Saturday, May 7, 2011

தலைப்புகள் ஜாக்கிரதை!

மாதமொரு முறை ஒரு பத்தி எழுதும்படி எனக்கு அறிமுகமான ஓர் இலக்கிய இளவல் என்னைக் கேட்டுக் கொண்டார்.

அந்தப் பத்திரிகை ஓர் அமைப்பினால் வெளியிடப்படுகிறது. இளவலுக்கு இலக்கியப் பக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. முஸ்லிம் சமூகம், இஸ்லாம் என்றெல்லாம் எழுத வேண்டிய அவசியம் இல்லையென்றும் பொதுவாக இலக்கியம் பற்றி எழுதுமாறும் கேட்டுக் கொண்டார்.

ஒரே நேர் கோட்டில் பத்திகளை எழுத முடியாது. வாசகர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிடும். எனவே எனது முதலாவது பத்தியை ‘சுனாமி’ என்ற தலைப்பில் எழுதினேன். பத்தித் தொடருக்கு வேறு ஒரு வித்தியாசமான தலைப்புக் கொடுத்திருந்தேன். அதாவது அந்தப் பிரதான தலைப்பின் கீழ் வெவ்வேறு அம்சங்கள் குறித்து மாதம் ஒரு முறை எழுதலாம் என்பது எனது எண்ணம். அது அங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று அறிந்தேன். அது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

அதே பத்தி, தினகரனில் ‘தீர்க்க வர்ணம்’ என்ற தலைப்பில் நான் எழுதிய பத்தித் தொடரில் பிரசுரமானதும் அவை தொகுக்கப்பட்டுப் புத்தகமானதும் அநேகர் அறிந்த செய்தி.

குறித்த மாதப் பத்திரிகையை இரண்டு மாதங்கள் கழித்துத் திறந்த போது எனது பத்திக்கு நான் என்ன பிரதான தலைப்புக் கொடுத்திருந்தேனோ அதை தலைப்பில் அந்தப் பத்திரிகையில் கடமை புரியும் மற்றொரு இளவல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்!

எழுத வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு உண்டு. தலைப்பு வைப்பதில் தடுமாற்றம் உண்டு. அதைச் சிலர் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நல்ல தலைப்புக்களும் சிலரைக் கிளர்த்தி விடுவதும் உண்டு.

ஏதாவது ஒரு விடயம் பற்றி எழுதும் எண்ணம் இருந்தால் அதை இன்னொருவருக்கு முன் கூட்டியே சொல்லக் கூடாது என்று ஒரு மூத்த படைப்பாளி எனக்கு அறிவுரை பகர்ந்தார். எழுதப்பட வேண்டிய அந்த விடயம் பற்றிய தகவல் அறிந்து கொள்ளும் நோக்குடன் யாருடனாவது கதைக்க நேர்ந்தாலும் அதைத்தான் அடுத்து எழுதப் போகிறேன் என்று சொல்லி விடக் கூடாது.

எதையாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதை எழுதுவது என்பது தட்டுப்படாது. நாம் எடுத்துக் கொடுத்து விட்டால் அதை வைத்து விளாசி விட்டு ஒரு பொன்னாடைக்குத் தயாராகி விடுவார்கள்.

கடைசியாக வெளியாகியுள்ள எனது நூல் ‘ஒரு குடம் கண்ணீர்.’ நூல் அச்சாகும் வரை அதை நான் யாருக்கும் வெளிப்படுத்தவே இல்லை.

ஒரு நூலை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது தலைப்பை முன் கூட்டியே தீர்மானித்து விடுவோம். புத்தகம் வெளிவரக் காலம் எடுத்ததெனில் அதை தலைப்பை வேறு ஒருவர் கையாளக் கூடும். அதாவது இப்படியொரு தலைப்பில் நூல் வெளியிடுவதற்கு ஒருவர் காத்திருக்கிறார் என்ற செய்தி தெரியாமலே இது நடந்து விடுகிறது.

கவிஞர் தாஸிம் அகமதுக்கு இதுதான் நடந்தது. இரண்டு கவிதை நூல்களை வெளியிடுவதற்கு அவர் ஐந்து வருடங்களாக முயன்று கொண்டிருந்தார். இரண்டு நூல்களுக்கும் அவர் வைத்திருந்த தலைப்புகளாவன. 1. மற்றவை நேரில் 2. ஒரு காலம் இருந்தது.

இவற்றில் மற்றவை நேரில் என்ற தலைப்பில் நண்பர் இளைய அப்துல்லாஹ் தினக்குரலில் தொடர் கட்டுரைகளை எழுதஆரம்பித்திருந்தார். ஒரு காலம் இருந்தது என்ற தலைப்பில் மூதூரைச் சேர்ந்த ஒருவர் ஒரு நூலை வெளியிட்டு விட்டார். இவர்கள் இருவருக்கும் தாஸிம் அகமது இந்தத் தலைப்புகயில்தான் தனது கவிதை நூல்களை வெளியிடவுள்ளார் என்பது தெரிந்திருக்க எந்த நியாயமும் கிடையாது.

இப்போது விழித்துக் கொண்ட தாஸிம் அகமது ‘கண்திறவாய்’ என்ற தலைப்பில் தனது மூன்றாவது நூலை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அறிய வந்தேன்.

அச்சிலிருந்து வருவதற்கு முன் வேறு யாராவது ஒரு புத்தகத்தை அந்தத் தலைப்பில் அச்சிட்டுக் காட்டாமலிருந்தால் சரி!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Shaifa Begum said...

ஹ்ம்..... என்ன உலகம்டா இது..? அட இப்படியும் நடக்கிறதா..? நம்ம மக்கள் புத்திசாலிகள் தான்.. மூளைக்கு வேலையே இல்லாமல் சமத்தா காரியம் பண்றாங்க!!
கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல்
தலைப்பைக் கூட சுட்டுவிடுகிறார்களா..? ஆக்கத் தலைப்பில் கூட
திருட்டுசமாச்சாரம் இருக்கா..? ஒருவர் தலைப்பை சுட்டு இன்னொருவர்
எந்த மூஞ்சை வைச்சிட்டு எழுதறாங்களாம்..? மனசாட்சி இல்லாத மனிதரக்ள !!
ஸ்...ஸ.்...ஸ்... ஜாக்கிரதை !! ”? நூல் அச்சாகி பதிப்பில் வரும்வரை
உசாராக இருங்கள் !!