Thursday, May 5, 2011

நீங்க நினைச்சா நடக்காதா?

இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு இதுவரை எழுதப்படவில்லை.

தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட சில கட்டுரைகளும் நண்பர் என்ற வகையில் சிலரைப் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளும் சில சிறப்பு மலர்களில் இடம் பெற்றுள்ளன.

பத்திரிகைகள், சஞ்சிகைகளில் ஆங்காங்கு அவ்வப்போது சிற்சில குறிப்புகள் உள்ளனவே தவிர அவை ஒருமுகப்படுத்தப்படவில்லை.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய வரலாற்றினை ஒரு நூலாக எழுதி வெளியிட்டு விட வேண்டும் என்று 2002ம் ஆண்டு எமது எண்ணத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் போது ஒரு முயற்சியை மேற்கொண்டோம்.

அதை எழுதும் பொறுப்பை மூத்த எழுத்தாளரும் சிறந்த ஆய்வாளருமான கவிஞர் ஏ.இக்பால் அவர்களிடம் ஒப்படைத்திருந்தோம்.

இது ஒரு பாரிய பொறுப்பு. குறுகிய கால அவகாசத்துள் அதைச் செய்து முடிக்க முடியவில்லை. அதன் முதலாம் அத்தியாத்தை அவர் எழுதியிருந்தார். அதனை எப்படியாவது பூரணப்படுத்தி நூலாகக் கொண்டு வர வேண்டும் என்பதால் அந்த அத்தியாயத்தை நாம் வெளிக் கொணரவில்லை.

இஸ்லாமிய தமிழ் இலக்கியம் இன்று ஒரு வெற்றுக் கொண்டாட்டத்துக்கான விடயமாகவும் சிலர் தமக்கொரு கனவான் தனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களைக் கூட்டும் ஒரு காணிவேல் ஆகவும் மாறிக் கொண்டு வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே இந்நிலையிலிருந்து சற்று மாறுபட்டுச் செய்தாக வேண்டிய முயற்சிகளில் இறங்குவது அவசியம் என்று கருதுகிறோம்.

இந்த முயற்சியை எமது இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் மீண்டும் ஆரம்பிக்கின்றது. கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் தலைமையில் இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய வராற்றினை எழுதுவதற்கான ஏற்பாடுகளை நாம் ஆரம்பம் செய்திருக்கிறோம்.

இதனை எழுதுவதற்கு கவிஞர் ஏ. இக்பால் அவர்களே மிகவும் பொருத்தமான நபர் என்று நாம் அன்றும் நம்பினோம். இன்றும் நம்புகிறோம்.



இந்த விடயம் சம்பந்தமாக இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன், உப தலைவர் கவிஞர் அல் அசூமத் ஆகியோருடன் செயலாளரான அடியேனும் இன்று கவிஞர் ஏ.இக்பால் அவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையானோம்.


இம்முயற்சியில் ஈடுபடுவதற்கு கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் மகிழ்ச்சியுடன் உடன்பட்டுள்ளார்.

இந்த நூலை எழுதுவதற்கு இலங்கை வாழும் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் கோரி நிற்கிறோம். உங்களுக்குத் தெரிந்த இஸ்லாமிய இலக்கியம் படைத்த இலக்கியவாதிகள், உங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழில் எழுதிய, எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்கள், அவர்களது படைப்புகள் பற்றிய குறிப்புக்களை எமக்கு எழுதியனுப்புங்கள்.

ஒரு மேலதிகமான தகவல் இடம்பெறுவதில் தவறு இல்லை. ஆனால் இடம் பெறவேண்டிய முக்கியமான ஒரு தகவலோ ஒரு நபரைப் பற்றிய விபரமோ தவற விடப்படக் கூடாது என்று நாம் பெரிதும் விரும்புகிறோம்.

நாம் எப்போதும் இறுதி நேரம்வரை காத்திருக்கும் மனிதர்களாகவும் நாளை செய்வோம் என்று பிற்படுத்தி விட்டு மறந்த போகும் மனிதர்களாகவும் உள்ளோம். காலத்தைத் தவற விட்டு விட்டு முயற்சியில் ஈடுபடுவோரைக் குறை சொல்லும் பழக்கம் நம்மில் சிலருக்கு உண்டு.

எனவே, எல்லா வகையான பேதங்களையும் மறந்து இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எவ்வளவு விரைவாகத் தகவல்கள் கிடைக்கின்றனவோ அவ்வளவு விரைவில் நூல் வெளிவரும் சாத்தியம் உண்டு.

மேலதிக விபரங்களைத் தெரிந்து கொள்ள 0112730378 என்ற இலக்கத்தில் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனையும் 0777 303 818 என்ற எண்ணில் என்னையும் தொடர்பு கொள்ள முடியும்.

நேரடியாகத் தகவல்களை அனுப்ப விரும்புவோர் பின்வரும் முகவரிக்குத் தபாலில் அனுப்பி வைக்கலாம்.

DR. Jinnah Sherifudeen, 16, School Avenue, Off Station Road, DEHIWALA

ஞாபகம் வைத்திருங்கள். வெறுங் கொண்டாட்டங்களும் விழாக்களும் அன்றைய பூமாலைகளைப் போலவே மடிந்து விடும். பதிவில் இருக்கும் எழுத்து மட்டுமே காலங் காலமாக நின்று பேசும்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Shaifa Begum said...

”பதிவில் இருக்கும் எழுத்து மட்டுமே காலங் காலமாக நின்று பேசும்”. நல்லதொரு முயற்சி..
சிரத்தையுடன் இதற்காக உழைக்க முன் வந்திருக்கும் உறவுகளுக்கும் இறைவன்
அருள் கிட்டட்டும்..தொடரும் பணிக்கு வாழ்த்துக்கள்..நினச்சா நடக்காததது எதுவுமே இல்லை.