“இவருதான் ‘கருவிழி’ பிரகலாதன்” என்றார் என்னுடன் நடந்து கொண்டிருந்த இந்திய நண்பர்.
அங்கு ஒரு திருவிழாவுக்குப் போல் மக்கள் கூடியிருந்தார்கள். என்னுடன் இலங்கையைச் சேர்ந்த மற்றும் இரண்டு நண்பர்களும் வந்தி ருந்தார்கள். அவர்களில் ஒருவர், எதையோ தேடித் தனித்துச் சென்று விட, நானும் மற்றைய நண்பரும் இந்திய நண்பருடன் நடந்து கொண்டி ருக்கும் போது எதிர்ப்பட்ட நபரைத்தான் எமக்கு இந்திய நண்பர் அறிமுகம் செய்தார்.
அவரை அறிமுகம் செய்ததும் நான் மலர்ந்தேன். ‘கருவிழி’ வெளியீடாக வந்த இரண்டு நூல்களை நான் படித்திருந்தேன். இந்தியாவுக்குச் செல்லுமுன் கடைசியாக இலங்கையில் நான் படித்த புத்தகங்களில் ஒன்று அவர்கள் வெளியிட்டது. இரண்டும் நல்ல நூல்கள். அவை இரண்டுமே புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் படைப்பாளி அதாவது புலம் பெயர்ந்தபின் படைப்பாளிகளானவர்கள் எழுதியவை. முதற் புத்தகத்தின் அமைப்பும் கட்டுமானமும் குறித்துச் சிலாகித்தேன். நான் கதைக்கக் கதைக்க ‘அப்பிடியா’ என்று சிரித்துக் கொண்டார்.
பிரகலாதன் கழுத்தில் தற்கொலை அங்கி மாதிரி ஒரு பை தொங்கியது. ஒரு படைப்பாளியாக அல்லது விடய ஞானம் உள்ளவர் போலத் தோற்றம் இருந்தது. சிரித்துப் பேசினார். சிலர் குறுக்கறுக்கும் போது அவர் அவர்களுக்குத் தலையை ஆட்டிக் கையசைத்து விடை கொடுத்தார். பக்கத்தில் இரு இளைஞர்கள் அவரிடம் எதையோ கதைக் கக் காத்திருந்தார்கள். எனக்கும் நண்பருக்கும் தனது விசிட்டிங் கார்ட் தந்தார். நாங்கள் நாடு திரும்புவதற்குள் வந்து சந்திப்பதாகவும் அப்போ துதான் ஆறுதலாகக் கதைக்கலாம் என்றும் சொன்னார். தனது அலை பேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு கூறினார். நாங்கள் பிரிந்தோம்.
ஒரு புத்தகத்தின் தயாரிப்பில் அதன் கட்டுமானம் முக்கியம் பெறுகிறது என்பது எனது கருத்து. விடயதானமும் அழகிய கட்டுமானமும் ஒருசேர அமைந்து வி;ட்டால் அந்தப் புத்தகம் என்னைப் படி என்னைப் படி என்று சதா நம்மை அழைத்துக் கொண்டேயிருக்கும். அதுவும் அந்த நூலின் வெற்றிதான்.
என்னுடன் வந்திருந்த இலங்கை நண்பர் பதிப்பிக்க வேண்டிய தனது நான்கு நூல்களைக் கொண்டு வந்திருந்தார். இலவசமாகச் சில வெளியீட்டு நிறுவனங்கள் நூல்களை வெளியிடுகின்றன என்று காற்று வாக்கில் யாரோ கதைத்ததை அவர் நம்பியிருந்தார். அவ்வாறு வெளியிட முடியுமாயின் ஆகக்குறைந்தது இரண்டு நூல்களையாவது கொடுத்து வெளியிடச் செய்யலாம் என்பது அவரது எண்ணம். அவர் ஒரு சிறந்த படைப்பாளி. இலங்கையில் நான்கு நூல்களையும் வெளியிடுவாரானால் அடுத்த நாளே அவர் தெருவுக்கு வந்து விட நேரும்.
பிறகு ஒரு வாரமாகத் தொடர்ந்து பிரகலாதனைத் தொடர்பு கொள்ள நண்பர் முயற்சித்தார். தொடர்பு கொள்ளும் போதெல்லாம் தான் வேலைப் பளுவுக்குள் இருப்பதாகச் சொன்னார் பிரகலாதன். பின்னரான தினங்களில் தொலை பேசி அழைப்பை அவர் எடுக்கவே இல்லை. நாங்கள் இரண்டு வாரகாலம் எங்களது வேறு பயணங் களையெல்லாம் முடித்து விட்டு நாட்டுக்குத் திரும்ப ஒரு வாரகாலம் இருக்கையில் நண்பர் மீண்டும் பிரகலாதனைத் தொடர்பு கொண்டார். அடுத்த நாட் காலை நாம் இருக்குமிடத்துக்கு வந்து சந்திப்பதாகச் சொன்னார் அவர்.
சொன்னபடி அடுத்த நாள் வந்து சேர்ந்தார் பிரகலாதன். மிகத் தெளிவாகவும் நளினமாகவும் உரையாடினார். விளிம்புநிலைப் பார்வை யூடாக வித்தியாசமான அரசியற் சிந்தனை அவருக்கு இருந்ததை நான் புரிந்து கொண்டேன். படிப்பாளிகளினதும் படைப்பாளிகளினதும் தொடர்புகள், மாற்றுச் சிந்தனைகள் குறித்தும் பேசினார். இலங்கை இனப்பிரச்சினையைப் புத்திசாலித்தனமான கோணத்தில் அலசினார். புத்தகங்களை இலவசமாகவே அச்சிட்டு வெளியிடுவதாகச் சொன்னார். நண்பர் ஒரு நூலை அவரிடம் கொடுத்தார்.
‘கருவிழி’ வெளியீடுகள் அனைத்தும் எனக்குத் தேவை எனவும் நான்கு தினங்களுக்குள் அவற்றைக் கொண்டு வருமாறும் நான் உடனே பணம் தருவதாகவும் அவருக்குச் சொன்னேன். பொருந்தினார். எங்களுடனே மதிய உணவு சாப்பிட்டுப் பிரிந்தார்.
நாடு திரும்பிப் பல மின்னஞ்சல்கள் அனுப்பி மூன்று மாதங்கள் கடந்தும் பிரகலாதனிடமிருந்து தனது புத்தகம் சம்பந்தமான எந்தத் தகவலும் வரவில்லை எனக் கவலைப்பட்டார் நண்பர்.
“நீங்கள் டாலரிலோ யூரோவிலோ புத்தகம் அச்சடிக்கப் பணம் கொடுக்காதவரை அதுபற்றி எந்தத் தகவலும் உங்களுக்குக் கிடைக்காது, புலம் பெயர்ந்தவர்கள் தவிர இந்தியர்களதோ இலங்கையரதோ நூல்களை ‘கருவிழி’ வெளியிட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று நண்பரைக் கேட்டேன். அதன் பிறகுதான் அவர் அதுபற்றிச் சிந்தித்திருக்க வேண்டும். சற்று நேரம் அமைதியாகவிருந்தார்.
“நீங்கள் கேட்ட படி அவர்கள் வெளியிட்ட புத்தகங்களைக் கூடத் தரவில்லையே, ஏன்?” என்று என்னைக் கேட்டார். நான் இப்படிச் சொன்னேன்.....
“புத்தகம் அச்சடிக்க வெளிநாட்டுப் பணம்தான் அவர்களது குறிக்கோள். புத்ததகங்கள் அவர்களுடையவையல்லவே. அவை விற்றால் என்ன... விற்காவிட்டால் அவர்களுக்கென்ன?”
(“இருக்கிறம்” சஞ்சிகையில் பிரசுரமானது.)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments:
Post a Comment