் யாவற்றிலுமே இசைக் கருவிகளின் இரைச்சல் வரிகளையும் பாடல் அர்த்தங்களையும் கொலை செய்து விடுகின்றன என்ற ஓர் அபிப்பிராயம் உண்டு.

இது தவிர ஒரே மாதிரியான இசையமைப்புப் போக்கும் அவதானிக்கப்பட்டு வருகின்றது. லறீனாவின் ஒவ்வொரு பாடலிலும் வித்தியாசமான இசையமைப்புப் போக்கை உணர முடிகிறது.

ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான ராகத்துடனும் இசையமைப்புப் போக்குடனும் அமைந்திருப்பதால் அலுப்பையோ இலங்கைப் பாடல்கள் யாவும் இப்படித்தான் என்கிற பொது எண்ணத்தையோ இப்பாடல்கள் ஏற்படுத்தவில்லை என்பதை அழுத்திச் சொல்ல முடியும்.

பாடல்களின் முக்கியத்துவம் என்ன என்று ஒரு வினா எழுப்பப்பட்டால் மனித ஆத்மாவின் ஜீவன் பாடல்கள்தாம் என்றுதான் நான் பதில் சொல்வேன். மனித வாழ்வானது ஏனைய எல்லாக் கலை வடிவங்களைம் விடப் பாடல்களுடன்தான் பின்னிப் பிணைந்திருக்கிறது.

 தாலாட்டு முதற்கொண்டு ஒப்பாரி வரையான பாடல்கள் இதற்கு உதாரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இன்று இவையெல்லாம் வேறு வடிவங்களை எடுத்துள்ளனவே தவிர மொத்தமாக அழிந்து விடவில்லை என்பதை அவதானிக்க வேண்டும்.

பாடல் எத்தகையது என்பதைச் சொல்வதற்கு எளிய உதாரணமாகத் தேசிய கீதங்களைச் சுட்டிக் காட்டிவிட முடியும்.

பாடல் ஹலாலா ஹறாமா என்று முடிவற்ற பட்டி மன்றம் நடத்துவதற்குப் பின்னணியிலுக்கும் தேசங்கள் முதற் கொண்டு நேற்று ஸ்தாபிக்கப்பட்ட தேசம் வரை இசையோடிணைந்த தேசிய கீதம் இசைக்காத தேசம் ஒன்றை உலக வரைபடத்தில் யாராலும் காட்ட முடியாது.
தேசிய உணர்வை, ஒற்றுமையை, ஒன்றித்த பக்தியை ஏற்படுத்துவதற்கு தேசிக் கவிதையோ தேசிய நாடகமோ தேசிய வசனங்களோ தேசிய சிறுகதையோ பயன்படுத்தப்படுவதில்லை.

அது பாடலால் மாத்திரமே சாத்தியம் என்பதால்தான் அந்த வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மனிதனின் மென்மையான உணர்வில் சங்கமித்துச் செயற்படுத்தும்  வல்லமை பாடலுக்கு மாத்திரமே உண்டு.

மனித குலத்தின் பாதுகாப்புக்கான எழுச்சியில் - போராட்டத்தில் பாடல் ஓர் ஒப்பற்ற ஆயுதமாக இருக்கிறது. உலகில் தோன்றிய மக்கள் எழுச்சிகள் அனைத்திலும் பாடல் பெரும் பங்கு வகித்திருப்பதை நாம் கண்டு கொள்ள முடியும்.

நம் கண்முன்னே பாடலின் வலிமை சொல்லும் இரண்டு அண்மைய சம்பவங்களைக் குறிப்பிட முடியும்.

சிரியப் பாடகரான இப்றாஹிம் கஷவ்ஸ் சிரியாவின் டமஸ்கஸை விடப் பெரிய பிரதேசமான அலப்போவில் பஷர் அல் அஸாத்தை எதிர்த்துப் பாடினார். அவர் சொன்னதெல்லாம் ' யா பஷ்ஷார்.. யா பஷ்ஷார் நாட்டை விட்டுப் போ பஷ்ஷார். இசையோ தாளங்களோ இல்லாத பாட்டு அது. அந்தப் பாடல் வசனங்களை அவர் ஒவ்வொரு வரியாகப் பாடப்பாட லட்சக் கணக்கான மக்கள் திரும்பப் பாடினார்கள்.

தினமும் மக்கள் கூட்டம் பெருகியது. மிரண்டு போன பஷ்ஷாரின் கொலை அணி மிருகங்களை அறுப்பது போல அவரது குரல் வளையை அறுத்துத் தெருவில் போட்டு விட்டுச் சென்றது.

மிக அண்மையில் தமிழகத்தில் நாட்டுப் பாடல்களைப் பாடும் கோவன் கைது செய்யப்பட்டு விடுதலையானதை அறிவோம். அவரது பாடலின் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்று உறுதியாக நான் நம்பிய போதும் எளிமையாக அவர் பயன்படுத்திய வசனங்கள் மக்கள் கவனத்தைப் பெற்றதை மறுக்க முடியாது.

பெரும் யுத்தத் தாங்கிகளை விட, மல்டிபரல் குண்டு வீச்சை விட  பாடல்கள் வலியமையானவை என்பதற்கு இவை நல்ல உதாரணங்களாகும்.

மெல்லிசையையும் இஸ்லாமிய கீதங்களையும் வளர்த்தெடுத்ததில் அளப்பரிய பங்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குரியது. தமிழ் மெல்லிசை நிகழ்ச்சிகளை வர்த்தக சேவையும் தேசிய சேவையும் ஒலிபரப்பி வந்தன.

தமிழ் மெல்லிசைப் பாடல்களை எழுதிய முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் எனக்கு இப்போதைக்கு ஞாபகம் வருவது தற்போது வெளிநாட்டு அமைச்சில் கடமையாற்றும் நண்பர் எச்.ஏ.அஸீஸூம், அக்கரையூர் அப்துல் குத்தூஸூம்தாம். அப்துல் குத்தூஸ் அநேக மெல்லிசைப் பாடல்களை எழுதியிருக்கிறார். மெல்லிசைப் பாடகர்களில் எம்.ஜே.எம். அன்ஸாரும் எம்.எச்.பௌஸூல் அமீரும் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

நமது கவனத்துக்கு எட்டாமல் பல இசை இறுவட்டுக்கள் வெளிவந்திருக்கலாம். ஆனால் ஒரு பெண்மணி என்ற வகையில் தானே எழுதி, தானே ராகம் தேர்ந்து, வாத்தியங்கள் தேர்ந்து, இசையமைத்துத் தானே பாடிய முதலாவது இறுவட்டு இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

இதைப் பிரித்துத் தனித்துச் சொல்வதற்குக் காரணம் அவர் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருப்பதே.

இந்த இடத்தில்தான் லறீனா அப்துல் ஹக்கின் திறமை மட்டுமன்றி துணிச்சலும் ஓர்மமும் வெளிப்பட்டு நிற்கிறது என்பதைச் சொல்ல எனக்கு எந்தவிதத் தயக்கங்களும் கிடையாது.

(இன்று நடந்த வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய உரையின் வரிவடிவம்)

Wednesday, November 18, 2015

எதை மேலும் சொல்ல இருக்கிறது யுத்தம் பற்றி!


 - 31 -

சிரியாவின் உள்நாட்டு யுத்தம் பிராந்திய யுத்தமாக மாறி உலக யுத்தமாக மாற்றம் பெற்று வருகிறது. யுத்தம் என்பதன் அர்த்தம் துயரம் என்பதுதான்.

யுத்தம் பற்றிப் பேசும் பல்லாயிரக் கணக்கான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. வந்து கொண்டுமிருக்கின்றன. சிரிய யுத்தத்தின் கொடுமையை இரண்டு தினங்கள் நேரில் கண்டு ஒரு கவிஞர் எழுதிய கவிதையை இன்று பகிர்ந்து கொள்கிறேன். அந்தனி ஜே. மார்செலா என்ற கவிஞர் இந்தக் கவிதையை 2013 ஆகஸ்ட்டில் எழுதியிருந்தார். யுத்தம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையை விரிக்கும் கவிதை இது என்று உணர்கிறேன்.

ஏற்கனவே சொல்லப்படாத
ஏற்கனவே எழுதப்படாத
ஏற்கனவே பாடல்களில் பாடப்படாத
செய்யுள்களில் ஓதப்படாத
காவியக் கதைகளில் பகிரப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது 
யுத்தம் பற்றி

தலை சிறந்த நடிகர்களைக் கொண்டு
குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய 
திரைப்படங்களில் 
கொடிகளின் அசைவுகளுக்கு மத்தியில்
பெருமையுடன் சண்டையிட்டும் செத்தும்
சித்தரிக்கப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி? 

அல்லது
கவனமாகச் செம்மைப்படுத்தப்பட்ட
புகைப்படங்கள் கொண்டு
எழுத்துக்கள் கொண்டு
இடையறாத சோக இசைக்கு மத்தியில்
துன்பமளிக்கும் வார்த்தைகளிலான
புலம்பல்கள் கொண்டு
தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களில்
காட்டப்படாத எi மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி?

ஏற்கனவே சலவைக் கற்களில்
செதுக்கப்படாத
கித்தான்களில் வரையப்படாத
ஈர்க்கும் வர்ணங்களிலும்
கருப்பு - வெள்ளைப் புகைப்படங்களிலும்
இரத்தம் சிவப்பு நிறத்திலும்
எலும்பு வெள்ளை நிறத்திலும்
மரணம் முடிவுறாதது என்றும் காட்டப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி?

ஏற்கனவே
தப்பிப் பிழைத்த வீரர்களின்
மனதிலும் உடலிலும் பதியப்படாத
பொது மகனால் பொறுத்துக் கொள்ள முடியாத
பிடிக்கப்பட்ட சிறைக் கைதிகளின்
வெளித்தெரியும் காயங்களும்
வெளித் தெரியாத காயங்களும் சொல்லாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

சூரிய ஒளியினாலும் நிழலினாலும் மூடப்பட்டு
தேசிய மரண நிகழ்வுகளில்
அர்ப்பணிப்புக்கான கௌரம் வழங்கப்பட்ட
உடல்களுக்கென
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட
கிரனைற் நடுகற்களில் செதுக்கப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

கதாநாயகர்களையும் வில்லன்களையும்
சிப்பாய்களையும் தளபதிகளையும்
மாவீரர்களையும் சொங்கிகளையும்
சுதந்திரப் போராளிகளையும்
பயங்கரவாதிகளையும்
பாதிக்கப்பட்டவர்களையும்
ஆதரவாளர்களையும்
மன்னிப்புக் கோரலையும்
இழப்பீடு வழங்குதலையும்; பற்றி
ஏற்கனவே சொல்லப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

பழிவாங்கல், ஆதிக்கம், மேலாண்மை,
நன்னடத்தைக் கடமைகள், பொறுப்பு,
வாய்ப்புகளையும் வளங்களையும் மேம்படுத்தல்,
கட்டுப்படுத்தலுக்கும் அதிகாரத்துக்குமான பேராசை,
தீமை பயத்தல், பெருஞ்சிறப்பு...
இத்தியாதி வார்த்தைகளால் சொல்லப்படாத
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

உயிர்கள் காவு கொள்ளப்படுகிற
சிந்ததைகள் சிதைக்கப்படுகிற
வாட்டர்லூ, பலூஜா போன்று
வெற்றி கொண்டோரின் பக்கச்சார்பான சொற்கள் கொண்டு
வரலாற்றாசிரியர்கள் வடிவப்படுத்துகிற
யுத்தகளங்கள் புகழப்படாத 
எதை மேலும் சொல்ல இருக்கிறது
யுத்தம் பற்றி

யுத்தத்தில் வெற்றியாளர் என்று
யாரும் கிடையாது!

எவ்வளவோ எழுதப்பட்டும்
எவ்வளவோ பேசப்பட்டும்
எவ்வளவோ செதுக்கப்பட்டும்
யுத்தத்தின் பாடங்கள் 
தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதும்
தொடர்ந்து மறுக்கப்படுவதும்
தொடர்ந்து திரித்துக் கூறப்படுவதும்
ஏன்?

இதோ... இன்று சிரியா....

(நன்றி - மீள்பார்வை)

Wednesday, November 4, 2015

பிறைப் பாட்டு

 - 30 -

சில காலங்களுக்கு முன்னர் தூரத்தில் வசிக்கும் எனது நண்பர் ஒருவர் 'பிறைப்பாடல்' என்றால் என்ன என்று தொலைபேசி மூலம் வினவினார். எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

கல்வியமைச்சு வருடாவருடம் நடத்தும் கலாசாரப் போட்டிகளுக்குள் முஸ்லிம் பாடசாலைகளுக் கிடையிலான கலாசாரப் போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக அது குறிப்பிடப்பட்டிருந்தது. உரிய அமைச்சில் உரிய பிரிவைத் தொடர்பு கொண்டும் நண்பருக்குச் சரியான தகவலைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கவில்லை. மீண்டும் அவர் என்னைத் தொடர்பு கொண்ட போது கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரிக்குமாறு நண்பரைக் கேட்டுக் கொண்டேன். கல்வி, கலாசார அமைச்சின் நுண்கலைப் பிரிவில் அவர் ஒரு குறிப்பிட்ட காலம் இருந்ததை நான் அறிவேன்.

வில்லிசைப் பாடலின் முஸ்லிம்களுக்கான வடிவமே பிறைப்பாடல் என்பது பின்னால் தெரியவந்தது.

களுத்துறை மாவட்ட அஹதியா பாடசாலைகளுக்கிடையிலான மார்க்க மற்றும் கலாசாரப் போட்டிகளுக்கு மத்தியஸ்தம் வகிக்கச் சென்ற போது அவர்கள் 'பிறைப்பாடல்' நிகழ்ச்சியையும் போட்டிக்காக அறிவித்து நடத்தியிருந்தார்கள். ஐந்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இப்போட்டியில் கலந்து கொண்ட போதும் சமகால மத்திய கிழக்கு அரசியலை வைத்து, முழுக்கவும் மாணவிகளை வைத்து நடத்தப்பட்ட பிறைப்பாடலை நாங்கள் தெரிவு செய்தோம். மிகச் சரியான மாணவியைத் தலைவியாகக் கொண்டதோடு மட்டுமன்றி பாடுவதற்குப் பொருத்தமான மாணவிகளையும் கொண்டு அந்நிகழ்ச்சி தயார் செய்யப்பட்டிருந்தவும் நிகழ்ச்சியின் கருப் பொருளும் மத்தியஸ்தர்களைக் கவர்ந்திருந்தன.

கடந்தகால வில்லிசைப் பாடலின் போக்கு ஒரு மனச் சந்தோஷத்தை ஏற்படுத்தக் கூடியதான நகைச்சுவைப் பாங்கிலேயே பெரும்பாலும் அமைந்திருந்தன என்று அறிவேன். மேற்படி பாடசாலை மாணவிகளின் நிகழ்ச்சியின் மூலம் பிசிறடிக்காத, அபஸ்வரம் இல்லாத பாடல் திறமை கொண்டு எவ்வகையான ஒரு கருப் பொருளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்பது புரிய வந்தது.

கவிஞர் அப்துல்காதர் லெப்பை அவர்களின் 'செய்னம்பு நாச்சியார் மான்மியம்' ஒரு மனமகிழ்வுக் காவியம்.  இது உண்மையில் ஒரு நெடுங் கவிதை. அதிகாரத்தைக் கையில் கொண்ட பெண் செய்னம்பு நாச்சி. இந்தக் கவிதை 1969ம் ஆண்டு வில்லிசைப் பாடலாகக் கொழும்பிலும் பின்னர் காத்தான்குடியிலும் மேடையேற்றப்பட்டதாக கலாநிதி அனஸ் குறிப்பிடுகிறார்.

70களின் நடுப்பகுதியில் காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் வில்லிசைப் பாடல்கள் களைகட்டியிருந்தன. காத்தான்குடியில் சாந்தி முகைதீன் குழுவினரும் ஏறாவூரில் அஜ்வாத் ஆசிரியர் குழுவினரும் பல வில்லுப் பாட்டு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வந்துள்ளார்கள். வில்லுப் பாட்டு நிகழ்ச்சிகளை நேரில் காணும் வாய்ப்புக் கிடைக்காத போதும் அஜ்வாத் ஆசிரியரின் 'மொட் பொடியன் மோறு லெவ்வை', 'ஃபைல் புத்தகம் பறந்து போகுது தலைக்கு மேலாலே..!' ஆகியவற்றை ஒலி நாடாக்களில் கேட்டு ரசித்து மகிழ்ந்ததுண்டு. இந்த ஞாபகம் உந்தித் தள்ள சில மாதங்களுக்கு முன்னர் ஏறாவூர் சென்றிருந்த நான் அஜ்வாத் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து அவரை இலக்கிய மஞ்சரிக்காக நேர்காணல் செய்து வந்தேன்.

ஒரு விடயத்தை, ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு நாடகத்தைப் போலவே சிறந்த கலை வடிவம் பிறைப் பாட்டு. ஆனால் இந்த அம்சம் வருடாந்த பாடசாலைப் போட்டிகளில் மட்டுமே உயிர்வாழ்வது கவலைக்குரியது.

கிராமங்கள் நகரங்களாக உருமாறி வருகையில் மனிதர்களும் தங்களை மாற்றிக் கொண்டே வருகிறார்கள். அன்றைய கால அயல் மனிதனுடனான உரையாடலும் அந்நியோன்னிய உறவும் அற்றுப் போய் எல்லோரும் தனித் தனித் தீவுகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருக்கும் உறவுகள் கூடக் கணினியோடும் ஆளுக்கொரு ஸ்மார்ட் கைப் பேசியுடனும் தனித் தனியே அமர்ந்திருந்து தமது உலகத்தைச் சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள். மனிதம் சார்ந்த உறவுகள் மரித்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு கிராமத்து மனிதனின் விகடப் பேச்சு, நடத்தை, உலகில் நடக்கும் வழமைக்கு மாறான நிகழ்வுகள், சினிமா, பாடல் ஆகியவற்றைத் தமது நவீன கருவிகள் மூலம் பார்த்துத் தனியே அமர்ந்து ரசிப்பதில்தான் தமது பொழுதைப் பலர் கழிக்கிறார்கள். சிலவேளை அவற்றை மற்றவர்களோடு அனுப்பிப் பகிர்ந்தும் மகிழ்கிறார்கள்.

ஒரு சமூதாயத்தின் கலாசாரம், பண்பாடுகள் ஆகியன அவர்தம் கலை வடிவங்களில்தான் வாழுகின்றன. ஆனால் நமக்கான கலை வடிவங்கள் குறித்து நாம் எவ்வித அக்கறையும் அற்றவர்களாகவே வாழ்ந்து வருகிறோம். உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் கலை வடிவங்களை நமக்குரிய முறையில் மாற்றியமைத்து சமூகமாற்றத்துக்கும் வழிகாட்டலுக்கும் பயன்படுத்துவதை விடுத்து அவற்றை மார்க்க முரணான அம்சங்களாகச் சித்தரித்துக் கொண்டு மார்க்க முரணான அம்சங்களைக் கணினியிலும் கைத் தொலைபேசியிலும் பார்த்தும் கேட்டும் இரசித்து மகிழ்கிந்து கொண்டிருக்கிறோம்.

இந்தக் கேலிக் கூத்தையும் கூட ஒரு சிறந்த பிறைப்பாட்டாகக் கொண்டு வர முடியும். கலாசாரம், பண்பாடு என்பது ஆடைகளிலும் கோலங்களிலும் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பதையும் முரணான எதையும் முரணற்றதாக மாற்றிக் கொள்வதற்கு முடியும் என்பதையும் முதலில் பிறைப்பாட்டிலேயே சொல்லி விடலாம்.

வில்லிசையயானது பிறைப்பாடலாக மாற்றம் பெற்றிருப்பதும் இதையே சுட்டிக்காட்டுகிறது!

நன்றி - மீள்பார்வை

Monday, November 2, 2015

மாட்டு இறைச்சியும் மனித நேயமும் !


- பேராசிரியர் கலாநிதி சேமுமு. முகமதலி -

டெல்லிக்கு அருகே உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம புத்தர் மாவட்டத்தில் தாத்ரி தாலுகாவில் உள்ளது பிசோதா எனும் கிராமம். யாரோ பசுவைக் குர்பானி கொடுத்துவிட்டு அதன் இறைச்சியை முஹம்மது அஹ்லாக் என்பவரிடம் கொடுத்ததாகவும் அவர் அதை ஃபிரிஜ்ஜில் வைத்துச் சாப்பிடுவதாகவும் கிராமத்தில் வதந்தி கிளப்பிவிடப்பட்டது. உண்மையில் அவர் ஃபிரிஜ்ஜில் வைத்திருந்தது ஆட்டிறைச்சியே ஆகும்.

இந்துத்துவத் தீவிரவாதிகள் அவரது வீட்டில் திடீரெனப் புகுந்து தாக்கியதில் 58 வயதான அஹ்லாக் அதே இடத்தில் ஷஹீதானார். அவரது 70 வயது தாய் அஸ்ஹரி, 52 வயதான மனைவி இக்ரமன், 21 வயது இளைய மகன் தானிஷ், 16 வயது மகள் ஷாஹிஸ்தா ஆகியோர் காயமுற்றனர். தானிஷ் படுகாயமுற்றுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

முஹம்மது அஹ்லாக்கை உயிர்போகும் வரை அடித்துக் கொன்று உடலை அவரது வீட்டிற்கு முன் போட்டுச் சென்ற கூட்டம், பயந்து குளியலறையில் பதுங்கியிருந்த 70 வயது தாயையும் விட்டுவைக்கவில்லை. தாழ்ப்பாளை உடைத்துவிட்டுத் தாக்கிச் சென்றுள்ளனர்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் முஹம்மது அஹ்லாக்கின் மூத்த மகன் சர்தாஜ் இந்திய இராணுவப் படையில் சேர்ந்து சென்னை முகாமில் பணியாற்றுகிறார். இந்திய நாட்டிற்காகத் தம் மகனையே அர்ப்பணிப்பு உள்ளத்தோடு இராணுவத்திற்கு அனுப்பிய முஹம்மது அஹ்லாக்கின் நாட்டுப் பற்றுக்குக் கிடைத்த பரிசு இந்துத்துவத் தீவிரவாதிகள் அளித்த உயிர்க்கொலை !

இச்சம்பவத்தையொட்டிப் பல இந்துத்துவத் தீவிரவாத அமைப்புகளான பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டங்களைச் சேர்ந்த பல தலைவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதையும் முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் மாட்டிறைச்சி சாப்பிடுவோரைக் கொலை செய்ய வேண்டுமென்றும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

மாட்டிறைச்சி உண்பவருக்கு இதுவே தண்டனை என்று சாத்வி கூறியுள்ளார். அஜய் சிங் என்பவர் இது இந்துக்கள் நாடு என்பதை மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார். பிஜேபியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சக்‌ஷி மஹராஜ் பசுவைக் கொல்வோரைக் கொல்லத் தயாராகுங்கள் என்று சொல்கிறார்.
முன் நடந்த ஆட்சிகளின் போதெல்லாம் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தவர்கள் மோடி ஆட்சியில் தலைவிரித்துப் பகிரங்கமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மைநிலை. இது குறித்துக் குடியரசுத் தலைவரே மறைமுகமான கருத்தை வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை விதிக்க வேண்டும், மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவது முற்றிலும் தடைவிதிக்க வேண்டுமென்று கூறும் இந்துத்துவத் தீவிரவாதிகள் உண்மைநிலையை மறந்துவிட்டார்கள் என்பது வருத்தம் தருவதாகும். ஏதோ முஸ்லிம்கள் மட்டுமே மாட்டிறைச்சி உண்பதாக முடிவு செய்துகொண்டு மதத் துவேஷ வேகத்தில் பேசுகின்றார்கள். மத வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

உலகத்தில் மிக மிக அதிகமாக மாட்டிறைச்சியை உண்பவர்கள் கிறிஸ்தவர்களும் யூதர்களுமே ஆவரென்பதே உண்மையாகும். இந்தியாவின் மக்கள்தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாழும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் தலித்களின் முக்கிய உணவு மாட்டிறைச்சியே ஆகும்.
முதன் முதலாகக் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் சிந்து நதி தீரத்தில் தங்கியிருந்த ஆரியர்களின் முக்கிய உணவே மாட்டிறைச்சியாக இருந்திருக்கிறது. எந்தவோர் இந்து வேதமோ, சாஸ்திரங்களோ மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யவில்லை. இன்னும் கூறப்போனால் இந்துக்களின் முக்கியக் கடவுளான இந்திரன் மாட்டிறைச்சியை விரும்பி உண்பதாகவும் அதனால் அந்தக் கடவுளுக்கு மாட்டிறைச்சியே படைக்கப்படுவதாகவுமே கூறப்படுகிறது. அக்னி என்னும் கடவுளுக்கும் மாட்டிறைச்சியே படைக்கப்படுகிறது. மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட பழமையான பல வேத நூல்களில் மாட்டிறைச்சி உண்ணப்பட்ட செய்திகள் பல காணக் கிடைக்கின்றன.

வேதக் காலத்தில் 250 விலங்குகளில் 50 விலங்குகள் உண்ணவும், பலிகொடுக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பசு மற்றும் காளையும் அடங்கியுள்ளன. அக்னி கடவுளுக்குப் பசு பலியிடப்பட்டுள்ளது. மஹா பாரதத்தில் ரந்திதேவன் என்பவன் பிராமணர்களுக்குத் தானியங்களும் மாட்டிறைச்சியும் தானமாகத் தந்துள்ளான். தைத்ரிய பிராமண் பசுவே உணவு எனச் சொல்கிறது. யஜ்னவாக்யா இளம் பசுவின் உணவை உண்ண எடுத்துரைக்கிறது. மிக முக்கிய நூலான மனுஸ்மிருதி மாட்டிறைச்சி உண்ணுவதைத் தடுக்கவில்லை. ரிக் மற்றும் அதர்வண வேதங்களில் பிராமணர்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்பது அதிகமாக இருந்த செய்தி கூறப்படுகிறது.

மாட்டிறைச்சி சூப் பல வியாதிகளைக் குணப்படுத்துகிறது. பசுவின் கொழுப்பு மூட்டுவலிகளுக்கு மிக நல்லது என்று சரக் சம்ஹிதா எனும் வேதநூல் கூறுகிறது. மேகதாவில் குடதந்தா எனும் பிராமணரே மாடுகளைப் பலிகொடுத்து வந்த செய்தி காணப்படுகிறது.

புத்த மதத்தைத் தழுவிய அசோகர் சைவமாக மாறிவிடவில்லை. அவரது உணவில் மாட்டிறைச்சியும் இருக்கவே செய்தது. ஆக இன்றைக்கும் இந்தியாவில் வாழும் இந்துக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மாட்டிறைச்சி உண்போர் இருக்கிறார்கள் என்பதே நடப்பு உண்மையாகும். பாபர், அக்பர், ஜஹாங்கீர், அஹமது ஷா முதலிய முகலாய மன்னர்களின் ஆட்சியின்போதும், ஹைதர் அலி, திப்புசுல்தான் போன்றோரின் ஆட்சியின் போதும் இந்து மதத்தினரின் உணர்வை மதிக்கும் வகையில் பசுவைக் கொல்வது கூடாதெனத் தடுக்கப்பட்டிருந்தது என்பதை இந்துத்துவத் தீவிரவாதிகள் மறந்துவிட்டனர் அல்லது வேண்டுமென்றே மறைத்துவிட்டனர். முதன் முதலில் இந்தியாவில் 1760 இல் மாடு அறுப்பதற்கு என்றே தனி இடத்தைத் தோற்றுவித்தவர் இராபர்ட் கிளைவ் எனும் ஆங்கிலேயர்தான். அன்றைக்கு அவர் தொடங்கி வைத்ததன் தொடர்ச்சியாக இன்றைக்கு இந்தியாவில் சுமார் 36,000 மாடு அறுக்கும் இடங்கள் செயல்பட்டுவருகின்றன.

இந்தியாவில் மாடு அறுப்பதற்கோ மாட்டிறைச்சி உண்பதற்கோ தேசிய அளவில் எந்தவொரு பொதுச் சட்டமும் இல்லை. 24 மாநிலங்களில் வேறு வேறு வகையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஒடிசா, புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, குஜராத், டில்லி, பீஹார், ஆந்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பசு மாட்டை அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராஜஸ்தான், பஞ்சாப் முதலிய மாநிலங்களில் எந்த ஒரு மாட்டையும் அறுக்கத் தடை உள்ளது. மேற்கு வங்காளத்தில் மாட்டை அறுப்பதற்கான சான்றிதழ் பெற்று மாட்டை அறுக்கலாம்.

72 வகை சாதி மக்களின் முக்கிய உணவாக மாட்டிறைச்சி விளங்கும் மாநிலமான கேரளா, மணிப்பூர், மிஜோராம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் எந்தவிதச் சான்றிதழும் இல்லாமலேயே அனைத்து வகை மாடுகளையும் அறுக்கலாம்.

இந்தியாவில் ஏறக்குறைய 300 மில்லியன் மாடுகள் இருக்கின்றன. ஆனால் அவை மேய்வதற்கோ 190 மில்லியன் ஹெக்டேர் நிலங்களே உள்ளன. மேய்ச்சல் நிலங்கள் குறைவாகவும் மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கின்றன. 80 மில்லியன் மாடுகள் வயதானவையாகவும், குட்டி ஈன்றெடுக்க இயலாதவையாகவும் உள்ளன. பசியிலும் நோயிலும் சாகும் நிலையில் பல மில்லியன் மாடுகள் இருக்கின்றன. அதிலும் மாடுகளில் ஆண் இனம் வெகுவாகக் குறைந்து வருகிறது. பெண் இனம் அதிகரித்து வருகிறது இன்று 6 பெண்மாடுகளுக்கு ஓர் ஆண் மாடுதான் உள்ளதெனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆகவே இன்றுள்ள சூழலில் எந்த இன மாடுகளை இறைச்சிக்காகப் பயன்படுத்த வேண்டி உள்ளதென்பது சிந்திக்கத் தகுந்ததாகும்.
இத்தகைய நிலையில்தான் உலக நாடுகளில் இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கிறது. வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில் கடந்த ஆண்டு வரை இந்தியாதான் முதலிடம் வகித்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. 2014 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவிற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 4.8 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது. மாடுகளை அறுக்கக்கூடாதெனும் இந்துத்துவத் தீவிரவாதிகளின் கருத்தை ஏற்று மோடி அதனைத் தடை செய்து இத்தகைய பெரும் வருமானத்தை இழக்க வைத்து இன்னும் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதாளத்திற்குள் வீழ்த்துவாரா என்பது பில்லியன் டாலர் கேள்வியாகும்.

வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் ஆறு நிறுவனங்களில் நான்கு இந்துக்களால் நடத்தப்படுபவையாகும். மும்பை-400021, செம்பூர், ஜாலி மேக்கர்ஸ் 92 இல் உள்ள அல்கபீர் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் சதீஸ் மற்றும் அதுல் சபர்வால் ஆவார்கள். மும்பை-400001, ஓவர்சீஸ், ரஷ்யன் மேன்ஷனில் இயங்கும் அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சொந்தக்காரர் சுனில் கபூர் ஆவார். புதுதில்லி-110001, ஜன்பத், எம்.ஜி. ரோட்டில் உள்ள எம்.கே. ஆர் ஃப்ரோஸன் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன் அபாத் ஆவார். சண்டிகார் -160022, செக்டார் 34-ஏ, எஸ்சிஓ 62-63 இலக்கத்தில் இயங்கி வரும் பி.எம்.எல். இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எஸ். பிந்த்ரா ஆவார். மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து மிகப் பெரிய இலாபம் ஈட்டிக் கொண்டிருப்பவர்கள் யாரென்று இப்போது புரிந்துகொள்ளலாம்.

மனிதாபிமானத்தின் அடிப்படையில் அல்ல, மதத்துவேஷத்தின் அடிப்படையிலே இந்துத்துவத் தீவிரவாதிகள் மாட்டிறைச்சிப் பிரச்சனையை அரசியல் இலாபம் கருதிச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும். மாட்டிறைச்சியைப் பிரச்சனையாக்கிக் கலவரத்தைத் தூண்டுவதென்பது இது முதன்முறையல்ல. 1870 இல் சிக் குகா எனும் நம்தாரி இனத்தவர் பசுவைக் காத்தல் எனும் பெயரால் கலவரத்தில் இறங்கினர். 1882 இல் தயானந்த சரஸ்வதி என்பவர் கோரக்‌ஷினி சபா என்ற ஒன்றை ஏற்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். 1880-90 களில் இந்தியாவில் பல இனக்கலவரங்கள் நடந்துள்ளன. ஆஸம்கார் (1893), அயோத்யா (1912), ஷஹாபாத் (1917) முதலிய இடங்களில் பெரும் கலவரங்கள் நடந்திருக்கின்றன. ஆகவே மாட்டிறைச்சி பிரச்சனை இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பே இந்துத்துவத் தீவிரவாதிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சுதந்திரத்திற்குப் பின்னரும் அவ்வப்போது இப்பிரச்சனை தலைதூக்க முயன்றுள்ளது. ஆனால் இப்போதோ எப்போதுமில்லாத அளவிற்குத் தலை விரித்தாடுகிறது.

2005 பிப்ரவரியில் ஜுனகாத் ஸ்வாமிநாராயண் கோயில் சாமியாக பக்தி ஸ்வரூப் மற்றும் அவரைச் சார்ந்த மூவர் பாலியல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர். 2006 மார்ச்சில் ஜபல்பூரைச் சேர்ந்த விகாஸ் ஜோஷி எனும் ஸ்வாமி விகாசானந்த் என்பவர் ப்ளூ ஃபிலிம் 60 சி.டி.களுடனும், மூன்று பெண்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டனர். 2009 நவம்பரில் மச்சீசப் பெருமாள் கோயிலைச் சேர்ந்த காஞ்சீபூரம் தேவநாதன் பக்தைகளிடம் பாலியல் வன்கொடுமை செய்தது, பாலியல் வீடியோக்கள் பதிவு செய்தது முதலான குற்றங்களுக்கு ஆளானார். 2010 மார்ச்சில் ஸ்ரீமுரத் த்விவேதி என்ற இச்சதாரி சந்த் ஸ்வாமி பிமானந்த் என்பவர் விபச்சார விடுதி நடத்தியதாகக் கைது செய்யப்பட்டார். மஹேந்திர கிரி எனும் துன்னு பாபா 24 வயது திருமணமான பெண்ணுடன் தகாத உறவு கொண்டிருந்ததாக மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். 2010 ஏப்ரலில் சுவாமி நித்யானந்தா பெங்களூருவில் நடந்த பல்வேறு பாலியல் முறைகேட்டிற்காகத் தேடப்பட்டு ஹிமாச்சலப் பிரதேசத்தில் கைதுச் செய்யப்பட்டார். 2013 செப்டம்பரில் ஜோத்பூரில் ஸ்வாமி ஆஸ்ரம் பாபு என்பவர் மைனர் பெண்ணைக் கற்பழித்தமைக்காகக் கைதுச் செய்யப்பட்டார். 2014 நவம்பரில் சந்த ராம்பால் என்பவர் தனது முறையற்ற பாலியல் நடவடிக்கைகள் வெளிவந்த விவகாரத்தில் கொலை செய்ததற்காக ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2015 ஆகஸ்டில் சாரதி பாபா என்பவர் பாலியல் முறைகேடுகளுக்காகவும், ஆள் மாறாட்டம் செய்தமைக்காகவும் ஒடிசா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.கர்நாடக முதல்வர் சித்தாராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மற்றும் அசோக் சிங்கால் முதலியோருடன் நெருக்கமாக உள்ள பண்டிட் சுவாமி இராகேஸ்வரா பாரதி பல்வேறு பாலியல் குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளார்.

இவற்றை இங்கு பட்டியலிடுவதில் காரணம் இருக்கிறது. இத்தகைய சாமியார்கள்தாம் மாட்டிறைச்சி உண்பதற்கும் மாடுகள் அறுப்பதற்கும் எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்கள். இவ்வாறு குரல் கொடுப்போரின் யோக்கியதை இத்தகையதாகத்தான் உள்ளதென்பது வேதனையிலும் வேதனையாகும். அதே சமயத்தில் விவேகானந்தர் போன்றோர் மாட்டிறைச்சி உண்போர்களுக்கு ஆதரவாகவே கருத்துக்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியத் திருநாட்டில் மாட்டிறைச்சி உண்போர் எண்ணிக்கை அதிக அளவிலேயே உள்ளது. உணவு என்பது வசிக்கும் இடத்தையும், செய்யும் தொழிலையும் பொருத்ததாகவே இருந்து வந்துள்ளது. உணவு என்பது மதச் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படுவதில்லை. தாங்கள் விரும்பும் உயர்தரப் பொருளையே கடவுளுக்குக் காணிக்கையாகத் தரும் மனோபாவம் உள்ள நாடு இது. தனது கண்ணையே பிடுங்கிக் கடவுளுக்கு வைத்த கண்ணப்ப நாயனாரைப் போற்றும் நாடு இது. பெற்ற மகனையே அறுத்துக் கடவுளுக்குக் கறி சமைத்துக் கொடுத்த புராணம் வழங்கப் பெறும் நாடு இது. இந்த வகையில் தாங்கள் உயர்வாகக் கருதும் மாடுகளையே கடவுளுக்குப் பலி தந்து அந்த இறைச்சியையே உண்டு மகிழும் மக்களைக் கொண்ட நாடு இது என்றாலும் மனித நேயத்தில் மாண்போடு உயர்ந்து விளங்கும் அற்புதத் திருநாடு இந்நாடு.

மாட்டிறைச்சிக்காக மனிதர்களைக் கொலை செய்பவர்கள் மனிதர்களை மட்டும் கொல்லவில்லை. மனித நேயத்தையும் கொன்று வருகிறார்கள். நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும், கட்டுக்கோப்பிற்கும் ஊறுவிளைவிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல தங்கள் மதத்துக்கே அவப்பெயர் தேடித்தருகிறார்கள். மனித நேயத்திற்கு உலை வைக்கும் வகையில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னதமான சித்தாந்தத்தை அடித்து நொறுக்கும் வகையில் மாட்டிறைச்சிப் பிரச்சனையை அரசியலாக்க முயல்வோர் செயலுக்கு இந்தியப் பெரு நாட்டின் அருமைக் குடிமக்கள் எள்முனை அளவுகூட ஆதரவு தர மாட்டார்கள் என்பதே உறுதியாகும்.

( இனிய திசைகள் மாத இதழ் – அக்டோபர் 2015 )
நன்றி - ஜே. மொஹிதீன் பாச்சா

Sunday, November 1, 2015

சத்தியமும் சாற்றும் வழியும்!


Amir Husain 
(முகநூல் பதிவு)

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், "எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்' என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். "ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்' என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது.

"இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது' என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார். மிகக் கடுமையான ஆச்சரியத்தில் நான் சிரித்தேன்.

"என் முகத்தைப் பார்க்காத ஓர் ஆடவர் உண்டா?' என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

அவ்விருவரின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்தேன்; இணங்கினேன்.
குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு, அமைதியளிப்பதற்கு இரண்டாம் நாள் அவரிடம் வந்தேன்.

"பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு நாற்பது நாட்கள் அளவுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அமெரிக்க தம்பதியர்கள் இக்கால கட்டத்தில் காக்க வேண்டிய தடை, தடுப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி விடுகின்றனர்.
எனவே குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு தம்பதியர் பத்தியம் காக்க வேண்டும். உடலுறவுக்கு விடை கொடுத்து விடவேண்டும். இந்த 40 நாட்களுக்கு இடையே பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும். பாரமான, பளுவான பணிகள் எதையும் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.தொடர்ந்து நடைபெற்று வரும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் தான் இதைத் தெரிவிக்கிறேன்'' என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தேன்.

அந்த அரபியப் பெண் ஆசுவாசமாக, அமைதியாக, எவ்வித பரபரப்புமின்றி, "பிரசவமான பெண்ணின் இரத்தம் நிற்கின்ற வரையில் தாம்பத்தியத்திற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கின்றது'' என்று தெரிவித்தார்."அத்துடன் மட்டுமல்லாமல் இக்கால கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங் களையும் இத்தகைய பெண்களுக்கு இஸ்லாம் ரத்து செய்துவிடுகின்றது'' என்று அவர் தெரிவித்தது தான் தாமதம்! அவரது இந்த யதார்த்தமான பதில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீண்ட, நெடிய ஆய்வுக்கூட அறிஞர்களின் ஆய்வை இஸ்லாம் தன் வாழ்க்கை நெறியில் சர்வ சாதாரணமாக இழையோடச் செய்திருக்கின்றது என்று எண்ணி பிரமித்துப் போய்விட்டேன்.

இந்த நேரத்தில் குழந்தைகள் நல பெண் மருத்துவர் வருகை தந்தார். குழந்தை நலன் தொடர்பான மருத்துவ அறிவுரைகளை மணிக்கணக்காக விவரிக்க ஆரம்பித்தார்."குழந்தைகளை அதன் வலது பக்கமாக உறங்க வைக்க வேண்டும். இதன் மூலம் அதனுடைய இதயத் துடிப்புகள் சீராக அடிக்கின்றன, அமைகின்றன'' என்று சொன்னதும் குழந்தையின் தகப்பனார், "நல்ல காரியங்கள் அனைத்திலும் வலது பக்கம் தான் என்று நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி வலது பக்கமாகவே நாங்கள் உறங்க வைக்கின்றோம்'' என்று சொன்னதும் மீண்டும் என்னுடைய உடலில் நாடி நரம்புகளில் அதிகமான அதிர்வலைகளைப் பாய்ச்சியது.

அவ்வளவு தான். மருத்துவமனைக்கு ஒரு மாதம் விடுப்பு போட்டேன். அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இஸ்லாமிய மையத்திற்குச் சென்று விடை தேடினேன். ஏற்கனவே இருந்த மார்க்கத்திலிருந்து விடுதலையானேன். என்னை நான் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டேன்

Saturday, October 17, 2015

காய்தலும் நனைதலுமாய்க் கழியும் வாழ்க்கை!

- 29 -

'என்னிடம் ஓரழகான குடையிருந்தது - அதை நீ அபகரித்தாய் - நான் குடைக்கீழிருந்து வெளியேகினேன். வெயிலெனக்கு அவஸ்தையாயிற்று - சூரியன் உச்சந் தலையிற் குறியிட்டான் - அக தீ எனலாய்! ஆகாயம் இடித்து முழங்கி இறங்கிற்று - நானதில் நனையவேண்டியாயிற்று - காயம்பட்டு! நனைதலும் காய்தலும் - இன்று என் இருப்பென்றாயிற்று!'

துயரொழுகும் இக்கவிதை பிறப்பதற்குக் காரணமான நிகழ்வு நடந்து இன்று கால் நூற்றாண்டு கடந்து விட்டது. வடபுலத்திலிருந்து துரத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியான முல்லை முஸ்ரிபா என்ற கவிஞனின் பேனாவின் - ஆத்மாவின் கண்ணீர் இது!

1990ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினர் மூன்று கட்டங்களாக வடபுலத்திலிருந்து முஸ்லிம்களைத் துரத்தியடித்தனர். யாழ்ப்பாண முஸ்லிம்களை 3 மணி நேரத்தில் முதலிலும் முல்லைத் தீவு மாவட்ட மற்றும் மன்னார் - வவுனியா மாவட்ட முஸ்லிம்களை 3 தினங்களிலும் வெளியேற்றினர். மறுத்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதால் எல்லாவற்றையும் விட்டு விட்டு அவர்கள் அடம்பெயர்ந்து வந்தார்கள். 'எமது பெண்களின் பின் புறங்களில் பிரம்புகளினால் தட்டிப் பரிசோதித்தார்கள்' என்று ஒரு கவிதையில் றஷ்மி எழுதியிருந்ததைப் படித்தது ஞாகபமிருக்கிறது.

'தமிழினத்தின் நீண்ட பெருமை மிக்க வரலாற்றில் புதைந்து போன ஒரு வீர மரபு, மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது!' - வே. பிரபாகரன்

வடபுலத்து முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் யாழ். உஸ்மானியாக் கல்லூரியில்  கட்டப்பட்டிருந்த பெனரிலே காணப்பட்ட வாசகம்தான் இது. அதாவது தமது இனத்துக்கு விடுதலை கோரியப் போராடிய பிரதானப் போராட்டக் குழு, இந்தத் தேசத்தின் மற்றொரு சிறுபான்மையை வேரோடு கல்லி வீசிவிட்டுப் பேசிய பெருமை மிக்க வார்த்தை இதுதான். ஆனால் வெளியுலகுக்கு தங்களது தலைமைத்துவத்துக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயமே தெரியாது என்றுதான் பலர் ஒரு பெரும் பூசனிக்காயை ஒரு கரண்டிச் சோற்றுக்குள் மறைத்துக் கொள்ள முன்றார்கள் என்பதையும் நாம் கண்டோம்.

90,000 புத்தகங்களை எரியூட்டப்பட்ட போது பதறியடித்தவர்கள், நியாயம் பேசியவர்கள், ஒரு லட்சம் மக்கள் உடுத்திருந்த உடையோடு வெளியேற்றப்பட்ட போது மௌனித்திருந்தார்கள் என்று நண்பர் கலைவாதி கலீல் ஒரு முறை எழுதியிருந்தார். அவரும் துரத்தப்பட்ட மக்களின் ஒரு பிரதிநிதிதான்!

ஒரு மனிதனுக்கு மாறாத மன வலியைத் தரும் விடயம் ஒன்று இருக்குமென்றால் அது நிச்சயமான அவன் பிறந்து வளர்ந்த சூழலை இழக்க நேர்வதும் அவனது மண்ணை விட்டு வேறொரு மண்ணில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதுமேயாகும். அவனது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் அது பெரும் இடைவெளியை ஏற்படுத்தி அவனுடைய நிழலைப் போல அது பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்த வதையோடுதான் வடபுலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் சிதறி அகதிகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வதையோடும் தமது வாழ்நிலம் செல்லும் ஏக்கத்தோடும் அவர்கள் வாழ ஆரம்பித்து இன்று 25 வருடங்கள் கழிந்து போயிருக்கின்றன.

25 வருடங்கள் கழிந்த நிலையிலும் 30 வீதமான முஸ்லிம்களே மீள்குடியேறியுள்ளதாக அறியக் கிடைக்கிறது. மீதியாயுள்ளோரது வாழ்க்கை, காய்தலும் நனைவதுமாகவே கழிந்து கொண்டிருக்கிறது.

'தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவர்கள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கி, அவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றி, அவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான  பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,' என்கிறார் டி.எஸ்.பி.ஜெயராஜ்.

கவிஞர் யாழ் அஸீம் 'மண்ணில் வேரோடிய மனசோடு' என்று ஒரு கவிதைத் தொகுதி வெளியிட்டுள்ளார். தனது மண்ணின் மீதான பிரிவும் பரிவும் ஏக்கமும் கொண்ட கவிதைகளைக் கொண்டது அத் தொகுதி. அதில் உள்ள ஒரு கவிதையின் பகுதி இது. துரத்தியோரைப் பார்த்து அவர் கேட்கிறார்:-

'வல்லவன் அவன் எழுதும் வரலாற்றுக்கு
முற்றுப் புள்ளி நீ வைப்பதா?
நீயே அவனிட்ட காற்புள்ளி.
எனக்கென்ன முற்றுப் புள்ளி நீ வைப்பது?
உனக்கும் அவனன்றோ முற்றுப் புள்ளி வைப்பது?'

இக்கவிதை எழுதப்பட்டு 3 வருடங்கள் நிறைவுறுவதற்குள் ஒரு புள்ளி விழத்தான் செய்தது.

துரத்தப்பட்ட முஸ்லிம்களின் அகதிக் கோலம் அகற்றும் முற்றுப் புள்ளி என்று விழும் என்றுதான் காத்திருக்கிறோம்!

நன்றி - மீள்பார்வை