Monday, May 16, 2011

அப்போ அது நீங்கதானா...?

ஆதி மனிதன் ஆதம் மரங்களின் நலன்களைக் கவனிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். முதற் பெண்மணி (அதாங்க... ஏவாள் என்றும் ஹவ்வா என்றும் அழைக்கப்படும் நமது ஆதித்தாய்) குகைக்குள் பொருட்களைச் சரி செய்து சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு குழந்தையின் அழு குரல் கேட்டது. தாய்ப்பாசம் பொங்க வெளியே ஓடிவந்து பார்த்த போது ஒரு குழந்தை நிர்வாணமாக நிலத்தில் கிடந்து அழுதுகொண்டிருந்தது.

முதல் மனிதனையும் முதற் பெண்மணியையும் அவர்களது பிள்ளைகளையும் வழிகேட்டில் ஆழ்த்த சாத்தானால் அனுப்பப்பட்ட சாத்தானின் பிள்ளை அது என்பது அவருக்குத் தெரியாது. அக்குழந்தை அழுகையை நிறுத்தும் வரை அதன் மீது அன்பு பொழிந்து ஆதரவளித்தார். முதல் மனிதர் வீட்டுக்கு வந்த போது அக்குழந்தையைக் கண்டார். அவருக்கு விசயம் புரிந்தது. அக்குழந்தையை எடுத்துச் சென்று ஆற்றில் எறிந்து விட்டு வீட்டுக்குத் திரும்பினார்.

அடுத்த நாள் ஆற்றங்கரையருகே சென்ற சாத்தான் ‘என்னருமைப் புதல்வனே நீ எங்கிருக்கிறாய்’ என்று சத்தமிட்டான். ‘இதோ இங்கிருக்கிறேன்’ என்றவாறு அந்தக் குழந்தை ஆற்று நீரிலிருந்து வெளியே வந்தது. ‘ஆதம் வரும் வரை ஆற்றங் கரையில் காத்திரு’ என்று அக்குழந்தைக்கு உத்தரவிட்டுச் சாத்தான் மறைந்த போனான். அவ்வழியே வந்த ஆதம் சாத்தானின் குழந்தையைக் கண்டு அதை எடுத்து நெருப்பில் இட்டார். அக்குழந்தை சாம்பராகும் வரை காத்திருந்து விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

இரண்டாம் நாள் அவ்விடத்துக்கு வந்த சாத்தான் மகனை அழைத்தான். ‘இதோ இருக்கிறேன்’ என்றவாறு எரிந்த இடத்திலிருந்து அக்குழந்தை வெளிவந்தது. ‘ஆதம் வரும் வரை இங்கேயே இரு’ என்று மீண்டும் உத்தரவிட்டு மறைந்தான் சாத்தான்.

மாலை அவ்வழியே வந்த ஆதம் தான் அழித்தொழித்து விட்டதாக நினைத்த சாத்தானின் குழந்தை அங்கேயிருப்பதைக் கண்டார். அவருக்கு கட்டுக்கடங்காத கோபம் உண்டாயிற்று. கோபத்துடன் முதற் பெண்மணியிடம் சொன்னார், ‘இதை அழிக்க ஒரேயொரு வழி இக்குழந்தையை நாம் சாப்பிட்டு விடுவதுதான்!’ அப்படியே நடந்தது.

அடுத்த நாள் சாத்தான் வந்தான். ‘என் அருமை மகனே எங்கிருக்கிறாய்?’ என்று கேட்டான். இரண்டு உடல்களிலிருந்து இரண்டு குரல்கள் வெளிவந்தன. ‘அருமைத் தந்தையே நான் இங்கிருக்கிறேன்... நிம்மதியாய்..!’ சாத்தான் சொன்னான், ‘மிகவும் நல்லது. அதுவே எனக்;கும் வேண்டியது!’

அன்றிலிருந்து நல்ல குணங்களுடன் மனிதன் பிறந்தாலும் கொஞ்சம் சாத்தானின் குணவியல்புகளும் கூடவே இருந்து வருகின்றன!

Source: Rushdi al Ashhab, Popular Stories from Palestine. Published by the Arab Studies Society, Jerusalem, 1987.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Shaifa Begum said...

படித்தோம்.. சுவைத்தோம்..
இப்போ எல்லாம் இவர் ஆதிக்கம் தான்.
மனுசங்கள உருட்டி, புரட்டி பாடாத பாடுபடுத்தி என்னவெல்லாமோ உலகத்துல் நடக்குது. .
பாவப்பட்ட மனுசனோ இவர் கைக்குள் வசப்பட்டு அழிந்து போகிறான்.

"நல்ல குணங்களுடன் மனிதன் பிறந்தாலும் கொஞ்சம் சாத்தானின் குணவியல்புகளும் கூடவே இருந்து வருகின்றன"!