இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் - 08.05
முற்குறிப்பு
20007ம் ஆண்டு சென்னையில் நடந்த மாநாடே இஸ்லாமிய தமிழ் இலக்கியம் அரசியலுக்கு அடிமைப்பட வழிகோலியது என்று நாம் ஏற்கனேவே சொல்லியிருக்கிறோம். அந்த அடிப்படையில் அம்மாநாடு பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகளும் நமது தளத்தில் இடம்பெற்று வருகின்றன. அந்த மாநாட்டின் செயலாளராகவிருந்த ஹிதாயத்துல்லாஹ் இலங்கை இணைப்பாளர்கள் மீது வைத்த குற்றச் சாட்டுகளுக்கு டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் கொடுத்த பதிலறிக்கையைத் தந்திருந்தோம்.
இது தவிர, சமநிலைச் சமுதாயம் இதழில் மலேசியப் பார்வை என்ற தலைப்பில் திரு மலையாண்டி அவர்களும் இலங்கைப் பார்வை என்ற தலைப்பில் நானும் இந்தியப் பார்வை என்ற தலைப்பில் மரியாதைக்குரிய அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்களும் கட்டுரைகள் எழுதியிருந்தோம். திரு மலையாண்டி அவர்களின் கட்டுரை ஏற்கனவே நமது தளத்தில் இடப்பட்டு நீங்கள் படித்திருப்பீர்கள்.
இங்கே அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்கள் “இலக்கிய தர்பார்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை இடம் பெறுகிறது. கட்டுரையின் நீளம் கருதி சில பகுதிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதற்காக மரியாதைக்குரிய நண்பர் அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்கள் என்னைக் குறை சொல்லமாட்டார் என்பது எனது நம்பிக்கை.
இதைத் தொடர்ந்து எனது “இலங்கைப் பார்வை” கட்டுரையின் சில பகுதிகளும் ஆகஸ்ட் 2007 இதழில் இக்கட்டுரைகள் பற்றி தமிழ்நாட்டு வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களும் மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா பற்றிய தொடர் கட்டுரைகளுடே இடம் பெறும்.
------------------------------------------------------------------------------------------------------
இலக்கிய தர்பார்
இலக்கிய மாநாடுகள் இனி தமிழகத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று என்னைப் போன்றவர்கள் கருதிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் பெயரில் ஒரு மாநாடு நடந்து முடிந்த விட்டது என்பதில் மகிழ்ச்சிதான். மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளில் காணப்பட்ட லட்சணங்களை வைத்து இம்மாநாட்டில் குளறுபடிகள் மலிந்து கிடக்க வாய்ப்புண்டு என்ற ஒரு தயாரிப்பு மனநிலையில் சென்ற எனக்கு மார்க்க அறிஞர் அரங்கை ஏற்பாட்டாளர்கள் புறக்கணித்ததைத் தவிர்த்து மற்ற அரங்குகள் எப்படியோ நடந்தேறிவிட்டதில், குறிப்பாக கலைஞர் கலந்து கொண்ட நிகழ்வில் அரங்கு நிறைந்து காணப்பட்டதில் அப்பாடா ஒரு வழியாக இலக்கிய மாநாடு முடிந்து விட்டது என்ற திருப்தி எனக்கும் ஏற்பட்டது.
ஆனால் மாநாடு நடைபெற்ற விதம், ஆற்றப்பட்ட பணிகள் மன நிறைவு என்ற அடிப்படையில் அல்லது ஓர் இலக்கிய மாநாட்டின் வரையறைக்குள் சிக்காத நன்மைகள் என்று வேறு எந்த அலகையாவது வைத்துக் கொண்டு அலசினோம் என்றால், அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாடு ஒரு தோல்விதான்.
அத்தி பூத்தாற் போல் நடைபெறுகிற அனைத்துலக இலக்கிய மாநாடுகள் இலக்கியச் செழுமையையும் இனிய நினைவுகளையும் மணம் வீசச் செய்ய வேண்டும் என்பது அறிஞர்கள் மற்றும் கலைஞர்களுடைய எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை மாத்திரமல்ல, ஓர் அனைத்துலக மாநாட்டிற்கான இலக்கணத்தையும் சிதறடித்துவிட்ட மாநாடாக இம்மாநாடு அமைந்து விட்டது. மூன்று நான் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட ஒருவர் கூட தங்களது அதிருப்தியை வெளியிடாமல் செல்லவில்லை என்பது ஏழாம் மாநாட்டின் பொதுப் பண்பு. எங்காவது ஓர் ஊரில் ஷரீஅத் மாநாடோ, தப்லீக் இஜ்திமாவோ நடந்தால் இம்மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் அதை ஒரு முறை போய்ப் பார்த்து விட்டு வரவேண்டும் என்றுபேசிய போது அதை மறுக்க முடியவில்லை.
இந்த அனைத்துலக மாநாடு வெற்றி பெற்றதா? தோல்வியடைந்ததா, என்று அலச வேண்டிய நேரத்தில் ‘இதயங்கள் இணைப்புக்கு இலக்கியம்’ என்ற முத்திரை வாசகம் இந்த மாநாட்டுக்குப் பொருந்துமா என்றொரு பெரிய பட்டிமன்றம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அந்த வகையில் இந்த மாநாடு தோல்வி மாநாடு மட்டுமல்லாமல் தொல்லை மாநாடாகவும் ஆகிப் பலருக்கு வேதனை அளித்தது.
ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக நடத்தப்படுவதாக, ஜாம்பவான்களால் தம்பட்டம் அடிக்கப்பட்ட மாநாடு ஒரு மாநாடு எப்படி நடக்கக் கூடாது என்பதற்கான முன்னுதாரணமாகி விட்டது. அந்த முன்னுதாரணம் சென்னையில் நடைபெற்ற ஓர் அனைத்துலக மாநாட்டில் நடந்து விட்டது என்பது தமிழக முஸ்லிம்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் புரவலர்களுக்கும் ஏற்பட்ட தலைக்குனிவு.
இதைப் புரிந்தும் உணர்ந்தும் கொள்ள வேண்டியது, இதன் தோல்விக்கான காரணிகளை ஆராய வேண்டியது, இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று நினைக்கின்ற இலக்கியவாதிகள், புரவலர்களது கடமையாகும். இனிவரும் மாநாடுகளில் அத்தகைய தவறுகள் நிகழாமல் கவனித்துக் கொள்ள அது உதவும்.
மாநாட்டின் தோல்விக்கு முதன்மையான காரணம், இலக்கிய ஆர்வத்தை விடமேலோங்கியிருந்த தனியாவர்த்தன மனப்போக்கும் சுயவிளம்பரச் சிந்தனையுமேயாகும். அலட்சிய மனப் போக்கும் பாரபட்ச உணர்வும் இதன் துணையாகச் சேர்ந்து கொள்ள, மாநாடு ‘களை’ கட்டிக் கொண்டு விட்டது. இஸ்லாம் என்ற சமய அடையாளம் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கிராஅத் ஓதியதற்கு அடுத்த படியாக பர்வீன் சுல்தானாவின் பர்தாவில் வெளிப்பட்டது. வெல்டன்!
மாநாட்டுத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட விதமும் அதன் உள்ளடர்த்தியும் மாநாட்டின் தோல்விக்கு எடுத்துக் காட்டத் தகுந்த போதுமான ஒரே உதாரணமாகும்.
ஓர் அனைத்துலக மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட போதும் புரியவில்லை. அது பிரசுரமாகவும் தரப்படவில்லை. அடுத்த நாள் பத்திரிகையிலும் வரவில்லை. மாநாடு குறித்துப் பக்கம் பக்கமாக வினக்கம் எழுதிய ஏற்பாட்டாளர்கள், ஒரு மாநாடு அதன் தீர்மானங்களால் மதிப்படைகிறது, அத்தீர்மானங்கள் வெற்றி பெறுவதில்தான் அது உயிர் வாழ்கிறது என்ற தத்துவத்தை எப்படி அறியாமல் போனார்கள்?
வெத்து அறிக்கைகள் வெளியிடுவதற்கு அல்லது தன்னிலை விளக்கப் பேட்டிகளை அச்சேற்றுவதற்கு முயற்சி எடுத்தவர்கள், மாநாடு முடிந்து ஒரு மாதமாகிவிட்ட சூழ்நிலையில் - இன்று வரை அத்தீர்மானங்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சேர்க்கவில்லை. அவர்களது அறிக்கைகளையும் விளம்பரங்களையும் வெளியிட்ட பத்திரிகைகள் கூட அத்தீர்மானங்களை வெளியிடவில்லை. ஒரு வேளை இந்த மாநாடு பேராளர்களுக்கு மட்டும்தான் என்று அறிவித்தது போல தீர்மானமும் கலைஞருக்கு மட்டும்தான் என முடிவு செய்து விட்டார்களா என்பதும் தெரியவில்லை.