Monday, May 2, 2011

உன்னை வாசிக்கும் எழுத்து

-விம்பமும் விளிம்பும்


- சலனி -
 
 
அஷ்ரஃப் சிஹாப்தீன் ஒரு விருந்தாகத் தந்திருப்பது இவருடைய மொழிபெயர்ப்பு நூல் - ஜமால் ஜூமாவின் ‘உன்னை வாசிக்கும் எழுத்து.’ நீண்ட கவிதையின் தமிழாக்கம். நூலுக்கான தலைப்பின் தேர்வு நன்றாக உள்ளது. அதைவிட அட்டைப்படம், உள்நுழையும் போது ஆயிரம் அர்த்தங்களைக் கற்பிக்கும் ஓவியத் தேர்வு என்பன மனதைக் கவருகின்றன. மொழிபெயர்ப்பு மிக அரிதான, அதே நேரம் பாரியதொரு பணி.



நாம் எல்லோரும் புத்தகம்
சலிப்பு
தினமும் அதை வாசிக்கிறது

நண்பர்கள் இல்லாத மனிதர்களும்
புத்தகங்களே
அவை
வாசகர் ஒருவரைப் பெற்றுக்கொள்ளாதவை

என்கிற வருடலான வரிகளோடு தொடர்கிறார் ஜமால் ஜூமா. ஈழத்து இலக்கியப் பரப்பு சில மொழிபெயர்ப்புகளையே அதனது சுயம், அழகு என்பனவற்றுடன் உள்வாங்கியிருப்பதைக் காண்கிறோம். இதன் ஆரம்ப வரவுகளாக பலஸ்தீனக் கவிதைகள், பாலை என்பனவற்றைக் குறிப்பிட வேண்டும். பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்திட வேண்டும் என்ற பாரதியின் கனவைக் கன்னி முயற்சியாகத் துவக்கியிருக்கிறார் கவிஞர் அஷ்ஃப்.

இங்கு மொழிபெயர்ப்பு தொடர்பான அண்மைய கருத்தாடல்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம். வெறுமனே பாராட்டுதல்களுக்கு அப்பாற்பட்டு கவிதையை சமூக பிரக்ஞையின் அளவு கோலாகக் கொள்ள முடியுமெனின் இந்தக் கருத்துக்கள் உதவக் கூடும்.

‘எனது உடைந்த ஆன்மா என் விழிகளில் பிரதிபலிப்பதில்லை’ என்ற சமீஹ் அல் காஸிமின் அழகான தத்துவாரத்த வரியை இங்கு ஞாபகப்படுத்துவதும் பிழையில்லையெனலாம். மொழிபெயர்ப்பு என்பது சில காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது எனக் கூறப்படுகிறது. அவை அரசியல் மற்றும் மொழிப் பெருமையை நிலைநாட்டல் என்பனவாகும். மேலும் மொழிபெயர்ப்பில் சமூகவாழ்வியம், பண்பாடு, மண்வாசம் அறியப்பட வேண்டும் என்ற விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் ஈராக்கியக் கவிஞரான ஜமால் ஜூமாவின் கவிதைகளிலும் மெழுகுவர்த்தி, பாலைவனம், ரொட்டி, செம்மறியாடு, சோளவயல், சுல்தான் போன்ற சொல்லாடல்கள் அவரது பின்புலத்தைக் காட்டுகின்றன. அதனை மிக உன்னிப்பாக உள்வாங்குவதில் மொழிபெயர்ப்பாளர் அக்கறை காட்டியிருக்கிறார்.

நிகழ்ச்சிகள்
காட்சிப் படிமங்கொண்டு
நித்திரையினால் எழுதப்படுகின்றன
கனவுகளின் புத்தகத்தில்

- நல்ல வரிகள்



நானும் நீயும்
இரு புத்தகங்களா
அல்லது
நாம் ஒரு புத்தகத்தின்
இரு பகுதிகளா?

புத்தகம் என்ற ஒரேயொரு குறியீடு அல்லது படிமம் ஊடாக வாழ்வின் தரிசனங்களைத் தேடுகிறார் ஜமால் ஜூமா. அதை வாசகர்களும் உணர வேண்டும் என்ற அளிக்கை அவருக்குக் கைவரப் பெற்றிருக்கிறது. மொழிபெயர்ப்பானது ஒரு பிரதியை உலக இலக்கியங்களோடு இணைக்கும் பரிவர்த்தனையைச் செய்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. அத்துடன் மொழிபெயர்ப்பு குறித்த கவிஞரின் அடிப்படைப் பின்புலத்தை அப்படியே பிரதிபலிப்பதுடன் படைப்பாளியின் உணர்வும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற வியடயமும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும். இதனையும் அஷ்ரஃப் பூர்த்தி செய்திருக்கிறார் என்றே கருத முடிகிறது.

மனிதர்கள் மரணித்துப் போகிறார்கள்
கவிஞன் மரணத்தின் பின்தான் வாழவே ஆரம்பிக்கிறான் என்பார்கள். ஜமால் ஜூமாவின் இந்த வரிகளும் அஷரஃபின் இந்த முயற்சியும் காலம் கடந்தும் அவர்களைப் பேச வைக்கும் என்பதில் ஐயமில்லை. நிறைய புதியவர்களுடைய வருகையை இலக்கிய உலகம் நித்தமும் எதிர்பார்க்கிறது. அது மொழிபெயர்ப்பு சார்ந்து இடம்பெறல் எமது மொழி வளர்ச்சியின் இன்னொரு பரிமாணத்தையே காட்டுகிறது எனலாம்.

நீ
\எனது நண்பனாயிருக்க விரும்புகிறாயா
முதலில் ஒரு புத்தகமாகு -

இந்த இடத்தில் கிளோடியா லார்ஸின் ‘நான் தனித்துத் தொலைவில் அலைந்தேன் - பெரிதும் தனித்து - ஏனெனில் நீ என் துணையாயிருக்க விரும்பவில்லை’ என்ற அற்புதமான வரிகளை ஞாபகிக்க முடிகிறது.

நீ யார் என்று எனக்குச் சொல்லாதே
பக்கம் பக்கமாக
உன்னை வாசிக்கும்
மகிழ்ச்சியை எனக்குத் தா

நவீன கருத்தியலாளர்களின் வாதத்துக்குட்பட்ட விடயங்களில் மொழிபெயர்ப்பில் நவீனம் கடினமான போதும் அது மகிழ்வான அனுபவத்தையே தருவதாகக் குறிப்பிடுகின்றார். இதன் தொடர்ச்சியாய் ஜமால் ஜூமாவை மேலும் வாசிக்கும் போது மனதை இடறும் வரிகளாக இவை அமைகின்றன.

பகலில் நாம் எழுதுபவற்றையெல்லாம்
அக்கறையற்ற ஓர் இரவு
அழித்துவிட்டுப் போகிறது

ஓர் அறை
நான்கு பக்கங்களைக் கொண்ட
ஒரு புத்தகம்

மதில்கள் யாவும்
புத்தகமற்றவர்களுக்கான புத்தகம்

போன்ற மெய் சிலிர்ப்பான வரிகளையும் காண முடிகிறது. தன்னை இயல்பிலேயே கவிஞனாய் இனங்காட்டும் அஷ்ரஃப் கவிதை மொழிபெயர்ப்புச் செயற்பாட்டில் இத்துணை தூர தொலைநோக்குடன் பயணித்திருப்பது ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நல்ல வரவாகக் கொள்ள முடிந்தது.

நான் உன்னை வாசிப்பேன்
என்னை நான் அழித்துக் கொள்ள
வேண்டியிருந்தாலும் கூட

இருட்டில்
என் விரல்களை அனுமதிக்கிறேன்
உன்னை வாசிக்க

எனது கரங்களால்
உன்னைத் தொட விடு
அப்படியாயின்
என்னால் எழுதுவதற்குக் கற்க முடியும்

காதலிலும் இயல்பான தன்மை பேணிய ஓர் அரபுக் கவிஞனை பிரமிப்பான விழிகளுடன் அண்ணார்ந்து பார்ப்பதில் வியப்பேதுமில்லை.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Unknown said...

எனக்கும் வேண்டும் இந்நூல்,வாசிக்க ஆசையாய் இருக்கின்றது.