லறீனா அப்துல் ஹக்கின் 'சுயமி' ஒலித்தகட்டை ஒரு முறைக்கு இருமுறை ஒலிக்க விட்டுக் கேட்டேன்.
நான் இசை உபாசகன் அல்லன். பாடல்களதும் பாடல்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்படும் இசையினதும் இரசிகன்.
கவிதைகளில் எனக்குள்ள ஈடுபாட்டுக்கு அப்பால் ஓர் ஒலிபரப்பாளனாகவும் நீண்ட காலம் வாழும் பாக்கியம் கிடைத்த காரணத்தால் கர்னாடக இசை, சினிமாப் பாடல்கள், இஸ்லாமிய கீதங்கள், வாத்தியங்களின் இசை, வாய்ப்பாட்டு, மெல்லிசைப் பாடல்கள் போன்றவற்றில் கொஞ்சம் ஆர்வம் இருக்கிறது.
இதற்கு அப்பால் கஸல், கவாலி, நஃத், நஷீத், ஹம்த், ஸூபி இசை ஆகியவற்றை இரசிக்கும் மனமும் உண்டு.
இவை போக - உலகத்தில் எந்த மூலையிலாயினும் மக்கள் எழுச்சியில் பாடல்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன என்பது குறித்த அவதானமும் உண்டு.
இந்த அனுபவங்களுடன்தான் லறீனாவின் 'சுயமி' பாடல்களையும் நான் கேட்டேன்.
தானே எழுதி, தானே இசையமைத்துத் தானே பாடும் திறமை இவருக்கு எங்கிருந்து வந்தது என்று சிந்தித்தேன்.
அவருடை தந்தையார் கலகெதர அப்துல் ஹக் ஒரு காலத்தில் சிங்களச் சினிமாத் துறையில் புகழ் பெற்றவர். அவர் சுஜீவா, சுனேத்ரா, கீதா, ஒபய் மமய், ச்சூக்கிரி கெல்ல ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர்.
அவரது தாயார் மாத்தளை பர்வீன் மிகவும் பிரபல்யமான எழுத்தாளராக விளங்கியவர். பல சிறுகதைகள், தொடர்கதைகளைப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தவர். அவரது எழுத்துக்களை நானும் படித்திருக்கிறேன்.
பெற்றோரிடமிருந்து கடத்தப்படும் பரம்பரை அலகுகள் எல்லோருக்கும் வெற்றிகரமாகச் சித்திப்பதில்லை. அதைப் பெற்றுக் கொள்வதற்கும் கூட நிறையப் பிரயத்தனங்கள் தேவை. அந்த முயற்சியும் ஈடுபாடும் லறீனாவிடம் இருக்கிறது.
லறீனா அப்துல் ஹக் நிகழ்கால முஸ்லிம் பெண் ஆளுமைகளும் மிகவும் முக்கியமானவர். ஒரு கவிஞராக, எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக, கல்வியாளராக, வளவாளராக, சமூகச் செயற்பாட்டாளராக, பாடகியாக, இசையமைப்பாளராக என்று ஒரு பெரும் ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார். இவ்வளவையும் ஒரு நல்ல மனைவியாகவும் ஒரு நல்ல தாயாகவும் குடும்பங்களைப் பராமரிக்கும் நல்ல நிர்வாகியாகவும் இயங்கியபடி நான் மேலே குறிப்பிட்ட அத்தனை துறைகளிலும் பிரகாசிக்கிறார் என்பது அவதானத்துக்குரியது.
இந்த ஒலித் தகட்டில் அல்லது இறுவட்டில் ஒன்பது பாடல்கள் அடங்கியிருக்கின்றன.
இசையும் ராகமும் எவ்வளவுதான் சிறப்பாக இருந்த போதும் பாடல் வரிகள் நன்றாக இல்லையென்றால் அந்தப் பாடல் எழுச்சி பெறாது. இதற்கு பல நூறு பாடல்களை நம்மால் உதாரணங்களாகக் கொள்ள முடியும்.
லறீனாவின் பாடல் வரிகள் ஆங்காங்கே கவித்துவத்தோடும் அர்த்தங்களோடும் வந்து விழுவதற்கு ஒரு சில உதாரணங்களைச் சொல்லலாம்.
அடையாளம் தொலைத்து விட்டோம்
அடிவாங்கிகிக் களைத்து விட்டோம்
முடிவற்ற கொடுமைகளால்
முகவரிகள் இழந்து விட்டோம்
மேடைகள் மீதேறி அமைதிதான் நோக்கமென்று
நாடகம் ஆடிடுவார்
வேடங்கள் போட்டிடுவார்
எம் துன்பம் உணர்ந்தது போல்
அழுதழுது பேசிடுவார்
நம் கண்கள் மறைந்து விட்டால்
நடு முதுகில் குத்திடுவார்.
இது மண்ணிலே.. இந்த மண்ணிலே என்ற பாடலில் வரும் வரிகள். இந்த இநுவட்டில் அடங்கியுள்ள பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடலும் இதுதான்.
'எங்கள் வாழ்வும் மலரும் காலம்
நாளையேனும் புலரக் கூடும்'
(வையம் மீதிலே என்ற பாடலில் வரும் வரிகள்)
'காற்றுக்கு இல்லை வேலியடி - என்
சிறகுக்கு இல்லை எல்லையடி'
(இசைப் பாடல் ஒன்று பாடினேன் என்ற பாடலில் வரும் வரிகள்)
முன்னால் நான் சொன்ன வரிகள் பாடல்கள் எப்படி எழுதப்பட்டிருக்கின்றன என்று கூர்ந்து அவதானித்துப் பொறுக்கியவை அல்ல. பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே எனது கவனத்தைத் தானாக ஈர்த்த வரிகளில் சில.
கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் வித்தியாசம் உண்டு. கவிதைகள் அனைத்தும் பாடல்களாக முடியாது. ஆனால் பாடல்கள் கவிதையாகும். கவித்துவம் உள்ள பாடல்கள் காலத்தை வென்று வாழக் கூடியன.
லறீனாவின் பாடல்களில் சில பொதுப் பண்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமாகச் சொல்லப்பட வேண்டிய விடயம் என்னவெனில் நம்பிக்கை ஊட்டும் பண்பு. அநேகமாக எல்லாப் பாடல்களுமே இந்தப் பொதுப் பண்பைக் கொண்டிருக்கின்றன.
பாடல்களை ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டு செல்லும் போது ஒவ்வொரு பாடலின் வரிகளுக்கு அப்பால் அவர் தேர்ந்தெடுத்த ராகங்கள் மூலம் என்னை ஆச்சரியப்படுத்தினார் என்பதை நான் முழுமையாக ஒப்புக் கொண்டாக வேண்டும். குறிப்பாகச் சில பாடல்கள் இது கர்னாடக பாணியா, கஸல் பாணியா என்ற மயக்கத்துக்குள் என்னைத் தள்ளிக் கொண்டு போய் விட்டன.
பாடல்கள் பற்றியும் ராகங்கள் பற்றியும் அவருக்கு இருக்கும் தேர்ச்சியை அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாடலை வித்தியாசமாக இப்படியும் பாட முடியும் என்று சொல்வது போலவுமிருந்தது. வையகம் மீதினிலே என்ற பாடலை இதற்கு உதாரணமாக முன் வைக்கலாம்.
ஒளியெங்கே என்று ஒரு பாடல் உண்டு. ஒரு புதுக் கவிதை வரி வடிவத்தை அல்லது கவிதையே இல்லாத வரி வடிவத்தைக் கூட லறீனாவால் பாடலாகப் பாட முடியும் என்பதைச் சொல்லி நிற்கிறது அந்தப் பாடல்.
ஒரு காலம் என்ற பாடலில் தனக்குக் கற்பித்த ஆசிரயர்களை நினைவு கூர்ந்து பாராட்டுகிறார். இந்த நூற்றாண்டில் அருகி வரும் பண்பு இது. லறீனாவுக்குக் கற்பித்தவர்கள் பாக்கியவான்கள் என்ற எண்ணமே இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்குத் தோன்றியது.
ஒரு சில பாடல்களில் வரும் ஹம்மிங் மற்றும் ஆலாபனை ஆகியவை பற்றியும் குறிப்பிட வேண்டும். பாடல்களுக்கு முன்பு வரும் ஆலாபனைகளும் பாடல்களுக்கு இடையில் வரும் ஹம்மிங்களும் நன்றாக இருக்கின்றன.
அன்னை மடியில் என்று ஆரம்பமாகும் பாடலில் பாடலின் ஒரு சில சொற்களுக்குரிய இடத்தை ஹம்மிங் மூலம் நிரப்பியிருக்கிறார்;. இது கவனத்தைக் கோரும் உத்தியாகத் தெரிகிறது. இந்தப் பாடலில் ஒலிக்கும் லறீனாவின் குரல் சிறு பிள்ளையொன்றின் குரலாகவும் ஒலிக்கிறது.
பொறு மகனே என்ற ஒன்பதாவதாக இருக்கும் பாடலில் லறீனா தனது துயரக் குரலையும் அழுகுரலையும் பதிவு செய்கிறார். வானொலி நாடகத்துக்கான ஒரு நடிகை கூட அவருக்குள் மறைந்து கிடப்பதை உறுதி செய்யும் பாடல் இது.
பொதுவாக இப்போது வரும் இசைப்பாடல்கள் யாவற்றிலுமே இசைக் கருவிகளின் இரைச்சல் வரிகளையும் பாடல் அர்த்தங்களையும் கொலை செய்து விடுகின்றன என்ற ஓர் அபிப்பிராயம் உண்டு.
இது தவிர ஒரே மாதிரியான இசையமைப்புப் போக்கும் அவதானிக்கப்பட்டு வருகின்றது. லறீனாவின் ஒவ்வொரு பாடலிலும் வித்தியாசமான இசையமைப்புப் போக்கை உணர முடிகிறது.
ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான ராகத்துடனும் இசையமைப்புப் போக்குடனும் அமைந்திருப்பதால் அலுப்பையோ இலங்கைப் பாடல்கள் யாவும் இப்படித்தான் என்கிற பொது எண்ணத்தையோ இப்பாடல்கள் ஏற்படுத்தவில்லை என்பதை அழுத்திச் சொல்ல முடியும்.
பாடல்களின் முக்கியத்துவம் என்ன என்று ஒரு வினா எழுப்பப்பட்டால் மனித ஆத்மாவின் ஜீவன் பாடல்கள்தாம் என்றுதான் நான் பதில் சொல்வேன். மனித வாழ்வானது ஏனைய எல்லாக் கலை வடிவங்களைம் விடப் பாடல்களுடன்தான் பின்னிப் பிணைந்திருக்கிறது.
தாலாட்டு முதற்கொண்டு ஒப்பாரி வரையான பாடல்கள் இதற்கு உதாரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இன்று இவையெல்லாம் வேறு வடிவங்களை எடுத்துள்ளனவே தவிர மொத்தமாக அழிந்து விடவில்லை என்பதை அவதானிக்க வேண்டும்.
பாடல் எத்தகையது என்பதைச் சொல்வதற்கு எளிய உதாரணமாகத் தேசிய கீதங்களைச் சுட்டிக் காட்டிவிட முடியும்.
பாடல் ஹலாலா ஹறாமா என்று முடிவற்ற பட்டி மன்றம் நடத்துவதற்குப் பின்னணியிலுக்கும் தேசங்கள் முதற் கொண்டு நேற்று ஸ்தாபிக்கப்பட்ட தேசம் வரை இசையோடிணைந்த தேசிய கீதம் இசைக்காத தேசம் ஒன்றை உலக வரைபடத்தில் யாராலும் காட்ட முடியாது.
தேசிய உணர்வை, ஒற்றுமையை, ஒன்றித்த பக்தியை ஏற்படுத்துவதற்கு தேசிக் கவிதையோ தேசிய நாடகமோ தேசிய வசனங்களோ தேசிய சிறுகதையோ பயன்படுத்தப்படுவதில்லை.
அது பாடலால் மாத்திரமே சாத்தியம் என்பதால்தான் அந்த வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மனிதனின் மென்மையான உணர்வில் சங்கமித்துச் செயற்படுத்தும் வல்லமை பாடலுக்கு மாத்திரமே உண்டு.
மனித குலத்தின் பாதுகாப்புக்கான எழுச்சியில் - போராட்டத்தில் பாடல் ஓர் ஒப்பற்ற ஆயுதமாக இருக்கிறது. உலகில் தோன்றிய மக்கள் எழுச்சிகள் அனைத்திலும் பாடல் பெரும் பங்கு வகித்திருப்பதை நாம் கண்டு கொள்ள முடியும்.
நம் கண்முன்னே பாடலின் வலிமை சொல்லும் இரண்டு அண்மைய சம்பவங்களைக் குறிப்பிட முடியும்.
சிரியப் பாடகரான இப்றாஹிம் கஷவ்ஸ் சிரியாவின் டமஸ்கஸை விடப் பெரிய பிரதேசமான அலப்போவில் பஷர் அல் அஸாத்தை எதிர்த்துப் பாடினார். அவர் சொன்னதெல்லாம் ' யா பஷ்ஷார்.. யா பஷ்ஷார் நாட்டை விட்டுப் போ பஷ்ஷார். இசையோ தாளங்களோ இல்லாத பாட்டு அது. அந்தப் பாடல் வசனங்களை அவர் ஒவ்வொரு வரியாகப் பாடப்பாட லட்சக் கணக்கான மக்கள் திரும்பப் பாடினார்கள்.
தினமும் மக்கள் கூட்டம் பெருகியது. மிரண்டு போன பஷ்ஷாரின் கொலை அணி மிருகங்களை அறுப்பது போல அவரது குரல் வளையை அறுத்துத் தெருவில் போட்டு விட்டுச் சென்றது.
மிக அண்மையில் தமிழகத்தில் நாட்டுப் பாடல்களைப் பாடும் கோவன் கைது செய்யப்பட்டு விடுதலையானதை அறிவோம். அவரது பாடலின் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்று உறுதியாக நான் நம்பிய போதும் எளிமையாக அவர் பயன்படுத்திய வசனங்கள் மக்கள் கவனத்தைப் பெற்றதை மறுக்க முடியாது.
பெரும் யுத்தத் தாங்கிகளை விட, மல்டிபரல் குண்டு வீச்சை விட பாடல்கள் வலியமையானவை என்பதற்கு இவை நல்ல உதாரணங்களாகும்.
மெல்லிசையையும் இஸ்லாமிய கீதங்களையும் வளர்த்தெடுத்ததில் அளப்பரிய பங்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குரியது. தமிழ் மெல்லிசை நிகழ்ச்சிகளை வர்த்தக சேவையும் தேசிய சேவையும் ஒலிபரப்பி வந்தன.
தமிழ் மெல்லிசைப் பாடல்களை எழுதிய முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் எனக்கு இப்போதைக்கு ஞாபகம் வருவது தற்போது வெளிநாட்டு அமைச்சில் கடமையாற்றும் நண்பர் எச்.ஏ.அஸீஸூம், அக்கரையூர் அப்துல் குத்தூஸூம்தாம். அப்துல் குத்தூஸ் அநேக மெல்லிசைப் பாடல்களை எழுதியிருக்கிறார். மெல்லிசைப் பாடகர்களில் எம்.ஜே.எம். அன்ஸாரும் எம்.எச்.பௌஸூல் அமீரும் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.
நமது கவனத்துக்கு எட்டாமல் பல இசை இறுவட்டுக்கள் வெளிவந்திருக்கலாம். ஆனால் ஒரு பெண்மணி என்ற வகையில் தானே எழுதி, தானே ராகம் தேர்ந்து, வாத்தியங்கள் தேர்ந்து, இசையமைத்துத் தானே பாடிய முதலாவது இறுவட்டு இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
இதைப் பிரித்துத் தனித்துச் சொல்வதற்குக் காரணம் அவர் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருப்பதே.
இந்த இடத்தில்தான் லறீனா அப்துல் ஹக்கின் திறமை மட்டுமன்றி துணிச்சலும் ஓர்மமும் வெளிப்பட்டு நிற்கிறது என்பதைச் சொல்ல எனக்கு எந்தவிதத் தயக்கங்களும் கிடையாது.
(இன்று நடந்த வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய உரையின் வரிவடிவம்)