Tuesday, July 29, 2014

ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் - அஞ்சலி!


ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் காலமானார் என்ற தகவல் சரியாக 11.30க்குக் கிடைத்தது.

நண்பர் ஸனூஸ் முகம்மத் பெரோஸ் எடுத்த அழைப்பு பெருநாள் வாழ்த்தாக இருக்குமென்றுதான் நினைத்தேன். துரதிர்ஷ்டவசமான செய்தியாக அமைந்து விட்டது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவர் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். அறிவிப்பாளர்களுக்கு இருக்க வேண்டியது மிகத் தடிப்பமான குரல் வளம் என்ற பிழையான கருத்து மிகப்பலமாக நிலவிய காலத்திலேயே அவரது குரல் மிக மென்மையானதாக இருந்தது. ஆயினும் அவருக்கென தனியே ஒரு இரசிகர் பட்டாளமே இருந்தது என்பதை அக்காலத்தில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவில் பணிசெய்த யாரும் மறுக்க மாட்டார்கள்.

பாடல்கள் கொண்ட 50 ஒலித் தகடுகளுக்குள் அவருடைய ஒலிபரப்பு இருந்ததாக அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதுவே அவருடைய பலமாகவும் இருந்திருக்கிறது.

நான் 1986ல் ஓரு பகுதி நேர அறிவிப்பாளனாக நுழைந்த போது அறிவிப்பாளராகப் பணியாற்றி முடிந்து அறிவிப்பாளர்களுக்குப் பொறுப்பதிகாரியாக அவர் பணியாற்றினார். தமிழ்த் தேசிய சேவை, வர்த்தக சேவை இரண்டுக்குமான அறிவிப்பாளர்களுக்கு அவரே பொறுப்பதிகாரி.

எனக்கும் அவருக்கும் என்றைக்குமே ஒத்துப்போனது கிடையாது. வாரத்துக்கு ஒருமுறை என்னில் அல்லது என்னுடன் தெரிவான ஏ.ஆர்எம். ஜிப்ரி, ஜவஹர் பெர்னாண்டோ ஆகியோரில் ஏதாவது ஒரு பிழை சொல்லிக் கொண்டேயிருப்பார். ஒரு வகையில் பெரும் நச்சரிப்பாகவும் அது இருந்திருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு நடந்த பகுதி நேர அறிவிப்பாளர் தேர்வில் நாங்கள் மூவருமே தெரிவு செய்யப்பட்டிருந்தோம். சில போது ஒலிபரப்பு உதவியாளர் விட்ட பிழைக்கும் எம்மிலேயே குற்றம் சொல்லுவார். நீ சரியாக இருந்தால் ஏன் பிழை போகிறது என்று கேட்பார்.

ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போய், 'இவருக்குமேல் கை வைத்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது' என்று அப்துல் ஹமீத் அவர்களிடம் முறையிட்டேன். எனது கோபத்தை ஆசுவாசப்படுத்தியவர் அப்துல் ஹமீத்.

அவர் இல்லாத இடத்தில் அவரைப் போல் மிமிக்ரி செய்து சிரித்து மகிழ்ந்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம்.

ஒவ்வொரு ஒலிபரப்பாளரோடும் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் எம்மிடம் இருக்கின்றன. ஆனால் அவை யாவற்றையும் வெளியே சொல்ல முடியாது. ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் அவர்களோடு சம்பந்தப்பட்ட அனுபவங்கள் பலருக்கு உண்டு. நாங்கள் அங்கு பணிக்குத் தேர்வாக முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மறைந்த நண்பர் கணேஷ்வரன் ஒரு போது சொன்னார்.

ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் என்றே அவரது பெயர் ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் பெயர் ஆர். எஸ். ஏ. கனகரட்ணம் என்றிருக்கும். கே. எஸ். ராஜாவைத் தெரியாதவர்கள் இல்லை. ஒரு போது ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் தனது அறிவிப்புப் பணியை முடித்து கே.எஸ். ராஜாவிடம் பணியை ஒப்படைக்கும் போது 'தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்க கே. சிவராஜா காத்திருக்கிறார்' என்று சொல்லி விட்டு ஒப்படைத்திருக்கிறார். கே.எஸ். ராஜாவுக்குத் தனதுவானொலிப் பெயரைச் சொல்லாமல் முழுப் பெயரை வானொலியில் சொன்ன கடுப்பில் வந்து அமர்ந்ததும் 'நன்றி ராஜகுரு சேனாதிபதி அன்னையா கனகரட்ணம் அவர்களே!' என்று ஒரு போடு போட்டு விட்டாராம்.

எனக்கும் அவருக்குமிடையில் இருந்த ஒரே நெருக்கக் கோடு கவிஞர் கண்ணதாசன். அவர் கண்ணதாசன் உபாசகர். நான் கண்ணதாசனின் பெரு ரசிகன்.

பாரதியார் நினைவு தினத்துக்கு நான் எழுதிய நினைவுச் சித்திரம் பெரும் தடைகள் தாண்டி ஒலிபரப்பானது. காலையில் வந்ததும் அதிகாரிகள் கூட்டத்தில் அந்த நிகழ்ச்சியில் பிழை இருக்கிறது என்று கலகப்படுத்தி விட்டிருந்தார் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். சிரேஷ்ட ஒலிபரப்பாளர்களான நடேச சர்மாவும் ராஜேஸ்வரி அக்காவும் குரல் கொடுத்த நிகழ்ச்சி அது. என்ன பிழை என்று கேட்டு அவருடன் மல்லுக்கு நின்றேன். ' ஏம்பா... கண்ணனைக் காதலானாகவும் காதலியாகவும் பார்த்தான்னு போச்சுதே... அப்படி மட்டுந்தான் பாரதி பார்த்தானா?' என்று கேட்டார். கண்ணன் பாடல்கள் எல்லாவற்றையுமா ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட முடியும் என்று கேட்ட போது, 'ஆமா... அது பிழைதான்' என்று வாதிட்டார்.

நிர்வாகத்தில் மிகவும் கறாராக நடந்து கொள்ளும் அவருக்கு ஒலிபரப்பில் எந்நேரம் தவறுகள் நேர்ந்தாலும் கண்டு பிடித்து விடும் திறமை இருந்;தது. 'இவர் வானொலி கேட்காத நேரம் எது' என்று கண்டு பிடிக்க நாம் ஒரு மாதம் அவதானம் செலுத்திய பிறகு, இரவு 7.30க்கும் 8.00 மணிக்கும் இடையில் என்று கண்டு பிடித்தோம். அவர் பம்பலப்பிட்டி கிறீன்லான்ட்ஸில் இரவு உணவு உண்ணும் நேரம்தான் அது.

பிற்காலத்தில் பலமுறை அவரை நினைத்துப் பார்த்திருக்கிறேன். அவர் அன்று பிரயோகித்த அழுத்தங்களால் நான் செம்மைப்படுத்தப்பட்டேன் என்ற உணர்வு அடிக்கடி மேலோங்கும். ஒரு வர்த்தக சேவை அறிவிப்பாளனாக இல்லாமல் (அவ்வப்போது கடமை செய்த போதும்) தேசிய சேவை அறிவிப்பாளனாக இருந்து பணி செய்து அங்கிருந்து தொலைக் காட்சிக்கும் சென்று பெயரும் புகழும் பெற்றோன் என்றால் அதில் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் ஐயாவுக்கும் பங்கிருக்கிறது என்றே நம்புகிறேன்.

இவ்வாறான ஒரு பெருநாள் தினத்தில்தான் அவர் தொழிலை விட்டுப் போகவும் நேர்ந்தது. துரதிர்ஷ்ட வசமாக நடந்து போன சம்பவத்திலும் நான் சம்பந்தப்பட்டுள்ளேன்.

Sunday, July 27, 2014

களு ஜூலி - '83


சிங்களத்தில் 'களு ஜூலி' என்று அழைக்கப்படும் 'கறுப்பு ஜூலை' என்கிற கோரத்தாண்டவம் நிகழ்ந்து 30 ஆண்டுகள் கழிந்து விட்டன.

இலங்கைத் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இந்த இன அழிப்பு நடந்த போது நான் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய மாணவனாக இருந்தேன்.

அவ்வப்போது படையினர் மீதான தாக்குதலும் தமிழ் இயக்கங்களின் மீதான மற்றும் பொதுமக்கள் மீதான படையினரின் தாக்குதலும் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்ததைப் போலவே திருநெல்வேலிச் சந்தியில் படையினர் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்ட  செய்தியும் எங்களுக்கு வந்து சேர்ந்தது.

அநேகமாகவும் யாழ். மாவட்டத்தில் வசிக்கும் ஆசிரிய மாணவ, மாணவிகள் கலாசாலைக்குத் தினமும் வந்து செல்வார்கள். தூர இடங்களைச் சேர்ந்த என்னைப் போன்றவர்கள் கலாசாலை விடுதியிலே தங்கியிருந்தோம். விடுதி ஒரு தனிக் குடும்பம், தனி உலகம். இதன் இன்பங்களும் துன்பங்களும் சொல்லிமாகாதவை. துன்பங்களையெல்லாம் இன்பங்களாக மாற்றுவதே இளைஞர்களாக இருந்த எங்கள் போக்கும் நோக்குமாக இருந்து வந்தது.

நாடே எரிந்து கொண்டிருந்தது. அதாவது தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழனும் அவனது சொத்துகக்களும் எரிந்தன. கலாசாலை காலவரையற்ற விடுமுறை அறிவித்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நாங்கள் போக்கிடம் இன்றிக் கலாசாலைக்குள் கட்டுண்டு கிடந்தோம்.

இந்தக் காலப் பகுதிக்குள்தான் '304' சீட்டாட்டமும் பீடி குடிக்கவும் நான் பழகினேன். கலாசாலைக்கு அருகே இருந்தது ஒருயொரு கடை. 'தம்பையா ஸ்டோர்ஸ்' என்ற அந்தக் கடையை நாங்கள் 'தம்பையா கடை' என்று அழைப்போம். இளம் வயதுக்காரரான தம்பையா நல்ல மனிதர். குளிர்பானம் முதல் கொப்பி வாங்குவது வரை அவரது கடைதான். பலருக்கு அங்கு 'எக்கவுண்ட்' இருந்தது.

கலாசாலை விடுதியில் இருந்த ஆசிரிய மாணவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் 'பீடி' பிடிப்பதில்லை. ஏனையோர் 'பிறிஸ்டல்' சிகரட்தான் ஊதுவார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தம்பையா கடைக்கும் பொருட்கள் வருவது நின்று போனது. அவராலும் பொருட்கொள்வனவுக்கு எங்கும் செல்ல முடியவில்லை. புகைத்துப் பழகியோருக்கு அங்கு இலகுவாகக் கிடைத்தது, சுருட்டும், பீடியும்தான்.

எமது சீட்டாட்டம் பற்றித் தனியே எழுத வேண்டும். 'கொஞ்சம் நில்லுடா... இப்ப குடுக்கிறன்பாரு... என்று சொல்லி சிகரட்டை ஓர் இழு இழுத்து ஓரமாக வைத்துவிட்டுச் சிலர் சீட்டை இழுத்து வீசும் லாவகம் இருக்கிறே.. சொல்லி வேலையில்லைப் போங்கள்!

சீட்டாட்டம், சிகரட் என்று எந்த நல்ல பழக்கமும் இல்லாத நான் சும்மா எவ்வளவு நேரத்துக்குத்தான் உட்கார்ந்து சீட்டாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது. அவ்வப்போது கெஞ்சிக் கூத்தாடி இடைக்கிடையே உட்கார்ந்து பழகிக் கொண்டேன். ஆட்டத்தைப் புரிந்து எக்ஸ்பர்ட் நிலைக்கு வந்த பிறகு பீடியையும் இழுத்துப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. இப்படியாக தம்பையா கடையில் விற்காமல் கிடந்த அத்தனை பீடியையும் வாங்கி இழுத்துத் தள்ளினோம்.

ஒருவாரம் கழிந்த பிறகு 'அரசி ஒருமூட்டையும் மாவு ஒரு மூட்டையும்தான் கைவசம் இருக்கிறது என்றுஉணவுக் கமிட்டிப் பொறுப்பாளன் தர்மலிங்கம் சொன்ன போதுதான் நிலைமை சிக்கலடைவது எமக்கு உறைத்தது. ஆண், பெண் விடுதிகளுக்குள் இருந்தவர்கள் அவ்வப்போது பக்கத்து ஊர்களில் உள்ள நண்பர்கள், உறவினர் என்று போயிருந்தாலும் ஏறக்குறைய எழுபத்தைந்து பேரளவில் எஞ்சியிருந்தோம்.

அடுத்தடுத்த தினங்களில் ஊரடங்கு அவ்வப்போது தளர்த்தப்படும் வேளைகளில் சில பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. எங்களது குழாம் அங்கிருந்து கிளம்புவது என்று முடிவுக்கு வந்தது. பெண்கள் நால்வர் ஆண்கள் அறுவர் என்று ஞாபகம். இந்தக் குழாத்தை அப்படியே அழைத்துக் கொண்டு தனது ஊரான மன்னாருக்குச் செல்லும் திட்டத்தை நண்பன் நஸார் சொன்னான். மலையகத்தைச் சேர்ந்த நஸீர், ஆரிபீன், நீலா, யோகா, நிஸா குருநாகலைச் சேர்ந்த முகம்மத், மன்னாரைச் சேர்ந்த தாஜூன்னிஸா, நஸார், ஓட்டமாவடியைச் சேர்ந்த நான் மற்றும் நண்பர் நெய்னா முகம்மத். யாருடையவாவது பெயர் விடுபட்டதா என்று இப்போது ஞாபகம் இல்லை.

Saturday, July 26, 2014

நான்தான் யூஸூஃப்!


மஹ்மூது தர்வேஷ்

எனது தந்தையே..
நான் தான் யூஸூப்!

எனது தந்தையே..
எனது சகோதரர்கள் 
என்னை விரும்புகிறார்களில்லை!

அவர்களுக்கிடையில்
நானும் ஒருவனாயிருப்பதை
அவர்கள் விரும்புகிறார்களில்லை!

அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்,
கற்களையும் சொற்களையும்
என்னை நோக்கி வீசுகிறார்கள்!

நான் மரணிக்க வேண்டும்
என்பது அவர்களது விருப்பம்,
அப்படி நடந்தால்
அவர்கள் என்னைப் புகழுவார்கள்!

உங்களது வீட்டுக் கதவை
இறுகப் பூட்டுகிறார்கள்,
என்னை வெளியில் விட்டு விட்டு!

வெளிகளிலிருந்து
என்னைத் துரத்தியடிக்கிறார்கள்!

எனது திராட்சைப் பழங்களில்
அவர்கள் நஞ்சு கலக்கிறார்கள்!

என் தந்தையே
எனது விளையாட்டுப் பொருட்களையெல்லாம்
அவர்கள் உடைத்து விட்டார்கள்
எனது தந்தையே...

எனது தலை மயிர்களில்
தென்றல் விளையாடுவதைக் கண்டு
அவர்கள் பொறாமைப்படுகிறார்கள்!

உங்கள் மீதும் என் மீதும்
அவர்கள்
வெறித்தனமாகத் தீ மூட்டுகிறார்கள்!

அவர்களிடமிருந்து
நான் எவற்றைக் களவாடினேன் தந்தையே?

எனது தோளில் 
பட்டாம்பூச்சிகள் வந்தமர்ந்தன
கோதுமை என்பக்கம் தலை சாய்ந்தது
எனது உள்ளங் கைகளில்
பறவைகள் உறங்கின..

நான் என்னதான் செய்து விட்டேன்
என் தந்தையே?
ஏன் எனக்கு இது?

நீங்கள்தான் யூஸூப் என்று
எனக்குப் பெயரிட்டீர்கள்!

அவர்கள் என்னைக்
கிணற்றில் வீசிவிட்டு
ஓநாயைக் குற்றம் சாட்டினார்கள்

ஓநாய்கள்
என் சகோதரர்களை விடவும்
கருணை மிக்கவை!

தந்தையே
பதினொரு நட்சத்திரங்களும்
சூரியனும் சந்திரனும்
என்னைச் சிரம்பணியக் கனவு கண்டேன்
என்று நான் சொன்னதில்
ஏதாவது தவறு செய்து விட்டேனா?

-தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்

Monday, July 21, 2014

நான் இஸ்ரேலை விட்டுச் செல்கிறேன்!


மிக விரைவில் நாங்கள் ஜெரூஸலத்திலிருந்து போய் விடுவோம். ஆம். நாட்டை விட்டே செல்கிறோம். நேற்று சிறார்களுக்கான சூட்கேஸ்களை வாங்கினோம். நிறைய உடுப்புக்களை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. குளிர்கால உடைகளை மட்டுமே எடுத்துச் செல்கிறோம்.

அமெரிக்காவின் இல்லினொயிஸ் மாநிலத்துக்கு அவை போதும். அங்கு வாழ்வதற்கு ஒரு சில பொருட்களே இப்போதைய தேவை. பிள்ளைகளுக்குச் சில நூல்கள் தேவை. மூன்று அரபு நூல்களும் சில ஹீப்று நூல்களும். அவை இருந்தால்தான் மொழிகளை அவர்கள் மறக்க மாட்டார்கள். நிறைய சாபமும் நிறைய அன்பும் மிகுந்த இந்த இடத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள எனது பிள்ளைகளுக்கு எது தேவை என்று நான் ஏற்கனவே சிந்தித்திருக்கவில்லை.

வருடத்தின் விடுமுறையை ஒருமாதம் கழிப்பது என்பதுதான் முதலில் உண்மையான எண்ணமாக இருந்தது. ஆனால் இனிமேல் இங்கே வாழமுடியாது என்று கடந்தவாரம் முடிக்கு வரவேண்டிவந்தது. எனவே இங்கிருந்து வெளியேற ஒரு வழிப் பயணச் சீட்டுக்களை எவ்வளவு விரைவாக எமக்குத் தரமுடியுமோ அவ்வளவு விரைவாக ஏற்பாடு செய்யும்படி பயண முகவரிடம் கேட்டுக் கொண்டேன். முதல் ஒரு மாதம் சிக்காகோவில் தரிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் எந்த இடத்தில் என்பதுதான் தெரியவில்லை. தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

எனக்கு மூன்று பிள்ளைகள். மகளுக்கு 14 வயது. இரண்டு பையன்கள். ஒருவனுக்கு வயது 9, மற்றவனுக்கு மூன்று. ஆறுவருடங்களாக மேற்கு ஜெரூஸலத்தில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். இப்பகுதியில் வாழ்ந்த ஒரே அரபுக் குடும்பம் எங்களுடையது. தனது விளையாட்டுப் பொருட்கள் இருந்த அறையில் அவற்றை உற்று நோக்கியபடியிருந்த சிறியவனிடம் 'ஏதாவது இரண்டேயிரண்டு விளையாட்டுப் பொருட்களை மட்டும் நீ எடுத்து வரலாம்' என்று ஹீப்று மொழியில் கடந்த வாரம் நாங்கள் சொன்ன போது அவன் அழ ஆரம்பித்தான். சென்றடையப் போகும் இடத்தில் தேவையானவற்றை யெல்லாம் வாங்கித் தருகிறேன் என்று அவனுக்கு சத்தியம் செய்து கொடுத்த பிறகுதான் அழுகையை நிறுத்தினான்.

எவற்றை எடுத்துச் செல்வது என்பதை நானும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. எனது புத்தக அலுமாரிக்கு அருகில் நின்று, 'இரண்டே இரண்டு புத்தகங்களை எனது வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளலாம்' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். மற்றவை தவிர்த்து மஹ்மூது தர்வேஷின் கவிதைத் தொகுதியையும் கலீல் ஜிப்ரானின் கதைத் தொகுதியையும் தேர்ந்தெடுத்தேன். எனது அநேகமான புத்தகங்கள் ஹீப்று மொழியிலானவை. எனது 14 வயதுக்குப் பிறகு அபூர்வமாகவே அரபு நூல்களை வாசித்திருக்கிறேன்.

முதன்முதலாக ஒரு நூலகத்தை நான் கண்ட போது எனக்கு வயது 14. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் பிறந்த 'திரா' கிராமத்தில் இருந்த எனது பெற்றோரின் வீட்டுக்கு எனது கணித ஆசிரியர் வந்தார். புலமைப் பரிசில் பெற்ற பி;ள்ளைகளுக்கு யூதர்கள் ஜெரூஸலத்தில் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கிறார்கள். என்னை அங்கு சேர்ப்பதற்கு விண்ணப்பித்தால் நல்லது என்று எனது தகப்பனாரிடம் சொன்னார். அது எனக்குப் பிரயோசனமளிக்கும் என்று அவர் சொன்னது இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.

நான் சேர்க்கப்பட்டேன். எனது மகளின் வயதில் வீட்டை விட்டு ஜெரூஸலத்தில் உள்ள யூதப் பாடசாலையில் சேர்ந்தேன். அது மிகவும் துன்பமானதும் கொடுமையானதுமான அனுபவம். பாடசாலை வாசலில் என்னை ஆரத் தழுவியபடி என் தந்தையார் பிரிந்த போது நான் அழுதேன்.

ஜெரூஸலத்தின் முதல் வார அனுபவம் வாழ்வின் மிக மோசமான ஒரு காலகட்டம் என்று நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நான் அங்கு வித்தியாசமானவனாயிருந்தேன். எனது உடை, எனது மொழி ஆகியன ஏனைய மாணவர்களைப் போன்றவை அல்ல. விஞ்ஞானம் முதல் பைபிள் மற்றும் இலக்கியம் வரை யாவுமே சகல வகுப்புக்களிலும் ஹீப்றுவாக இருந்தது. ஒரு சொல் தெரியாதவனாக நான் உட்கார்ந்திருந்தேன். நான் மற்றவர்களுடன் பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் அவர்கள் என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

எனவே, வீட்டுக்குத் திரும்பி ஓடிவந்து அரபு மொழியிடமும் நண்பர்களிடமும் கிராமத்திடமும் தஞ்சமடைந்து விடுவோமா என்று சிந்தித்தேன். தொலைபேசியில் தந்தையாரை அழைத்து என்னை எடுத்துச் செல்லுமாறு கேட்டு அழுதேன். இந்தக் கஷ்டமெல்லாம் ஆரம்பத்தில்தான். இன்னும் சிலமாதங்களில் அவர்களை விடவும் சிறப்பாக ஹீப்று மொழி பேசுவாய் என்று சொன்னார்.

முதலாவது வாரத்தில் எங்களது இலக்கியப் பாட ஆசிரியை Salinger எழுதிய The Catcher in the Rye என்ற நாவலை வாசிக்கும்படி சொன்னது ஞாபகமிருக்கிறது. அதுதான் நான் எனது வாழ்வில் வாசித்த முதலாவது நாவல். அதை வாசித்து முடிக்க எனக்குப் பல வாரங்கள் எடுத்தன. படித்து முடித்த போது இரண்டு விடயங்கள் எனது வாழ்வை மாற்றுவதை நான் உணர்ந்தேன். ஒன்று, ஹீப்று மொழியில் என்னால் வாசிக்க முடியும் என்பது. இரண்டாவது, நான் புத்தகங்களை நேசிக்கிறேன் என்ற ஆழமான புரிதல்.

Thursday, July 17, 2014

ஆப்கானிஸ்தானில் ஒரு தாயாகிய நான்!


Mina T.

நான் ஒரு தாய்
ஆப்கானிஸ்தானில் வாழுகிறேன்
இங்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது
மனிதாபிமானத்துக்கான எந்தவொரு உணர்வும் இல்லை
பொருத்தமான வாழ்வுணர்வும் இல்லை

பெண்கள் பற்றிய எந்தப் புரிந்துணர்வும் இல்லை
மார்ச் 8ம் திகதியால் என்னைப் போன்ற தாய்மாருக்கு
என்ன புண்ணியம்?

பருவ வயதில் ஒரு பசுமை மிக்க வாழ்வு
முன்னோக்கி வருவதாக எண்ணினேன்
ஒரு தாயான பிறகு
எனது வாழ்க்கைத் துணையை
யுத்தத்துக்குக் காவு கொடுத்தேன்!

அன்றைய தினம்
என் உடல் முழுக்க
வெண்பனி போர்த்திக் கிடந்தது
இருபத்தைந்தாவது வயதில்
அடர்ந்த கருத்த எனது கூந்தல் 
மணப்பெண்ணின் நீளாடை போலும் 
வெண்பனிபோலும் வெண்மையாயிற்று!

வருத்தங்களுடனே வாழ்க்கை கடந்தது
குளிராக... இன்று வரை கடும் குளிராக..
என் அன்புக் கணவர் மறைந்து போனபோதும்
அவரது குரல் ஒலித்துக் கொண்டிருகிறது..
அவர் சொன்னார்...
'நான் போய் விட்டேன்...
உனது சிறகுகள் உடைக்கப்பட்டிருக்கின்றன..
ஆனால் நீ உயிருடன் இருக்க வேண்டும்...'

எனது உடற்  சூடாக அவரை உணர்ந்தேன்
எனது உடம்புக்குள் பிறக்காத எனது மகன்
அவனைப் பாதுகாக்கும்படி 
அவரது குரல் எனக்குச் சொன்னது.

இப்போது எனது மகன்
ஓர் இராணுவ வீரன்
எமது மண்ணைப் பாதுகாக்க
அவன் முயற்சிக்கிறான்
எங்களைப் பாதுகாக்கும் இராணுவமொன்று
இருப்பதை எதிரிகள் விரும்பவில்லை
நாங்கள அடையாளமற்றவர்களாக
இருக்கவேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்!

எமது இராணுவத்தினர் இறப்பதை 
ஒவ்வொரு தினமும்
ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும்
நாங்கள் காண்கிறோம்
குனார் காஸியாபாத்தில்
இருபது தாய்மார் 
தங்கள் புதல்வர்களை இழந்தனர்
இராணுவ உடை
வெண்பனிபோல் நிறம்மாறி வந்தது
வெண்பனி அத்தாய்மாரைச் சூழ்ந்தது!

வெண்பனி இறங்குகிறது
எமது இதயங்களையும் குடும்பங்களையும்
அது ஊடுருவுகிறது
எமது உடைந்த மதில்களையும் யன்னல்களையும்
எமது இதயங்களையும் வெளிச்சப்படுத்துகிறது
என்னையும் மற்றவர்களையும்
அது சூழ்ந்து கொள்கிறது!

நான் ஓர் ஆப்கானிய ஏழைத்தாய்!

எனது உடல் கூனி விட்டது
எனது இதயம் குளிராகியும் கோபத்தில் இருக்கிறது!
எனது தலை முடி வெண்மையாகி விட்டது!

என்னைப் போன்ற தாய்மாரை மறந்தவர்களை
நான் ஒரு போதும் மன்னிக்க மாட்டேன்
எங்களது உரிமைகளை வைத்துப் 
பிழைப்பு நடத்துவோரை மன்னிக்க மாட்டேன்
எமது வாழ்வுரிமையிலும் பாதுகாப்பு நலனிலும்
அக்கறை கொள்ளாத எவரையும் மன்னிக்க மாட்டேன்
எங்களைப் புறந்தள்ளிவிட்டுக் 
கடந்து செல்லும் யாரையும் மன்னிக்க மாட்டேன்
எமது பிள்ளைகளின் உயிரையும்
எமது வாழ்க்கையையும் வணிகச் சரக்காக்கிய
யாரையும் மன்னிக்க மாட்டேன்
கொலையாளிகளின் சகோதரர்கள் என்று
எமது பிள்ளைகளை அழைத்த
எவரையும் மன்னிக்க மாட்டேன்

நெல்சன் மண்டேலாவின் பெரிய இதயத்தைப் போல
ஓர் இதயம் என்னிடம் இல்லை!
நான் ஒரு சாதாரண ஆப்கானியப் பெண்!

வெண்பனிபோன்ற பொறுமையுடன்
நானும் என்னைப் போன்ற தாய்மாரும்
ஒரு பசுமையான வாழ்க்கையை
எதிர்பார்த்திருக்கிறோம்!

Wednesday, July 16, 2014

பெத்லஹேம் லூஸியாவின் கதை!


முகம்மத் குத்ர்

எனது பெயர் லூஸியா. நான் பலஸ்தீனக் கிறிஸ்தவப் பெண். நான் ஐந்து குழந்தைகளின் தாய். மூத்ததின் வயது 17. இளையதின் வயது 5. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அமைதியின் நகர் எனவும் அமைதி அரசரின் நகரம் எனவும் புகழ் பெற்ற பெத்தலஹேம் நகரில் வசித்து வருகிறேன்.

எனது கணவரான மைக்கேல் ஒரு நல்ல மனிதர். நல்ல கணவர். மட்டுமன்றி ஒரு நல்ல தந்தையாகவும் இருந்தார்;. தச்சுத் தொழிலில் ஈடுபட்டுக் கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். மிகச் சிக்கலான காலப் பிரிவிலும் அமைதிக்காக உழைத்ததோடு மாத்திரமின்றி மனித குலத்தின் பாவங்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த யேசு பிரான் ஒரு தச்சுத் தொழிலாளியாக இருந்தார் என்பதை அவர் அதிகம் விரும்புகிறவராக இருந்தார். இங்கு பிரச்சினைகள்; நிறைந்த போதிலும் எப்போதும் யேசு பிரான் புனிதராகவே எங்களது புனித பூமியில் மதிக்கப்பட்டார். ‘ஷெல்’களும் துப்பாக்கி ரவைகளும் கொண்டு இஸ்ரேலியப் படையினர் எமது பகுதியைத் தாக்க ஆரம்பித்து விட்டால், மைக்கேல் பைபிளைக் கையிலெடுத்துக் கொண்டு அவசர அவசரமாக எங்களை ஒன்று கூட்டி விடுவார். நாம் எல்லோரும் இணைந்து பிரார்த்திப்போம்.

இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதும் பலமாகச் சிரிப்பதும் வசைமொழிகளால் எங்களைத் தூஷிப்பதும் அடிக்கடி எங்களது காதில் விழும், யூதரல்லாதோரை அவர்கள் மிக்க இழிவானவர்கள் என்று கருதுகிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் எனது மைக்கேலை இழந்தேன். சுகவீனமுற்ற தனது தாயைப் பார்ப்பதற்காக ஜெரூஸலத்தினூடாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது அவரை ஒரு யூதக் குடியேற்றவாசி சுட்டுக் கொன்று விட்டான். அன்றிலிருந்து கடும் வேலை, பசி, நோய், பட்டினி இவற்றைத் தவிர வேறு எதையும் நான் அறியமாட்டேன். எனது பிள்ளைகளுக்கு உணவுக்காகவும், உடைகளுக்காகவும் மருத்துவத் தேவைகளுக்காகவும், பாடசாலைக்குத் தேவையானவற்றை வாங்குவதற்காகவும் என்னிடமிருந்த பெறுமதியுள்ள அனைத்தையும் விற்றுத் தீர்த்து விட்டேன். என்னிடம் தொழில் நுட்ப அறிவோ பயிற்சியோ கிடையாது. ஆனால் வீடுகளைச் சுத்தம் செய்யத் தெரியும். எனவே எமது அயலவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணிப் பெண்ணாக மாறிவிட்டேன்.

எனது அயலவர்களும் என்னைப் போன்றே கஷ்டப்படுபவர்கள் தாம். ஆனாலும் இன்று வரை உணவு, உடை, பணம் என அவர்கள் தான் எனக்கு உதவுகிறார்கள். எனது வேலை கடுமையானதும் என்னை எனது பிள்ளைகளிடமிருந்து தூரப்படுத்துவதுமாக இருக்கிறது. கவலையுடன் அவர்களைப் பிரிந்து நான் உழைக்க வேண்டிருக்கிறது. மைக்கேல் சொல்வதை நான் இன்று வரை ஞாபகப் படுத்திக் கொள்கி றேன். அவர் சொல்வார், ‘பரவாயில்லை... கிறிஸ்து எம்முடன் இருக்கிறார்... அவர் எங்களைப் பார்த்துக் கொள்வார்...’ நான் எனது சகோத ரிக்கு நன்றியுடையவளாக இருக்க வேண்டும். அவள் எனக்காக தனது பாடசாலைப் படிப்பைக் கைவிட்டு எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கிறாள். அவளை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும்.

எனது உடற் பாரமும் அளவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தினமும் மிகவும் களைப்படைந்து கொண்டே வருகிறேன். எனது இளைய இரண்டு பிள்ளைகளும் நீண்ட நாட்களாக இருமல் மற்றும் ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அதனால் அடிக்கடி முழு இரவும் நான் விழித்திருக்க வேண்டியவளாயிருக்கிறேன். இது மிகவும் சிரமமான ஒரு வழக்கமாக மாறி விட்டது. ஆனால் எனக்குள்ள ஒரே ஒரு ஆறுதல் எனது முஸ்லிம் அயலவர்கள்தான். அவர்கள் எனது வீட்டைச் சுத்தம் செய்தும் கழுவி யும் தருகிறார்கள். அடிக்கடி உணவு சமைத்தும் தருவதுண்டு.

சேர்ச்சுக்குப் போகும் அளவுக்கு எனது உடலில் சக்தி கிடை யாது. ஆனால் போதகர் இப்பக்கம் வருவதுண்டு. ஓர் இரவு நான் வீடு ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போது துப்பாக்கிச் சத்தமும் அதைத் தொடர்ந்து பாரியதொரு குண்டு வெடிச் சத்தமும் கேட்டது. எனது இதயமே ஒரு கணம் நின்று விட்டது. நான் கிட்டத்தட்ட மூர்ச்சையாகும் நிலையை அடைந்து விட்டேன். ‘ஆண்டவரே.... அது எனது பிள்ளைகளாக இருக்கக் கூடாது.... எனது பிள்ளைகளாக இருக்கக் கூடாது...’ என்று என்னையறியாமல் சொல்லிக் கொண்டேயிருந்தேன். நான் எப்படி ஓடினேன் என்று எனக்கே தெரியாது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் ஓடினேன். எப்படியோ எனது வீடுவரை வந்து சேரக் கூடிய பலத்தை வரவழைத்துக் கொண் டேன். ‘ஓ... யேசு பிரானே.... எல்லாம் வல்ல ஆண்டவரே.....’

Friday, July 11, 2014

ஹைஃபாவுக்குத் திரும்புதல்


(1948ல் துரத்தப்பட்ட பலஸ்தீனர்கள்)

அலா அபூதீர்

மேற்குக் கரை நகரான நப்லஸில் உள்ள அயற்புறத்தில் மிக நீண்ட காலமாக நாங்கள் வசித்து வந்தோம். அன்பும், எளிமையும், வறுமையும் கொண்ட வாழ்க்கை. இருந்த போதும் எமது நிலத்தின் மீதிருந்த நேசமும் அங்கு வாழ்ந்த மக்களுக்கிடையிலான உறவும் மிகவும் ஆழ வேரூன்றியிருந்தது. பாரம்பரியப் பண்புகளையும் கலாசாரத்தையும் எந்தவொரு நிலையிலும் இழந்து விடாமல் அங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர்.

நான் பிறந்து வளர்ந்தது மற்றும் எனது சிறுபராயம் கழிந்தது எல்லாம் ஷெய்க் முஸல்லம் என்ற இந்தப் பழம்பெருங் குடியிருப்பில்தான். அந்தப் பிரதேசத்தின் வாழ்வின் ஞாபகங்களும் கதைகளும் மரணிக்கும் வரை நினைவை விட்டு அகலாதவை. குறிப்பாக எமது அயலில் வசித்த அபபூஅலாபத்தின் கதை எனது நெஞ்சைத் தொட்ட ஒரு கதையாகும்.

அபூ அலாபத் அங்கே ஓர் அகதியாகத்தான் வாழ்ந்தார். ஏனென்றால் அவரது சொந்த நகரான ஹைஃபாவிலிருந்து அவரைத் துரத்தி விட்டிருந்தார்கள். ஹைஃபாவைப் பற்றிப் பேசுவதை அவரால் ஒரு போதும் நிறுத்த முடியவில்லை. அழகு மிக்க ஹைஃபா நகரில் பிறந்து வளர்ந்த ஒருவரால் அவரது இளமை நினைவுகளை மீட்டாமல் எப்படித்தான் இருக்க முடியும்?

எமது அயலில் உள்ள ஓர் அறை கொண்ட வீட்டில் மனைவி, பிள்ளைகளுடன் அபூ அலாபத் வாழ்ந்து வந்தார். பலஸ்தீனின் சிரமம் மிக்க வாழ்நிலை பற்றி அவர் அடிக்கடி எங்களுடன் கதைத்துக் கொண்டிருப்பார். 1948ம் ஆண்டு அவர் ஹைஃபாவிலிருந்து துரத்தியடிக்கப்படு முன்னர் மளிகைக் கடையாளராக வாழ்ந்திருந்தார்.

70களில் என்று நினைக்கிறேன். பல்வேறு சிறு பொருட்கள் கொண்ட ஒரு பழைய தள்ளுவண்டியைக் குறுகலான ஒழுங்கைகளுடாக அவர் மிகவும் சிரமப்பட்டுத் தள்ளிச் சென்று வியாபாரம் செய்து கிடைப்பவற்றில் தனது பிள்ளைகளுக்கு ரொட்டி வாங்கிச் செல்வது எனக்கு ஞாபகமிருக்கிறது. அவர் வயது முதிர்ந்தவர் மட்டுமன்றித் தீராத நோயாளியாகவும் இருந்தார்.

அக்கைவண்டியை அவரும் அவரது பிள்ளைகளும் தள்ளிக் கொண்டு பாதைகளுடாகச் செல்கையில் அவரது உற்சாகத்தையும் வாய் நிறைந்த சிரிப்பையும் கண்டிருக்கிறேன். அவரது குடும்ப வராலற்றில் அது ஒரு முக்கியமான திருப்பம்தான். அவர் ஹைஃபாவுக்குத் திரும்பிச் செல்லும் கனவில் அவ்வப்போது ஆழ்ந்து விடுவார்.

‘ஹைஃபா’தான் உலகத்திலேயே மிக அழகான நகரம் என்று தனது பேச்சுக்கிடையே அவர் அடிக்கடி சொல்வதுண்டு. அவர் ஹைஃபாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு முப்பதாண்டு கழிந்த போதிலும் தனது அயலவர்கள், வீதிகள், சந்தைகள் என்று சகல விபரங்களும் அவருக்கு ஞாபகம் இருந்தது. அவரால் ஒரு போதும் மறக்க முடியாதிருந்தது ஹைஃபாவில் அமைந்திருந்த அல்ஹம்றா சினிமாக் கொட்டகைதான். அது மட்டுமன்றி அக்காலத்தில் மிக முக்கியமான பலஸ்தீன நகரங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ஹைஃபாவும் அதன் கலாசார அம்சங்களும் அவர் நினைவில் இருந்தன.

அடிக்கடி எமது சிறிய கடைக்கு வந்திருந்து தனது நினைவுகளை மீட்டிக் கொண்டிருப்பார் அபூ அலாபத்.  யாஃபாவில் பிறந்த எனது தந்தையும் அபூ அலாபத்தைப் போல துரத்தியடிக்கப்பட்டவர்தான். இருவரும் தமது நினைவுகளை மீட்டிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அல் ஹம்றா சினிமாக் கொட்டகையில் பரீட் அல் அத்ராஸ், முகம்மத் அப்துல் வஹாப் போன்ற எகிப்தியக் கலைஞர்களின் படங்களைப் பார்த்து ரசித்ததை அவரால் மறக்க முடியாதிருந்தது. அயலவர்கள் அவர் சொல்லும் சினிமாக் கதைகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்களே தவிர, அதனால் அலுப்புக் கொண்டதில்லை. காரணம் அவருக்கு அங்கு மிக்க கண்ணியம் இருந்தது. மக்கள் அவரை மிகவும் கனம் பண்ணினார்கள்.

அபூஅலாபத் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரம் தனது வீட்டில் உள்ள அனைவரையும் அமைதி காக்கக் கோருவார். அதுதான் அவர் லண்டன் பிபிசியின் செய்திகளைக்கேட்கும் நேரம். எந்த இக்கட்டுக்குள்ளும் இந்த நேரத்தை ஒரு புனிதமான நேரம் போல் அவர் கருதுவதுண்டு. செய்தித் தகவல்களை அவரிடமிருந்து அனைவரும் அறிந்து கொள்வார்கள். 1967ல் கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறுவது பற்றிய பேச்சுவார்த்தை, சர்வதேச அமைதிக்கான மாநாடு, ஹென்றி கீசிங்கருக்கும் அமெரிக்க முக்கியஸ்தருக்குமிடையிலாக கலந்துரையாடல், லெபனானின் மீதான ஆக்கிரமிப்பு என்று பல்வேறு தகவல்களை அவரிடமிருந்து அறிய முடியும்.

செய்திகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர் தனக்குள்ளே பேசிக் கொள்வதும் யாருக்கோ திட்டுவதுமாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன். ஹைஃபாவுக்கு மீண்டும் செல்லும் தனது கனவு நனவாகும் வகையில் ஒரு செய்தி வராதா என்ற எதிர்பார்ப்பு அவரை முழுக்க ஆட்கொண்டிருந்தது. அப்படி வாய்க்குமானால் அங்கு நின்று பரந்த கடலை ரசிக்க அவரால் முடியும். அல்கார்மல் மலைகளைப் பார்க்க முடியும். அல்ஹதார் குடியிருப்புப் பிரதேசத்துக்கும் அல்ஹம்றா சினிமாக் கொட்டகைக்கும் செல்ல முடியும். அவரது பால்ய காலத்தை மீட்டியபடி தனது சொந்தச் சுவர்க்கத்தில் நுழைய முடியும்.


ஹைஃபா

தினமும் செய்திகள் முடிந்ததும் எனக்குமிகவும் நிம்மதியாக இருக்கும். காரணம் செய்தி வாசிப்பவர் பழைய செய்திகளையே இழுத்து இழுத்து வாசிப்பதுதான். ஒரு நாள் அபூ அலாபத்திடம் கேட்டேன்:- “நீங்கள் ஏன் ஹைஃபாவுக்குப் போகக் கூடாது? நகரிலிருந்து டெல் அவிவுக்கும் ஹைஃபாவுக்கும் வாகனங்கள் போகத்தானே செய்கின்றன?”

அந்த வாகனங்களை இன்னும் என் நினைவில் இருக்கின்றன. அந்த நாட்களில் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு எவ்வித அனுமதியும் தேவைப்படவில்லை. வாகனச் சாரதிகள் “ஹைஃபா... டெல் அவிவ்... யாஃபா...!” என்று கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருப்பார்கள். நப்லஸக்கும் இஸரேலிய நகரங்களுக்குமிடையில் இஸ்ரவேலர்களின் சோதனைச் சாவடிகளும் அப்போது கிடையாது.

அபூ அலாபத் சொன்னார்:- “அங்கு போவது சிரமமானது!”

என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பாதைகள் திறந்திருக்கின்றன, வாகனங்கள் சென்று வருகின்றன, நப்லஸிலிருந்து ஹைஃபாவுக்கு இரண்டே இரண்டு மணித்தியாலப் பயணத் தூரம்தான், அப்படியிருக்கும் போது இவரால் ஏன் செல்ல முடியாது? வாய் திறந்தால் ஹைஃபா பற்றியே பேசிக் கொண்டிருக்கும் இந்த மனிதருக்குத் தனது சொந்த நகரைப் பல ஆண்டுகளுக்குப் பின் சென்று பார்த்து வர முடியுமல்லவா?

அடிக்கடி மனிதர்கள் கனவுகளில் திழைக்கிறார்கள். நிதர்சனத்திலிருந்து விலகிக் கனவில் வாழ்வதையே விரும்புகிறார்கள். கனவுகள் மெய்யாவதிலிருந்து விலகி நிற்க எல்லா வழிகளிலும் முயல்கிறார்கள். தங்களது ஞாபகங்களை நினைவுகளாக இதயத்தில் சேர்த்து வைக்க விரும்புகிறார்களே ஒழிய பூமியில் பதிக்க விரும்புவதில்லை. பூமியில் பதித்து விட்டால் அதன் கீர்த்தி அழிந்து விடும்.

இனிமேலும் பலஸ்தீனுக்குச் சொந்தமில்லாமல் போய்விட்ட, தனக்குச் சொந்தமற்றதாக ஆகிவிட்ட நகரைக் காணும் போது தனது கனவு சிதைந்து விடும் என்று அவர் பயப்பட்டார். அந்த உண்மையும் வேதனையும் அவரைக் கொன்று விடும் என்று அவர் கலக்கமடைந்தார். எனவே ஹைஃபாவின் அழகு அன்று எப்படியிருந்ததோ அதே போல் மாறாமல் நினைவில் இருக்கட்டும் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும்.

ஆண்டுகள் கழிந்தன... மறக்கப்பட்ட எங்கள் பிரதேசத்தில் எந்தவித மாற்றங்களும் நிகழ்ந்திருக்கவில்லை.

ஒரு நாள் அபூ அலாபத்தின் மகன் தனது தந்தையைத் தேடி எமது கடைக்கு வந்தான். காலையிலிருந்து தந்தையாரைக் காணவில்லை என்றான். நாங்களும் அவரை எங்கும் தேடினோம். ஆனால் ஆள் அகப்படவேயில்லை.

மூன்றாம் நாள் நப்லஸ் பொலிஸ் நினையத்திலிருந்து ஒரு பொலிஸ்காரன் எமது பகுதிக்கு வந்தான். ஒரு அடையாள அட்டையை எனது தந்தையாரிடம் காண்பித்து, “இவரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

“ஆம்! எமது அயலவர்தான்.. எனது நண்பரும் கூட! மூன்று தினங்களாக அவரை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்று எனது தந்தை அவனிடம் சொன்னார்.

“அவருடைய மகனை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வாருங்கள்!” - பொலிஸ்காரன் சொல்லிவிட்டுச் சென்றான்.

பொலிஸ் நிலையத்தில் அபூ அலாபத்தின் புதல்வர்களிடம் பொலிஸார் சொன்னார்கள்:-

“இது உங்கள் தந்தையாரின் அடையான அட்டை. நீங்கள் ரம்பாம் வைத்தியசாலைக்குச் சென்று அவரது உடலைப் பெற்றுக் கொள்ளுங்கள்!”

வைத்திய அறிக்கைக் குறிப்பில் பின்வருமாறு காணப்பட்டது...

“இந்த அடையாள அட்டைக்குரிய நபர் ஹைஃபா வீதியில் நடந்து கொண்டிருந்தபோது மாரடைப்பினால் காலமானார்!”

பல ஆண்டுகள் நப்லஸில் வித்தியாசமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த அபூ அலாபத் தனது பால்ய நினைவுகளும் ஞாபகங்களும் ததும்பி வழியும் ஹைஃபாவைக் காணச் சென்றிருக்கிறார். ஹைஃபாவைப் பற்றியே சதாவும் எண்ணிக் கொண்டிருந்த இம்மனிதன் பிறந்த ஊரிலேயே மரணிக்கட்டும் என்பது இறைவனின் விருப்பமாக இருக்கலாம்.

ஹைஃபாவை அவரால் மரணம் வரை மறக்க முடியவில்லை. ஒருவரின் ஆத்மாவிலும் இதயத்திலும் ஒன்றிப் போன ஒன்றை எப்படி மறக்க முடியும்? தனது கூட்டுக்குத் திரும்ப விரும்பும் புறாவைப் போலச் சிறகடித்து ஹைஃபாவையே எண்ணித் துடித்த அவரது இதயம் இந்த உலகத்தை விட்டுச் சென்று விட்டது.




Thursday, July 10, 2014

பலஸ்தீனம் விடுதலையாகும்!



மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

பலஸ்தீன் விடுதலையாகும்
இஸ்ரவேலர்கள் எவ்வளவு முயன்றாலும்
பலஸ்தீனத்தை அவர்களால்
வெல்ல முடியாது
நாம் அதனுடன் ஒன்றியிருக்கிறோம்
கற்கள் கொண்டே போராடுவோம்
ஒரு போதும் பலஸ்தீனைக் 
கைநழுவ விடமாட்டோம்!

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

யுத்தம், வருத்தம் மற்றும்
சோதனைச் சாவடிகளற்று
அது விடுதலையாகும்!
இஸ்ரவேல் எழுப்பிய மதில்
ஒரு நாள் விழும்
நொறுங்கித் தூசாகும்
துயரமோ, 
இழந்த வீடகள் பற்றிய கவலையோ
இருக்காது!

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

எமது நிலத்தை மீளப் பெறுவோம்
ஒலிவ் மரங்கள், மலைகள் மற்றும்
எவற்றைக் கொண்டிருந்தோமோ
அவையனைத்தையும் மீளப்பெறுவோம்!
எமதுகடலை, நகரங்களை
மீள அடைவோம்
இஸ்ரவேலியர் எதைச் செய்தாலும்
பரவாயில்லை
நாங்கள் ஒன்றிணைந்து
அமைதியை மீண்டும் கொணர்வோம்!

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

அழுத்தம், தலைவலி,
இன்னும் இதுபோன்ற எல்லாச்
சிக்கல்களிலிருந்தும் விடுதலையாவோம்
என்னனால் புரிந்து கொள்ள முடியாதிருப்பது
இவ்வளவு வெறுப்பு ஏன் என்பதையே
உள்ளதைப் பகிர்ந்து
நாம் ஏன் ஒன்றாக வாழ முடியாது?
எப்படிப் பகிர்வதென்று
சிலர் புரிந்து கொள்ளாதிருக்கிறார்கள்
புரிந்து கொண்டால்
ஒரு யுத்தம் இருக்காது என்பதை
அவர்கள் அறிவார்கள்

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

எவ்வளவுதான் கொடுமைப் படுத்தினாலும்
விலக்கி நடந்தாலும்
நாங்கள் வெல்வோம்! விடுதலையாவோம்!!

ஒரேயொரு பலஸ்தீன்!

நீங்கள் நிகழ்த்தவுள்ள
மிகப் பெரும் படுகொலைகளுக்கு முன்பு
சிறவர்கள் பாடலிசைப்பர் -
‘சுதந்திர பலஸ்தீன்” பற்றி
காலத்தைப் பின்னோக்கிச் சென்று
ய+தர்களாகிய உங்களுக்கு  
நடந்தது என்ன என்று பாருங்கள்!

பலஸ்தீனை விடுதலையாக்குவோம்
நீங்கள் விரும்பினாலும் சரி,
விரும்பாவிட்டாலும் சரியே!

- JEANINE SWALIM