Tuesday, May 24, 2011

அப்போதே சொன்னோம்! (மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா)


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் - 08


அந்த நாட்களில் வரும் சினிமாப்படங்களில் படம் ஆரம்பித்ததிலிருந்து சண்டைக்காட்சிகள் இடம் பெறுவதுண்டு. நடிகர்கள், படத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்துக் கொண்ட கலைஞர்கள் பட்டியல் போய்க் கொண்டிருக்கும் போதே இந்தச் சண்டைக் காட்சிகள் இடம் பெறும். இவ்வாறான படங்களைப் பார்க்கும் அந்தக் கால விடலைகளும் வேறு பொழுது போக்கற்றவர்களும் “எழுத்தோடக்குள்ளேயே அடி” என்று தமது பட விமர்சனத்தை ஆரம்பிப்பார்கள்.

குப்பப் பிச்சை ராவுத்தர் முகம்மது இக்பால் குழுவினர் மலேசியாவில் இலக்கிய மாநாடு என்ற பெயரால் நடத்திய விழாவுக்கு இலங்கையிலிருந்து சென்றவர்களது பாடும் ‘எழுத்தோடும் போதே அடி’ என்ற நிலைக்கு வந்திருப்பது திரும்பி வந்தவர்களின் கருத்துக்களிலிருந்து தெரிகிறது.

ஹமாட் நிறுவனத்தில் விமானச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளுமாறு இலங்கைக் குழு இவ்விழாவில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்ததும் அங்கு தங்கம் விலை ஏறுவது போல் - எயார் ஏசியா நிறுவனத்தின் விலை மதிப்பின் படியாம்! - ஏறியதும் கடைசியில் ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணம் செய்யக் கூடிய கட்டணத்தில் சாப்பாடு கட்டிக் கொண்டு போக வேண்டிய விமானத்தில் விமானச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டது பேசப்பட்டதும் நாமறிந்ததே. குறிப்பிட்ட பாரம் (கொண்டு செல்லும் பொருட்களின்) இருக்குமானால் அதற்கு வேறு தொகை செலுத்த வேண்டும் என்ற நிலையில் மேலதிகமாக அதற்குரிய பணமும் ஹமாட் நிறுவனத்துக்குச் செலுத்தபட்டிருந்ததாம்.

ஆனால் விமான நிலையத்துக்குச் சென்ற போது பொருட்களுக்கான பணம் செலுத்தும் படி மலேசியயப் பயணம் மேற்கொள்ளப்பட்டோர் கேட்கப்பட்டார்களாம். எதிர்பாராத இந்த அறிவிப்பால்தான் ‘எழுத்தோடும் போதே அடி’ நிலை ஆரம்பமாகியிருக்கிறது. அப்படியாயின் ஹமாட் நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்ட பொருட்களுக்கான அதாவது பாரத்துக்கான பணம் விமான நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டடிருக்கவில்லை என்று அர்த்தமாகிறது. இந்த விடயத்தில் இலங்கை ஏற்பாட்டுக் குழு பாராமுகமாக இருந்திருக்கிறது.

பயணம் செய்தவர்களில் ஒரு குழுவினர் வந்து சேர்ந்து விட்டார்கள். மற்றொரு குழுவினர் சுற்றுலாவிலும் இன்னொரு குழுவினர் வியாபார விடயங்களிலும் தங்கி விட்டார்கள் என்பது அறியக் கிடைக்கிறது. இப்போதைக்கு நமக்குக் கிடைத்த தகவல்களை மட்டும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த விழாவுக்கு மலேசியப் பிரதமர் வருகை தரமாட்டார் என்று நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். அது உண்மையாகியிருக்கிறது. அமைச்சர் நூர் முகம்மத் யாக்கோப் அவர்கள்தான் கலந்து கொண்டிருக்கிறார். குழுவில் இருந்த ஒரு சிலர் ஏதாவது ஓர் அரங்கில் முக்கியஸ்தராகக் குந்தாமல் விடமாட்டார்கள் என்று ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்தோம். அது நடந்திருக்கிறது. எஸ்.எச்.எம்.ஜமீல், தாஸிம் அகமது, மருதூர் மஜீத், ரமீஸ் அப்துல்லாஹ், என்.எம்.அமீன், ஹாஜி ஹாஷிம் ஒமர் ஆகியோரில் இருவருக்குத் தலைமையும் ஏனையோருக்கு முன்னிலையும் வழங்கப்பட்டுள்ளது. முதல் மூவரது பெயர்களையும்தாம் நாம் குறிப்பிட்டிருந்தோம். அப்படிக் குறிப்பிட்ட காரணத்தால்தான் மற்றவர்களுக்கும் ஓர் இடம் கிடைத்துள்ளது என்று யூகிக்க முடிகிறது.

இதில் ஹாஜி ஹாஷிம் உமர், ரமீஸ் அப்துல்லாஹ் ஆகிய இவரும் இலங்கைக் குழுவில் இருந்த போதும் மலேசியாவுக்குச் சென்றிருக்கவில்லை என்பது ஆச்சரியமான செய்திதான். அந்த விழாவுக்கு என அமைக்கப்பட்ட குழுவில் இருந்தவர்கள் போகவில்லை என்றால் அது முக்கிய செய்தியல்லாமல் வேறு என்ன. குழுவில் இருந்தவர்களே தவிர்ந்து கொள்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு க்கன்னா அங்கு இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

இவர்களி; ரமீஸ் அப்துல்லாஹ்வை ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நாம் மூன்று முறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அவரது போன் மணி ஒலித்தும் அவர் பதிலளிக்கவில்லை. குழுவில் கலந்துரையாடப்படும் விடயங்கள் வெளியே கசிகின்றன என்பதால், யாருடனும் மலேசியா விடயங்கள் பற்றிக் கதைப்பதைத் தவிர்ப்பதற்காக நம்மையும் தவிர்த்திருக்கக் கூடும். வெளிப்படையான ஒரு விடயம் ரகசியமாகவோ வெளித் தெரிய வராமலோ பாதுகாக்கப்படுகிறது என்றால் அதற்குள் ஏதோ தவறு நடப்பதாகவும் கூட அர்த்தப்படுத்த முடியும். எப்படியாக இருந்தாலும் சரியோ பிழையோ குழுவின் ரகசியத்தைக் காப்பாற்ற அவர் நம்முடன் தொடர்பைத் தவிர்த்திருக்கக் கூடும். ஆனால் அவர் போகாமல் விட்டமைக்கான காரணத்தைத்தான் தெரிந்து கொள்ள முடியவில்லை. விமானச் சீட்டுக்கான முற்பணமாக பத்தாயிரம் ரூபாய்களை அவர் கட்டியிருந்ததாகவும் விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் கூடத் தகவலறிந்தோம்.

இதனால் ரமீஸ் அப்துல்லாஹ்வுக்கு ஒதுக்கப்பட்டிருந்த முன்னிலை இடம் நண்பர் நிலாமுக்கு கிடைத்ததாம். எனவே மாநாடு பற்றிய குறைபாடுகளைச் சொல்லும் கட்டுரை இடம் பெறாமல் மலேசியர் புகழ்பாடும் ஒரு கட்டுரையை நாம் எதிர்பார்க்கலாம்.

ஹாஜி ஹாஷிம் உமர் விழா நடைபெற்ற தினங்களில் இலங்கையில் இல்லை என்றே தெரியவருகிறது. முதலாவது தினமே அவரை அங்கு இலங்கைக் குழுவினர் தேடியிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கும் கூட அவர் எங்கே இருந்தார் என்ற செய்தி தெரியவில்லை என்றே கருத இடமுண்டு. இன்று அவரைத் தொடர்பு கொண்டு ஏன் மலேசிய விழாவுக்குச் செல்லவில்லை என்று கேட்டோம். அங்கு எனக்குரிய கௌரவம் கிடைக்காது என்பதை உணர்ந்ததாலும் விழாவுக்கு முன்னர் இலங்கையில் இலங்கைக் குழுவினர் தம்மைத் தவிர்த்து விட்டுக் கூட்டங்களை நடத்தியதாலும் மலேசியா செல்ல விரும்பவில்லை என்று நமக்குத் தெரிவித்தார். அப்படியானால் குழுவில் பத்துப் பேர் இருந்தும் சிலரே அதற்குள் சுழியோடியிருக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது.

ஆகவே உள்ளே ஏதோ மணக்கிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கழட்டி விடப்பட்டதற்கும் அதுவே காரணமாகவும் இருக்கலாம் என்பது உங்களுக்கு விளங்க வேண்டும். இதற்குள் இருக்கும் இரகசியம் குப்பப் பிச்சை முகம்மது இக்பாலுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

கவியரங்கில் இலங்கைக் கவிஞர்தாம் ஜொலித்தனர் என்பது இனிப்பான செய்தி. அவர்கள் இருவருக்கும் நமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நமது முதலாவது கட்டுரை எழுதப்படவில்லையென்றால் கவியரங்கில் தில்லாலங்கடி பண்ணிச் செத்த கவிதைகளை யாராவது படித்திருப்பார்கள். மானம் கப்பலேறியிருக்கும். நண்பர் நஜ்முல் ஹ_ஸைனுக்கும் தம்பி அஸ்மினுக்கும் மீண்டும் நமது வாழ்த்துக்கள்.

கவியரங்குக்குத் தலைமை வகித்த - குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழு யாருக்காக பல நட்புக்களைத் துண்டித்துக் கொண்டதோ - இலக்கிய இயக்கங்களைக் கூறு போட்டதோ அந்த - கவிக்கோ தனது பழைய கவிதையைத்தான் மீண்டும் படித்தாராம். மலேசிய நண்பர்களே... இதற்காகத்தானா நட்புகளை அறுத்தீர்கள்? இயக்கங்களைப் பிளந்து போட்டீர்கள்? ஒற்றுமையைச் சீர் குலைத்தீர்கள்? என்றோ ஒரு மாநாட்டில் படித்த கவிதையைத்தான் அவர் மீண்டும் ஆறாவது மாநாட்டிலும் படித்தார். அதே கவிதைதானே நண்பர்களே உங்கள் மாநாட்டிலும்? பலருக்குப் பாடமாகிப் போன கவிதை வரிகளைப் படித்து விட்டுக் கைதட்டலுக்கு வேறு இடைவெளி விட்டாராமே... காமடியாய் இல்லை?

முதல்நாள் காலையுணவு நடந்து கொண்டிருக்கும் போது இலங்கையிலிருந்து சென்ற ஒருவர் கவிக்கோ அருகில் அமர்ந்து “இவன் அஷ்ரப் சிஹாப்தீன் நெற்றில் மாநாட்டை ரொம்ப மோசமா விமர்சிக்கிறான்... உங்களைப் பத்தியும் எழுதுறான்....” என்று ஒருவர் மணியடித்தாராம். மணியடித்தவருக்கு நெற் என்றால் இணையம் என்று யாராவது சொல்லித்தான் தெரிந்திருக்கும். இல்லாவிட்டால் மீன் பிடிக்கும் வலையும் நுளம்பு வலையும்தான் அவருக்குத் தெரிந்தது. நாம் எழுதுவது கவிக்கோவுக்குத் தெரியாமல் இருக்கும் என்றா அவர் நினைத்திருக்கிறார். இல்லை, இப்படி அண்டிப் பிழைப்பதே தொழிலாக இருப்பதால் கவிக்கோவிடமும் எதையாவது எதிர் பார்க்கிறார் போலும். இஸ்லாமிய இலக்கியக் கழகம் மாநாடு நடத்தினால் தாமும் ஒரு முன்னெடுப்புச் செய்யலாம் என்பது அவரது எண்ணமாக இருக்கும். நான் அவருக்குச் சொல்ல விரும்புவது இதுதான். கவிக்கோ முன்னின்று நடத்தும் ஒரு மாநாட்டை நம்பி ஆள் கூட்டிச் செல்வதை விடக் கடலில் இறங்குவது உத்தமம்.

மருதூர் மஜீதும் தாஸிம் அகமதுவும் மலேசிய விழாவில் வெளியிடுவதற்கு இரண்டு நூல்களை அவசர அவசரமாக அச்சிட்டு எடுத்துச் சென்றும் அவை சரியான முறையில் வெளியீடு செய்யப்படவில்லையாம். ஏனையோரின் நூல்கள் வெளியிடப்பட்ட பின் கதையை முடித்துக் கொண்டார்களாம். கடைசியில் இவர்களது புத்தகங்களைப் பற்றி அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் உரிமைக் குரல் எழுப்பிய பிறகு ஒப்புக்கு ஏதோ செய்தார்களாம். இவர்களது நூல்களை அங்கிருந்தோருக்குப் பகிர்ந்தளிக்கும் படியும் சொல்லி முடித்துக் கொண்டார்களாம். இதனால் இருவதும் மனச் சஞ்சலத்துக்கு ஆளானதாக அறிய வருகிறோம். இவ்விழாவுக்கான குழுவில் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டவர்கள் இவர்கள். இவர்களது நூல் வெளியீட்டை உரிய கண்ணியம் கொடுத்து மலேசியர்கள் செய்திருக்க வேண்டும். இது மிகவும் கவலைக்குரிய செய்தி.

அது சரி, கௌரவ அமைச்சர் இதுபற்றிக் கவனம் செலுத்தவில்லையா? அவருக்காகவும் அவரது கட்சி நலனுக்காகவும்தானே அக்கட்சிக் காரியாலயத்துள் கிடந்து உழன்றீர்கள்? நீங்கள் அவரது கவனத்துக்கு இதைக் கொண்டு செல்லவில்லையா?

நூல் வெளியீட்டின் போது சகோதரர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் தனது பேச்சை வழி மாற்றிக் கொண்டு சென்ற போது சீனி நைனாவுக்குக் கோபம் வந்து பேச்சை நிறுத்தச் சொன்னாராம். இந்த வகையில் நான் சீனியாரின் கட்சிதான். ஒரு பெரு நிகழ்வில் மிகவும் கச்சிதமாக குறித்த நேரத்துக்குள் முடித்து ஏனைய நிகழ்ச்சிக்கு வழி விடும் நிலையை நாம் இன்னும் கற்கவில்லை என்றுதான் சொல்லுவேன்.

இந்த விழாவில் சரியான மரியாதை கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு மட்டுமே கிடைத்து என்று தெரிய வந்தோம். குப்பப்பிச்சை முகம்மது இக்பால் லேசுப்பட்டவரா.. அவருக்கு யாரை எப்படிக் கவனிப்பது என்று தெரியாதா....?

நாம் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் சொன்னது போல் அரசியல்வாதிகளும் பிரமுகர்களுமே மிகக் கவனமாக வரவேற்கப்பட்டுக் கவனிக்கப்பட்டார்களாம். இலக்கியவாதிகள் இரண்டாம் பட்சம்தானாம். இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் இது இலக்கியத்தின் பெயரால் நடத்தப்பட்ட அரசியல் மற்றும் பிரமுகர்கள் மாநாடு. அவ்வளவுதான். இதன் பின்னணியில் என்ன என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது... யார் யார் நன்மை பெற்றார்கள், பெறுவார்கள் என்பதெல்லாம் பின்னால் தெரிய வரும்.

வழமையாக இவ்வாறு வேறு நாடுகளுக்கு மாநாட்டுக்குச் சென்றால் இணைப்புக் குழுவினர் அழைத்துச் சென்ற பேராளர், ஆர்வலர்களது நலன்களைக் கவனிப்பது வழக்கம். மலேசியாவில் அப்படி எதையும் இலங்கைக் குழு செய்யவில்லையாம். அவரவர் பொண்டாட்டி பிள்ளைகளோடு “யா நப்ஸீ” என்றுதான் திரிந்தார்கள் என்று சென்று வந்த ஒரு நண்பர் நமக்குச் சொன்னார். குழுவிலுள்ள ஒருவரே ஓர் இலக்கிய ஆர்வலரிடம் உணவு வழங்கப்படும் இடம் எது என்று கேட்டாராம். ஹையோ...

ஒரு சர்வதேசச் சந்திப்பு நடைபெறும் போது சில தவறுகள், விடுபடுதல்கள் நடைபெறுவது தவிர்க்க முடியாதது. அதற்காக மாநாடு நடத்துவோரைக்  குற்றம் சுமத்துவது சரியாகாது. அவ்வாறு நடந்ததாக இருந்தால் மன்னித்துக் கொள்ளும் படி சீனி நைனார் வேண்டுகோள் விடுத்தாராம். பாராட்டுக்குரியது. அவை எப்படியான தவறுகள் என்றால் உணவு தாமதமாகுதல், பிரயாண வண்டி தாமதமடைதல், மாநாட்டு மலர் உரிய நேரத்தில் வழங்கப்படாமை போன்றவையே தவிர கவிக்கோ மாதிரி ஆட்களுக்காகவும் அரசியல்வாதிகளுக்குக் காவடியெடுப்பதற்காகவும் இலக்கிய இயக்கங்களையும் இதயங்களையும் துண்டாடுவது அல்ல என்பதை அழுத்திச் சொல்ல விரும்புகிறோம்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Anonymous said...

its fantastic you can publish rhese articles as a book for future guidance
av m jaffardeen

தமிழ் இனிது said...

170 விமான டிக்கட்களுக்காக 20க்கும் அதிகமான இலவச டிக்கட்டுகள் கிடைத்ததாமே!

அதன் பலனை யார் அனுபவித்தார்?