Monday, April 18, 2011

மௌனத்தின் புன்னகை

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் அண்மையில் ‘மௌனத்தின் புன்னகை’ என்த தலைப்பில் வானொலி நிகழ்ச்சியொன்றினை பிறை எப்.எம். வானொலி ஊடே ஒலிபரப்பியது. ஒலிபரப்பப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரதான அங்கமாக நாடகங்கள் அமைந்திருந்தன. முஸ்லிம் சமூகத்தில் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளை வெவ்வேறு கோணங்களில் இந்நாடகங்கள் படம் பிடித்துக் காட்டின. இந்நாடகங்களில் நடித்த ஒரு கலைஞன் என்ற வகையில் இது பற்றிய எனது கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நான் செவ்வி காணப்பட்டேன். இந்தச் செவ்வி ‘எங்கள் தேசம்’ பத்திரிகையின் ஏப்ரல் 15 - 30, 2011 இதழில் 13ம் பக்கம் இடம்பெற்றுள்ளது.

1. வானொலி நாடகம் இஸ்லாமிய சமூக விழுமியங்களை இலகுவாக எடுத்துக்கூறுவதற்கான காத்திரமான ஊடகம் என்பதை மௌனத்தின் புன்னகை நிகழ்ச்சியில் இடம்பெற்ற இருபது நாடகங்களும் எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளன?

எனக்குக் கிடைத்த தகவல்களின் படி அதாவது அவற்றில் நடித்த ஒரு நடிகன் என்ற வகையில் என்னோடு பேசியவர்களது கருத்துக்களின்படி பரவலான நேயர்களை இந்நாடகங்கள் கவர்ந்துள்ளன. ஒரு கதையை அல்லது கட்டுரையை அல்லது கவிதையை ஒருவர் படித்தால்தான் அது என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நீண்ட நெடுங்காலமாக நாடகங்களுக்கு மனித சமூகத்தில் பெரு வரவேற்பு இருந்து வந்திருக்கிறது. நாடகமே சினிமாவாகவும் சின்னத் திரையாகவும் மாறியிருக்கிறது. அவை எப்படி மனிதர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன என்பதை நான் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை.

வானொலி நாடகங்களுக்கு அன்று முதல் இன்று வரை இருந்து வந்த மதிப்புக் குறைந்து விடவில்லை. முஸ்லிம் வானொலி நாடகங்களுக்காக நேரம் ஒதுக்கிக் கேட்டு வந்த நேயர்களையும் அவை சமூகத்தில் உண்டு பண்ணிய தாக்கங்களையும் நான் அறிவேன். இலங்கை முஸ்லிம்கள் நாடகம் என்ற கலை வடிவத்தை மொத்தமாகக் கைவிட்டு விட்டார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. கலை வடிவங்களில் நேரடியாக மக்களைச் சென்றடையும் ஒன்றுதான் நாடகம். இதை உணராத படியால் அல்லது இது பற்றிய விழிப்பு இல்லாத படியால் நமது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெறுமனே பத்திரிகைகளில் எழுதியும் வெளியிட்டும் வருகின்றோம்.

இந்த நாடகங்கள் ஒலிபரப்பான பின்னர் ஒரு பெரிய அலை வானொலி நாடகங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தினை நேரடியாக எனக்கு உணரக் கூடியதாக இருந்தது. இந்த அலை வரவேற்பு அலை மட்டுமல்ல. அதைப் பொதுவாகத் தாக்க அலை என்றுதான் சொல்லுவேன். ஒரு பிரச்சினையைச் சுற்றிய சமூக நியாயங்களை நாம் எடுத்துக் காட்டும் போது மக்கள் கூட்டம் அதை வரவேற்கிறது. அது நியாயப் பிறழ்வு கொண்டவர்களைப் பாதிக்கவும் யோசிக்கவும் வைக்கிறது. எனவே இந்நாடகங்கள் பாரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

இந்த நாடகங்களின் அதிர்வு இன்னும் சமூகத்தில் இருப்பதை அவ்வப்போது பாராட்டி வரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் நான் உணர்கிறேன். நாடகங்கள் ஒலிப்பரப்பாகி பல வாரங்கள் சென்ற பிறகும் கூட சில நண்பர்கள் நேரில் கண்டவுடன் இதுபற்றி என்னுடன் கதைக்கிறார்கள். வேறு தேவைகளுக்காகப் பேச ஆரம்பிக்கும் நண்பர்கள் இதையும் சேர்த்தே கதைக்கிறார்கள் என்பது இந்நாடகங்கள் இன்னும் அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன என்பதற்குச் சாட்சியாகும். இதற்குப் பிறகும் இவ்வாறான நாடகங்கள் ஒலிபரப்பாகாமல் போய் விட்டாலும் இந்த இருபது நாடகங்களையும் கேட்டவர்கள் தமது வாழ்நாளில் இதை மறக்க முடியாத அனுபவமாகக் கொள்வார்கள் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்.

2. முஸ்லிம் நாடகங்களை பதினைந்து ஆண்டுகளின் பின்னர் இளம் தலைமுறையின் தயாரிப்பில் நடித்த போது நீங்கள் அவதானித்த வித்தியாசங்கள், தயாரிப்பு உத்தி மாற்றங்கள் பற்றி?

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்தான் நாடகங்கள் நடித்திருந்தோம். ஆப்போது கணினி கிடையாது. ஐந்து காபர்ன் தாள்களை வைத்து ஆறு பிரதிகள் தட்டச்சுச் செய்யப்படும். மூன்றாவது பிரதி வரைதான் தெளிவாக இருக்கும். புட்டும் படாத எழுத்துக்களைப் பார்த்துத்தான் நடித்தோம். ஒரு மணித்தியால ஒத்திகை. ஓன்றரை மணித்தியாலக் கலையக நேரத்துள் நடிக்க வேண்டியிருந்தது. இப்போது கணினி வந்து விட்டது. நடிகர் நடிகைகளுக்குத் தெளிவான பிரதிகள். துனியார் கலையகங்கள் வந்து விட்டன. ஓவ்வொரு படைப்பையும் முழு உயிர் கொடுத்து உருவாக்குவதற்கு வாய்ப்பு வந்து விட்டது. ஆனாலும் தனியார் கலையகங்களில் ஒலிப்பதிவு, செவ்விதாக்கம் செய்யும் போது காட்சிகளுக்கான பின்னணிகளை உருவாக்குவதற்குத் தயாரிப்பாளர் நிறைய உழைக்கவும் சிரமப்படவும் வேண்டியிருக்கிறது.

அக்கால நாடகங்கள் வெவ்வேறு பிரச்சினைகள் பற்றி வித்தியாசமான நபர்கள் எழுதினார்கள். ஏதோ ஒரு நாடகம் வாரத்தில் ஒரு நாள் ஒலிபரப்பாகும். ஆந்த ஒரு நாடகத்தை சரியான விதத்தில் கோணத்தில் நெறிப்படுத்த தயாரிப்பாளர் எம். அஷ்ரப் கான் அவர்கள் பட்ட சிரமங்களை நான் அறிவேன்.

ஆனால் இந்த இருபது நாடகங்களையும் பொறுத்தவரை குறித்த கருத்தை வலியுறுத்தி அதை மக்கள் முன் வெற்றிகரமாகப் படைக்க வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளர்களுக்கு இருந்தது. இங்கு கடமைக்காக அல்லாமல் கட்டாயத்துக்காக இயங்க வேண்டிய தேவை இருந்தது. எனவே ஒவ்வொரு நாடகத்தையும் விவாதித்து ஏற்ற மொழியைப் பயன்படுத்தி செய்தியோடும் ரசனையோடும் படைப்பதில் தயாரிப்பாளர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆந்த வகையில் சகோதரர்கள் எம்.சி.ரஸ்மின், ஏ.எல். ஜபீர் ஆகியோரை நான் மனந் திறந்து பாராட்டுகிறேன். சமூகத் தாக்கம் மிக்க இருபது நாடகங்களை ஒரு வாரத்துக்குள் தயாரித்தார்கள் என்றால் அதைப் பாராட்டாமல் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்காமல் இருக்க முடியுமா?

3. மௌனத்தின் புன்னகை நிகழ்ச்சியில் இடம்பெற்ற இருபது நாடகங்கள் தொடர்பான உங்களது கருத்தினை ஒரு விமர்சகர் என்ற வகையில் சொல்வதாக இருந்தால்?

எல்லா நாடகங்களும் பெண்களின் சமூக நிலை பற்றியே பேசின. ஆனால் வௌ;வேறு கோணங்களில் பிரச்சினைகளை அலசின. சுவாரஸ்யத்துடன் பேசின. பெண்கள் நிலை பற்றிப் பேசுவதே நோக்கம் என்பதால் அதில் குறை காண முடியாது. அதைச் சரியாகச் செய்தன என்பதுதான் மகிழ்ச்சி.

பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகளை நாம் எல்லோரும் தெரிந்துதான் இருக்கிறோம். ஆனால் அதற்கான தீர்வுகளைப் பற்றிக் கதைக்கவோ மாற்றங்களை ஏற்படுத்தவோ நாம் தயாராக இல்லை. இவ்வாறான மனோ நிலையை மாற்றுவதில் இப்பிரச்சினையின் பால் கவனத்தைத் திருப்புவதில் அதற் மூலம் ஆகக் குறைந்தது ஒரு சிறிய சூடு வைப்பதை இந் நாடகங்கள் செய்திருக்கின்றன என்று நான் நம்புகிறேன்.

இன்னொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்கள் பிரச்சினை வெறும் ஆணாதிக்கப் பார்வையோடுதான் எல்லோரும் பார்க்கிறார்கள், பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ஆனால் ஆண் - பெண் என்று இப்பிரச்சினை நோக்கப்படுவது போலவே பெண் - பெண் என்றும் பார்க்க வேண்டிய தேவை உண்டு. அதாவது ஆண்களின் பின்னாலும் பெண்கள் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சீதனம் என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால் சீதனம் கொடுக்காமல் மாப்பிள்ளை எடுப்பது அகௌரவம் என்று எண்ணும் மாமியார்கள் இருக்கிறார்கள். வெற்று கௌரவத்துக்காக வாழும் வாழ்க்கைகளையும் நாடகங்களில் நாம் கொண்டு வர வேண்டும்.

4. முஸ்லிம் வானொலி நாடகத்திற்கு உயிர்கொடுப்பதற்கு இளைய தலைமுறையினர் இல்லாத குறைபாட்டிற்கு யார் காரணம் என்று நினைக்கின்றீர்கள்? வானொலி நாடகத்தின் சமூதாயத்தேவையை நீங்கள் எவ்வாறு உணர்கின்றீர்கள்?

யாரையும் குற்றம் சொல்லிப் பிரயோசனம் இல்லை. எழுதுபவர்கள் சமூக மாற்றத்துக்காக எழுதுவதாகச் சொல்லுகிறார்கள். பத்திரிகை வெளியிடுபவர்கள் சமூக மாற்றம் பற்றிச் சொல்லுகிறார்கள். உண்மையான சமூக மாற்றம் பற்றி உழைதற்குத் தயாராக இருப்பவர்களுக்குக் கலையோடு சம்பந்தம் கிடையாது. அபப்டி இருக்கும் ஒரு சிலர் பொருதார நெருக்கடிகளால் அல்லல் படுகிறார்கள். சிலர் நாடகம் நடத்துவது நடிப்பது எல்லாம் அவமானத்துக்குரிய அல்லது கூத்தாடிகளின் செயல் என்பது போல் பார்க்கிறார்கள்.

இந்தியாவில் வீதி நாடகங்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளன. வீதி நாடகங்களை விடுங்கள். மேடை நாடகங்களையும் வானொலி நாடகங்களையும் வளர்த்தெடுக்கலாம். இதை யார் செய்வது எப்படிச் செய்வது என்பதுதான் நமக்குள் இருக்கும் பிரச்சினை. வுசனங்களை முறித்துப் போட்டுக் கவிதை என்ற பெயரில் கவிதை நூல்களை வெளியிட்டுக் கவிஞர்களாகக் கலைப்பணி யாற்றுவதாக மயங்கிக் கிடக்கும் இளைஞர்களை நாடகக் கலை பக்கம் இழுத்தெடுப்பது அவசியம். யாராவது செய்வார்கள் அல்லது முடிந்தவர்கள் செய்யட்டும் என்று நினைப்பது சமூக அபிமானம் அல்ல. சமூக மாற்றத்திற்கான எனது பங்களிப்பு என்ன என்று சிந்தித்தோமானால் இத்துறையில் இறங்க முடியும்.

முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது, தாம் வாழும் பிரதேசத்தின் இன உறவுகள், வாசிப்பின் முக்கியத்துவம், நமது கலை கலாசாரப் பண்பாடுகள், மனித சுயநலம், பொது நலத்துக்காக உழைப்பது, தம்மையும் தமது பிரதேசத்தையும் மேம்படுத்துவது, பிரிவுகளில் நின்றும் விடுதலை பெறுவது, ஒரு நேர்மையான வாழ்ககையை வாழ்வது, சமூகப் பிரச்சினைகளை அடையாளம் காணுவது, துணிச்சலாக நேர்மையின் பக்கம் பேசுவது என்று பல நூறு விடயங்களில் சமூகத்தில் விழிப்புணர்வை நாம் நாடகங்கள் மூலம் ஏற்படுத்த முடியும்.

ஏல்லாவற்றையும் விட முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. இயக்க நலன்களுக்கப்பால் அரசியல் நலன்களுக்கப்பால் இந்த நாடகக் குழு இயங்க வேண்டும். ஆப்போதுதான் எல்லாவற்றையும் விமர்சிக்க முடியும். கருத்துக்களைத் துணிவாக சமூகத்தின் முன் வைக்க முடியும். சுமூக மாற்றத்துக்கான கருத்துக்களை நாடகம் மூலமாக முன் வைப்பது பெரும் வெற்றி தரும் என்று நம்புவோரும் அதற்காக தன்னிச்சையற்று இயங்கும் நல்ல இளைஞர்களும் சமூகத்தின் நலனுக்காக தனது செல்வத்தில் ஒரு பகுதியை வழங்க முன்வரும் தனவந்தர்களும் ஒன்றிணைந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும். புணத்தைச் செலவிட முன்வருவோர் அதற்குப் பகரமாக விளம்பரங்களைச் செய்து கொள்ளலாம். வேவ்வேறு பொது விடயங்களுக்காகப் பணத்தை அள்ளி இறைக்கும் நமது முஸ்லிம் தனவந்தர்கள் சமூகத்துக்காக அப்பணத்தை வழங்கி பதிலாக பாரிய விளம்பர வெளிச்சத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

உண்மைக்குண்மையான சமூக மாற்றத்தை நமது சட்ட திட்டங்களுக் கிணங்க மேடையேற்றுவதற் மூலமும் வானொலி நாடகங்கள் மூலமும் நிச்சயமாக ஏற்படுத்தலாம் என்று மிக மிக உறுதியாக நான் நம்புகிறேன்.

அவ்வாறு செயல்பட ஓர் இளைஞர் கூட்டம் தயாராக இருக்குமானால் அவர்களுடன் இணைந்து செயற்பட நானும் தயாராக இருக்கிறேன்.

5. மௌனத்தின் புன்னகையில் இடம்பெற்ற இருபது நாடங்களில் நீங்கள் பதினைந்து நாடகங்களில் நடித்திருக்கின்றீர்கள். நடித்த பின்னர் உங்களுக்குள் இந்த நாடகங்கள் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தின?

இந்த நாடகங்கள் என்னை ஒரு மீளுருவாக்கம் செய்தன என்றுதான் சொல்வேன். ஒரு நாடகத்தில் நடிக்கும் கலைஞன் முதலில் அந்நாடகம் என்ன சொல்கிறது என்பதை உள்வாங்கியே ஆக வேண்டும்.அவ்வாறு கிட்டத்தட்ட பதினைந்து நாடகங்களை நான் உள்வாங்கினேன். மூன்று தினங்கள் இந்நாடகங்களில் நடிக்க வேண்டியிருந்தது. எனது சிந்தனை களில் நான்காவது நாள் ஒரு தெளிவு பிறந்தது. பெண்கள் பற்றிய விடயம் சம்பந்தமாக வெவ்வேறு கோணங்களில் என் சிந்தனை பறக்க ஆரம்பித்து.

நான் இயல்பிலேயே கலைத்துறையோடு சம்பந்தப்பட்டவனாக இருப்பதால் இந்நாடகங்கள் என்னைத் தொல்லைப் படுத்தின என்று சொல்வதே பொருத்தமாகும். கலைத்துறையோடு சம்பந்தப்பட்ட என்னிலேயே இந்நாடகங்கள் பாதிப்பு ஏற்படுத்தின என்றால் இந்நாடகங்களை ஆவலோடு ஒன்றும் விடாமல் கேட்ட நேயர்களில் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

வர்மா said...

இன்றுகாலையில்தான் முஸ்லிம் சமூகப் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை பற்றிய வானொலி நாடகங்கள் பற்றி ரஸ்மின் என்னுடன் உரையாடினார் இவைபற்றி மேலதிகதகவல்களைத்தந்ததற்கு நன்றி
அன்புடன்
வர்மா

கல்குடா றியாஸ் said...

அருமையான விளக்கம்
நன்றி சார்