Saturday, April 23, 2011

காற்றுவெளியிலிருந்து ஒரு கடிதம்

முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன்) பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் காற்றுவெளி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

அவரிடமிருந்து வந்த ஒரு வேண்டு கோள் கடிதம் இது. இதில் இரண்டு முயற்சிகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது. மறைந்த எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களை நூலாக்குவது. இது ஒரு முக்கிய பணி என்பதில் ஐயமில்லை. சிலர் இருட்டுக்குள்ளேயே இருந்து மறைந்து போயுள்ளார்கள். அவர்களைப் பற்றிய விபரங்களை எழுதி வருங்காலத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டியது நமது கடமை. நாம் அதைச் செய்தால் நமக்காக யாராவது அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபடுவார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு அமுதனுக்கு நாம் கை கொடுக்கலாம்.

மற்றது படைப்பாளிகள் பட்டியல். விருப்பமுள்ளவர்கள் அனுப்பி வைக்க முடியும். நானும் அவரும் ஒரு பட்டியலில் இருப்பதா என்ற ஈகோ உள்ளவர்கள் தம்மைப் பற்றித் தனியான புத்தகத்தைத் தாமே வெளியிட்டுக் கொள்ளலாம்.

இனி- அமுதனின் கடிதம் உங்கள் கவனத்துக்கு.....

R.MAHENDRAN,
34.REDRIFFE ROAD,
PLAISTOW,
LONDON
E13 0JX
15.04.2011

அன்புடையீர்.

வணக்கம்.

ஈழத்து இலக்கியப் பரம்பலை முன்னெடுத்துச் செல்லும் முனைப்போடு நூல் சேகரிப்பு, ஈழத்து நூல்க் கண்காட்சியினை நடாத்துதல், ஈழத்து அறிஞர்களின் வாழ்வுக் குறிப்புக்களை ஆவணப்படுத்தல் என 'காற்றுவெளி' தன் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து 'இலக்கியப் பூக்கள்' நூலை சென்ற ஆண்டு (375 பக்கங்களில்) வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் தொகுதிக்கான கட்டுரைகளை கோரியுள்ளோம். 4/5 பக்கங்கள் வரக்கூடிய வகையில் ஒரு எழுத்தாளரைப் பற்றிய கட்டுரை எழுதி அனுப்பலாம்.

ஒருவர் எத்தனை கட்டுரைகளும் அனுப்பலாம். கட்டுரை முழுத் தகவலும் அடங்கியதாக இருத்தல் வேண்டும். புகைப்படம் இணைத்திருப்பது அவசியம்.

மேலும்,

முதல் கண்காட்சியின் போது சிறியளவில் அறிமுகம் செய்ய முனைந்த எழுத்தாளர்களின் பட்டியலை இப்போது நூலாக வெளியிடவுள்ளோம். எனவே தங்களைப் பற்றிய தகவல்களைச் சுருக்கமாக(பெயர்,புனைபெயர்,பிறந்த திகதி,கல்வித் தகைமை,தொழில்,படித்த கல்வி நிறுவனங்கள், பட்டங்கள், நூல்கள்,சஞ்சிகைகள் போன்ற விபரங்களுடன் ,புகைப்படத்துடன்) எழுதி அனுப்புவதன் மூலம் நூலைச் சிறப்படைய வைக்க முடியும்.

தொடர்ந்து காற்றுவெளியுடன் இணைந்திருங்கள்.

நட்புடன் -நம்பிக்கையுடன்-

முல்லைஅமுதன்.

Email:

Mullaiamuthan_03@hotmail.co.uk

mullaiamuthan@gmail.com

http://kaatruveli-ithazh.blogspot.com/




இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Mohamed Faaique said...

நன்றி.. நல்ல தகவல்... நல்ல முயற்சி