Saturday, December 27, 2014

முகத்திரண்டு புண்ணுடையார்!


 - 09 -

நீங்கள் உங்களது சகோதரியை அல்லது மனைவியை ஏற்றிக்கொண்டு தெருவில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதிர்பாராமல் அருகில் செல்லும் வாகனத்திலிருந்து ஒருவர் அல்லது மற்றொரு மோட்டார் சைக்கிளில், முச்சக்கர வண்டியில் உங்களைத் துரத்திக் கொண்டு வரும் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்த்து உங்கள் பின்னால் அமர்ந்திருக்கும் சகோதரி அல்லது மனைவியின் முந்தானை, அணிந்திருக்கும் சாரியின் தலைப்பு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் தொங்கிக் கொண்டிருப்பதையிட்டு உங்களை எச்சரிக்கிறார். அல்லது எடுத்துவிடப்படாமல் நீட்டிக் கொண்டிருக்கும் 'சைட் ஸ்டான்ட்' குறித்துச் சுட்டிக் காட்டுகிறார். நீங்கள் உடனடியாக சுதாகரித்துக் கொண்டு பாதுகாப்பு நிலைக்கு வருகிறீர்கள்.

நீங்கள் ஒரு முஸ்லிமாக இருக்கலாம் அல்லது இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ இருக்கலாம். நீங்கள் ஆபத்திலிருந்து காப்பாற்ற எச்சரிப்பவர் முஸ்லிமாகவோ இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ இருக்கலாம்.

பலமுறை நான் பலரைத் துரத்திச் சென்று எச்சரித்திருக்கிறேன். பலர் என்னைத் துரத்தி வந்து  எச்சரித்திருக்கிறார்கள்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது இந்த மனோ உணர்வு எப்படி நம் எல்லோருக்கும் வந்தது என்பது பற்றித்தான். அடுத்த மனிதருக்கு ஆபத்து என்று உணரும் போது அதிலிருந்து அந்த சக மனிதரைக் காப்பாற்ற நினைக்கும் உணர்வானது இனம், மொழி, பிரதேசம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது.

இலங்கை போன்ற பல்லின தேசத்தில் வாழும் மக்கள் யாவரும் அவர்கள் வௌ;வேறு கலாசார, பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருந்த போதும் எங்கோ ஒரு புள்ளியில் அல்லது தின வாழ்வின் பல புள்ளிகளில் சந்தித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது வியாபாரமாக, கல்வியாக, பிரதேச அபிவிருத்தியாக, பொதுமக்கள் நலனோம்பு செயற்பாடாக - எதுவாகவும் இருக்கலாம்.

இதற்கு அப்பால் ஒவ்வொரு குடும்பத்திலும் கொஞ்சம் நீளமாக ஆராய்ந்து கொண்டு சென்றால் தமிழ் சமூகத்திலிருந்து, கிறிஸ்தவ சமூகத்திலிருந்து, பௌத்த சமூகத்திலிருந்து ஆணோ பெண்ணோ யாரோ ஒரு நபர் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்திருக்கக் காண்போம். இதன் மூலம் ஏற்பட்டிருக்கும் சக உறவானது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டும் சொந்தமானதாக இருக்காது.

பல்லின தேசத்தில் இந்த உறவையும் சக மனிதன் என்ற உணர்வையும் தவிர்க்க முடியாது. அது காலங்காலமாக வேரூன்றிப் போயுள்ள ஓர் அடிப்படை அம்சமாகும். இப்படி வாழும் இனங்களுக்குள் அடிக்கடி ஏற்படும் கருத்து வேற்றுமைகளும் பூசல்களும் ஒரு கட்டத்தில் ஐந்தறிவு மனிதனை விட மோசமான நிலைக்கு மனிதர்களைத் தள்ளிவிடுவது ஏன் என்ற கேள்வி இப்போது நமக்குள் எழும்.

உலகத்தின் எல்லாத் தேசங்களிலும் சம பலத்தோடு வாழும் இனங்களுக்குள்ளும் பெரும்பான்மை சிறுபான்மை இனங்களுக்குள்ளுமான மோதல்கள் அவ்வப்போது ஏற்படுவதை வரலாற்று ரீதியாக நாம் கண்டு வருகிறோம். அதாவது மனிதாபிமானமும் சக மனித பாசமும் நீடித்து வரும் இனங்களுக்குள் குழப்பங்களும் சண்டைகளும் ஒவ்வொரு கட்டத்தில் நடப்பதும் முடிவதுமாகவும் இருந்து வருகிறது.

இவ்வாறான கலவரப் பின்னணிகளை ஆராய்ந்து பார்த்தால் பின்னணியில் ஏதோ ஒரு வகையான அரசியல் உயிர்த்துடிப்போடு இயங்கிக் கொண்டிருப்பதை நாம் காணலாம். பெரும்பாலான இனக் கலவரங்களின் பின்னணி அரசியலாகவே இருப்பதை நம்மால் அவதானிக்க முடியும்.

நமது நாட்டைப் பொறுத்தவரை அண்மைக் காலக் கலவரங்களை ஆராய்ந்தால் இரண்டு வகையான பிரிவினர் இவ்வாறான கலவரத்தில் ஈடுபடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடியும். 01. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர். அநேகமாகவும் கல்வியறிவில் குறைந்தவர்கள். 02. அரசியல்வாதிகளின் கையாட்கள் மற்றும் அவர்களால் கூலிக்கு அமர்த்தப்படுபவர்கள். அதிகாரம் உள்ள அரசியல் அணியாயின் இந்தக் குழுவுக்குள் பாதுகாப்புத் தரப்பும் இணைந்து கொள்ளும்.

வறுமையில் உழலும் கல்வியறிவில் குறைந்தவர்கள்தாம் எப்போதும் உணர்ச்சிவசப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளவர்கள். யாருக்காக இவ்வாறான கலவரத்தில் ஈடுபடுகிறோம், இதனால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது, நாட்டில் ஏற்படும் விளைவுகள் என்ன என்பன போன்ற அம்சங்களை இவர்கள் ஒரு போதும் சிந்திப்பதில்லை. இருப்பவனிடமிருந்து தம்மிடம் இல்லாத ஒன்றைக் கலவரத்தின் மூலம் அடைந்து கொள்ளும் அவர்களது ஆசை அவர்களது கண்ணை மறைத்து விடுகிறது. நீயே தேசமாக இருக்கிறாய்.. இந்த நாடு உன்னை நம்பியே இருக்கிறது, இதை நீயே பாதுகாக்க வேண்டும் என்று கொடுக்கப்படும் தூண்டுதலில் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு அவர்கள் களத்தில் இறங்கி விடுகிறார்கள்.

இந்தப் பிரிவினர் தொகை என்று நாட்டில் குறைகிறதோ அன்று இவ்வாறான கலவரங்கள் பெரிய அளவில் இடம்பெற முடியாமல் போய் விடும். இக்குழுவினரின் தொகை குறையுமிடத்து தூண்டுகின்ற அரசியல் கையாட்கள் இவர்களுக்குள் மறைந்து நிற்பதற்கு எந்த வாய்ப்பும்  உருவாகாது.

கல்வியறிவும் வறுமையும் பெருமளவில் நீக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் அடிப்படை வாழ்வியல் தேவைகள் நிறைவாகுமாயிருந்தால் இனங்களுக்கிடையிலான கலவரங்களை மதகுருக்களே முன் நின்று நடத்தினாலும் அதற்குரிய தாக்கம் 20 வீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். குறைந்தது மனித உயிர்களாவது பாதுகாக்கப்படும்!

அறிவு கிடைக்கும் போது தெளிவு கிடைக்கும். தெளிவு பெற்றவன் ஒரு செயற்பாட்டுக்கு முன் பார்வையை எல்லாப்புறத்திலும் செலுத்துவதற்கு முனைவான்.

 பார்வையைக் கீழ் நோக்கிச் செலுத்துபவன் தனது மூக்கைக் கண்டு கொள்வான்!



Wednesday, December 10, 2014

கண்ணுக்குத் தெரியாத கபட வலை!


 - 08 -

பத்தாம் ஆண்டில் கற்கும் மலர்ந்த முகச் சிறுவன் அவன். அவர்களது வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நடந்த உபசாரத்தில் கவனத்தோடும் பொறுப்போடும் அவன் செயற்பட்ட விதத்தில் எனது மனசில் ஒட்டிக் கொண்டான். அவனைச் சிலாகித்துக் கதைக்கும் போது அவனைப் பற்றிய இன்னும் சில நல்ல தகவல்கள் கிடைக்கப் பெற்றேன். நடை தூரத்தில் இருக்கும் பள்ளிவாசலுக்கு 'தஹஜ்ஜத்' தொழுகைக்காக அதிகாலையில் எழுந்து சென்று விடுகிறான். மாலை வேளைகளில் வெள்ளை நிற ஜூப்பாவும் தொப்பியும் அணிந்திருப்பவனாகப் பல முறை கண்டிருக்கிறேன். எப்போது என்னைக் கண்டாலும் முன்னால் வந்து ஸலாம் சொல்லிப் போவான்.  அவன் கற்பது பல்லின சர்வதேசப் பாடசாலை ஒன்றில். அவனுடைய பெயரைக் காமில் என்று வைத்துக் கொள்ளலாம்!

சில காலங்களுக்குப் பின்னர் காமில் பற்றி ஓர் அதிர்ச்சிகரமான செய்தி எனக்குக் கிடைத்தது. தனது வயதொத்த மற்றும் சற்று வயது கூடிய நண்பர்களுடன் இணைந்து அவன் போதைப் பொருள் பாவிக்கிறான் என்பதே அந்தச் செய்தி!

காமிலின் போதைக் குழுவில் உள்ளவர்களில் ஒருவனான சலீமின் இளைய சகோதரன் மூலம் வந்த செய்தி இது. சலீமின் பழக்கம் உணர்ந்த அவனது வீட்டார் அவனை அவனது மாமாவின் மேற்பார்வையில் பாட்டனாரிடம் இடம் மாற்றிப் பொறுப்பளித்திருந்தார்கள். நான் கண்ணால் காணாது போனாலும் கூட இந்த நடவடிக்கைகளை அறிந்திருந்தேன். அவன் மாற்றப்பட்டிருந்த இடத்தில் இருப்பதைக் கண்ணால் கண்டேன். செய்தியினது பின்னணியை நம்பியே ஆகவேண்டியிருந்தது.

சம்பந்தப்பட்ட பயல்களில் ஒருவனுக்குத் தந்தை இல்லை. தாய், தாயின் பெற்றோர் பார்வையில் வளர்பவன். மற்றொருவன் தாயும் தந்தையும் தொழில் நிமித்தம் பகல் பொழுதுகள் முழுவதும் அநேகமாக சனி, ஞாயிறுகளிலும் கூட - வீட்டில் இராமல் வெளியேறி விடுபவர்கள். கட்டுப்பாடும் அவதானமும் இல்லாத காரணத்தாலும் எந்நேரமும் வெளியேறி எங்கு வேண்டுமானாலும் அலையக் கிடைத்த வாய்ப்பினாலும் சகதிக்குள் இறங்கியிருக்கிறார்கள்.

மேற்குறித்த சம்பவம் நடந்தது தலைநகரில். ஒரு குறிப்பிட்ட காலம் வரை போதைப் பொருள் பாவனை தலை நகரிலும் அதுசார் அயல் பிரதேசங்களிலும் மட்டுமே நிலவி வந்தது. பின்னர் பிரதான நகரங்களுக்குப் பரந்து இன்று கிராமங்கள் வரை விஷம் போலப் பரவியிருக்கிறது. ஒரே வலைப் பின்னலில் தொடர்புட்ட மிகக் கவனமாகவும் அந்தரங்கமாகவும் நடத்தப்படும் இந்த வியாபாரம் இலகுவில் பொதுமகனின் கண்களுக்குத் தோற்றுவதில்லை. அண்மைக் காலமாக, குறிப்பாக உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் இந்த வியாபாரத்தின் பின்னணியில் இருப்பது வெறும் பணம் பார்க்கும் நோக்கம் மட்டுமல்ல என்பதுதான் நமது அவதானத்துக்குட்படாத ஆனால் அபாயகரமான விடயமாகும்.

யுத்தம் என்ற ஒன்று - அது மற்றொரு நாட்டுடனான போராக இருந்தாலென்ன, உள்நாட்டுப் போராக இருந்தாலென்ன - மோசமான பின் விளைவுகளையே விதைத்துச் செல்லும். இதற்கு நம்முன்னால் உள்ள நல்ல உதாரணம் ஆப்கானிஸ்தான். ஆப்கானோடு இலங்கையை ஒப்பிட முடியாதுதான். ஆனால் யுத்தத்தின் பின் விளைவுகள் வேறு பட்ட போதும் ஏற்படுத்தும் சமூகத் தாக்கம் என்பது ஒரே நூலில் ஓடும் அம்சமேயாகும்.

இலங்கையின் சிறுபான்மைகள் மீண்டும் ஒரு முறை தம்மைக் கட்டமைத்துக் கொண்டு எழுந்து விடக் கூடாது என்பதில் பெரும்பான்மை மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகிறது. அப்படி ஒரு எண்ணம் கூடச் சிறுபான்மையினர் மத்தியில் தோற்றம் பெறாமலும் பெரும்பான்மையின் கட்டுப்பாட்டுக்கு மீறிச் செல்லாமலும் - கண்காணிக்க ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உணர முடிகிறது.

அதாவது இனங்களுக்கிடையில் பிரகடனப்படுத்தப்படாத ஒரு யுத்தம் தொடர்கிறது என்று சொல்ல முடியும். அதனடிப்படையில்தான் இந்தப் போதைப் பொருள் பாவனைக்கு இளைய சமூகத்தைப் பழக்கி விடுதல், கலாசாரச் சீரழிவுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகள் திரை மறைவில் நடக்கிறதா என்ற சந்தேகம் தோன்றுகிறது.

சிறுபான்மையினர் பெருமளவில் வசிக்கும் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனை, மதுப் பாவனை என்பன என்றுமில்லாதவாறு அதிகரித்துச் செல்வதை அண்மையில் பல்வேறு வலைத் தளங்களிலும் செய்திகளிலும் நான் படித்திருக்கிறேன். இறுக்கமான பாதுகாப்புப் பார்வைக்குள் இது இயல்பாகப் பரவுகிறது என்பதை இலகுவில் ஏற்றுக் கொள்ளத் தயங்கி ஆகவேண்டியிருக்கிறது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை கலாசாரச் சீரழிவு என்ற ஒன்று இல்லாது போனாலும் கூட குறிப்பிட்ட ஒரு சில இஸ்லாமிய இயக்கங்களின் பிரிவினைகளும் அவற்றின் சண்டை, சச்சரவுகளும் சமூகத்துக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சீரழிவானது போதைப் பொருட்களால் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படும் தாக்கத்துக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது.

இரண்டு ஆபத்துக்களுக்குப் பின்னாலும் இருப்பவை ஒரே விதமான நோக்கங்கள்தாம் என்பதைப் புரிந்து கொள்ள, யாரும் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா'க்களாக இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை!

நன்றி - (மீள்பார்வை)

Tuesday, December 9, 2014

ஒரு சாதி ஆய்ட்டேன்!


நாவலாசிரியர், சிறுகதையாளர், கவிஞர், நாடக எழுத்தாளர் என்ற பன்முகம் கொண்ட எனது மனதுக்கினிய நண்பர் ஆர்.எம். நௌஷாத் அவர்களிடமிருந்து நேற்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அந்த மின்னஞ்சலைப் பொதுவில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

மின்னஞ்சல்
-----------------
ஒரு வண்ணத்துப் பூச்சி பல வண்ணத்துப் புள்ளிகளுடன்  இறகு விரித்து  உங்கள் முகம்  நோக்கி வருகிற பாங்கில்  விரிந்துள்ள உங்கள் முகப் புத்தகம் கண்டு மகிழ்ந்தேன்

முகப்பும் ஒரு படைப்புத்தான்

முகப் பூவும் ஒரு படைப் பூதான்

படைப்பை நேர்த்தியாக்கும் திறன் சிலருக்குத்தான் வரும்.
யாத்ரா வின்  அதே அழகான வடிவமைப்பு  பேஸ்புக் கிலும்  படிந்துள்ளது


ஓய்வானத்தின் பின் ஒரு சிலரின் முகப் புக்குகளை சும்மா திறந்து பார்த்தேன் ...
அதுதான் நான் செய்த மிகப் பெரும் ..தவறு இவ் வருடத்தில்..

ஒருவரின் முகப் புக்கை திறக்கவே மனசு பக் பக் என்கிறது
இன்னொருவரின் புக்கினுள் பீ நாத்தம் சகிக்கல்ல.
மற்றுமொருவர்  முக நூல் என்ற பெயரில் மூக்குப் பீ தோண்டிக் கொண்டிருக்கிறார்.
ஒரு பெண் எழுத்தாளர் இன்னொரு பெண்ணியல் கவிஞரோடு பின்னிக் கிடக்கிறார்.

இவையாவது  பரவாய் இல்லை.. ஐயா

ஆனால் ... நேற்று ஒரு சிரேஷ்ட எழுத்தாளரின் முக நூல் திறந்தேன் .. பாருங்கள். ... அதாவது 2014 ஜூன் மாதம் எழுத ஆரம்பித்து  ஜூலை மாதமே  கவிதை தொகுதி போட்டுவிட்ட   அந்த சிரேஸ்ட  மூத்த எழுத்தாளர்   தனது முக நூலில் எழுதி வருகிற சுய சரிதையில் வளரும் இளைய எழுத்தாளருக்கு சொல்லும்  அறிவுரைகளை வாசித்து நமது குண்டியிலிருந்து  குண்டிக்காய்  வரை குலுங்கிச் சிரிக்கையில் .... போதாதென்று  கீழே அவரது முதல் படைப்பாம் .....ன்னிப்  ப (பு) டைப்பையும் காட்சிப் படுத்தி இருந்தார் பாருங்கள்... அடடா

என் பிறசரும் சீனியும் ஹாட்டும் எகிறிப்  போய் ஆளே  ஒரு சாதி ஆய்ட்டேன் ....

இனி பேஸ்புக் பக்கமே  மௌஸ் வைக்கக் கூடாது என முடிவு கட்டினேன் ...

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கருத்துச் செறிவும் கனதியும் கண்ணுக்கு அழகாகவும்  கண்ட உங்கள்  நட்ட விழி  முகநூல் ஒரு  நிவாரண மாத்திரையாக இருந்தது.. அருந்திக் குணம் அடைந்தேன்.... அன்பான வாழ்த்துக்கள் ...   இனி   தொடர்வேன் ...

தீரன் ஆர் எம்  நௌஷாத்
09.12.2014

Saturday, November 22, 2014

தெற்கே உதித்த சூரியன்!


 - 07 -

 மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் மறைந்து 12 வருடங்கள் தாண்டிய பின்னர் சமூகத்தில் அவரது இழப்பு ஏற்படுத்திய இடைவெளியின் விசாலம் உணர்ந்து 'தெற்கில் உதித்த சூரியன்' என்று இப்பத்திக்குத் தலைப்பிட்டிருக்கிறேன். 15.07.2002 அன்று இவ்வுலகை நீத்த  அவர்கள் பற்றி அன்னாரது பத்திரிகைத் தோழரான சிதம்பரப் பிள்ளை சிவகுமார் ஆற்றிய நினைவுரையை 'யாத்ரா' பத்தாவது இதழில் பிரசுரித்து அதற்குத் 'தெற்கில் மறைந்த சூரியன்' என்று தலைப்பிட்டிருந்தேன்.

20 வருடங்களுக்கு முன்னர் அவர் தொகுத்து வைத்திருந்த அவரது சிறுகதைத் தொகுதி 'வளவையின் மடியிலே' என்ற மகுடத்தில் கடந்த 2.11.2014 அன்று அவரது புத்திரரான பத்திரிகையாளர் பாஹிமின் முயற்சியால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஓர் ஆசிரியராக, கவிஞனாக, கலைஞனாக, சிறுகதையாளராக, நாவலாசிரியராக, பாடலாசிரியராக, பாடகராக, பத்திரிகை ஆரிசியராக, சமூகப்போராளியாக என்று ஏகப்பட்ட பக்கங்களுடன் ஓயாமல் உறங்காமல் உழைத்த சகலகலா விற்பன்னர்தான் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள்.



ஒரு தனிமனித இயக்கமாக நின்று சமூகத்தளத்திலும் இலக்கியத் தளத்திலும் இவரைப் போன்று இயங்கிய ஒருவரைக் கடந்த காலமும் கண்டிருக்கவில்லை, நிகழ்காலமும் காணவில்லை. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும் சவால்களுக்கும் இன்று முஸ்லிம் சமூகத்திலிருந்து குழு ரீதியான முறைமையிலேயே பதில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாழ்ந்த காலம் முழுவதும் இதை அவர் தனியொருவனாய்த் தைரியமாய்ச் செய்து வந்தார்.

அவர் ஈடுபட்ட துறைகள் எல்லாவற்றிலும் துலங்கினார். அவர் எழுதிய 'வெண்புறாவே' பாடல் அதற்கு அழியா வரம்பெற்றது. தேசியப் பத்திரிகைகளில் பிரசுரிக்க முடியாத ஆக்கங்களை அவர் தனது 'அஷ்ஷூரா' பத்திரிகையில் பிரசுரித்து என்னைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தினார். தினகரன் பத்திரிகையில் 'புதுப் புனல்' என்ற பக்கத்தின் மூலம் நூற்றுக்கணக்கான இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வளர்த்தெடுத்தார்.

சமூகத்தை ஏமாற்றிப் பிழைத்தல், மார்க்கத்தை வைத்து வயிறு வளர்த்தல், ஆஷாடபூதித் தனம், பெண் கல்வி மறுப்பு, சிந்திக்காத மூடப் போக்குகள் போன்றவற்றை நேரடியாகச் சாடினார். ஒரு சமூகத்தின் அடையாளம் மார்க்கத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை, அதன் கலை, கலாசார அம்சங்களில் தங்கியிருக்கிறது என்பதை மிக உறுதியாக அவர் நம்பினார். அதற்காகச் செயல்பட்டார். மரணத்துக்குப் பிறகும் கலை, இலக்கியத்தோடு சார்ந்த சமூகாபிமானிகளுக்கு ஓர் சிறந்த முன்னோடியாகவும் கையிலெடுக்கத் தக்க ஆயுதமாகவும் அவரை நினைக்கத் தோன்றுவது இதனால்தான். சமூகத்தில் குழப்பத்தையும் பிரச்சகைளையும் ஏற்படுத்தியவர்களைச் சாடியதால் அவரையே ஒரு குழப்பவாதி என்று சித்தரிக்க முயன்றது பெரிய வேடிக்கை!

ஓர் அறைக்குள் இடது புறம் பத்திரிகைக் குவியல், வலது புறம் புத்தகக் குவியல், மேசையில் விரித்தபடி இருக்கும் வெள்ளைத்தாள்களும் பேனைகளுமாய் அமர்ந்திருந்து ஷம்ஸ் அவர்கள் சமூகத்தில் கலை, இலக்கியத்தைப் பயன்படுத்தி, அதிர்வுகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தினார். எல்லாவற்றையும் விட சிந்தனை மாற்றத்தை நோக்கிச் சமூகத்தை அழைத்துச் செல்ல அவர் மிகவும் பிரயாசைப் பட்டார். மனிதாபிமானத்தையும் சகோதரத்துவத்தையும் சக வாழ்வையும் கட்டி எழுப்புவதற்கு கலையும், இலக்கியமும் பெரும் பங்களிப்புச் செய்யக் கூடியவை என்று நம்பினார். அப்படியே இயங்கினார்.

புதிய தலைமுறைக்கு எம்.எச்.எம்.ஷம்ஸ் என்ற ஆளுமையையும் அவர் ஏற்படுத்திய தாக்கங்களையும் பற்றிப் பெரிய அளவில் தெரியாது. அவரது 'கிராமத்துக் கனவுகள்' நாவல் மற்றும் தற்போது வெளிவந்திருக்கும் சிறுகதைத் தொகுப்புமே அன்னாரின் இலக்கியச் சொத்துக்களாகச் சமூகத்துக்குக் கிடைத்திருக்கின்றன. பல நூல்களை வெளியிடும் அளவு எழுத்தும் பல இயக்கங்களின் செயற்பாடும் தன்னகத்தே கொண்ட அவரை முழுமையாக சமூகத்துக்கு முன் கொண்டு வர வேண்டுமானால் அவரது அனைத்துப் படைப்புகளும் (முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக எழுதியோருக்கு அவர் கொடுத்த மறுப்புக் கட்டுரைகள் உட்பட) வெளிக்கொண்டு வரப்படல் வேண்டும். அவற்றை வெனிக் கொண்டு வரும் கடமை அவரது பிறந்த ஊருக்கும் சமூகத்துக்கும் உரியது என்று அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

மர்ஹூம் ஷம்ஸை அறியாதவர்கள் மற்றும் அவருடன் பழகாதவர்கள் அவரது செயற்பாடுகளையும் இயங்கியலையும் பார்த்து, அவரைக் கடும் கோபக்காரனாக, இடைவெளி வைத்துத் தன்னைத் தனித்துவப்படுத்தும் ஒரு கனவானாகக் கற்பனை செய்யக் கூடும். அப்படியெனில் அந்தக் கற்பனை மிகவும் பிழையானது.

அவரது சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் அவர் சொல்வதைப் பாருங்கள்...

'நான் என் மனுஷியின் பெயரிலேயே சிறுகதை எழுதினேன். நான் பாஹிராவைக் கைப்பிடித்த புதிதில்தான் 'இன்ஸான்' வெளிவந்தது. கல்யாணப் பரிசு படத்தில் தங்கவேலுவுக்கு ஏற்பட்ட நிலை தனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே மனுஷியின் பிரார்த்தனை!'

(மீள்பார்வை இதழ் - 306)

Tuesday, November 11, 2014

வற்றாத கடலில் ஓயாத அலைகள்!


 - 06 -

ரிஹாம் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி வழங்குனர். பழுப்புத் தலைமுடி கொண்ட  இளம் எகிப்தியப் பெண். மணிக்கட்டு வரை மறைக்கும் ஒரு கருப்பு நிற டீஷேர்ட் மாதிரியான மேலுடை அணிந்து ஒரே பார்வையில் அழகிய நாகரிகப் பெண்ணாகத் தோற்றமளிக்கிறார்.

அன்றையத் தொலைக் காட்சி  நிகழ்ச்சிக்கு நேர்காணலுக்காக வந்திருப்பவர் மிகவும் வில்லங்கமான ஒரு பெண்மணி. நோஹா முகம்மத் சலீம் என்ற 53 வயதான அந்தப் பெண்  பழுப்பு நிறமான துணியினால் முகத்தையும் தலையையும் மறைத்திருக்கிறார்.

பேட்டி ஆரம்பமாகிறது.

ரிஹாம் வினாவை விடுகிறார். ' நீங்கள் வழமையாக ஹிஜாப் அணிவதில்லை என்று நினைக்கிறேன்.' பதில் 'ஆம், அணிவதில்லை!' என்று வருகிறது. 'அப்படியயானால் இப்போது ஏன் அணிந்திருக்கிறீர்கள்?' என்ற மறுவினாவுக்கு 'நான்என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவோ என்னைக் கொல்வதற்கான வாயப்பளிக்கவோ நான் விரும்பவில்லை. மார்க்கப்பற்று மிக்க எனது குடும்பத்தினரைச் சங்கடப்படுத்தவோ காயப்படுத்தவோ நான் விரும்பவில்லை' என்று பதில் வருகிறது.

'முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மேதை! ஒரு சீர்திருத்தவாதி, தத்துவவாதி, கட்டளையாளர் மற்றும் சிறந்த மனிதராக இருந்தவர். குர்ஆனை அவரே எழுதினார். தூது இறங்கியதும் கிடையாது. ஜிப்ரஈல் என்று யாருமில்லை' என்கிறார் நோஹா. மிகவும் தெளிவாகவும் சாமார்த்தியத்தோடும் வினாத் தொடுக்கும் ரிஹாமுக்குள் கோபம் பரவுகிறது. 'முகம்மத் (ஸல்) அவர்கள் இறைதூதர் இல்லையென்றும்  பரிசுத்தத் தூது இறங்காத போது அவர் எப்படித் தூதராக முடியும்?என்றும் ஜிப்ரஈல் ஒரு கற்பனைப் பாத்திரம்' நோஹா சொல்லும் போது ரிஹாம் கோபத்தின் உச்ச நிலைக்குச் செல்கிறார்.

நோஹாவின் கதை விசித்திரமானது. 24 வயதில் திருமணம் செய்த அவருக்கு 30 வயது வரை எல்லாம் சுபமாகவே இருந்தது. 30 வயதில் இஸ்லாம் பற்றிய விநோதமான சிந்தனைகள் அவரில் தோன்றவே கணவருடன்  சென்று வைத்தியரைப் பார்த்தார். அவ்வாறான சிந்தனை குறைந்தது. ஆனால் மருந்து மூளையைச் சிதைத்து விடுமோ என்ற பயத்தில் மருந்தை நிறுத்தினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறியது. உனக்கும் எனக்கும் சரிவராது என்று கணவன் பிரிந்து போய் விட்டார். நோஹாவின் இரண்டு மகன்களும் கூட அவரது கருத்துக்களை ஏற்கவில்லை. தனது மனோ நிலை சரியாகவே இருக்கிறது என்பதை நிரூபிக்க நோஹா ஒரு வைத்திய சான்றிதழைப் பெற்று வைத்திருக்கிறார். ஆனால் குடும்பத்தவரோ 'டாக்டர் பிழையாக உனக்கு அதை எழுதித் தந்திருக்கிறார்' என்கிறார்கள்.

இந்த நோஹாவுடன்தான் ரிஹாம் சூடுபறக்க விவாதித்துக் கொண்டிருந்தார். 'கை வெட்டுவது மனிதாபிமானமற்றது' என்கிறார் நோஹா. 'ஷரீஆ சட்டம் அமுல் செய்யப்பட்டு மதுச்சாலைகளையும் காபரே கிளப்புகளையும் உடைத்தெறிய வேண்டும் அப்போதுதான் யாவும் உருப்படும்' என்று கோபத்தோடு பதில் சொல்கிறார் ரிஹாம். தலை மூடாத ரிஹாம்!

'ஏன் நீ தொழுவதில்லை?' என்ற ரிஹாமின் கேள்விக்கு 'நான் கடந்த காலத்தில் தொழுதேன், ஆனால் எனக்கு இறைவன் பதிலளிக்கவில்லை' என்று பதில் வர 'இப்படிப் பேசும் உனக்கு எப்படிப் பதில் வரும்?' என்று மறுவினாவைத் தொடுக்கிறார் ரிஹாம். வார்த்தைகள் சூடேறக் கடும் கோபம் கொண்ட ரிஹாம் 'நீ இங்கிருந்து போய் விடு!' என்று சொல்லிக் கலையகத்திலிருந்து நோஹாவைத் துரத்தி விடுகிறார்.

மற்றொரு காட்சி. தலை மூடாத அதே ரிஹாம். இம்முறை மார்க்க அறிஞர் யூஸூப் பத்ரி.

நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன் ஷெய்க் யூஸூப் பத்ரி, தலையை மூடிக்கொள்ளுமாறு ரிஹாமிடம் கோருகிறார். 'கலையகத்துக்கு வெளியே உங்களுடைய அன்றாட வாழ்வில் தினமும் தலையை மூடாத ஆயிரக் கணக்கான பெண்களோடு நீங்கள் உறவாடுகிறீர்கள். தொலைக் காட்சியில் உங்களை நேர்முகம் செய்வதற்காக மட்டும் நான் தலையை மூட வேண்டுமா?' என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார் ரிஹாம்.

ஆனாலும் ரிஹாம் தலையை மூடியபடி பேட்டியை ஆரம்பிக்கிறார். மந்திரித்தல், பேயோட்டுதல் என்ற பெயரில் சில ஆண்கள் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதைப் பற்றிக் கேட்ட போது, 'தலைப்பை மாற்று' என்கிறார் ஷெய்க் பத்ரி. 'பொதுமக்கள் விடயத்தைத்தான் நான் பேசுகிறேன், பதில் சொல்லுங்கள்' என்று கேட்க, பத்ரி கோபம் கொண்டு பேசுகிறார். 'நீங்கள் கோபம் கொண்டு எனக்கு ஏசுவதற்காகவா  எங்களிடம் 1000 பவுண்கள் வாங்கிக் கொண்டு நேர்முகத்துக்கு வந்தீர்கள்?' என்று ரிஹாம் கேட்கிறார். அதற்குப் பதில் சொல்லாமல் கோபத்தில் 'தொலைக் காட்சி நிலையத்தையே மூடிவிடும் வேலையைச் செய்வேன்' என்று பயங்காட்டுகிறார் ஷெய்க் பத்ரி. 'எங்கள் பணத்தையும் வாங்கிக் கொண்டு எங்கள் அலைவரிசையை மூடிவிடுவேன் என்கிறீர்களே.. இதென்ன நியாயம்?' என்று கேட்டபடி தலைத் துணியை நீக்குகிறார் ரிஹாம்.

ஷெய்க் பத்ரி, 'முதலில் தலையை மூடு. இல்லாவிட்டால் நான் போய் விடுவேன்' என்கிறார். 'நான் மூடமாட்டேன், நீங்கள் இருங்கள். நானே போகிறேன்' என்று கலையகத்திலிருந்து வெளியேறுகிறார் ரிஹாம்.

இந்த இரண்டு காட்சிகளையும் பார்த்த போது எனக்குள் பல பல்புகள் ஒளிர்ந்தன. பிரதான பல்பு வெளிச்சத்தில் எனக்கு விளங்கியது என்னவென்றால் -

 இரண்டு கோடி முஜத்திதுகள் தோன்றினாலும்  ஈஸா (அலை) இறங்கும் வரை இவ்வாறான பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்பிருக்காது என்பதுதான்!

Monday, November 10, 2014

அவனும் அவளும்!


மராம் அல் மஸ்ரி
(சிரியா)


ஒரு வீடு
பிள்ளைகள்
அவனுக்கு அன்பு செலுத்தும்
ஒரு மனைவி;..
இதற்கு மேல்
அவனுக்கு எதுவும் வேண்டியதில்லை

ஆனால்
ஒருநாள் 
அவன் கண்விழித்த போது
அவனுடைய ஆன்மா
வயதாகி விட்டதை
அறிந்து கொண்டான்!

ஒரு வீடு
பிள்ளைகள்
அவளுக்கு அன்பு செலுத்தும்
ஒரு கணவன்..
இதற்கு மேல்
அவளுக்கு எதுவும் வேண்டியதில்லை

ஆனால்
ஒருநாள் 
அவன் கண்விழித்த போது
அவளுடைய ஆன்மா
ஒரு யன்னலைத் திறந்தது
பின்னர்
பறந்து விட்டது!


தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்

Monday, November 3, 2014

வளவையின் மடியிலே...


பன்முகக் கலைஞரும் எழுத்தாளரும் கவிஞருமான மறைந்த எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களது சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு “வளவையின் மடியிலே”  நேற்று ஞாயிறு (02.11.2014) அன்று கொழும்பு - 6, பெண்கள் ஆய்வு மையக் கேட்போர் கூடத்தில் கவிஞர், எழுத்தாளர் அல் - அஸூமத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


பிரபல எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


தலைமையுரை - கவிஞர் அல் அஸூமத் அவர்கள்


நூல் குறித்த கருத்துரை - திருமதி வசந்தி தயாபரன் அவர்கள்


எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களது இலக்கியப் பட்டறையில் வளர்த்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான இளையநிலா பஸ்மினா அன்ஸார் கவிதை படித்தார்.


கருத்துரை - அஷ்ரஃப் சிஹாப்தீன்


கருத்துரை - ஜவாத் மரைக்கார்


சிறப்புரை - கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்

முதற்பிரதி கொடகே நிறுவனர் சரிசுமண கொடகே அவர்களால் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Wednesday, October 29, 2014

அழுகுரல்!


 - Lahja Kauluvi -
Namibia

தமிழில்
அஷ்ரஃப் சிஹாப்தீன்


அது ஓர் அழுகுரல்
ஆம் அழுகுரல்..
தெருவில் நிற்கும் ஒரு பெண்ணின் அழுகுரல்
யாராவது அதைச் செவிமடுப்பார்களா?
யாராவது சென்று பார்ப்பார்களா?
கலகக் கும்பலொன்று அவளைத் தாக்கிச்
சாக விட்டிருக்கிறது...
அவள்
வீட்டிலேயே இருந்திருக்கலாம்!

அது ஓர் அழுகுரல்
ஆம் அழுகுரல்..
எனக்கருகே இருக்கும்
ஒரு பெண்ணின் அழுகுரல்
யார் அதைச் செவிமடுப்பார்?
யார் வந்து பார்ப்பார்?
அவளுடைய உதடுகள்  கிழிக்கப்பட்டுள்ளன
அவளுடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது
அவளுடைய கணவன் சொன்னதை
அவள் ஏற்றுக் கொண்டிருக்கலாம்!

அது ஓர் அழுகுரல்
ஆம் அழுகுரல்..
எனது நெருங்கிய நண்பியின் அழுகுரல்
யாராவது அதைச் செவிமடுக்க வேண்டுமென
விரும்புகிறேன்
யாராவது போய்ப் பார்க்க வேண்டுமென
விரும்புகிறேன்
அவமானத்தால் போர்த்தப்பட்டிருக்கிறாள்
துளித்துளியாய்ச் சேரும் சோகங்களுடனிருக்கிறாள்
அவளுடைய கண்களை எதிர்கொள்ள
என் கண்களுக்கு முடியாதிருக்கிறது
அவளது நோவுகள் கூர்மையாளவை
என்னுடையவற்றைப் போலவே 
உணர வைப்பவை

அது ஓர் அழுகுரல்
ஆம் அழுகுரல்..
அது எனது பெண்; குழந்தையின்
அழுகுரல்
யாராலும் அதைக் கேட்க முடிகிறதா?
யாராவது வந்து பார்ப்பார்களா?
அவளது நம்பிக்கைக்குத் துரோகமிழைக்கப்பட்டது
ஒரு வார்த்தையும் சொல்ல முடியவி;ல்லை
அமைதியாயிரு மகளே 
அமைதியாயிரு இப்போது
உனது கனவுகளோடு அமைதியாயிரு

அது ஓர் அழுகுரல்
ஆம் அழுகுரல்..
இது எனது சொந்த அழுகுரல்
யாராவது எனக்குச் செவிமடுங்கள்
யாராவது வந்து பாருங்கள்
எனது உடல் முழுக்கத் தழும்புகள்
இதற்கு மேலும்
நான் அமைதியாக இருக்க முடியாது

இதற்கான அடையாளங்கள் தெரிந்த போதே
நான் பேசியிருக்க வேண்டும்!


கோலத்தைச் சிதைக்கும் கோடுகள்!


 - 05 -

மிகக் குறைந்த நபர்களே வாசிக்கும் நூல்களில் இருந்த 'இஸ்லாமிய அரசியல்' என்ற பதத்தை நடைமுறை அரசியலில் முதன் முதலில் பேச விழைந்தவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள்.

அக்காலப் பகுதியில் முஸ்லிம்களை ஒன்றுபடுத்த அந்தப் பதம் ஒரு குறிப்பிட்ட வீதம்; பயன்பாடுடையதாக இருந்தது. இஸ்லாமிய அரசியல் என்பது என்ன என்பது பற்றிய பொதுவான தெளிவு இன்னும் சரியாக ஏற்படாத நிலையிலும் இன்னும் சிலர் அதே வார்த்தையை முன் வைத்து தமது அரசியலை முன் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.

நேர்மையானதும் மக்களை மையப்படுத்தியதும் தன்முனைப்பற்றதுமான ஓர் அரசியலை முன்னெடுப்பது என்பதை எப்படி வியாக்கியானப்படுத்தினாலும் கூட, மர்ஹூம் அஷ்ரப் போய் நின்ற 'முஸ்லிம் அரசியல்' என்ற எல்லைக்குள்தான் நின்றாக வேண்டியேற்படும். இஸ்லாமிய அரசியல் என்று சொல்லி ஓர் அரசியலை முன் கொண்டு செல்பவர்கள் - அவர்கள் நேர்மையானவர்களாக, இறையச்சம் கொண்டவர்களாக, மக்களை மையப்படுத்தியவர்களாக இருந்த போதும் கூட, சாக்கடையாகிக் கிடக்கும் பொது அரசியல் நீரோட்டத்தோடு இணைந்தே செல்ல வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

பன்மைத்துவ சமூக அமைப்பில் இஸ்லாமிய அரசியலை முன்கொண்டு செல்வது குறித்து மார்க்கத்தையும்; சர்வதேச அறிஞர்களையும் படித்த ஒரு சில இளைஞர்கள் இப்போது பேச ஆரம்பித்துள்ளார்கள் என்பதை  உணர முடிகிறது. அவர்களிடமிருந்து வெளிவரும் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு சமூகத்துக்கு முன்னால் புரிகின்ற பாஷையில் வைக்கப்படுவதற்கு இன்னும் காலம் செல்லக் கூடும்.

ஒரு காலப்பிரிவில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தமக்குரிய அரசியல் பிரதிநிதி இல்லாமலே முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வந்திருக்கிறது. அரசியலைப் பொறுத்தவரை கால்கள் இல்லாத ஒரு பிச்சைக்காரனின் நிலையில் இந்த சமூகத்தின் நிலை இருந்து வந்துள்ளது. அநேகமாகவும் பெரும்பான்மைச் சிங்கள, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்து வந்தார்கள். அப்போதும் கூடச் சமூகம் பிரதான இரண்டு கட்சிகளாகப் பிளவு பட்டுக் கிடந்தது.

முஸ்லிம்களுக்கான அரசியல் என்று அஷ்ரப் அவர்கள் களத்தில் இறங்கிய போது ஒரே நாளில் அவரை மக்கள் தோள்களில் சுமந்து விடவில்லை. ஏற்கனவே பெரும்பான்மைக் கட்சிகளில் பிளவு பட்டுக் கிடந்தோரும் அவர்களின் எஜமானர்களும் அவரைத் தூஷித்தனர். துரத்தித் துரத்திச் சண்டித்தனங்கள் புரிந்தனர். ஆனால் தமிழ்ச் சமூகத்தின் துப்பாக்கி ஏந்திய விடுதலை வீரர்களது அழுத்தத்தின் காரணமாக நொந்து நூலாகிக் கிடந்த முஸ்லிம்களுக்குத் தமது எதிர்ப்பை அவர்களுக்குக் காண்பிக்க அஷ்ரப் ஒரு வடிகாலாக இருந்தார். ஆக அந்த உணர்வு, முஸ்லிம் சமூகம், இஸ்லாமிய அரசியல் என்ற பதம் யாவும் சேர்ந்து ஓர்அரசியல் எழுச்சியாக  ஏற்பட்டதைப் பார்க்கிறோம்.

பெருந்தொகை முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சியில் இணைந்த போதும் ஏற்கனவே பெரும்பான்மைக் கட்சிகளோடு இருந்த முக்கியஸ்தர்கள் அதே இடத்தில் இருந்து அசைந்து கொடுக்கவில்லை. அவர்கள் சொற்பத் தொகையினராகக் குறுகிய போதும் 'கிழிந்த பட்டுத்துணி' என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால் சமூகம் அரசியலைப் பொறுத்தவரை மூன்று பிரிவாகப் பிளவு பட்டிருந்தது.

அஷ்ரப் அவர்களின் மரணத்துக்குப் பின்னர் கட்சி அவ்வப்போது பிளவுண்டு பல பிரிவுகளாக மாறியது. அவ்வப்போது அமீபாக்களைப் போலக் குட்டிவிடும்  ஜமாஅத்துக்களைக் கொண்டு சமூகம் பிளவு பட்டது போல முஸ்லிம் அரசியலும் சமூகத்தைக் கூறு போட்டு வைத்திருக்கிறது.

அரசியல் புள்ளிகளில் சமூகமும் உரிமையும் பேசிக் கொண்டு சுகவாழ்வு வாழும் நபர்களுக்கு அப்பால் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு சில அரசியல்வாதிகள் பௌதீக வழங்களைப் பெற்றுக் கொடுத்து வந்திருக்கிறார்கள், வருகிறார்கள். ஒரு சில தஃவா இயக்கங்களும் அவற்றையே செய்து வருகின்றன. சமூகத்தின் அரசியலும் தஃவா இயக்கங்கள் ஒரு சிலவும் ஒரே புள்ளியில் இணையும் முதற் கட்டம் இது.

இரண்டாவது கட்டம்தான் மிகவும் இழிவானது. அது சகோதரத்துவ சன்மார்க்க சமூகத்தை முஸ்லிம் அரசியலாலும் இஸ்லாமிய தஃவாவின பெயராலும் பிரித்து வைத்திருப்பதுடன் நின்று விடாமல் தீராத சண்டையையும் ஓயாத சச்சரவையும் சமூகத்துக்குள் விதைத்து விட்டிருக்கின்றன. ஒரு தேர்தல் முடிந்த பிறகாவது எதிரணியைச் சேர்ந்த ஒரு சகோதருக்கு ஸலாம் சொல்லிக் கொள்ளும் நிலை இன்று வரை முஸ்லிம் சமூகத்தில் இல்லை. ஒரே இறைவன், ஒரே நபி, ஒரே வழி என்று முழக்கமிடும் அமைப்புசார் சகோதரர்கள் வௌ;வேறு வீடுகளுக்குள் இருந்த போதும் பொது இடத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுகிறார்கள்.

அரசியல் பிளவுகளாலும் இயக்கப் பிளவுகளாலும் சகோதரத்துவத்தைத் தொலைத்து விட்டுச் சண்டை பிடித்துக் கொண்டு பொலிஸ் நிலையங்களில் நியாயம் கோரி நிற்கிறார்கள்.

 நாம் முஸ்லிம்கள் என்று பெருமைப்படுகிறோம்... எங்களுடள் இணைந்து கொள்ளுங்கள், மனிதனுக்குரிய கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறோம் என்று பேசுகிறோம், எழுதுகிறோம்... நபிகளதும் ஸஹாபாக்களினதும் முன்மாதிரிகளை முன் வைத்துப் பேசுகிறோம். தோளோடு தோள் நின்று சகோதரத்துவம் வளர்க்கும் சமூகத்தின் பிரதிநிதிகளான நாம் பள்ளிவாசலுக்குள் கூட எதிரணி முஸ்லிமைக் கண்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒதுங்கிப் போய் நின்று தொழுகிறோம்...

புத்திசுவாதீனமுள்ள, ஓர் உண்மையான முஸ்லிமுக்கு இதை நினைத்துப் பார்க்கையில் வெட்கம் வரவேண்டும்!

(மீள்பார்வை - இதழ் - 304)

Friday, October 17, 2014

ஒரு நாடகமன்றோ நடக்குது!


- 4 -

ஒரு நாடகம் அன்றோ நடக்குது!

நான் சிறுவனாக இருந்த காலத்தில் பெருநாள் என்பது உணவிலோ பலகாரங்களிலோ இருந்திருக்கவில்லை.

காலையில் கிணற்றுக் குளிர் நீரில் குளிப்பாட்டப்பட்டுப் புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்கு அனுப்பப்படுவோம். அங்கு அமர்ந்திருந்து கோரஸாக தக்பீர் முழங்குவது முதற் கட்டம். இரண்டாம் கட்டமாக காலையிலேயே திரும்பிய பக்கமெல்லாம் ஊர் முழுக்க  நாகூர் ஈ.எம். ஹனிபாவின் தீனிசை முழங்க ஓடாவிமார் போட்டிருக்கும் தொட்டில் ஊஞ்சல் அல்லது சுழலூஞ்சலில் பத்துச் சதம் கொடுத்து ஆடுவது. தொட்டில் போல் அமைந்திருக்கும் ஒரு பெட்டிக்குள் இருவர் அமரலாம். நான்கு பெட்டிகளில் எண்மரை அமர்ந்தி ஓடாவியார் தனியொருவராய் ஊஞ்சலை இயக்கத் தொடங்குவார். அது இப்போது உள்ளது போல் மின்சார இயந்திரங்களால் இயக்கப்படுவது அல்ல, ஒரு வலிமையான மரப் பிடியினால் அமைக்கப்பட்ட பெரிய தடியை முன்னுக்கும் பின்னுக்குமாகத் தள்ளவும் இழுக்கவுமான தொழில் நுட்பத்தில்  ஊஞ்சல் சுழலத் தொடங்கும். அதைத் தனியொருவராக ஓடாவியார் இயக்குவார். இயக்கும் போது அவரது கைத் தசைகள் பொங்கி நரம்புகள் முறுக்கேறுவதை நான் பார்த்து வியப்பதுண்டு.

இதுதான் பெருநாள். மாலை நேரம் அந்த இடம் களைகட்டும். சிறார்கள் அங்கும் இங்கும் ஓடித் திரிவதில் புழுதி பறக்கும். அங்கு ஒலித்துக் கொண்டிருக்கும் ஸ்பீக்கரில் உள்ளுர் அறிவிப்பாளர்கள் முழங்குவார்கள். பாடத் தெரிந்தவர்கள் தம்மை ஈ.எம். ஹனீபா, ரீ.எம். சவுந்தரராஜன் என்று நினைத்துக் கொண்டு அவ்வப்போது பிளிறுவார்கள், சிலர் கிராஅத் ஓதுவார்கள். யாருக்கும் கொடுப்பனவு கிடையாது. தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு அது. அதைக் கூட ஒரு கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும்.

அன்றைய முஸ்லிம் கிராமங்கள் இப்போது போன்று அடர்த்தியாக இருந்திருக்கவில்லை. வருடத்தில் மூன்று முறை கொண்டாட்டங்கள் வரும். முகம்மது (ஸல்) பிறந்த தினம் அதில் ஒன்று. குர்ஆன் மத்ரஸாவில் ஆலிம் தரும் பச்சைப் பிறை பதித்த, ஈர்க்கில் ஒட்டப்பட்ட வெள்ளைக் கொடியை ஏந்தியபடி வெள்ளுடை, தொப்பியணிந்த சிறுவர்கள் ஸலவாத்துச் சொல்லியபடி ஊர்வலம் போவார்கள். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டுமே நான் மேற்சொன்னவாறு ஊஞ்சல் களேபரத்தோடு நடக்கும். அதிலும் நோன்புப் பெருநாளில் 'ஃபித்றா' வேறு கிடைப்பதால் கையில் சில்லறை நிறையும். சில வேளை இக் கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் தொடர்வதும் உண்டு.

பெரும் செலவில் ஊஞ்சல் அமைக்கும் ஓடாவிமாரின் வசந்த காலம் இது. சிறுவர்களது பெருநாள் மற்றும் சந்தோஷ காலத்தைத் தீர்மானிப்பவராக அவர்களே விளங்கினர்.

பெரும்பாலும் இரவில்தான் ஊஞ்சல் வெளியானது களைகட்டும். கிராமத்து ஆண்களும் பெண்களுமாக நிறைந்து காணப்படுவர். அதற்குக் காரணம் நாடகங்கள். இரண்டு ட்ரக்டர் பெட்டிகளை இணைத்துத் தயாரிக்கப்பட்ட ஒரு மேடையில் இரவில் நாடகங்கள் நடக்கும். பெண்கள் ஒரு புறமும் ஆண்கள் ஒரு புறமுமாக நின்று நாடகங்களை ரசிப்பார்கள். மறுபுறம் ஊஞ்சல் ஆடிக் கொண்டேயிருக்கும்.

அக்காலத்தில் ஓரளவு வசதியுள்ள வீடுகளிலேயே வானொலிப் பெட்டி இருந்தது. தொழிலுக்கு உழைத்தல் தவிர அன்றைய மனிதருக்குத் தமது ரசனைப் பசிக்கு எதுவும் இருந்திருக்கவில்லை. எனவேதான் பெருநாள் தீனிசையிலும் நாடகங்களிலும் மக்கள் வருடத்துக்கு இருமுறை மனதைப் பறி கொடுத்து மயங்கி நின்றார்கள்.

நாடகத்திலிருந்தே சினிமா வந்தது. சினிமா வந்த பிறகும் கூட நாடகத்தின் மவுசு குறையவில்லை. ட்ரான்சிஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நாடகங்களில் கட்டுண்டு கிடந்தவர்கள் ஏராளம்.

கிராமங்களில் முன்னரைப் போன்று பெருநாள்கள் இப்போது களைகட்டுவதில்லை. ஊஞ்சல் அமைப்பதற்கு நிலமில்லை. ஓடாவிகளின் மர வேலைத் தொழில் நிறுவனமயப் பட்டுவிட்டது. மரத் தளபாடங்களின் இடத்தை பிளாஸ்டிக், இரும்பு, அலுமினியம் ஆகியன பிடித்துக் கொண்டன. நாடகங்களைத் தொலைக்காட்சிகள் எடுத்துக் கொண்டன. வீட்டுக்குள்ளே குறுந்திரைகளில் வருடக் கணக்காக 'சீரியல்' ஓடுகின்றது. 'சீரியல்' நாடகங்கள் மனோ வக்கிரத்தை ஏற்படுத்தி மனச் சிதைவை ஏற்படுத்துகின்றன என்று சொல்லியிருக்கிறார் உளவியல் பேராசிரியரான மறைந்த பெரியார்தாசன் அப்துல்லாஹ்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கான ஒரு கலாசார மகிழ்வை நாம் இழந்து விட்டு நிற்கிறோம். இஸ்லாத்தினது நல்லம்சங்களை, குர்ஆன் போதனைகளை, நபிகளாரினதும் ஸஹாபாக்களினதும் வாழ்வியலை, மக்கள் கொள்ளவேண்டிய தெளிவை, தமது சமூகத்துக்கெதிரான சதிகளை எல்லாம் மக்கள் முன் இலகுவாக எடுத்துச் சொல்லக் கூடிய அற்புத சாதனம்தான் நாடகம். ஆனால் அது பற்றி யாரும் அக்கறைப் படுவதில்லை.

இந்த அற்புத ஊடகத்தின் வல்லமையை அறிந்த அமைப்பு ரீதியான தாஈக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  தான் பேச வேண்டும், மக்கள் முன் எனது பேச்சு தெளிவை ஏற்படுத்தும் என்ற 'நான்' என்ற எண்ணமும் தன்னை முற்படுத்தும் 'நஃப்ஸூ'ம் அவர்களை இதன்பால் திரும்ப விடுவதில்லை. ஏனெனில் நாடகத்தை மக்கள் முன் கொண்டு செல்பவர்கள் கலைஞர்களே தவிர பயான்கள் என்று 'பைலா' அடிப்பவர்கள் அல்லர். எனவே தாங்கள் இரண்டாம் பட்சமாகி விடுவோம் என்ற உள்ளார்ந்த அச்சம் இந்த ஊடகத்தைப் பயன் படுத்துவதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. தெருநாடகங்கள் நடத்தப்படுவது பற்றியும் அவை ஏன் நடத்தப்படுகின்றன என்பது பற்றியும் இவர்கள் அறியாமலுமில்லை.

இதைப் பற்றியும் இவர்களைப் பற்றியும் சிந்திக்கும் போதெல்லாம் நான் பழைய நாட்களுக்குத் திரும்புகிறேன். ஓடாவிமாரின் ஊஞ்சல் வெளி நாடகங்கள் பற்றி அறிவிப்பாளர் காலையிலிருந்து நாடகம் ஆரம்பமாகும் வரை அறிவித்துக் கொண்டேயிருப்பார்...

'..... வாழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்களே! வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நாடகம்! ........... குழுவினர் வழங்கும்   'ஓடிப்போனவள்' என்ற நாடகத்தை இன்றிரவு 10.00 மணிக்குக் காணத் தவறாதீர்கள்....!'

(மீள்பார்வை இதழ் 303)

Thursday, October 16, 2014

தியாகத் திருநாள் வானொலிக் கவிதை

01
பேதம் என்ற சொல் இல்லை 
பெரியோன் சிறியோன் என்றில்லை
மோதும் தேச முரணில்லை 
மொழியால் வேறு பாடில்லை
போதம் ஒன்றே கலிமாவால்
போர்த்திக் கொள்ளும் யாவர்க்கும்
சேதம் இல்லை என்றோதும் 
சிறப்பை ஓதும் திருநாளாம்!

02
ஆசியன் என்ற தாழ்வில்லை 
அறபிக் கென்றொரு இடமில்லை 
பேர்சியன் என்று பிரிப்பில்லை 
பெருங்கரு நிறத்துக் கிழிவில்லை
நேசங் கூட்டும் நெஞ்சோடு 
நெருங்கி ஒன்றாய்க் கூடுவதில்
பாசங்கொண்டால் ஒளி கூட்டும் 
பண்பார் ஹஜ்ஜூப் பெருநாளாம்!

03
கண்டம் என்ற கணிப்பில்லை 
கல்வி கொண்டோர் தனியில்லை
விண்ட வேந்தர்க் குயர்வில்லை 
வலியார் என்று வரம்பில்லை
அண்டி நின்று அல்லாஹ்வின் 
அணிசேர் மாந்தர் யாவருமே
கண்டார் நேசம் என்றாலே 
களிகூர்ந் திடுமிப் பெருளாம்!

04
கண்ணின் நிறங்கொள் கணிப்பில்லை 
கட்டை நெட்டை விதியில்லை
மண்ணைக் கொண்டு மதிப்பில்லை 
மாற்றணி அரசியல் மறுப்பில்லை
எண்ணம் எல்லாம் மானுடமே 
என்று கொள்ளும் மனம் வாய்க்கும்
திண்ணம் ஆகும் திற னோர்ந்தால் 
தித்திக் கும்இப் பெருநாளாம்!

05
அன்பு தவிர வேறில்லை 
அருகே நிற்போன் எதிரியில்லை
தன்னை மட்டும் நினைப்பதில்லை 
தாழ்ந்தோர் என்றோர் பிரிவுமில்லை
உன்னை மட்டும் நாடிவந்தேன் 
உள்ளம் கழுவத் தேடி நின்றேன்
என்பது மட்டும் எண்ணமெனில் 
ஏற்றம் இந்தப் பெருநாளாம்!

06
பெருமை கொள்வதில் பெருமையில்லை 
பேதமை கொண்டு பிரிவதில்லை
வெறுமையிவ் வாழ்வு சதமில்லை 
வேகும் நரகில் விருப்பில்லை
அருமை நபிகள் ஆணையிட்ட 
அன்பும் கருணையும் ஆளுவதில்
ஒருமைப் பட்டு உயர்வதெனில் 
ஒளிரும் இந்தப் பெருநாளாம்!

07
விட்டுக் கொடுப்பதில் வலியில்லை 
விருப்பைத் துறப்பதில் இழப்பில்லை
கட்டி ஆள்வதில் களிப்பில்லை 
கபுருவரை அவை வருவதில்லை
தொட்டுக் கொள்ள இப்றாஹீம் 
தூய நபிகள் காட்டியதைத்
விட்டுவிடாது வழிதொடரின் 
வெளிச்சம் இந்தப் பெருநாளாம்!

08
இன்னுயி ரெனினும் பெரிதில்லை 
இகத்தில் எதுவும் உயர்வில்லை
பின்னைய வாழ்வில் குறையில்லை 
பெருந்தியா கத்துக் கழிவில்லை
தன்னை இழக்க முன்னின்ற 
தகையோர் இஸ்மா யீல் நபிகள்
பண்ணிச் சென்ற முன்வழியைப் 
பழகின் பனிக்கும் பெருநாளாம்!

Monday, October 13, 2014

சிறப்புரை - “தோழியர்“ நூல் வெளியீடு



கடந்த 11.10.2014 சனிக்கிழமை பிற்பகல் அக்குறணை மத்திய கல்லூரி மண்டபத்தில் நடந்த சகோதரர் நூருத்தீன் எழுதிய “தோழியர்” நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரை இது.

நிகழ்வுக்குப் பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் தலைமை வகித்தார். அஷ்ஷெய்க் உஸதாத் எம்.ஏ.எம். மன்ஸூர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

எழுத்தாளரும் கவிஞருமான லறீனா அப்துல் ஹக் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அவரது முயற்சியிலும் லஃபீஸ் ஷஹீத், ஒமர் ஷரீப் ஹஸன் மற்றும் அஸன்பே வாசகர் வட்டத்தின் உதவியுடனும் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

Tuesday, September 23, 2014

மன்னரே முதல்வர்!


அங்கம் - 3

அண்மையில் எனது கலாசாலைத் தோழர் ஒருவரைச் சந்தித்த போது ஒரு சிங்கள நாவல் பற்றி விதந்தோதினார். நாட்டுக் கோழிகளை வைத்துத்தான் அந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அது பேசுவது பக்கா அரசியல்.

நாட்டுக் கோழிகளூடாக இலங்கை அரசியலைப் பேசும் அந்த நாவலைத் தான் தமிழுக்கு மொழிபெயர்க்கும் ஆவலில் இருப்பதாகச் சொன்னார். நாவலாசிரியர் மறைந்து விட்ட போதும் கதை இன்னும் வாழுகிறது. மொழி தாண்டிப் பறக்கும் வல்லமை கொண்டிருக்கிறது.

எழுத்தாளர்களும் கவிஞர்களும் குறியீடுகளாலும் உருவகங்களாலும் பேசுவது ஒன்றும் புதிய விடயமல்ல.  மக்கள் முன் வைத்தாக வேண்டிய தனது சிந்தனையை, தனக்கேற்பட்ட தெளிவை நேரடியாகச் சொல்லாமல் குறியீடுகள் மூலமும் உருவகங்கள் மூலமும் சொல்வது ஒன்றும் அதிசயமான விடயமில்லைத்தான். ஆனால் பயன்படுத்தப்படும் உத்திகள் சிறப்பாகவும் பொருத்தமாகவும் அமையுமிடத்து அது உரிய காலத்தின் நிலையை எந்தக் காலத்திலும் புரிந்து கொள்ளக் கூடிய வரலாற்று ஆவணமாக மாற்றம் பெற்று விடுகிறது. மட்டுமன்றி ஆதாரமாகவும் நல்லது அல்லதுகளையும், நல்லவர் அல்லவர்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பையும் தந்து விடுகிறது.

1945ம் ஆண்டு ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய 'விலங்குப் பண்ணை' இத்தகைய ஒரு நாவல். மேற்கத்தேய உலகின் அதிசிறந்த நாவல்களில் ஒன்றாகவும் 1923 முதல் 2005 வரையான காலப் பகுதியின் 100 சிறந்த நாவல்களில் ஒன்றாகவும் இந்நாவல் கருதப்படுகிறது. பன்றிகளை வைத்து எழுதப்பட்ட இந்நாவல் மக்கள் புரட்சி என்பது அதன் தலைவர்களாலேயே சிதைக்கப்படுவதை எடுத்துச் சொல்கிறது. ஜோஸப் ஸ்டாலினின் காலம் குறித்துக் கதை பேசுகிறது.

உலகின் எல்லா மொழிகளிலும் குறியீடுகளாலும் உருவகங்களாலும் ஏராளமான சிறு கதைகளும் எழுதப்படுகின்றன. நேரடியாகப் பேச முடியாதவற்றை மாற்று வார்த்தைகளைப் பயன்படுத்தி மிக அழகாகச் சொல்லப்படும் இக்கதைகளை மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு குவைத்திய சிறுகதை எழுத்தாளரான யூஸூஃப் கலீபா எழுதிய சின்னஞ் சிறு கதைகள் சிலவற்றைப் படிக்க முடிந்தது. அரேபிய அரசியல், அரேபியர் வாழக்கை போன்றவற்றையும் பொதுவான மனித இயல்புகள் ஆகியவற்றையும் குறித்து ஐந்து அல்லது ஆறு வார்த்தைகளுக்குள் அவரது கதைகள் பேசுகின்றன. ஆனால் ஒவ்வொரு கதையும் நமது சிந்தனையை விரிவாக்கிக் உள்ளார்ந்த காட்சிப் புலனை விரித்துச் செல்லும் சக்தி மிக்கவையாக விளங்குகின்றன.

அறபியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதை (இதைக் கதை என்று சிலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்) ஓர் உரையாடல். மகன் ஒரு வார்த்தை பேசுகிறான், தந்தை ஒரு வார்த்தை பேசுகிறார். கதை முடிந்து விடுகிறது.

'தந்தையே, நான் வாங்கிய ஓவியத்தில் நபிகளின் திருமுகத் தோற்றம் தெரிவதாக அவர்கள் சொல்கிறார்கள்!'

'இறைவன் உனக்கு அருள்பாலிக்கட்டும் மகனே, அதை கவர்னரின் படத்துக்கு இடது புறம் கொளுவி விடு!'

'ஓர் அராபியச் சட்டம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த இரண்டு வசனங்களும் பேசும் விடயம் மிகவும் ஆழமானது. அறேபிய அரசியலையும் அங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படும் மார்க்கத்தையும் சுருக்கமாகவும் இறுக்கமாகவும் தெளிவாகவும் இதைவிட அழகாகச் சித்தரிக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.

இன்னும் இதை விளக்கமாகச் சொல்வதானால் இறை தூதரும் இஸ்லாமும் மன்னர்களின் ஆட்சிக்கு முன்னால் இரண்டாம் தரத்திலேயே பார்க்கப்படுகின்றன என்பதை மாற்று வார்த்தைகளில் இந்த உரையாடல் அல்லது கதை பேசுகிறது. இங்கு மன்னர் என்று சொல்லாமல் ஆளுனர் என்றும் நபிகளாராகவே இருந்தாலும் கவர்னர் இருக்கும் இடத்திலல்லாமல் கவர்னருக்கு வலப்புறத்தில் கூட இல்லாமல் இடப்புறத்துக்குத் தள்ளப்படுவதன் மூலம் எல்லாமே மன்னர்தான் என்பதையும் சொல்லாமல் சொல்லி நிற்கிறது இக்கதை.

அறபிகளின் அரசியலை மட்டுமல்ல, உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் மத்தியில் இஸ்லாம் என்ற வாழ்க்கை வழியின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது என்பதைச் சற்று ஆழச் சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

இப்படி ஒரு கதை தமிழ் மொழியிலோ அல்லது அறபு அல்லாத வேறொரு மொழியிலோ வந்திருந்தால் இந்நேரம் எழுதியவரின் கதை கந்தலாகி இருக்கும். கதை என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக கதையில் பயன்படுத்தப்பட்ட வாக்கியங்களில் சர்ச்சனையும் அர்ச்சனையும் தொடங்கி ஒரு யுத்தமே ஆரம்பமாகியிருக்கும். நல்ல காலம், ஓர் அறபியே எழுதியிருக்கிறார்.

இல்லையென்றால் எழுதியவனை ஊர்விலக்குச் செய்வதற்கும் மார்க்கத்திலிருந்த விலக்கி வைப்பதற்கும் நிறையப் பேர் பத்வாப் பைகளைத் திறந்திருப்பார்கள்!

இதை முன் வைத்து எழுதியது கூட அமெரிக்கச் சதி என்று சொல்லாமல் இருந்தாலே உத்தமம்!

(மீள்பார்வை பத்திரிகைப் பத்தி)

Sunday, September 14, 2014

நூர்தீன் என்றொரு இசைக் காற்று!


(“இசைக்கோ” அல்ஹாஜ் என்.எம். நூர்தீன் அவர்கள் நேற்று இரவு 9.00 மணியளவில் இவ்வுலகைப் பிரிந்தார். ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது.
2008ம் ஆண்டு அன்னாரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை இது. அன்னாரைப் பற்றிப் பலரால் எழுதித் தொகுப்பட்ட நூலில் இக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. அன்னாரது இழப்பு மிகவும் மனத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு நல்ல கலைஞனாக, ஒரு சிறந்த மனிதாபிமானியாக வாழ்ந்து மறைந்து விட்டார் அல்ஹாஜ் நூர்தீன் அவர்கள்.)

அல்ஹாஜ் நூர்தீனுடனான எனது முதல் சந்திப்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நிகழ்ந்தது. எண்பதுகளின் நடுப் பகுதியாக அது இருக்கும். அப்போது அங்கு அறிவிப்பாளனாக நான் இருக்கவில்லை. அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் பங்கு கொள்வதற்கும் சென்று வந்த காலப் பகுதி அது. அவ்வாறான வேளைகளில் கலைஞர்ளைச் சந்திப்பது கூட மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தது.

இசைக் கலைஞராக மாத்திரமே நான் அறிந்திருந்த நூர்தீன் ஹாஜியாரை உழைத்து முன்னேறி ஓர் ஆல விருட்சமாக இருப்பவர் என்று பின்னாளில் எனக்குச் சொன்னவர் என் மனைவியின் தந்தையார்.   எனக்கு அவர் அறிமுகமான காலப் பகுதிக்கும் என் மாமனார் தந்த தகவலுக்குமிடையில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் இடை வெளி இருந்தது. இந்த நீண்ட காலப் பகுதிக்குள் ஒரு சந்தர்ப்பத்திலேனும் செல்வப் பகட்டையோ அதற்கேயுரிய அலட்சியத்தையோ அவரிடம் நான் கண்டதில்லை. ஒரு மெல்லிய காற்றுப் போல வந்து வெளியேறிப் போகும் மனிதராக அவரை நான் அப்போது அடையாளம் கண்டிருந்தேன். ஆனால் அவசியமாயின் அவர் சூறாவளியாகவும் இருப்பார் என்பதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நான் அறிந்து கொண்டேன். அது பற்றிப் பின்னால் சொல்கிறேன்.

நூர்தீன் ஹாஜியுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பத்தை சென்னையில் 1999ல் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஏற்படுத்தித் தந்தது. அங்குதான் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தோற்றுவிக்கப்பட்டது. நிதிச் செயலாளராக அவரை ஏகமனதாக நாம் தேர்ந்தெடுத்தோம். இலங்கை திரும்பியதும் வரலாற்றுப் புகழ் மிக்க (எங்களைப் பொறுத்தவரை) அதன் முதலாவது கூட்டத்தை அவருக்குச் சொந்தமான மருதானை - பவுன்டைன் ஹவுஸ் வீதியில் உள்ள அவரது வீட்டில் நடத்தினோம். 2002ல் கொழும்பில் நடத்தப்பட்ட உலக இஸ்லாமிய மாநாட்டுக்கான முதலாவது திட்டமிடல் கூட்டம் அதுவாக இருந்தது. ஒரு வருடத்துக்கும் மேலாக அந்த முகவரியே ஆய்வகத்தின் அலுவலக முகவரியாகவும் இருந்தது.

கொழும்பில் நடைபெற்ற மாநாடு அவருடனான நெருக்கத்தை அதிகரித்தது, எங்கள் அனைவரிலும் மூத்தவராக அவர் இருந்தார். அவரை சிரமப்படுத்தக் கூடாது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தோம். ஆனால் ஓர் இளைஞனின் உற்சாகத்தோடு அவர் தோள் கொடுத்து நின்றார். இம்மாநாட்டில் முக்கியமான சில பணிகளை அவர் ஆற்றினார்.

மாநாட்டில் கலைஞர்களுக்கு வழங்குவதற்கான விருதுச் சின்னங்களை வடிவமைத்துத் தருவதற்கு கொழும்புக் கோட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருந்தோம். கோட்டையில் சில பாதைகளில் எவ்வித வாகனமும் செல்ல முடியாது என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். அப்படியான ஓரிடத்தில்தான் அந்த நிறுவனம் அமைந்திருந்தது. பொதுவாக எந்தவொரு விடயத்துக்குச் செல்வதாக இருந்தாலும் எந்தத் தீர்மானத்தை எடுப்பதானாலும் அமைப்புக் குழு அங்கத்தவர்களில் நால்வருக்குக் குறையாமல் பங்கு கொள்வது வழக்கம். சில வேளைகளில் தனித்தனியே வௌ;வேறு விடயங்களுக்கு ஓடித்திரிய வேண்டிய கட்டாயங்களும் ஏற்பட்டதுண்டு. விருதுகளின் மாதிரி வடிவங்களை எடுத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சென்று திரும்பி காரியாலய அறைக்குள் நுழைந்த நூர்தீன் ஹாஜியைக் கண்டு அதிர்ந்து விட்டேன். திடீர் மழைக்குள் அகப்பட்டு நனைந்து கொடுகியபடி பொதியைச் சுமந்து வந்து அவர் நின்றிருந்ததைக் கண்டதும் என் மனம் மிகுந்த சஞ்சலத்துக்குள்ளானது. அந்தக் காட்சி இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை. மாநாடு சம்பந்தமாக யாத்ரா 18ல் நான் எழுதிய கட்டுரையிலும் இந்த விடயத்தை நான் பதிவு செய்திருக்கிறேன்.

இம்மாநாட்டில் அத்தனை கலைஞர்களுக்கும் கௌரவம் செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கிருந்தது. ஆனால் இலக்கியவாதிகளின் பட்டியல் மிக நீண்டதாக இருந்ததாலும்  வரையறுக்கப் பட்ட பணத் தொகைக்குள் யாவற்றையும் செய்ய வேண்டியிருந்ததாலும் இசைக் கலைஞர்களையும் நாடகக் கலைஞர்களையும் தவிர்ப்பது என்று முடிவெடுத்தோம். இசைக் கலைஞர்களுக்காக நூர்தீன் ஹாஜி போர்க் கொடி தூக்கினார். சாதக பாதகங்களை அவருடன் அலசி அசாத்தியம் பற்றிய புரிதல் ஏற்பட்ட போது இசையரங்கை தன்னிடம் ஒப்படைத்து விடும்படி வேண்டுகோள் விடுத்தார். நாம் மிக்க மகிழ்ச்சியடைந்தோம். அதன் விளைவாக எங்களுக்கு வேறு காரியங்களில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இதை விட முக்கியமான விடயம் நூர்தீன் ஹாஜி தனது சொந்தச் செலவில் இசைக் கலைஞர்களுக்கு ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவித்தார் என்பதுதான். இதனை அந்த அரங்குக்குள்ளேயே அவர் நிறைவேற்றித் தந்தார். இசைத் துறையோடு ஈடுபாடு கொண்ட நூர்தீன் ஹாஜி போல நாடகத்துறைக்கு ஒருவர் இருந்திருந்தால் நாடகக் கலைஞர்களையும் கௌரவித்திருக்கலாம் என்ற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது. அது ஒரு கவலையாக இன்றும் மனதுக்குள் உட்கார்ந்திருக்கிறது.

Thursday, September 11, 2014

எழுத்துச் சேவை


அங்கம் - 2

ஓர் எழுத்தாளராக இருப்பதில் பல அசௌகரியங்கள் உள்ளன.

விடிந்தால் இன்ன இன்ன வேலைகளை முடித்தாக வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வேளை இரவு எட்டு மணிக்குப்பிறகு ஓர் அழைப்பு வரும். நண்பரோ உறவினரோ ஆரம்ப வகுப்புகளில் கற்கும் தமது பிள்ளைகளுக்கு நாளையன்று நடக்கும் பேச்சுப் போட்டிக்கு ஒரு மூன்று நிமிடப் பேச்சு எழுதித் தர வேண்டும் என்ற வேண்டு கோள் அதிலிருக்கும். பெரியவர்களுக்குக் காரணம் சொல்லி மளுப்பி விடுவோம் என்பதால் அநேகமாகப் பிள்ளைகளே அழைப்பை எடுத்து 'அங்கள்....!' என்று ஆரம்பிக்கும். நாம் மடிந்து விடுவோம்.

நேர்த்தியாக விடயத்தைக் கோத்து எழுதுவதற்கு ஓர் எழுத்தாளராலோ ஊடகத்துறை சார்ந்த ஒருவராலோதான் முடியும் என்பதைச் சமூகம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. இதனால் பொதுநலக் கோரிக்கைகள், தன்னிலை விளக்கம் போன்றவற்றை எழுதுவதற்கு எழுத்தார்களை மக்கள் நாடுகிறார்கள். ஒரு விடயத்தை எழுத்தாளன் உரிய வார்த்தையில் சரியாகச் சொல்லுவான் என்பதைச் சமூகம் தெரிந்து வைத்திருந்தாலும் அவனைப் பயன்படுத்துவது அநேகமாகவும் நான் மேற்சொன்னவை போன்ற விடயங்களுக்கு மாத்திரம்தான். கிட்டத்தட்ட பார்த்துக் குரைக்கும் ஒரு நாய்க்கு எறிவதற்கு தெருவில் சட்டென ஒரு கல்லைத் தேடுவோமே.. அந்தக் கல்லின் கதிதான் எழுத்தாளரின் கதி!

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு முதியவர் வந்தார். காதி நீதிமன்றுக்கு தனது பேரன் சார்பில் ஒரு முறைப்பாடு எழுதித்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான்கைந்து ஆவணங்கள், சில வெள்ளைத் தாள்கள் கையில் இருந்தன. அவரை அதற்கு முன்னர் நான் கண்டதே கிடையாது.

அவரை அமர வைத்து விட்டு, 'என்னை உங்களுக்கு எப்டித் தெரியும்? என்று கேட்டேன். அவர் வேறு ஒரு நபரிடம் சென்றதாகவும் அவர் இன்னொரு நபரிடம் செல்லக் கேட்டதாகவும் அந்த நபர் தன்னால் சிங்களத்திலேயே எழுத முடியும் என்று சொல்லித் தமிழில் எழுதுவதானால் இன்னாரைச் சந்தியுங்கள் என்று என்னைச் சொல்லியிருக்கிறார்.

விபரத்தைக் கேட்கப் பெரியவர் சொல்லத் தொடங்கினார். நான் குறிப்பெடுத்துக் கொண்டேன். அடுத்த தினம் பிற்பகல் பெரியவருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதால் காலையில் அமர்ந்து எழுதத் தொடங்கினேன்.

' .............................. என்ற முகவரியில் வசிக்கும் ஜோன் ஆசீர்வாதம் என்ற முகம்மது ஷாமில் (அ.அட் இல.....) ஆகிய நானும் ....................... என்ற முகவரியில் வசித்த பாத்திமா ருக்ஷானா (அ.அட்டை இல ........) என்பவரும் ஒருவரை ஒருவர் விரும்பியிருந்த காரணத்தால் பெரியோர் முன்னிலையில் நான் புனித இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி எனது பெயரை முகம்மது ஷாமில் என்று மாற்றிக் கொண்டேன். இரண்டு குடும்பத்தினரதும் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி ..........ம் திகதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து நாங்கள் இருவரும் .......... என்ற மணப்பெண் வசித்த முகவரியில் வாழ்ந்து வந்தோம்.

மூன்று வருடங்கள் எவ்வித பிரச்சினையுமின்றி என்னுடன் வாழ்ந்து வந்த எனது மனைவி திடீரென ........ம் திகதியிலிருந்து காணாமல் போய்விட்டார். அவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்த ஒருவருடன் சென்று வாழ்வதாகப் பின்னர் தெரிய வந்ததையடுத்து ................ம் திகதி .......... பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருக்கிறேன். முறைப்பாட்டு இல.....................

கடந்த மூன்று வருடங்களான எனது மனைவி வேறு ஒருவருடன் சென்று வாழ்தனால் இனிமேல் அவருடன் எனது வாழ்க்கை இல்லை என்பதாலும் எனது எதிர்காலம் பற்றிய முடிவை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும் எனது மனைவியிடமிருந்து விவாக ரத்துப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.'

இந்தமாதிரியான காரணம் பற்றியோ வேறு காரணங்களை வைத்தோ விவாக ரத்துப் பெற்றுத் தரக் கோரும் கடிதம் எழுத என்னிடம் யாரும் வரவேண்டாம் என்று இத்தால் கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, August 28, 2014

மொழியாள்கை


மொழியாள்கை

தஃலிமுல் குர்ஆன் அல்லது தத்ரீஸூல் குர்ஆன், அதிலிருந்து அல்குர்ஆனின் இடது புறமாக ஆரம்பிக்கும் 5 ஜூஸ்உ களின் தொகுப்பு, பிறகு முழு குர்ஆன், தொழுகை ஷாபிஈ, மவ்லூதுகள் ஆகியவற்றுடன் குர்ஆன் பாடசாலை இஸ்லாமியக் கல்வி முடிவடைய சாதாரண தரம் வரை படிக்கும் பளீல் மௌலவியின் 'சாந்தி மார்க்கம்' நூலுடன் ஒரு காலத்தில் இந்த சமூகத்தின் இஸ்லாம் பற்றிய கல்வி பூரணத்துவம் பெற்றதாகக் கருதப்பட்டது.

இன்று சுருங்கிய உலகு, அரபு நாடுகளுடனான தொடர்பு, சமூகங்களின் வாழ்வியல் மேம்பாடு, சிந்தனை மேம்பாடு, பிறதேசக் கல்வி என்று ஒரு பரந்த வெளிக்கு நமது சமூகம் வந்துவிட்டது. இஸ்லாமிய வரலாறு, சட்டவாக்கம், பொருளாதாரம், நபிகளாரினதும் தோழர்களினதும் வாழ்க்கை முறைகள் என்று எல்லாத் துறைகளையும் நம்மவர்கள் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சாந்தி மார்க்கத்துடன் இஸ்லாம் பூரணத்துவம் பெற்ற காலத்தில் அமைதியாக வாழ்ந்த இந்த சமூகம் இன்று அறிவியலில் விரிவான விளக்கங்களை வைத்தே தன்னைப் பிரித்து மோதிக் கொண்டிருக்கிறது. நான் பேச வருவது இந்த விடயம் அல்ல.

இஸ்லாம் குறித்த, இஸ்லாமிய சிந்தனையாளர்கள் குறித்த, அவர்களது சிந்தனைகள் குறித்த, உலகளாவிய இஸ்லாமிய அரசியல் குறித்த, நவீன சட்ட விளக்கங்கள் மற்றும் ஆய்வுகள் குறித்த பலநூறு நூல்கள் இன்று கற்றறிந்த நமது சகோதர்களால் எழுதப்பட்டும் மொழிபெயர்க்கப்பட்டும் வருகின்றன. அவை விற்பனைக்கிடப்பட்டும் உள்ளன.

கல்வி என்பது தேடி அடைய வேண்டியது என்பது உண்மை. பலர் இன்று அவற்றைத் தேடிப் படிக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் இவ்வாறு எழுதப்படும் நூல்கள் சாதாரணப் பொதுமகனின் வாசிப்புக்கு, அவனது புரிதலுக்கு உகந்தவையாக இருக்கின்றனவா என்ற ஒரு பலமான கேள்வி எனக்குள் அவ்வப்போது எழுவதுண்டு. வலைப் பூக்களில், சமூக வலைத்தளங்களில், பத்திரிகைகளி கூட இவ்வாறான 'படித்தவர்'களுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்ட மொழி நடையுடன் பல ஆக்கங்களை நான் பார்க்கிறேன்.

சாதாரணப் பொது மகனை விட படித்தவர்களே 'ஈகோ' மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். ஒருவர் எழுதியதை மற்றொருவர் கண்டு கொள்வதுமில்லை, அது குறித்துப் பேசுவதுமில்லை, மற்றொருவருக்குப் பரிந்துரைப்பதும் இல்லை. ஆக இவ்வாறான பல நல்ல விடயங்கள் ஒரே வட்டத்துக்குள் சுழல்வதும் சாதாரண மக்கள் சமூகத்தைச் சென்றடைய முடியாமலும் இருப்பது குறித்து நாம் கவனம் செலுத்துவதுமில்லை.

சாந்தி மார்க்க இஸ்லாத்தைப் பூரணப்படுத்தியிருந்த எனக்கு அடுத்த கட்ட நகர்வைத் தந்தவை மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் குத்பாப் பிரசங்கங்களின் தொகுப்பு நூல்கள். மிகச் சிறிய அளவில் அந்நாட்களில் பகுதி பகுதியாக அவை சிறு நூல்களாக விற்பனைக்கிருந்தன. இப்போது முழுத் தொகுப்பாகக் கிடைக்கிறது.  அவற்றிலிருந்து இஸ்லாம் குறித்த தெளிவைப் பெற்றுக் கொள்ள எந்த ஒரு சாதாரணப் பொது மகனாலும் முடியும். மிக இலகுவான முறையில் குழப்பமற்ற மொழி நடையில் அந்தத் தொகுப்பு அமைந்திருப்பதே அதற்கான காரணம் என்று நினைக்கிறேன்.

அந்நாட்களில் புதிதாக இஸ்லாத்துக்குக் கொண்டு வரப்பட்டவன் பற்றிய ஒரு கதை கிராமங்களில் நிலவி வந்தது. தர்மகர்த்தாவால் இஸ்லாம் மார்க்கம் அறிமுகம் செய்யப்பட்டு 'கத்னா' செய்த பிறகு அவனுக்கு இஸ்லாம் சொல்லிக் கொடுக்க முஅத்தினாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான. பள்ளிவாசலுக்குள் முஅத்தினாரின் மேற்பார்வையில் அவனது வேலை தொழுவது மட்டுமே. தஹஜ்ஜத் தொழுகையிலிருந்து முன் பின் சுன்னத்துத் தொழுகை, மேலதிக சுன்னத்துத் தொழுகைகள் ஈறாக இரவில் வித்ருத் தொழுகையில் அவனது இஸ்லாம் தினமும் முடிவடையும்.

இஸ்லாம் மார்க்கத்துக்கு வந்த அவன் மூன்றாம் தினம் எங்கிருந்து வந்தானோ அங்கேயே போய்ச் சேர்ந்து விட்டான். 'ஏன் திரும்பி வந்து விட்டாய்?' என்று அவனிடம் அவனது நண்பன் ஒருவன் கேட்ட போது,

'இஸ்லாத்தில் இருப்பது லேசான வேல இல்ல!' என்று பதில் சொன்னானாம்.

(மீள்பார்வை இதழ் - 300 -பத்திரிகை பத்தித் தொடர் - 01)

Thursday, August 21, 2014

பிஞ்சுகளின் நெஞ்சங்களில் தஞ்சமடைந்தவன்!


முகம்மத் அல் அரீர் தனது குழந்தையுடன்

- ரீஃபாத் அல் அரீர் -
தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
-------------------------------------------

எனது சகோதரர் முகம்மத் அல் அரீர் தனது வீட்டில் இருக்கும் போது இஸ்ரேலிய வான்படைத் தாக்குதலால் உயிரிழந்தான். 31 வயதான அவன் இரண்டு பிள்ளைகளின் தந்தை.

மூன்று தினங்களாக இரத்தம் வெளியேறி இறந்தானா அல்லது வெடி குண்டின் அதிர்வினால்  அல்லது அதன் சப்தத்தினால் இறந்தானா அல்லது இடிபாடுகளுள் சிக்கி இறந்தானா அல்லது இவையெல்லாம் சேர்ந்து அவன் மரணிக்கக் காரணமாய் அமைந்தனவா என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.

உண்மை என்னவெனில் நான் என் சகோதரன் முகம்மதை இழந்து விட்டேன்!

நான்கு வயதுடைய ரனீம், ஒரு வயது நிரம்பிய ஹம்ஸா ஆகிய அவனுடைய அழகழகான இரண்டு பிள்ளைகளும் தங்களது தந்தையை நிரந்தரமாகவே இழந்து விட்டனர். எங்களுடைய ஏழு வீடுகள் கொண்ட மாடி வீட்டையும் நாங்கள் இழந்து விட்டோம்.

நாலடுக்கு மாடிகள் என்ன... ஆயிரக் கணக்கான மாடிகள் இப்போது இங்கு அழிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் என்றைக்குமே கண்டிராத கொடூர ஆக்கிரமிப்பின் சாட்சிகளாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எங்களது பெற்றோரின் பிள்ளைகளுக்குள் நான் இரண்டாவது நபர். ஒரு பெண், நான் ஆண்களுக்குப் பிறகு ஐந்தாவதாகப் பிறந்தவன் முகம்மத். எனது பழைய ஞாபகங்களுக்குள் முகம்மத் பிறந்த நிகழ்வு மறக்க முடியாதது. அப்போது எனக்கு நான்கு வயது.

எனது சகோதரனுக்கு முகம்மத் என்று பெயர் வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட போது நான் அழுது ஆகாத்தியம் பண்ணி அதை மறுத்தேன். 'அவனுக்கு முகம்;மத் என்று பெயர் வைக்கக் கூடாது, ஹம்தா என்றுதான் பெயர் வைக்க விரும்புகிறேன்... ஆம் ஹம்தா!'

அவனை யாராவது முகம்மத் என்று அழைத்தால் எனது முழு மூச்சையும் பலத்தையும் ஒன்று திரட்டிக் கோபத்தில் சத்தமிடுவேன். எனது எதிர்ப்புக் கணக்கில் கொள்ளப்படாமல் அலட்சியம் செய்யப்படும் வரை நான் அப்படித்தான் நடந்து கொண்டேன். பிறகு பலரும் அவனை ஹம்தா என்றும் அழைக்கத் தொடங்கினார்கள். இந்தச் சொல்லும் முகம்மத் என்ற பெயரைச் சார்ந்ததுதான்! எல்லோரும் அவனை ஹம்தா என்று அழைக்கத் தொடங்கினார்கள். ஆனால் எனது கோபத்தைச் சட்டை செய்யாமல் எனது தந்தையார் மட்டும் அவனை முகம்மத் என்றே அழைத்து வந்தார்.

எப்போதும் ஹம்தாவின் நலனே எனது நோக்கமாக இருக்கும். அவன் எனக்கு மட்டும் சொந்தமானவன் போல... இன்னும் சொல்வதானால் அவனது பெயர் ஹம்தா என்று நிரந்தரமாக அழைக்கப்பட வேண்டும் என்றும் அவனை எனது மகனைப் போலவும் பார்த்துக் கொண்டேன்.

1983ல் பிறந்த ஹம்தா தயக்க சுபாவம் கொண்டவனாக இருந்த போதும் நகைச்சுவை உணர்வுள்ளவனாகவும் துணிவுள்ளவனாகவும் இருந்தான். அதிகமாகவும் அமைதியாக இருக்கும் ஹம்தா பேச ஆரம்பித்து விட்டால்  அவனை மிஞ்ச முடியாது.

2000 ம் ஆண்டு உருவான இன்திபாதாவின் போது அவனுடைய வாழ்வில் உண்மையான ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவனது பாடசாலை நண்பர்கள் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்ட போது மரண ஊர்வலத்தை முன் நின்று நடத்தும் பிரதான பாத்திரத்தை அவன் வகித்தான்.

மக்கள் தொடர்பாடலில் பட்டம் பெற்ற ஹம்தாவுக்கு பொது மக்களை அணுகும் முறை கைவரப் பெற்றிருந்தது. இரண்டாவது இன்திபாதா நடந்து கொண்டிருந்த போது காஸாவில் எங்கு சென்றாலும் 'ஹம்தா உங்கள் சகோதரனா?' என்று என்னிடம் கேட்குமளவு அவன் பிரபல்யம் பெற்றிருந்தான்.

உள்ளார்ந்த ஆச்சரியத்துடனும் ஒரு புன்னகையுடனும் தலையசைப்பேன். இவனை இந்த அளவுக்கு வேகம் கொள்ளச் செய்தது எது என்று எனக்குள் நானே கேட்டுக் கொள்வேன். தயக்க சுபாவமுள்ள எனது சகோதரன் ஜெரூசலத்திலும் ஷூஜாஇய்யாவிலும் பலஸ்தீனின் எல்லாப் பகுதிகளிலும் நடக்கும் அடக்கு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்யவும் வழி நடத்தவும் உயிர்த்தியாகிகளின் மரண ஊர்வலங்களை ஏற்பாடு செய்யவும் கவிதை நடை ஆர்ப்பாட்ட வார்த்தைகளை உரத்து ஒலிக்கவும் துணிந்து விட்டான் என்பதைப் பின்னர் உணர்ந்து கொண்டேன்.

பதினான்கு சகோதர உறவுகளுக்குள்ளும் தனித்தன்மை வாய்ந்தவனாகவும் படைப்பூக்கம் கொண்டவனாகவும் ஹம்தா விளங்கினான். 20 வயதை அடைந்ததும் அவனில் பெரும் மாற்றங்களையும் இயங்காற்றலையும் நான் கண்டேன். பொதுமக்கள் முன் லாகவமாகப் பேசும் அவனது திறன் காஸாவின் அல் அக்;ஸா தொலைக்காட்சியினால் நடத்தப்படும் 'நாளைய தலைமுறையை நோக்கி' நிகழ்ச்சியில் வரும் 'கார்க்கோர்' என்ற குறும்பு மிக்க கோழியின் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.

Monday, August 11, 2014

எந்த புத்தர்? யாருடைய பௌத்தம்?


ஆங்கிலத்தில்  - திஸரணீ குணசேகர
சிங்களத்தில் - ஹேமன்த ரணவீர
துட்டகைமுனு மன்னன் முதலில் தனது குடும்பத்தினருடனேயே போர் தொடுத்தான். மகாவம்சம் குறிப்பிடுவது போல, தனது இளைய சகோதரன் திஸ்ஸவுக்கு எதிராக போர் தொடுத்தான். தனது முடியைத் தான் தக்க வைத்துக் கொண்டதன் பின்னரே ஏனைய சிற்றரசர்களுக்கு எதிராகவும் கடைசியாக எல்லாள மன்னனுக்கு எதிராகவும் போர் தொடுத்தான். மகாவம்சத்தின்படி இந்த சிவில் யுத்தத்தில் ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியாயின. இங்கு பலியானவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆயினும் தனது சகோதர மதத்தவர்களை கொடூரமாகக் கொன்றொழித்தது தொடர்பில் மகாவம்சம் எதுவும் பேசாமலேயே இருக்கின்றது.

அங்கு துட்டகைமுனு எல்லாளன் போரில் காவுகொள்ளப்பட்ட உயிர்கள் பற்றியே வருந்திநின்றான் எனக் குறிப்பிடுகின்றது. இங்கு பௌத்த தேரர்கள் பின்னடையவோ பயப்படவோ தேவையில்லை என மன்னன் துட்டகைமுனு குறிப்பிட்டுள்ளான். “(யுத்தத்தில் ஆட்களை கொன்றதனால்) நீங்கள் இறைசந்நிதானம் செல்லும் வழியில் எவ்வித தடையும் ஏற்படப் போவதில்லை. நீங்கள் ஒன்றரை பேரை மட்டுமே கொன்றிருக்கிறீர்கள். ஒருவர் இறை சந்நிதானத்திற்குச் சென்றவர். அடுத்தவர் பஞ்சமா பாதகங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டவர். மற்றையோர் மார்க்கத்தைப் பின்பற்றாத போலி நம்பிக்கையுடையவர்கள். அவர்கள் மனித மிருகங்களாகவே கருதப்படுகின்றனர்” என்றிருக்கின்றனர். என்றாலும், அவர் பதவி மோகத்தினால் கொன்றொழித்த மக்கள் தொகையை எடுத்துப் பார்க்கும்போது இச்சான்றிதழ் செயலற்றுச் செல்லும். மகாவம்சம், “ஒரு யுத்தத்தில் ஏற்பட்ட மனித உள்வேதனையை ஒரு போலிவேஷமாகவே காண்கின்றது. கொன்றொழிக்கப்பட்டவர்களை மனித மிருகங்களாகவே வர்ணிக்கின்றது. அவர்கள் இறந்ததனால் எவ்விதப் பாவமும் ஏற்படுவதில்லை. அவர்கள் நேரடியாக இறை சந்நிதிக்குச் சென்றுவிடலாம்” என்ற போலி நம்பிக்கையை விதைக்கின்றது.

இந்த நம்பிக்கையை வலுப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் மகாநாம தேரருக்குப் பின்னணியில் சிலர் இருந்தனர். அவ்வாறு செய்வதற்குக் காரணம் இதுதொடர்பில் புத்தபெருமான் குறிப்பிடும் கருத்துக்கள் நன்கு தெளிவாகின்றமையேயாகும். ஓர் உயிரைக் கொல்வது (அதாவது மனிதனாயினும் விலங்காயினும்) மாபெரும் பாவமாகும். அப்பாவத்திலிருந்து எந்தவொரு முறையிலும் வெளியேற முடியாது.
சங்யுக்த நிகாயவில் காமினி சங்யுக்தவில் வருகின்ற யோதஜீவ சூத்திரத்தில், கிராமத் தலைவனான யோதஜீவ புத்தரிடம் “யுதத்த்தில் மரணிப்போர் தேவலோகம் (சுவனம்) அடைவார்களா?” எனக் கேட்கிறான். புத்தர் யோதஜீவ்வின் வினாவுக்கு மூன்று முறை பதிலளிக்காமல் மௌனம் காக்கிறார். மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் காரணமாக கீழ்வருமாறு பதிலளிக்கிறார் புத்தர்.

“யுத்தத்தில் எதிரியைத் தாக்குவதற்கு முற்படுகின்றவனுக்கு எதிரியைக் கொன்றொழிக்க வேண்டும், வெட்ட வேண்டும், அழித்தொழிக்க வேண்டும் என்ற சிந்தனையே இருக்கும். அவ்வேளை எதிரியைத் தாக்கிக் கொன்றொழித்தால் அவர் மீண்டும் நரகத்தில்தான் பிறப்பார்…” யுத்தத்தில் இறப்போருக்கு நடப்பது இதுதான். இதில் எவ்வித மாற்றமோ சிறப்போ கிடையாது. புத்த சமயத்தைக் காப்பதற்காக இறந்துபோவோர் சுவனத்தை அடைவர் என புத்தர் ஒருபோதும் சொல்லவில்லை.

மாற்றமுடியாத இந்த இயற்கை நியதி மகாநாம தேரருக்கும் அக்காலத்தில் இருந்த தாதுசேன மன்னனின் இராஜதந்திரங்களுக்குப் பொருந்துவதாக இல்லை. தாதுசேன மன்னன் மகாநாம தேரரின் பக்தனும் மருமகனுமாவான். மாமன் மருமகனை தன் கெட்ட காலத்திலேயே தன்னுடன் இணைத்துக் கொண்டான். இலங்கை 30 வருடங்கள் பாண்டியர் வசம் மண்டியிட்டிருந்தது. கடைசி பாண்டிய அரசனைத் தோற்கடித்தே தாதுசேனன் ஆட்சிக்கு வந்தான். யுத்தத்தில் ஆட் பலி நடக்கும். சிலவேளை தாதுசேன மன்னனின் கரங்களால் ஆரம்ப தம்ம பதம் முழுமையாக சிதைக்கப்படலாம். அவனது படைவீரர்கள் மரணத்தின் பின்னரான வாழ்க்கை பற்றி சிந்தித்திருக்கலாம். இந்நேரம் மகாநாம தேரர் எதிரேவந்து, “பாவமில்லா யுத்தம்” என்ற பொய்யை உருவாக்கி மன்னனையும் அவனது படையினரையும் உற்சாகப்படுத்தியிருக்கலாம்” என்று கருதுவதில் பிழையில்லை. அது அவர்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே…

Sunday, August 3, 2014

ஆகஸ்ட் 3, 1990


- கலாநிதி அலவி ஷரீப்தீன் -


அனல் கக்கும் 90இன்
ஆகஸ்ட் 3
வருடம் தோறும்
வந்து செல்லும் !

சிரியாவின் சித்திரவதைகள்,
காஸாவின் கண்ணீர்க் கதறல்கள்,
ஈராக்கின் இரத்த வெள்ளம்
எம் இதயங்களைப்  பிழிந்தெடுத்தாலும்
ஆகஸ்ட் 3 மட்டும்
எம்மை அதிர வைத்துக் கலக்கி வைக்கும் !

சுதந்திரத்தின் பெயரில்,
போராட்டம் என்று சொல்லி
கண்ணியக் காவியத்தைக் களங்கப்படுத்தி
குமர் தாத்தாமார்களின்
முன்தானைப் புடவையிலும்
உம்மாமார்களின் முக்காட்டு முகட்டிலும்
ஈனச் செயல்கள்  எழுதப்பட்டதை
ஆகஸ்ட் 3
எடுத்துச் சொல்லும் !

ஓந்தாச்சி மடத்தில் ஓங்கி அலறிய
மஹ்ரூப் நானாவின்
அப்பாவி அலறல்கள்;;;;;;
கல்முனையின் காட்டுப்புறத்துக்கு,
விறகு சேர்க்கச் சென்ற
இப்றாஹீம் காக்காவின்
இறந்து போன பைசிக்கல் ;
உன்னிச்சையில்
கண்டதுண்டமாய்  வெட்டி வீசப்பட்ட
வயல் வேலை செய்த தம்பிமார் ;
பூநொச்சிமுனையில்
பூண்டோடு பிடுங்கப்பட்ட
மினாறாவின் அடித்தளங்கள் ;..
தாராபுரத்தில்.. தம்பலகாமத்தில்..
கிண்ணியாவில்..கீச்சான் பள்ளத்தில்
மூதூரில், முல்லைத்தீவில்
முஸ்லிம் என்பதற்காக
பால்மனம் மறக்காத பாலகர்கள்
குற்றம் தெரியாத குடுகுடு ஆச்சிமார்
போராட்டம் என்று
பெயர் போட்டுக் கொண்ட
பொறுக்கிப் பயல்களின் வெறியாட்டங்களுக்கு
இரையாகிப் போனதை
இந்த ஆகஸ்ட் 3
மீண்டும் கிளறி
எம் சிந்தையைச் சீண்டி எடுக்கும் !

எம் வீட்டு அயலில்;,
எம் முற்றத்து ஒரங்களில் சேர்ந்திருந்து
எம்மிடம் நீர் அருந்தி
எம் உதவியோடு உண்டு வாழ்ந்தவர்கள்,
கெப்டன்கள் லெப்டினன்கள் என்று
ஒரு இரவில் பெயர் மாறி,
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த
கர்மக் கதையைக்
கறை படிய விட்டார்கள்
தமிழ் முஸ்லிம் உறவைக்
கறுப்பாக்கி விட்டார்கள் !

செல்வராசா மாஸ்டரும் சீனிக் காக்காவும்
சித்திரா அக்காவும், சித்தி ராத்தாவும்
அமலன் அண்ணாவும், அஹ்சன் தம்பியும்
நடராஜா நண்பனும், நிசார் மச்சானும்
ஒரே கூரையின் கீழ்
ஒன்றாய் இருந்து பெருநாள் உண்டதை
வரலாற்றின் கனவாய்
வடித்து வைத்தார்கள் !

தீபாவளி நாட்களில்
சிவராத்திரி இரவுகளில்
பொங்கல் நாட்களில்
பொங்கிய பாசங்களைப்
பொசுக்கிய சோகத்தை
அதன் அகோரத்தை
ஆகஸ்ட் 3
அமைதியாய்ச் சொல்லும் !

மியான் குளத்தில்  மஹ்மூது சாச்சாவும்
அடுத்த புத்திஜீவிகளும்
இனவெறி கண்ணிவெடிக்குள்
கலைந்து போனதும்
என் சாச்சி பிள்ளைகள்
கலங்கி நின்றதும்
கண் முன்னே வரும் !

வயிற்றுப் பசியில்
பொட்டணி கட்டிச்சென்ற
பக்கத்து வீட்டு அச்சியின் குழந்தைகள் -
காலாகாலமாய் கதறிய கதறல்கள்
காது நிறைய ஒலிக்கும்.

எமது -
ஹூஸைனியா மஸ்ஜிதின்  
புறாக்கூட்டச் சிறார் கூட்டம் -
மஸ்ஜிதின் மூலை யெங்கும்
வெறி கொண்ட வேங்கை
எனும் கோழைகளால்
குதறப்பட்டு கொல்லப்பட்டதை
வெந்த புண்ணில் வேலாய்
குத்திக் காட்டும் !

'ஸஜ்தா'விலும்
'ருக்கூ'விலுமாய்
கூனிக்குறுகியிருந்த கூன் பிறையின்
இறை நேசக்கூட்டம்
இரக்கமில்லா இனவெறியர்களின்
நரமாமிச வேட்டைக்குப்
பலியாகிப் போன சோக காவியத்தை
இந்த ஆகஸ்ட் 3
அன்று
மீண்டுமொரு ஆகஸ்ட் 3
வரக்கூடாதென்று சொல்லி நிற்கும்!

இனவெறி பேசி
இரத்த வெறியில்
ஏராளமான
அப்பாவி உயிர்களை
காவு கொண்ட
முள்ளிவாய்க்கால் வாசிகள்
பல ஆயிரம் தடவைகள்
நொறுக்கப்பட்டாலும்....
ஓந்தாச்சிமடத்தின்
ஓலங்களைப் பார்த்து
எம் ஊர்ப்பள்ளியில்
எம் உடன் பிறப்புக்கள்
இரத்த வெள்ளத்தில்
துடித்ததைப் பார்த்து
பட்டாசி கொழுத்தி
கைகொட்டிச் சிரித்த
கரிகாலன்கள்
காலா காலமாய்
கண்ராவியாய்
அழுந்திச் செத்தாலும்
எமதூர் மூலையில்
பொக்கை வாய்ப் புலம்பல்கள்
தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
கடத்தப்பட்ட மகனை
வெட்டப்பட்ட வாப்பாவை
அரியப்பட்ட ஆச்சியைப் பற்றி
பேசிக் கொண்டேயிருப்பர்

வரலாற்றில் வேர் பதித்த
தமிழ் முஸ்லிம் உறவை அழித்த
தன்தாய் தாலி அறுத்து
தமிழீழம் என்ற பெயரில்
வெறியுலகை விதைக்கப்பார்த்த
வெறியர்கள் அழிப்பட்டதை
இறைநியதி வந்து
கொலையுலகு நிலைக்காது
சத்தியம் ஜெயிக்கும்
என்று
இந்த ஆகஸ்ட் 3
அடித்துக் சொல்லும்

 (1990ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் இரண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் நினைவாக இந்தக் கவிதையை எழுதிய கலாநிதி அலவி ஷரீப்தீன் நிகழ்ந்த இந்தக் கோரச் சம்பவத்தில் தனது தந்தை, 5 வயதான தனது சகோதரன், மற்றும் உறவினர்கள் பலரைப் பறிகொடுத்தவர்.)




Friday, August 1, 2014

நாங்கள்தாம் பலஸ்தீனியர்கள்!


- Gary Corseri -

மூஸா (அலை) வினது அல்லது ரோமர்களது
வருகைக்கு முன்பு
ஈஸா (அலை) வினது அல்லது முஹம்;மது (ஸல்) 
அவர்களது வருகைக்கு முன்பு
துருக்கியருக்கும் ஆங்கிலேயருக்கும் முன்பு
நாங்கள் இந்த நிலத்தில் வாழ்ந்திருந்தோம்!

புழுதியிலிருந்து நாங்கள்
நகரங்களை எழுப்பினோம்
கண்ணீர் கொண்டு நீரிறைத்தோம்
மகிழ்ச்சியில் திழைத்திருந்தோம்
கைவிடப்பட்டிருந்த கடல்களில்
மீன் பிடித்தோம்
குளிர்மிகு ஒலிவ் தோட்டங்களில்
எங்களது பிள்ளைகளின்
திருமணங்களை வாழ்த்தினோம்!

என்றென்றும் சாசுவதமான
'மக்கள்' என்ற சொல்லை
எங்களுக்கு நாங்களே சூட்டிக் கொள்வதில்
ஒருபோதும் கவலை கொண்டதில்லை

ஆக்கிரமிப்பாளர்கள் வருகை தந்தனர்
எங்களது நிலத்தில் அணிவகுத்துச் சென்றனர்
இரும்பு ஆயுதங்களையும்
ஆகாயக் கடவுளரையும் கொண்டு வந்தனர்
எமது குழந்தைகளைப் படுகொலை செய்தனர்

முதிய ஆண்கள் இறைவனை வணங்கினர்
வணங்கிய இடத்திலேயே
அவர்கள் படுகொலையாயினர்
பெண்கள் ஒப்பாரி வைத்தனர்
ஒப்பாரி வைத்த இடத்திலேயே
அவர்கள் படுகொலையாயினர்

உலக சபைக்கு மனுக்கள் எழுதினோம்
சபையே எங்களைப் பார்த்துச் சிரித்தது
கருணை, புரிதல், அமைதி, நீதி
இவையெல்லாம் வேண்டி
சர்வ வல்லமைகளிடம் முறையீடு செய்தோம்
சிலபோது அவர்கள் அமைதியாகச் செவிமடுத்தார்கள்
(நாங்கள் அவர்களது விளையாட்டுக்கென
அடகு வைக்கப்பட்டவர்கள்)
பலபோது எங்கள் காயங்களைப் பார்த்து
அவர்கள் கொட்டாவி விட்டனர்

பாலைச் சூரியன் சுட்ட
எமது தோல் நிறம் கருப்பானது
இளஞ்சிவப்பு நிறத்தோல் கொண்ட
அமெரிக்கர் வந்தனர்
இளஞ்சிவப்பு நிறங்கொண்ட பிள்ளைகளுடன்
வெள்ளை நிறப் பெண்கள்
இங்கிலாந்திருந்து வந்தனர்
இது எமது நிலமென்றனர்
அவர்களே அவர்களை
செமித்தியர் என்றனர்
அவர்களது நிறமோ
செமித்தியர்களின் நிறமாயிருக்கவில்லை
பொன்நிறத் தலை மயிரும்
நீலக் கண்களும் 
செமித்தியருக்குரியவை அல்ல!

நாங்கள் சுதந்திரமற்றிருக்கும் வரை
எல்லா ஆண்களும் சுதந்திரமற்றவர்களே
எமது சிறார்கள்  சுவர்களுக்குள் உள்ள வரை
எல்லாச் சிறார்களும்  
சுவர்களுக்குள்ளேயே இருப்பார்கள்
உங்களது சிறாருக்குத் தேவைப்படுவதைவிட
குறைந்த அளவே
எமது சிறார்களுக்கு
எதிர்பார்க்கிறோம் என்று நினைக்கிறீர்களா?
உங்கள் சிறார்களை விடவும்
குறைந்தளவு பெறவேண்டியவர்கள்
என்றா நினைக்கிறீர்கள்?
எமது அப்பாவிச் சிறுவர்கள்
பெறுமதி குறைந்தவர்களா?
அவர்களது சிரிப்பும் அழுகையும்
மதிப்புக் குறைந்தவையா?
அவர்களும் இந்தப் பூமியின்
குழந்தைகள் இல்லையா?
அவர்களும் இறைவனின்
குழந்தைகள் இல்லையா?
எமது ஆண்கள் குறைந்த வீரமும்
எமது பெண்கள் குறைந்த துணிச்சலும்
கொண்டவர்களா?

நாங்கள் மக்கள் -
இந்த நிலத்துக்குச் சொந்தமுள்ள மக்கள்
அதனால்தான் உங்களிடம்
பெரிய மீனைக் கோருகிறோம்
உங்களை உள்ளாரக் குடையும்
நாடாப் புழு எத்தகையது?
நீங்கள் கௌரவத்தை இழந்து விட்டீர்களா?

நீங்கள் கடவுள் பற்றிப் பேசுகிறீர்கள்
ஆனால் குழந்தைப் பலி கேட்கும்
தெய்வத்திடம் தலை குனிகிறீர்கள்
அந்தத் தெய்வத்துக்கு
உங்கள் குழந்தைகளைப் பலி கொடுக்குறீர்கள்
மற்றவர் குழந்தைகளையும் பலி கொடுக்கிறீர்கள்
உங்களது குழந்தைப் பலி கேட்கும் தெய்வம்
மற்றவர் குழந்தைகளைப் பலி கொண்டு
பெருத்து வளர்ந்து கொண்டிருக்கிறது

பலமும் செல்வமும் 
உங்களை நுகர்கின்றன
மலைகளைத் தகர்க்கிறீர்கள்
பெண்களை அச்சமூட்டிப் பணிவிக்கிறீர்கள்
உங்களது புத்தகங்களில்
உங்களது பெயர்களைக் காண்பிக்கிறீர்கள்
ஆனால்
மரங்களின் வேர்களில் எழுதப்பட்டும்
பழம் பாறைகளில் பொழியப்பட்டும் இருக்கும்
எமது பெயர்களை
உங்களால் கண்டடைய முடியவில்லை

முழங்கும் ஆயிரமாயிரம் யுத்தத் தாங்கிகளால்
எங்களைப் பணிய வைக்க முடியவில்லை
உண்மை கருப்பு நிறம் கொண்டது
நாமும் கருப்பு நிறமான
எமது கண்களால்தான் பார்க்கிறோம்
துருக்கியர் வந்தார்கள்
அவர்க்குப் பிறகு மற்றவர்களும் வந்தார்கள்
ஆங்கிலேயர் வந்தார்கள்
அவர்களுக்குப் பின்
மற்றவர்கள் வந்தார்கள்
கடவுளின் பெயரால்
அவர்கள் கொலை புரிந்தார்கள்
கடவுளின் பெயரால்
கடவுளையே கொலை செய்தார்கள்

நாங்கள்தாம் பலஸ்தீனியர்கள்
எங்கள் வாழ்வாதாரங்களை
எடுத்துக் கொள்ளத வரை...
எம்மை தாழ்மைப்படுத்தாத வரை..
நாங்கள் வாழ்பவர்கள்
வாழவும் விடுபவர்கள்

நாங்கள் சுதந்திரமற்றிருக்கும் வரை
எல்லா ஆண்களும் சுதந்திரமற்றவர்களே
எமது சிறார்கள்  சுவர்களுக்குள் உள்ள வரை
எல்லாச் சிறார்களும்  
சுவர்களுக்குள்ளேயே இருப்பார்கள்
எங்கள் வணிகத்துக்கான உபகரணங்களைக்
காலம் கூர்மைப்படுத்துகிறது
துயரம் எங்களை
மெருகு படுத்துகிறது
நாங்கள் எங்களது கருவிழி கொண்டே
பார்க்கிறோம்!

Tuesday, July 29, 2014

ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் - அஞ்சலி!


ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் காலமானார் என்ற தகவல் சரியாக 11.30க்குக் கிடைத்தது.

நண்பர் ஸனூஸ் முகம்மத் பெரோஸ் எடுத்த அழைப்பு பெருநாள் வாழ்த்தாக இருக்குமென்றுதான் நினைத்தேன். துரதிர்ஷ்டவசமான செய்தியாக அமைந்து விட்டது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவர் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். அறிவிப்பாளர்களுக்கு இருக்க வேண்டியது மிகத் தடிப்பமான குரல் வளம் என்ற பிழையான கருத்து மிகப்பலமாக நிலவிய காலத்திலேயே அவரது குரல் மிக மென்மையானதாக இருந்தது. ஆயினும் அவருக்கென தனியே ஒரு இரசிகர் பட்டாளமே இருந்தது என்பதை அக்காலத்தில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவில் பணிசெய்த யாரும் மறுக்க மாட்டார்கள்.

பாடல்கள் கொண்ட 50 ஒலித் தகடுகளுக்குள் அவருடைய ஒலிபரப்பு இருந்ததாக அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதுவே அவருடைய பலமாகவும் இருந்திருக்கிறது.

நான் 1986ல் ஓரு பகுதி நேர அறிவிப்பாளனாக நுழைந்த போது அறிவிப்பாளராகப் பணியாற்றி முடிந்து அறிவிப்பாளர்களுக்குப் பொறுப்பதிகாரியாக அவர் பணியாற்றினார். தமிழ்த் தேசிய சேவை, வர்த்தக சேவை இரண்டுக்குமான அறிவிப்பாளர்களுக்கு அவரே பொறுப்பதிகாரி.

எனக்கும் அவருக்கும் என்றைக்குமே ஒத்துப்போனது கிடையாது. வாரத்துக்கு ஒருமுறை என்னில் அல்லது என்னுடன் தெரிவான ஏ.ஆர்எம். ஜிப்ரி, ஜவஹர் பெர்னாண்டோ ஆகியோரில் ஏதாவது ஒரு பிழை சொல்லிக் கொண்டேயிருப்பார். ஒரு வகையில் பெரும் நச்சரிப்பாகவும் அது இருந்திருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு நடந்த பகுதி நேர அறிவிப்பாளர் தேர்வில் நாங்கள் மூவருமே தெரிவு செய்யப்பட்டிருந்தோம். சில போது ஒலிபரப்பு உதவியாளர் விட்ட பிழைக்கும் எம்மிலேயே குற்றம் சொல்லுவார். நீ சரியாக இருந்தால் ஏன் பிழை போகிறது என்று கேட்பார்.

ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போய், 'இவருக்குமேல் கை வைத்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது' என்று அப்துல் ஹமீத் அவர்களிடம் முறையிட்டேன். எனது கோபத்தை ஆசுவாசப்படுத்தியவர் அப்துல் ஹமீத்.

அவர் இல்லாத இடத்தில் அவரைப் போல் மிமிக்ரி செய்து சிரித்து மகிழ்ந்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம்.

ஒவ்வொரு ஒலிபரப்பாளரோடும் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் எம்மிடம் இருக்கின்றன. ஆனால் அவை யாவற்றையும் வெளியே சொல்ல முடியாது. ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் அவர்களோடு சம்பந்தப்பட்ட அனுபவங்கள் பலருக்கு உண்டு. நாங்கள் அங்கு பணிக்குத் தேர்வாக முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மறைந்த நண்பர் கணேஷ்வரன் ஒரு போது சொன்னார்.

ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் என்றே அவரது பெயர் ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் பெயர் ஆர். எஸ். ஏ. கனகரட்ணம் என்றிருக்கும். கே. எஸ். ராஜாவைத் தெரியாதவர்கள் இல்லை. ஒரு போது ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் தனது அறிவிப்புப் பணியை முடித்து கே.எஸ். ராஜாவிடம் பணியை ஒப்படைக்கும் போது 'தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்க கே. சிவராஜா காத்திருக்கிறார்' என்று சொல்லி விட்டு ஒப்படைத்திருக்கிறார். கே.எஸ். ராஜாவுக்குத் தனதுவானொலிப் பெயரைச் சொல்லாமல் முழுப் பெயரை வானொலியில் சொன்ன கடுப்பில் வந்து அமர்ந்ததும் 'நன்றி ராஜகுரு சேனாதிபதி அன்னையா கனகரட்ணம் அவர்களே!' என்று ஒரு போடு போட்டு விட்டாராம்.

எனக்கும் அவருக்குமிடையில் இருந்த ஒரே நெருக்கக் கோடு கவிஞர் கண்ணதாசன். அவர் கண்ணதாசன் உபாசகர். நான் கண்ணதாசனின் பெரு ரசிகன்.

பாரதியார் நினைவு தினத்துக்கு நான் எழுதிய நினைவுச் சித்திரம் பெரும் தடைகள் தாண்டி ஒலிபரப்பானது. காலையில் வந்ததும் அதிகாரிகள் கூட்டத்தில் அந்த நிகழ்ச்சியில் பிழை இருக்கிறது என்று கலகப்படுத்தி விட்டிருந்தார் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். சிரேஷ்ட ஒலிபரப்பாளர்களான நடேச சர்மாவும் ராஜேஸ்வரி அக்காவும் குரல் கொடுத்த நிகழ்ச்சி அது. என்ன பிழை என்று கேட்டு அவருடன் மல்லுக்கு நின்றேன். ' ஏம்பா... கண்ணனைக் காதலானாகவும் காதலியாகவும் பார்த்தான்னு போச்சுதே... அப்படி மட்டுந்தான் பாரதி பார்த்தானா?' என்று கேட்டார். கண்ணன் பாடல்கள் எல்லாவற்றையுமா ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட முடியும் என்று கேட்ட போது, 'ஆமா... அது பிழைதான்' என்று வாதிட்டார்.

நிர்வாகத்தில் மிகவும் கறாராக நடந்து கொள்ளும் அவருக்கு ஒலிபரப்பில் எந்நேரம் தவறுகள் நேர்ந்தாலும் கண்டு பிடித்து விடும் திறமை இருந்;தது. 'இவர் வானொலி கேட்காத நேரம் எது' என்று கண்டு பிடிக்க நாம் ஒரு மாதம் அவதானம் செலுத்திய பிறகு, இரவு 7.30க்கும் 8.00 மணிக்கும் இடையில் என்று கண்டு பிடித்தோம். அவர் பம்பலப்பிட்டி கிறீன்லான்ட்ஸில் இரவு உணவு உண்ணும் நேரம்தான் அது.

பிற்காலத்தில் பலமுறை அவரை நினைத்துப் பார்த்திருக்கிறேன். அவர் அன்று பிரயோகித்த அழுத்தங்களால் நான் செம்மைப்படுத்தப்பட்டேன் என்ற உணர்வு அடிக்கடி மேலோங்கும். ஒரு வர்த்தக சேவை அறிவிப்பாளனாக இல்லாமல் (அவ்வப்போது கடமை செய்த போதும்) தேசிய சேவை அறிவிப்பாளனாக இருந்து பணி செய்து அங்கிருந்து தொலைக் காட்சிக்கும் சென்று பெயரும் புகழும் பெற்றோன் என்றால் அதில் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் ஐயாவுக்கும் பங்கிருக்கிறது என்றே நம்புகிறேன்.

இவ்வாறான ஒரு பெருநாள் தினத்தில்தான் அவர் தொழிலை விட்டுப் போகவும் நேர்ந்தது. துரதிர்ஷ்ட வசமாக நடந்து போன சம்பவத்திலும் நான் சம்பந்தப்பட்டுள்ளேன்.