Friday, April 29, 2011

ஏரோப்பிளேன் பறக்குது பார் மேலே.... (இஸ்லாமிய தமிழ் இலக்கிய மலேசிய மாநாடு)

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 05

எனது ‘எக்ஸ்குளுஸிவ்’ கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதற்கு முன்னர் வெளியிடப்பட்டாக வேண்டிய தகவல்கள் நிறையவே கிடைத்துள்ளன. எனவே ஐந்தாவது கட்டுரையில் அவற்றைக் குறிப்பிட்டு விட்டு ஆறாவது கட்டுரையை ‘எக்ஸ்குளுஸிவ்’ கட்டுரையாக மாற்றலாம் என்று எண்ணுகிறேன். அதையும் எழுதி முடிப்பதற்குள் வேறும் குறிப்பிட்டாக வேண்டிய விடயங்கள் கிடைக்குமாயின் அது ஏழாவது கட்டுரையாக மாற்றம் பெறவும் நேரலாம்.

முகமறியா நண்பர்கள் சிலர் கட்டுரைகள் மிகவும் நீண்டவையாக இருக்கின்றன. ஒரு கட்டுரையை இரண்டாகப் பிரித்துத் தந்தால் படிப்பதற்கும் படி எடுப்பதற்கும் இலகுவாக இருக்கும் என்று பேசுவதாகத் தகவல் ஒன்று காதுக்கு எட்டியது. அது என்னமோ தெரியவில்லை, குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் மாநாடு பற்றி எழுத ஆரம்பித்தால் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே செல்கிறது. இருந்த போதும் இனிமேல் எழுதப்படவுள்ள கட்டுரைகளில் ‘எக்ஸ்கு@ஸிவ்’ கட்டுரை தவிர்ந்த ஏயைவற்றுக்கு நண்பர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஏரோப் பிளேன் பறக்குது பார் மேலே...

குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் மாநாட்டுக்கான நாள் நெருங்க நெருங்க அதற்காக இலங்கையிலிருந்து செல்லவிருப்பவர்கள் போவதா, இல்லையா என்ற மனப் போராட்டத்தில் இருப்பதை உணர முடிகிறது. இந்த நிலை ஏற்பட முதல் காரணம் விமானச் சீட்டின் விலை.

29.03.2011 அன்றைய திகதியிடப்பட்ட இ.குழு, பேராளர்களாகக் கலந்து கொள்ள விரும்புவோருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் 29,500 ரூபாய் முதல் 34,000 ரூபாய் வரை குறிப்பிட்டிருந்ததையும் வேறு ஒரு நபர் 85 பேருக்கு மேல் பயணம் செய்வதாயின் 19,000 ரூபாய்க்கு விமானச் சீட்டுப் பெறலாம் என்று குழுச் செயலாளரிடம் சொன்னதையும் அதை அவர் கணக்கெடுக்கவில்லை என்று அந்நபர் தெரிவித்ததையும் குறிப்பிட்டிருந்தேன். பின்னர் அது பற்றி ஆராய்வதாகவும் 19,000 ரூபாயக்குப் பயணம் செய்யும் வாய்ப்புண்டு என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கதைகள் உலாவின.

Thursday, April 28, 2011

அஷ்பகுல்லாஹ் கான் - அங்கம் - 2

ஆங்கிலத்தில்
என்.பி.சங்கரநாராய ராவ்

இதோ பணம்!

அந்த ரயில் கடந்து சென்றதும் தங்களது பணியை மீண்டும் அவர்கள் ஆரம்பித்தார்கள். உலோகச் சத்தம் மீண்டும் அப்பிரதேசத்தில் எதிரொலிக்க ஆரம்பித்தது. இரும்புப் பெட்டி பிளக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணப் பைகள் வெளியே எடுக்கப்பட்டன. இந்த வேளையில் அனைத்துப் பயணிகளும் மௌனம் காத்திருந்தனர். அந்த ரயிலில் இருந்த பிரயாணிகளுள் சில பிரிட்டிஷ் அதிகாரிகளும் இருந்தனர். அவர்களிடம் கைத்துப்பாக்கிகள் இருந்தன. பெருந்தொகைக் கொள்ளையர்கள் இந்தக் கொள்ளையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்களும் அமைதி காத்தார்கள்.

ஆண்களுக்கான ஒரு ரயில் பெட்டியில் புதிதாகத் திருமணம் செய்த ஓர் இளைஞனும் இருந்தான். அவன் திருமணம் செய்திருந்த மணப்பெண் பெண்களுக்கான பெட்டியில் இருந்தாள். அவளை நினைத்துக் கவலைப்பட்ட அந்த இளைஞன் தனது தலையை வெளியே நீட்டினான். புரட்சிக்கார இளைஞர்களில் ஒருவன் தனது துப்பாக்கியால் அவனைச் சுட அவன் ஸ்தலத்திலேயே இறந்துபோனான்.

ஏனையவர்கள் வேறு எந்த விடயங்களிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவில்லை. பெட்டி உடைக்கப்பட்டுப் பணப் பொதிகள் வெளியிலெடுக்கப்பட்டு அவை பெரிய ஜமுக்காள்களில் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சிலர் அவற்றைத் தங்களது தலைகளில் சுமந்த வண்ணம் லக்னோ நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தார்கள்.

வெறும் பத்தே பத்து இளைஞர்கள் கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் ஒழுங்குடனும் இந்தக் கடினமான காரியத்தில் ஈடுபட்டிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக தேசத்தின் மீதுள்ள காதல் அவர்களை இந்த அபாயமான காரியத்தில் ஈடுபடுத்திற்று. இந்தியத் தேசத்தின் சுதந்திரத்தை நோக்கிய போராட்டப் பாதையின் அழிக்கமுடியாத ஒரு அத்தியாயத்தை அவர்கள் எழுதினார்கள். ராம்பிரஸாத் பிஸ்மில், ராஜேந்திர லஹிரி, தாகுர் ரோஷான் சிங், சச்சீந்திர பக்ஷி, சந்ரசேகர அஸாத், கேஸாப் சக்ரவர்த்தி, பன்வாரி லால், முகுந்தி லால், மன்மதநாத் குப்தா, அஷ்பகுல்லாஹ் கான் ஆகியோரே அந்தப் பத்துப் பேருமாவர்.

சிங்கம் தப்பியது..!

காகோரி கொள்ளை நடைபெற்று ஒரு மாதம் கழிந்த பிறகும் யாரும் அகப்படவில்லை. ஆனால் அரசு மிகப் பரந்த அளவில் தனது வலையை விரித்து வைத்திருந்தது.

1925ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி ராம்பிரஸாத் கைது செய்யப்பட்டார். அஷ்பகுல்லாஹ் தனது வீட்டிலிருந்து அரை மைல் தூரத்திலுள்ள கரும்புச் சோலைக்குள் மறைந்திருந்தார். பொலிஸாரின் கண்களில் மண் தூவி விட்டு இரவில் மாத்திரம் அஷ்பக்குல்லாஹ்வுக்கு அவரது நண்பர்கள் உணவு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. பொலிஸ் அஷ்பகுல்லாஹ்வை தேடித் தேடி அலுத்தது. அஷ்பகுல்லாஹ்வின் சகோதரருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி அனுமதியை ரத்துச் செய்து அவரது துப்பாக்கியையும் பொலிஸார் பிடுங்கிக் கொண்டனர். அஷ்பாக்கைத் தவிர அனைவரையும் பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். எனவே ஷாஜஹான்பூர் அருகே மறைந்திருப்பது ஆபத்தானது என்ற முடிவுக்கு அஷ்பாக் வர நேர்ந்தது. தனது வீட்டிலிருந்து கொஞ்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டுச் சென்றார்.

காசிக்குச் செல்லும் முடிவை அவர் எடுத்தார். தப்பிச் சென்ற சில புரட்சியாள நண்பர்கள் காசியில் இருந்தனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று நினைத்தார். மிகவும் சிக்கலான ஒரு பயணத்தின் பின்னர் அவர் காசியை அடைந்தார். சில நண்பர்களை பனாரஸ் சர்வகலாசாலையில் சந்தித்தார். சில காலங்களுக்கு எந்த வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் அமைதியாக வாழுமாறு அவர்கள் யோசனை சொன்னார்கள். இந்த நண்பர்களின் துணையுடன் அவர் பிகார் மாநித்தை அடைந்தார். அங்கு பலாமு மாவட்டத்தின் டால்டன்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள பொறியியல் நிறுவனம் ஒன்றில் எழுதுவினைஞராக வேலையில் அமர்ந்தார். மதுராவில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று தன்னை அங்குள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த நிறுவனத்தில் அவர் பத்து மாதங்கள் வேலை செய்தார்.

Wednesday, April 27, 2011

Ur words r rubbish

Ur words r rubbish. stop writin. dnt b a fool

இன்று பி.ப. சரியாக 2.07க்கு எனது கைத் தொலைபேசிக்கு வந்த குறுஞ் செய்தி இது. இந்தச் செய்தி 077 1131397 என்ற இலக்கத்திலிருந்து வந்திருந்தது.


இவர் யார்? எதற்காக என்னை எழுத வேண்டாம் என்கிறார்? பத்திரிகை, சஞ்சிகைகளில் நான் எழுதுவதைச் சொல்கிறாரா? இணையங்களில் நான் எழுதுவதைச் சொல்கிறாரா? எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்கிறாரா?

நான் எழுதுவது எனது சுதந்திரம். என்னைக் கட்டுப்படுத்தும் இந்தக் கைப்பிள்ளை யார்? எனது சொற்கள் குப்பை என்கிறார்! இருந்து விட்டுப் போகட்டும். இதனால் அவருக்கு என்ன பிரச்சினை? குப்பையைப் பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும். அவர் மாநகர சபைக் குப்பை வண்டியில் வேலை செய்பவரா? அல்லது ‘குப்பை’ களோடு நெருங்கிய உறவு உள்ளவரா?

எனது எழுத்துக் குறித்த சிலாகிப்புக்களையே இது வரை நான் சந்தித்து வந்துள்ளேன். அவையே மேலும் மேலும் நான் எழுதுவதை உற்சாகப் படுத்துகின்றன. எனது வலைப்பூவைச் சராசரியாகத் தினமும் 60 பேர் முதல் 120 பேர் வரை உலகம் முழுவதிலுமிருந்து படிக்கிறார்கள். அது குப்பை என்றால் இப்படி இரவிலும் பகலிலும் படித்துக் கொண்டா இருப்பார்கள்?

எழுதுவது முட்டாள் தனம் என்றால் எழுதுபவர்கள் எல்லோரும் முட்டாள்களா?

வந்த அந்தச் செய்திக்கு நான் பதில் சொல்லவும் இல்லை. தொடர்பு கொண்டு பேசவும் இல்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.

எனது எழுத்தில் தவறுகளோ பிழைகளோ இருந்தால் அதைத் தைரியமாகச் சுட்டிக்காட்ட முடியும் அல்லவா? இவ்வாறு திரைக்குப் பின்னாலிருந்து கல்லெறியும் கெட்ட பழக்கம் ஏன் அவருக்கு வந்தது. அல்லது அவரது தொழிலே இதுதானா?

என்னுடைய எந்த எழுத்து அவரை நோவு கொள்ளச் செய்தது என்பதைத் தெரிந்து கொள்ள நான் ஆவல் கொண்டுள்ளேன். ஆனால் அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு வெளிச்சத்துக்கு வந்து கருத்துச் சொல்ல வேண்டும். வெளிச்சத்திலேயே நாம் உரையாடலாம்.

அப்படியில்லாத பட்சத்தில் அவர் எந்த வகையில் பேசினாலும் அதற்கு நான் பதில் சொல்லும் அவசியம் இல்லை. பதில் சொல்லவும் மாட்டேன். இவ்வாறு தொடர்ந்து என்னுடனோ என்னைப் பற்றி வேறு நபர்களுடனோ ‘மொட்டை’ வடிவில் பேசுவதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. மற்றவர்களும் அதைக் கணக்கில் கொள்ள மாட்டார்கள் என்பதை இந்தக் கைப்பிள்ளை புரிந்து கொள்ள வேண்டும்.

அவருக்கு நல்ல புத்தி வர நான் பிரார்த்திக்கிறேன்!



Tuesday, April 26, 2011

மலேசிய இஸ்லாமிய இலக்கிய விழா

மலேசிய இஸ்லாமிய இலக்கிய விழா
இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் - 5

இலக்கியத்தின் ஆன்மாவும் அற்ப ஆசைகளுக்கு அதை ஈடு வைத்தலும்

இலக்கியத்தால் சிறப்புற முடியாதவர்களின் அடிமைத்தனமும் அற்பத்தனமும்

இன்னும் பல தகவல்களுடன்.....

விரைவில் எதிர்பாருங்கள்!

நீங்கள் பொய்யராக மாறிவிட...

நீங்கள் பொய்யர் என்பதற்கு நற்சான்றிதழ் பெற வேண்டுமா?


நீங்கள் கேள்விப்படும் ஆதாரமற்ற ஊடகச் செய்திகளையெல்லாம் அப்படியே பரப்பிவிடுங்கள் அது போதும் நீங்கள் பொய்யர் என்பதற்கான நற்சான்றிதழ். ஆம் இதைத்தான் நம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள் ஆதாரம் இதோஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம் 6 )

சகோதரர்களே இன்று இணையதள ஊடகங்களில் கிராஃபிக்ஸ் துணையுடன் சிலர் பொய்களை பரப்புகிறார்கள் மற்றும் சிலரோ தாங்கள் காணும் பழங்கள், தாவரங்கள், செடி கொடிகள் ஏதாவது தோற்றம் தென்பட்டால் அதைக் கொண்டு பொய்களை பரப்புகிறார்கள் இதோ அந்த பொய்களை காண்போமா?

பழங்களி்ன வாயிலாக பொய்யை பரப்புதல்பொய்களை பரப்புவதற்காகவே தக்காளிப் பழம், ஆப்பிள் பழம், தர்புசணி ஆகிய பழங்களை மிக இலாவகமாக பயன்படுத்து கிறார்கள். அதாவது தக்காளிப் பழத்தை இரண்டாக வெட்டினால் அதன் விதைகள் வளைந்து நெழிந்து காணப்படும் அவைகளில் அரபு எழுத்து போன்ற வடிவம் தென்பட்டால் போதும் உடனே அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று தம்பட்டம் அடிப்பார்கள்! ஆதாரம் இதோ
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த பழங்களில் அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா?

மிருகங்களின் வாயிலாக பொய்யை பரப்புதல்ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் ஏதாவது அரபு எழுத்து வடிவம் தென்பட்டால் உடனே அல்லாஹ்வின் பெயர் பிராணியின் முதுகில், மடியில், தலையில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று புரளியை கிழப்புகிறார்கள்! ஆதாரம் இதோ

சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா? இவைகள் பேசிவிடுமா? பறக்குமா? சிரிக்குமா?

இப்படிப்பட்ட செய்திகள் உங்கள் மெயில் இன்பாக்ஸில் கண்டு அதை நீங்கள் பார்த்தவுடன் அதிசயித்து போய்விடுகிறீர்கள் உடனே அதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறீர்கள் அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்புகிறார்கள் இறுதியாக பொய்கள் வாலால் அல்ல மாறாக மெயிலால் பரப்பப்படுகின்றன. இந்த பொய்களுக்கு நீங்களும் உடந்தையாகிறீர்கள். இந்த செயல் யுத, கிருத்த மாற்றுமத கலாச்சாரத்தை சேர்ந்ததாகும்! ஆதாரம் வேண்டுமா? இதோ

Monday, April 25, 2011

அஷ்பகுல்லாஹ் கான் - அங்கம் - 1

ஆங்கிலத்தில்:
என்.பி. சங்கரநாராயண ராவ்
 
  ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து ஏழாம் ஆண்டு டிஸம்பர் 19ம் திகதி. குளிர் காலமாதலால் சூரியன் தாமதமாகவே கிழக்கு வானில் எழுந்தான். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அவன் பொன்னிறக் கதிர்கள் வெது வெதுப்பையும் சந்தோஷத்தையும் அளித்தன.

அன்றைய சூரியோதயத்தின் போது பைஸாபாத் மாவட்டச் சிறைச்சாலை அதிகாரிகள் ஒரு மனிதனின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். அம்மனிதர் ஒரு புரட்சிகரப் போராளி.

சிறைச்சாலையின் மேலதிகாரிகளும் கீழ் நிலை அதிகாரிகளும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். பிரதான சிறையதிகாரி சுருக்குக் கயிற்றையும் மணல் மூட்டைகளையும் மற்றும் அவசியம் எனக் கருதப்பட்ட அனைத்தையும் மிகக் கவனமாகப் பரிசோதித்துப் பார்த்தார். ஏற்பாடுகளில் பூரண திருப்தியடைந்த அவர் உதவியாளரை அழைத்துக் குற்றவாளியைக் கொண்டுவரப் பணித்தார். உதவியாளர் பத்து ராணுவ வீரர்களுடன் அங்கிருந்து நகர்ந்தார். மரண தண்டனைக்குரிய மனிதன் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் கதவு எரிச்சலூட்டும் சத்தம் எழுப்பியபடி திறந்தது. அதுதான் அம்மனிதனுக்காக கதவு திறக்கப்பட்ட கடைசிச் சந்தர்ப்பமாகும்.

அந்த அறைக்குள் வீரம் மிக்க தேசாபிமானி அந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார். அவர் உற்சாகத் தொனியில் கேட்டார், “எல்லாம் தாயாரா?”

ஓர் ஆண் சிங்கம்

அவரது உறுதியான குரல் அவர் இறப்பதற்குத் தயாராக இருப்பதை எடுத்துக் காட்டியது. எனவே அவரை அழைத்துச் செல்ல வந்தவர்களுக்கு எவ்விதத் தயக்க உணர்வையும் அச்சூழ்நிலை ஏற்படுத்தவில்லை. எனினும் அந்த அதிகாரி இறுக்கமான மன நிலையுடன் ‘ஆம்’ என்று பதிலளித்தார். அம்மாவீரர் அதுவரை ஓதிக் கொண்டிருந்த குர்ஆனை மூடினார். அதனைத் தனது கைகளில் பற்றிக் கொண்டவராக எழுந்து நின்று சொன்னார், “நாம் போகலாம்.”

அவர் அகன்ற நெஞ்சும் ஆறடி உயரமும் கொண்டவர். எஃகு போன்ற உறுதியும் சிங்கத்தின் இதயமும் உடையவர். அவரது தாடி அவரது முகத்துக்கு மேலதிக கவர்ச்சியைத் தந்தது. எப்போதும் அவரது உதடுகளில்; படிந்திருக்கும் உறுதி மிகுந்த புன்னகை இந்த நிலையிலும் கூடப் பிரகாசித்தது.

Sunday, April 24, 2011

நீ மிதமாக நான் மிகையாக...



நீ மிதமாக நான் மிகையாக என்ற தலைப்பில் இவள் பாரதி தந்திருப்பது ஒரு கவிதை நூல் அல்ல. காதலிலான ஒரு ஓட்டோகிராஃப்.

எல்லாக் கவிதைத் தொகுதிகளிலும் சில அல்லது பல காதல் கவிதைகள் இடம்பெறுவதுண்டு. கவிஞரின் காதல் அனுபவம் அல்லது காதலைப்பாடும் முனைப்பு அல்லது காதலைப் பாடக் கவிஞனைத் தூண்டியிருக்கும் உணர்வுகளைப் பொறுத்து இக்கவிதைகளின் தொகை அமையும்.

ஆனால் இந்தக் கவிதை நூல் வித்தியாசமானது. முழுவதுமாகக் காதலையே பாடுகிறது. ஒரு மூலைக்குள் பத்திரமாகச் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் இதயத்திலிந்து எழும் காதல் ரசம் கொட்டும் வரிகள் இதில் பதிவு செய்யப் பட்டுள்ளன. காதல் வயப்பட்ட மனோ நிலை உணர்வுகளின் அப்பழுக்கற்ற வெளிப்பாடுகள். காதல் வசப்பட்ட எல்லோருக்கும் ஓர் அழகிய கைக்குட்டை இது. காதலின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் இதை விரும்பிப் படிக்கலாம். காதலிக்காதவர்களும் காதலே உணராதவர்களும் கூடப் படிக்கலாம். அப்படிப் படிக்கும் போது சில வேளை காதல் அரும்பும் சாத்தியம் உண்டு.

காலங்காலமாக காதல் பாடப்பட்டே வருகிறது. கவிதைகளும் எழுதப்பட்டே வருகின்றன. அந்தக் காதலுக்கு முடிவும் இல்லை. கவிதைகளுக்கு முடிவும் இல்லை. புதிய புதிய வார்த்தைகளினூடாக காதல் சொல்லப்படுகிறது. அனுபவமும் உணர்வும் வெளிப்படுத்தப்படுகிறது. உலகம் தோன்றிய காலம் முதல் மிகவும் அதிகமாகப் பாடப்பட்ட அம்சம் காதலாகத்தான் இருக்க வேண்டும். காதலுக்கும் கவிதைக்கும் அப்படி ஒரு உறவு இருக்கிறது. படிப்பு ஏறாத, ஒரு வசனத்தைச் சரியாக எழுதத் தெரியாத விடலை வயதினனுக்கும் கூடக் காதல் வந்து விட்டால் அவன் மனதில் கவிதை பூக்க ஆரம்பித்து விடுவதைப் பார்க்கிறோம். ஆயினும் கவிதை அலுப்பதுமில்லை. காதல் அலுப்பதுமில்லை. யாரிடம் உண்மையான காதல் உணர்வும் அதன் உண்மை அனுபவமும் ரசனையும் இருக்கிறதோ அவரது காதல் கவிதையை உலகம் ரசிக்கிறது.

அந்த ரசனை இவள் பாரதியின் இந்தச் சிறு தொகுதியில் இருக்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பிடித்துள்ள ஒவ்வொரு கவிதைத் துளியும் ஒவ்வொரு தேன் துளி போல் நம்மை நயந்து இனிக்க வைக்கிறது. சில துளிகள் கஸல் கவிதைகளைப் போல காதல் மயக்கத்தைக் கள் மயக்கமாக மாற்ற முனைகின்றன.

Saturday, April 23, 2011

காற்றுவெளியிலிருந்து ஒரு கடிதம்

முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன்) பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் காற்றுவெளி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

அவரிடமிருந்து வந்த ஒரு வேண்டு கோள் கடிதம் இது. இதில் இரண்டு முயற்சிகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது. மறைந்த எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களை நூலாக்குவது. இது ஒரு முக்கிய பணி என்பதில் ஐயமில்லை. சிலர் இருட்டுக்குள்ளேயே இருந்து மறைந்து போயுள்ளார்கள். அவர்களைப் பற்றிய விபரங்களை எழுதி வருங்காலத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டியது நமது கடமை. நாம் அதைச் செய்தால் நமக்காக யாராவது அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபடுவார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு அமுதனுக்கு நாம் கை கொடுக்கலாம்.

மற்றது படைப்பாளிகள் பட்டியல். விருப்பமுள்ளவர்கள் அனுப்பி வைக்க முடியும். நானும் அவரும் ஒரு பட்டியலில் இருப்பதா என்ற ஈகோ உள்ளவர்கள் தம்மைப் பற்றித் தனியான புத்தகத்தைத் தாமே வெளியிட்டுக் கொள்ளலாம்.

இனி- அமுதனின் கடிதம் உங்கள் கவனத்துக்கு.....

ஆசீர்வதிக்கப்பட்டவரா நீங்கள்?

எந்த வித நோய் நொடியுமின்றிச் சுகதேகியாக இன்று காலை நித்திரை விட்டெழுந்தீர்களா நீங்கள்? அப்படியெனில் இந்த வாரத்தில் வாழ்வை இழந்த மில்லியன் மனிதர்களை விட நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்தான்!

யுத்த ஆபத்தை ஒரு போதும் அனுபவிக்காதவராகவும் சிறையில் தனிமையில் வாடாதவராகவும் சித்திரவதை நோவினைகளுக்குள் அகப்படாதவராகவும் பட்டினியில் வாடாதவராகவும் இருக்கிறீர்களா நீங்கள்? அப்படியெனில் உலகின் ஐநூறு மில்லியன் மக்களை விடவும் நீங்கள் நல்ல நிலையில்தான் இருக்கிறீர்கள்!

உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் உணவும் அலுமாரியில் உடைகளும் தலைக்கு மேல் ஒரு கூரையும் உறங்குவதற்கு ஓர் இடமும் இருக்கிறதா உங்களுக்கு? அப்படியெனில் உலகின் எழுபத்தைந்து வீதமான மக்களை விடவும் நீங்கள் வசதி படைத்தவர்!

உங்களது வங்கிக் கணக்கில் மற்றும் உங்களது சட்டைப் பையில் பணமும் பகிர்ந்து கொள்வதற்கு எந்த இடத்திலாவது உணவும் இருக்கிறதா உங்களுக்கு? அப்படியெனில் உலகின் வசதி படைத்த எட்டு வீதத்தினரில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள்!

உங்களது பெற்றோர் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்போராகவும் விவாக ரத்துச் செய்யாதவர்களாகவும் உள்ளார்களா? அப்படியாயின் நீங்கள் ஒரு பாக்கியசாலி!

உங்களிடம் புன்னகை பூத்த ஒரு முகமும் உண்மையான நன்றியறிதல் கொண்ட மனமும் இருக்கிறதா? அப்படியாயின் நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்தான். அப்படியிருக்க அதிகமானவர்களால் முடியும். ஆனால் அநேகமானோர் அப்படி இருப்பதில்லை!

நேற்றும் இன்றும் இறைவனை வணங்கினீர்களா நீங்கள்? அப்படியாயின் உலகில் நீங்கள் சிறுபான்மையினர்தான்! ஏனெனில் நமது பிரார்த்தனையை இறைவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்றும் அதற்கு அவன் பதிலளிக்கிறான் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்!

இதை உங்களால் வாசிக்க முடிகிறதா? அப்படியானால் நீங்கள் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்கள். ஏனெனில் உலகில் இரண்டு பில்லியன் மக்கள் அறவே வாசிக்க முடியாதவர்களா இருக்கிறார்கள்!

Thursday, April 21, 2011

சாணிக் கதை - 1

மரத்தின் நிழலில் இளைப்பாறியபடி ஒரு மாடு நின்றிருந்தது. அங்கு வந்த வான்கோழி அந்த மாட்டுடன் பேச ஆரம்பித்தது.

எனக்கு இந்த மரத்தின் உச்சிக் கிளையில் ஏறி நின்று பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது. ஆனால் அதற்கான சக்திதான் என்னிடம் இல்லை என்று வருத்தப்பட்டு வான்கோழி மாட்டிடம் சொன்னது.

அப்படியா! நீ ஏன் எனது சாணத்தில் கொஞ்சம் கொத்திச் சாப்பிடக் கூடாது. நான் இயற்கைப் புல்லை அல்லவா உண்கிறேன். அதில் சத்துப் பொருள் இருக்கும்தானே என்று மாடு சொன்னது.

வான் கோழி மாட்டின் சாணத்தில் கொஞ்சம் கொத்தித் தின்றது. தின்று முடிந்ததும் தனக்கு ஓரளவு சக்தி வந்தது போல் தோன்ற மரத்தின் அடியில் உள்ள கிளையில் ஏறிக் கொண்டது.

இரண்டாம் நாள் வான் கோழி இன்னும் கொஞ்சம் மாட்டுச் சாணத்தைக் கொத்தித் தின்றது. அன்று அது இரண்டாவது கிளையை எட்டிப் பிடித்தது. வான்கோழிக்கு உற்சாகம் பிறந்தது.

நான்காம் நாள் மாலை வான்கோழி மேல் கிளைக்குத் தாவிப் பெருமைப்பட்டுக் கொண்டது. உயரத்தில் இருந்து கீழே பார்ப்பது அபூர்வமான அனுபவமாக உணர்ந்தது.

அந்த வழிவே வந்த வேட்டைக்காரன் கண்ணில் பட்டது வான்கோழி. எந்தச் சலனமும் இல்லாமல் அதன் மீது அம்பை எய்து அதை வீழ்த்தினான்.

நீதி: தப்பான முறையில் உயரச் செல்லலாம். ஆனால் அதில் நிரந்தரமாகத் தரிக்க முடியாது.
 
Moral of the story: Bullshit might get you to the top, but it won’t keep you there.


Wednesday, April 20, 2011

நாய்ப் பாசம்

அந்நாய் எனது கவனத்தைக் கவர்ந்ததற்குக் காரணமிருந்தது.


அது ஒரு தெருநாய். அந்த நாயைப் போல சொறி பிடித்து உடம்பெல்லாம் வெள்ளைப் படை கொண்ட ஏராளமான நாய்களை நான் பலவிடங்களில் பலசந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். இதுவும் அவ்வாறான ஒரு நாய்தான். ஆனால் இதன் பின்னங்கால்கள் முன்னங் கால்களை விட நீளமாக இருந்தன. அதேவேளை அப்பின்னங்கால்கள் உட்புறமாக நீண்டிருந்ததால் குதியுயர்ந்த செருப்பு அணிந்து செல்லும் பெண்களுக்குப் போல் புட்டம் பின்பக்கமாக சற்றுத் தூக்கலாகத் தெரிந்தது. இதனால்தான் அந்த நாய் என் கவனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும்.

எனது வாகனத் திருத்த வேலைகளுக்காக அந்த இடத்துக்கு வந்திருந்தேன். ஒரு ‘ட’ வளைவில் வாகனத் திருத்தங்கள் மேற்கொள்ளும் ‘கராஜ்’ அமைந்திருந்தது. டானா வளைவின் மூலையில் மூன்று வாகனங்களை நிறுத்தலாம். அதற்கு அப்பால் நெருக்கடி மிகுந்த அந்தச் சந்துப் பகுதியின் அடுக்கு மாடி வீடுகளிலுள்ள குப்பை கூளங்கள் கொட்டப்பட்டிருந்தன. அம்மூலையில் நின்றால் இடது புறம் விளையாட்டு மைதானம். டானாவின் கிடைப் பகுதி முடியும் இடத்தில் தனியார் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும் நெடுஞ்சாலை.

எனது வாகனத்தின் முன் சக்கரங்களைக் கழற்றி சத்தம் வருவதற்கான காரணத்தை அறிய காருக்குக் கீழே படுத்தபடி குடைந்து கொண்டிருந்தான் கராஜ் பையன். அது வரை நான் தெருப்புதினங்களைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் அந்த நாய் என் கண்ணில் பட்டது.

குதிகால் செருப்புப் பெண்களை ஞாபகப்படுத்துவதற்கு முன்னர் அந்த நாய் நடந்து சென்ற விதம் எனது அந்த நாளைய வாத்தியார் ஒருவரை ஞாபகப்படுத்தியது. வாத்தியாரை நாயுடன் உதாரணங்காட்டுவதாக நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக் கூடாது. எனது ஆசான்களின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் குறிப்பிடும் வாத்தியார் ஒரு குதூகலப் பேர்வழி. இயல்பாகவே பெரிய புட்டம் கொண்ட அவர் சிவாஜி கணேசனைப் போல் ஸ்டைலாக நடக்க முற்பட்டதால் வந்தது வினை. சிவாஜி கணேசனைப் போல் நடப்பதாக நினைத்துக் கொண்டு முன்புறம் சற்றுக் கூனி தோள்களை அசைத்துக் கொண்டு அவர் நடந்து போனால் அவர் வேறாகவும் புட்டங்கள் வேறாகவும் தெரியும். பெரிய வகுப்பு மாணவர்கள் அவருக்கு ‘சிவாஜி’ என்று சிறப்புப் பட்டம் வைத்து அழைத்தனர்.

அந்த நாய் தெருவை அவ்வப்போது குறுக்கறுத்து நடந்து கொண்டிருந்தது. தெருவில் நடந்து சென்றவர்களின் அருகே அது நெருங்கியபோது முகச் சுழிப்புடன் விலகிச் சென்றார்கள். அதன் உடலைப் பார்க்க யாருக்கும் அருவருப்புத் தோன்றும். அந்த நாயின் அருவருக்கத்தக்க மேல் தோல் பெரிதாக என் கண்ணில் தெரியவில்லை. நான் அதன் நடையையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

Tuesday, April 19, 2011

அமைதியான பெரிய வீடு

ஒரு மனிதன் தனது வீடு சிறியது என்றும் சத்தம் நிறைந்தது என்றும் எண்ணிக் கவலை கொண்டிருந்தான். நகரத்துக்குச் சென்று அங்கு வாழ்ந்த அனுபவம் மிக்க மூதாட்டியொருத்தி யிடம் தனது கவலையைச் சொல்லி ஆலோசனை கேட்டான். “உனது பிரச்சினையை நான் தீர்த்து வைக்கி றேன். ஆனால் நான் சொல்வது போல் நீ கேட்டு நடக்க வேண்டும்” என்று சொன்னாள் மூதாட்டி. அம் மனிதனும் அதை ஏற்றுக் கொண்டான்.


“ஒரு கோழி, ஒரு குதிரை, ஒரு பசு, சில ஆடுகளை நீ உள் வீட்டுக்குள் வைத்து வளர்க்க வேண்டும்” என்றாள் மூதாட்டி.

 “இது சின்ன விசயம்தானே!” என்று சொல்லிச் சென்ற அம்மனிதன் அப்படியே செய்தான்.

சில நாட்களில் ஏற்கனவே அவனது சிறிய வீட்டுக்குள் இவற்றையும் வைத்துக் கட்டி மாள்வது அவனுக்குப் பெரும் துயராக மாறியது. அவை யாவற்றையும் வீட்டுக்குள் எடுத்ததும் நகரக் கூட இடமின்றித் தவித்தான். அவற்றின் சத்தங்களை அவனால் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை.

சில வாரங்கள் பொறுத்துப் பார்த்த அவன் இனிமேல் பொறுக்க முடியாது என்று தீர்மானித்து நகருக்கு மூதாட்டியைச் சந்தித்துத் தனது நிலைமையைச் சொன்னான்.

 “அவை அனைத்தையும் வீட்டுக்குள்ளிருந்து அப்புறப்படுத்து” என்று அவனுக்குச் சொன்னாள் மூதாட்டி.

திரும்பிய அவன் அவசர அவசரமாக ஒரு தொழுவத்தை அமைத்தான். அனைத்து மிருகங்களையும் அதற்குள் கொண்டு வந்து விட்டான். மீண்டும் அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் அவன் ஆச்சரியமாக உணர்ந்தான்.

வீடு அமைதியாகவும் இடவசதியுள்ளதாகவும் இருந்தது.

(கிழக்கைரோப்பிய நாட்டார் கதை)

Monday, April 18, 2011

மௌனத்தின் புன்னகை

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் அண்மையில் ‘மௌனத்தின் புன்னகை’ என்த தலைப்பில் வானொலி நிகழ்ச்சியொன்றினை பிறை எப்.எம். வானொலி ஊடே ஒலிபரப்பியது. ஒலிபரப்பப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரதான அங்கமாக நாடகங்கள் அமைந்திருந்தன. முஸ்லிம் சமூகத்தில் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளை வெவ்வேறு கோணங்களில் இந்நாடகங்கள் படம் பிடித்துக் காட்டின. இந்நாடகங்களில் நடித்த ஒரு கலைஞன் என்ற வகையில் இது பற்றிய எனது கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நான் செவ்வி காணப்பட்டேன். இந்தச் செவ்வி ‘எங்கள் தேசம்’ பத்திரிகையின் ஏப்ரல் 15 - 30, 2011 இதழில் 13ம் பக்கம் இடம்பெற்றுள்ளது.

1. வானொலி நாடகம் இஸ்லாமிய சமூக விழுமியங்களை இலகுவாக எடுத்துக்கூறுவதற்கான காத்திரமான ஊடகம் என்பதை மௌனத்தின் புன்னகை நிகழ்ச்சியில் இடம்பெற்ற இருபது நாடகங்களும் எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளன?

எனக்குக் கிடைத்த தகவல்களின் படி அதாவது அவற்றில் நடித்த ஒரு நடிகன் என்ற வகையில் என்னோடு பேசியவர்களது கருத்துக்களின்படி பரவலான நேயர்களை இந்நாடகங்கள் கவர்ந்துள்ளன. ஒரு கதையை அல்லது கட்டுரையை அல்லது கவிதையை ஒருவர் படித்தால்தான் அது என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நீண்ட நெடுங்காலமாக நாடகங்களுக்கு மனித சமூகத்தில் பெரு வரவேற்பு இருந்து வந்திருக்கிறது. நாடகமே சினிமாவாகவும் சின்னத் திரையாகவும் மாறியிருக்கிறது. அவை எப்படி மனிதர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன என்பதை நான் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை.

வானொலி நாடகங்களுக்கு அன்று முதல் இன்று வரை இருந்து வந்த மதிப்புக் குறைந்து விடவில்லை. முஸ்லிம் வானொலி நாடகங்களுக்காக நேரம் ஒதுக்கிக் கேட்டு வந்த நேயர்களையும் அவை சமூகத்தில் உண்டு பண்ணிய தாக்கங்களையும் நான் அறிவேன். இலங்கை முஸ்லிம்கள் நாடகம் என்ற கலை வடிவத்தை மொத்தமாகக் கைவிட்டு விட்டார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. கலை வடிவங்களில் நேரடியாக மக்களைச் சென்றடையும் ஒன்றுதான் நாடகம். இதை உணராத படியால் அல்லது இது பற்றிய விழிப்பு இல்லாத படியால் நமது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெறுமனே பத்திரிகைகளில் எழுதியும் வெளியிட்டும் வருகின்றோம்.

இந்த நாடகங்கள் ஒலிபரப்பான பின்னர் ஒரு பெரிய அலை வானொலி நாடகங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தினை நேரடியாக எனக்கு உணரக் கூடியதாக இருந்தது. இந்த அலை வரவேற்பு அலை மட்டுமல்ல. அதைப் பொதுவாகத் தாக்க அலை என்றுதான் சொல்லுவேன். ஒரு பிரச்சினையைச் சுற்றிய சமூக நியாயங்களை நாம் எடுத்துக் காட்டும் போது மக்கள் கூட்டம் அதை வரவேற்கிறது. அது நியாயப் பிறழ்வு கொண்டவர்களைப் பாதிக்கவும் யோசிக்கவும் வைக்கிறது. எனவே இந்நாடகங்கள் பாரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

இந்த நாடகங்களின் அதிர்வு இன்னும் சமூகத்தில் இருப்பதை அவ்வப்போது பாராட்டி வரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் நான் உணர்கிறேன். நாடகங்கள் ஒலிப்பரப்பாகி பல வாரங்கள் சென்ற பிறகும் கூட சில நண்பர்கள் நேரில் கண்டவுடன் இதுபற்றி என்னுடன் கதைக்கிறார்கள். வேறு தேவைகளுக்காகப் பேச ஆரம்பிக்கும் நண்பர்கள் இதையும் சேர்த்தே கதைக்கிறார்கள் என்பது இந்நாடகங்கள் இன்னும் அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன என்பதற்குச் சாட்சியாகும். இதற்குப் பிறகும் இவ்வாறான நாடகங்கள் ஒலிபரப்பாகாமல் போய் விட்டாலும் இந்த இருபது நாடகங்களையும் கேட்டவர்கள் தமது வாழ்நாளில் இதை மறக்க முடியாத அனுபவமாகக் கொள்வார்கள் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்.

Sunday, April 17, 2011

சந்தைக்குப் போன தில்சான்

என்னைச் சிரிக்க வைத்த ஒரு நகைச்சுவையை உங்களுடன் பகிரும் முயற்சியேயன்றி வேறில்லை.

பின் வரும் வலைப்புவுக்கு நீங்கள் விஜயம் செய்தால் மேற்கண்ட தலைப்பிலான ஒரு நகைச் சுவையை இரசிக்க முடியும்.

http://kalkudahmuslims.com/?p=1240

Friday, April 15, 2011

மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா - 2011

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 04

மலேசிய இலக்கிய விழா பற்றிய ஏராளமான சுவையான தகவல்கள் அவ்வப்போது கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சொல்லி விடாமல் அவ்வப்போது சொல்லுவதே நன்றாக இருக்கும் என்பதால் சிலவற்றைத் தவிர்த்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது வலைத் தளம் ஆரம்பித்து இரண்டு வருடங்களாக என்னை இணையத்தில் தேடும் சிலரும் வலைத் தளம் வைத்திருக்கிறேன் என்று அறிந்த சிலருமே வந்து போனார்கள். மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா பற்றிய கட்டுரை பதிவு செய்யப்பட்டதிலிருந்து தினம் சராசரி 40க்கும் 60க்கும் இடைப்பட்ட தொகையினர் உலகம் பூராகவுமிருந்து வந்து படித்துச் செல்கிறார்கள். எனது மூன்றாவது கட்டுரை வெளியாகியதிலிருந்து மூன்று வாரங்கள் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகளில் விழா பற்றிய கட்டுரை இரண்டாம் இடத்தில் இருந்தமை அதற்குச் சான்றாகும். அக்கட்டுரை இன்னும் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரையாகவே தொடர்கிறது. நான்காவது கட்டுரை வருகிறது என்று இடப்பட்ட முன்னறிவித்தலைக் கூட இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை 57 பேர் படித்திருக்கிறார்கள்.

மௌன ஓட்டம்

எனது கட்டுரைகள் பதிவிடப்பட்டதிலிருந்து இலங்கைக் குழுவினருக்குள் ளேயிருந்து எனக்கு யாரோ ஒருவர் தகவல் தருவதாக ஆளுக்காள் சந்தேகிக்கத் தொடங்கி விட்டது போல் தோன்றுகிறது. மூன்றாவது கட்டுரைக்குப் பின்னர் இந்த இறுக்கம் இன்னும் கூடி விட்டதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இவ்விழாவுக்குச் செல்லும் பேரார்வத்துடன் இருப்பவர்களும் கூட எதுவும் புரியாத நிலையில் இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதே தங்களுக்குத் தெரியவில்லை என்றும் குறித்த நபர்களுக்குத் தொலைபேசியில் அழைத்தாலும் கூடப் பதில் தருகிறார்களில்லை என்று சிலர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள்.

இந்த விழா சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு புதிய கைப்பேசி இலக்கம் பத்திரிகைகளில் தரப்பட்டிருந்தது. அந்த இலக்கத்துக்கோ தனிப்பட்ட இலக்கங்களுக்கோ தொடர்பு கொண்டாலும் கூட பதில் கிடைப்பதாயில்லை என்று மூத்த எழுத்தாளர் எஸ்முத்துமீரான் ஒருமுறை குறிப்பிட்டார்.

அப்படி ஏன் இவ்விடயங்களை இரும்புக் கோட்டைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நமக்குக் கேள்வி எழுவது நியாம்தானே! இதில் ஒளிப்பதற்கு எதுவுமே இல்லை. மூன்று கட்டுரைகளுக்கும் இரண்டு கவிதைகளுக்கும் பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி விமானக் கட்டணத்தை அறிவிப்பது. இவற்றை ஒளித்து மறைக்க வேண்டிய அவசியம் என்ன? மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயமிருக்கும். அப்படியானால் பொதுவாகக் கோரப்பட்ட கவிதைகளையும் கட்டுரைகளையும் ஒதுக்கி விட்டுத் தாங்களாகவே குறித்த நபர்களைத் தேர்ந்தெடுத்து விட்டார்களா என்ற சந்தேகம் கட்டுரை, கவிதை எழுதியனுப்பியவர்களுக்கும் நமக்கும் வருவது தவிர்க்க முடியாததுதான்.

Wednesday, April 13, 2011

வாகனக் கொட்டில் அடிமை

எனது பெயர் ஷஹீமா. நான் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் பிறந்தவள். நான் எனது பன்னிரண்டாவது வயதில் அமெரிக்காவுக்கு வந்தேன்.


நான் அமெரிக்காவுக்கு வந்தது கல்வி கற்பதற்காகவோ உறவினர்களைச் சந்திப்பதற்காகவோ அல்ல. மாறாக அமெரிக்கப் பிரம்மாண்டங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்வதற்காகவும் அல்ல. எனது வருகை ஒரு பெரிய கதை. யாருக்கும் நிகழக் கூடாத துன்பங்கள் நிறைந்த கதை. அக்கதையைத்தான் உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன்.

அலெக்ஸாண்ட்ரியாவில் வாழும் ஏழ்மைக் குடும்பங்களில் எமது குடும்பமும் ஒன்று. எனது பெற்றோருக்கு நான் உட்படப் பதினொரு பிள்ளைகள். ஒரேயொரு குளியலறை கொண்ட ஒரு வீட்டில் வசித்த மூன்று குடும்பங்களுள் எமது குடும்பமும் ஒன்று. தினமும் ஒரு வேளை உணவு கிடைப்பதே பெரும்பாடு. ஓர் அறைக்குள் ஒரேயொரு கம்பளிப் போர்வைக்குள்தான் அனைத்து சகோதர சகோதரிகளும் உறங்குவோம். அதுவும் நிலத்தில். தந்தையார் பல வாரங்களுக்குப் பின் வருவார். அவர் வீட்டுக்கு வந்தால் நிச்சயம் எங்களுக்கெல்லாம் அடி கிடைக்கும். காரணத்தை அவர் மட்டுமே அறிவார்.

கெய்ரோவில் வாழும் அப்தல் யூசுப் - அமல் முத்தலிப் என்ற செல்வந்தத் தம்பதியின் வீட்டில் வேலை செய்யுமாறு பெற்றோர் ஒரு நாள் என்னைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அப்போது எனக்கு வயது எட்டு.

உண்மையில் எனது மூத்த சகோதரிகளில் ஒருத்தி அங்கு வேலை செய்து வந்தாள். ஒரு முறை அவள் பணம் திருடி விட்டதாகக் குற்றஞ் சாட்டி அவளை நெருப்பால் சுட்டிருந்தார்கள். அவளது இடத்தை ஈடு செய்வதற்காக ஒரு பிள்ளையைத் தரவேண்டும் என்று எமது பெற்றோரை அப்தல் யூசுப் குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள். செல்வந்தக் குடும்பத்தின் அதிகாரத்துக்குக்குப் பயந்தும் எமது குடும்ப நிலை கருதியும் என்னை அவர்களிடம் வேலைக்காக ஒப்படைக்க வேண்டியிருந்தது. மாதச் சம்பளமாக முப்பது டாலர்களை அவர்கள் தீர்மானித்தார்கள்.

இரண்டு வருடங்களின் பின்னர் அப்தல் யூசுப் குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயரத் தீர்மானித்தது. தமது ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா பொருத்தமானது என்று அவர்கள் முடிவுக்கு வந்திருந்தார்கள். எனவே தமது ஐந்து பிள்ளைகளுடன் அக்குடும்பம் அமெரிக்காவுக்கு வரும்போது வேலைக்காரியான என்னையும் சேர்த்தே அழைத்து வந்தது.

Tuesday, April 12, 2011

உம்மு குல்தூம்

1920களில் வடஆபிரிக்கா முதற்கொண்டு மத்திய கிழக்கு வரை - முக்கியமாக அராபியத் தீபகற்பத்தில் வாழும் மக்களில் வாய்ப்புள்ள பலரும் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை கெய்ரோ நகரில் வந்து கூடிவிடுவது வழக்கமாக இருந்தது.

அன்றைய தினத்தில்தான் அறபுலகின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இசையரசியின் பாடற் கச்சேரி இடம்பெறும். ‘அறபுக் கலைகளின் தூதுவர்’ எனவும் ‘கிழக்கின் நட்சத்திரம்’ எனவும் வர்ணிக்கப்பட்ட அந்தப் பாடகியின் பெயர் உம்மு குல்தூம். ஒலிவாங்கியிலிருந்து இரண்டடி தள்ளி நின்றபடி ஒருகையில் தனது கழுத்தாடையை (Scarf) க் கட்டியபடி வாயைத் திறந்தாரானால் இந்தப் பூலோகமெங்கும் அறபு இசை வழிந்தோடும்.

மண்ணிலிருந்து விண்ணுக்கும் விண்ணிலிருந்து விளங்க முடியாத பிரபஞ்சத்தின் எல்லைகளுக்கும் மக்கள் அவரால் அழைத்துச் செல்லப்படுவார்கள். உணர்வு பெறும் ஒவ்வொரு இடைவெளியிலும் மக்களின் ஆரவாரத்தால் அந்தப் பிரதேசமே அதிர்ந்து அடங்கும். ஸ்ருதியும் லயமும் இயல்பாகவே இழைந்து வெளிவரும் கணீரென்ற உறுதியான அவரது உறுதியான குரலை இணையத் தளங் களில் இன்றும் கேட்கலாம். மத்திய கிழக்கில் இப்போதும் கூட அவரது பாடல்கள் கொண்ட ஒலிநாடாக்களையும் இறுவட்டுக்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இஸ்லாமியரிடம் மட்டுமன்றி இஸ்ரேலியரிடமும் அவர் பெயர் பெற்றிருந்தார். வருடமொன்றுக்கு பத்துலட்சம் இசை நாடாக்கள் விற்கப்பட்டன.

Friday, April 8, 2011

எலிப் புழுக்கைகள்

தமிழகத் தேர்தல் களம் சூடு பிடித்துப் போவதை கருணாநிதி மற்றும் ஜெ அன்கோக்களின் தொலைக்காட்சிகள் மூலம் அறியக் கிடக்கிறது.


தேர்தல்களில் படிப்பாளிகள் பெரும்பாலும் அக்கறை காட்டுவதில்லை. அது விலக்கப்பட்ட ஒரு சமாச்சாரமாகவோ அல்லது தனது கௌரவத்துக்குத் தகுந்த விடயமாகவோ அல்ல என்பது அவர்களது எண்ணங்களில் ஊறியுள்ள மிகத் தப்பான விடயம்.

இதைத் தனக்குச் சாதகமாக்கிய திமுக தேர்தலுக்கு முன்னரே சாதாரண மக்களுக்கு இலவச கலர் டீவி வழங்கியது. அதன் பின்னணியில் தமது பிடியிலுள்ள மீடியாவை மேலும் வலுப்படுத்துவதும் அதன் மூலம் விளம்பர வர்த்தகத்தில் கொடிகட்டுவதும் நோக்கங்களாகும். இந்த இலவசம் நன்றாக வேலை செய்கிறது என்பதைக் கண்டு கொண்டதன் பின் மேலும் சில இலவசங்கள் அறிவிக்கப்பட்டன. கள்ள வாக்கோ நல்ல வாக்கோ - வாக்களிக்கச் செல்பவர்கள் சாதாரண ஏழைகளே.

இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அம்மாவும் ஒரு நீளமான இலவசப் பட்டியலை அறிவித்துள்ளார். இரண்டு பட்டியல்களையும் பார்த்த போது தற்காலிகமாகவாவது கொஞ்சக் காலம் தமிழ் நாட்டில் வாழ்ந்தால் என்ன என்ற எண்ணம் வருகிறது. இரண்டு பட்டியலையும் படித்தால் இனித் தமிழகம் சுவனபுரியாகிவிடும் என்றுதான் தோன்றுகிறது.

Thursday, April 7, 2011

மருந்தற்ற மருத்துவம்

இணையத் தோப்பின் இலவசக் கனிகள் - 2




பெண்ணொருவர் மருத்துவம் பெறுவதற்காகவைத்தியசாலைக்குச் சென்றார். அவ்வேளை இளம் ஆண் வைத்தியர் ஒருவர் மருத்துவச் சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தார்.


அப்பெண்மணியை மூன்று நிமிடங்கள் பரிசோதித்த அவ்வைத்தியர் அப்பெண்மணி கர்ப்பம் தரித்திருப்பதாக அப் பெண்ணிடம் சொன்னார். இதைக் கேட்ட அப் பெண் அறையிலிருந்து வெளியேறி சத்தமிட்டு அலறியபடி நடைக் கூடத்தில் ஓடினாள். நடைக் கூடத்தில் அவளை எதிர் கொண்ட சற்று மூத்த வைத்தியர் அவளை நிறுத்தினார். என்ன நடந்தது என வினவிவிட்டு அப்பெண்ணை வேறு ஓர் அறையில் அமைதியாக உட்காரப் பணித்தார்.

நேரே இளம் வைத்தியர் இருந்த அறைக்கு வந்த அவர்,
“என்ன செய்கிறாய் நீ... அப் பெண்மணியின் வயது 69. அவளுக்கு நான்கு பிள்ளைகளும் ஏழு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். அவளிடம் போய் நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்று சொல்லியிருக்கிறாய்” என்று சொல்லி விட்டுக் கொபமாகப் பார்த்துக் கொண்டு நின்றார்.

மூத்த வைத்தியரின் பேச்சைச் சட்டை செய்யாமல் தனது அறையிலிருந்த அறிவித்தற் பலகையில் எதையோ எழுதியபடியிருந்த இளம் வைத்தியர் தனது பார்வையை விலக்காமல் மூத்த வைத்தியரிடம் கேட்டார்,

“அவளது விக்கல் இன்னும் நிற்கவில்லையா?”

தலைக்கறி மான்மியம்

தலைக்கறியில் எனக்கு ரசனையை ஏற்படுத்தி உசுப்பேற்றி விட்டவன் ரவீந்திரன்.


“அண்ணை... உங்களுக்குத் தெரியுமா... மீன் தலை சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது, கொலஸ்ட்ரோலையும் கட்டுப்படுத்தலாம்” என்கிற மேலதிக வைத்தியத் தகவலையும் சேர்த்துத் தலைக்கறியின் ருசியை அவன் விளக்கிய போது நாக்கில் ஜலம் ஊறியது. அப்படித்தான் அவன் சொன்னான்.

திணைக்களத்தில் என்னோடு கடமை செய்த ரவீந்திரன் தகவல்களை அச்சொட்டாகச் சொல்லுவான். எங்கள் குழுவில் அவன் வயதில் குறைந்தவன் என்ற போதும் எதையும் சுவையாகவும் உரிய சொற்களையும் பயன்படுத்திப் பேசத் தெரிந்தவன் என்பதால் ஒரு சமவயதுத் தோழனாகவே இருந்தான்.

முதன் முதலாக மீன் தலை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் நான் ஒரு பெரிய சிக்கலை எதிர் நோக்கினேன். என்னைத் தவிர வேறு யாரும் அந்தக் கறியில் கரிசனை காட்டவில்லை. வீட்டிலுள்ள ஏனையவர்கள் தமக்கென வேறு கறி ஆக்கிக் கொள்ள நான் தலைக் கறியில் புகுந்து விளையாடுவேன். ஒரு பெரிய மீன் தலையை நான் மட்டும் சாப்பிட்டாக வேண்டியிருந்தமையாலும் அதன் ருசியில் என்னை மறந்திருக்க வேண்டியிருப்பதாலும் சாப்பிட உட்காரும் போது ஒரு போர் வீரனைப் போல் அல்லது ஒரு விளையாட்டு வீரனைப் போலத் தயார் பண்ணிக் கொண்டே களத்தில் இறங்குவேன். சாப்பிட்டு முடியும் வரை உலகத்தின் எல்லாத் தொடர்புகளை விட்டும் என்னை அறுத்துக் கொள்வேன். போனில் என்னை யாரும் அழைத்தாலும் அதற்கு நான் பதில் சொல்வதில்லை என்றால் என் ஏற்பாடுகள் எப்படியிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.

Tuesday, April 5, 2011

வாயால் கெடும்!

ஒரு வேட்டைக்காரன் காடு முழுக்க அலைந்து திரிந்து விட்டு ஒரு பெரும் மர நிழலில் ஒதுங்கினான். அந்தப் பெரிய மரத்தின் அடிவாரத்தில் ஒரு மண்டையோட்டை அவன் கண்டான். அந்த மண்டையோடு வேட்டைக்காரனுடன் பேசியது.


“இதோ பார்... உனக்கு முன்னால் தெரியும் மலைக்கு அப்பால் ஏராளமான சுரைக்காய்கள் காய்த்துக் கிடக்கின்றன. உனது கிராமத்தவரை அழைத்து வந்து அவற்றைப் பிடுங்கி உங்கள் பசியைத் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் இதை எப்படி நீ கண்டுபிடித்தாய் என்று கேட்டால் அதைச் சொல்லி விடாதே” என்றது.

“நீ இந்த இடத்தில் ஏன் கிடக்கிறாய்?” என்று வேட்டைக்காரன் மண்டையோட்டிடம் கேட்டான்.

“எனது வாய் என்னைக் கொன்று விட்டது” என்று மட்டும் மண்டையோடு சொன்னது.

வேட்டைக்காரன் மலை கடந்தான். ஏராளமான சுரைக்காய்களுடன் கிராமத்தையடைந்து கிராமத்தவர்களிடம் விடயத்தைச் சொன்னான். “பேசும் மண்டையோடு எனக்கு இவை இருக்குமிடத்தைச் சொன்னது” என்றான். கிராமத் தலைவன் வேட்டைக்காரனைப் பொய்யன் என்று சொன்னான்.

“அப்படியானால் என்னுடன் வாருங்கள். நான் நிரூபித்துக் காட்டுகிறேன்” என்று சொல்லிக் கிராமத்தவரை மண்டையோடு கிடக்குமிடத்துக்கு அழைத்து வந்தான். மண்டையோட்டைப் பார்த்து அவன் பேசினான். ஆனால் மண்டையோட்டிடமிருந்து எந்தச் சலனமும் இருக்கவில்லை. கோபமடைந்த கிராமத்தவர்கள் வேட்டைக்காரனை அந்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட்டனர்.

இப்போது அந்த இடத்தில் இரண்டு மண்டையோடுகள் கிடந்தன.

முதலாவது மண்டையோடு மற்றதைப் பார்த்து “பார்த்தாயா மரணத்தில் நாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம்” என்றது.

“வாய்தான் இதற்குக் காரணம் என்பது உண்மை” என்றது இரண்டாவது மண்டையோடு,

(மேற்காபிரிக்க நாட்டார் கதை)

ரீமிக்ஸ் கடைகள்

அன்புக்குரிய - கமலாம்பாள் கபே மற்றும் சோனகர் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு,

இந்தக் கடிதம் தங்கள் இருவரிடமும் ஒரே கோரிக்கையை விடுப்பதற்காக எழுதப்படுகிறது என்பதால் தனிக் கடிதமாக தங்களுக்கு அனுப்பப்படவில்லை. கடிதத்தைப் படித்து முடித்ததும் தனிக் கடிதத்துக்கு அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

எனது காரியாலயத்துக்கு அண்மையில் ஒரு சிறிய இடைவெளித் தூரத்தில் தங்களது கடைகள் அமைந்திருப்பதால் தங்களது கடைகளுக்கு அவ்வப்போது தேனீர் அருந்தவும் சிற்றுண்டி மற்றும் ஆகாரம் சாப்பிடவும் தனியாகவும் சிலவேளை நண்பர்களுடனும் வந்து செல்லும் தங்களது முக்கியமான நுகர்வோரில் நானும் ஒருவன்.

தங்களது கடைகளில் விற்கப்படும் பருப்பு வடைகள் வௌ;வேறு நிறங்களில் இருப்பதை நான் அவதானிப்பேன். புதிய வடை மஞ்சள் நிறமாகவும் ஒருநாள் பிந்தி மீண்டும் பொரிக்கப்பட்டது பொன்னிறமாகவும் இருநாட்கள் பிந்தி மீண்டும் அதாவது மூன்றாவது முறையாகப் பொரிக்கப்பட்டவை கபில நிறமாகவும் இருக்கும் என்று என்னுடன் சேர்ந்து வடை சாப்பிட்ட நண்பர் ஒருவர் ஒருநாள் எனக்குச் சொன்னார். இருந்தாலும் பொன்னிறமாக இருக்கும் வடை சாப்பிடச் சுவையாகத்தான் இருக்கிறது.

Sunday, April 3, 2011

அக்குரோணி

மன்னார் அமுதனின்


அக்குரோணி

கவிதை நூல் - ஒரு கண்ணோட்டம்
 
பத்து வார்த்தைகளில் நம்முடன் பேசும் ஒரு நல்ல கவிதை நம்மில் ஏற்படுத்தும் சிந்தனைகளை எழுதுவதற்கும் அதனை நயந்து பேசுவதற்கும் பத்தாயிரம் வார்த்தைகள் தேவைப்படுகின்றன. வாசகனின் சிந்தனையை எவ்வளவு தூரத்துக்கு ஒரு கவிதை பரத்தி விசாலித்துச் செல்கிறதோ அந்தளவுக்கு அந்தக் கவிதை சிறப்புப் பெற்று விடுகிறது. நாம் படித்த ஒரு நல்ல கவிதையின் சில வரிகள், சில வார்த்தைகள், அதன் ஞாபகங்கள் இன்னும் நம் மனத்துள் சுழன்று கொண்டேயிருக்கின்றன என்றால் அது அந்தக் கவிதைக்கும் அதை எழுதிய கவிஞனுக்கும் கிடைத்து விட்ட வெற்றி என்று தயங்காமல் சொல்லி விடலாம்.


ஒவ்வொரு நல்ல கவிதைக்கும் அழகான உடலும் உற்சாகமான உறுப்புகளும் தெளிவான பேச்சும் நளினம் கொண்ட கவர்ச்சியும் அமரத்துவம் பெற்ற சுவாசமும் இருப்பதாக நான் கருதுகிறேன். அவ்வாறாக கவிதைகள் ஒரு போதும் மறக்கப்படுவதுமில்லை, மரித்துப்போவதும் இல்லை. அவற்றை ஒளித்து வைக்கவும் முடிவதில்லை, ஒழித்துக் கட்டவும் முடிவதில்லை. அவை சாகா வரம் கொண்டு சாசுவதமாக வாழும் வரத்தைத் தாமாகவே பெற்றுக் கொள்வதுடன் தன்னைப் படைத்த கவிஞனையும் காலாதி காலத்துக்கும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றன. இதைத்தான் “எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை” என்று கண்ணதாசன் குறிப்பிட்டார்.

இவ்வாறான கவிதைகளை இப்போதெல்லாம் நாம் காண்பது அரிது என்பதை நீங்களும் நானும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நமது கவிதைகள் இந்த நிலைக்குக் கீழேதான் இருக்கின்றன. அதில் எந்த இடத்தில் நாம் இருக்கிறோம் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதல் சரியாக இருக்கும் என்றால் என்றாவது ஒரு நாள் ஓர் அற்புதமான கவிதையை நாம் படைத்து விடுவோம். அந்த ஒரேயொரு கவிதையில் நாம் வாழ்ந்து கொண்டேயிருப்போம். இங்கே புரிதல் என்று நான் குறிப்பிடுவது என்னவென்றால், நான் எழுதுவது கவிதையா அல்லது கவிதையைப் போன்றதா - எனது மொழி நான் வெளிப்படுத்த நினைக்கும் கருத்துக்கு உகந்ததா, இல்லையா - நான் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் கவிதையின் உயிர் தங்கியிருக்கிறதா இல்லையா - மற்றொருவர் இதை எழுதியிருந்தால் இதைவிடச் சிறப்பாக இருந்திருக்குமா இல்லையா - கவிதைக்குத் தேவையற்ற வார்த்தைகள் இதில் அடங்கியிருக்கின்றனவா இல்லையா - எனக்குக் கவிதை வருமா இல்லையா - நான் வலிந்து எழுதுகிறேனா ஓவர் பில்டப் கொடுக்கிறேனா - போன்ற விடயங்களில் ஒவ்வொரு படைப்பாளியும் தெளிவடைந்திருக்க வேண்டும்.

Saturday, April 2, 2011

இரண்டு ரூபாய்







பத்து ரூபாவை வாங்கிக் கொண்டு

முன்னால் போ என்று துரத்தினாய்
எட்டு ரூபாவுக்கான
பயணச் சீட்டைத் தந்து விட்டு

இரண்டு ரூபாய்க்காக
வாய்திறக்க முற்பட்டால்
நெருக்குப் பட மட்டுமல்ல
என்னை
நிர்வாணப்படுத்தி விடவும் கூடும்
நீ

தருமதிக்கு முயற்சித்தால்
கெடுமதி விளைந்து விடுகிறது
அவ்வப்போது

பஸ்ஸில் ஏறிய பிறகுதான்
சில்லறை பற்றிய ஞாபகம் வருகிறது
‘சில்லறைகள்’ நிறைந்த நாட்டில்

‘நாணயம்’ இல்லாத உலகில்
இரண்டு ரூபாய் ஒன்றும்
பெரிய நாணயம் இல்லைத்தான்

ஆனாலும்
தவிர்க்க முடியுதில்லை -
நீ திருப்பித் தராத பணத்தில்
தன் குழந்தைகளுக்கு
இரண்டு டொபிகளை வாங்க எண்ணும்
ஓர் ஏழைத் தந்தையின் தவிப்பு
நினைவில் வருவதை!



Friday, April 1, 2011

முருகபூபதியின் மூன்றாவது கரம்

சரியாக எண்ணிப் பார்க்கவில்லை. பதினொருபேர் என்று நினைக்கிறேன். ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் கதிரையை எடுத்துக் கொண்டு அவர்கள் காரியாலயத்துக்குள் அமைதியாக வந்தார்கள். பின்னால் அவர்களது பொறுப்பாசிரியை புன்னகை பூத்த முகத்துடன் வந்தார். அமர்ந்து கொள்ளச் சொன்னதும் அவர்கள் அந்நாள் மாணாக்கரின் பவ்வியத்தோடு அமர்ந்தார்கள். அவர்களில் நால்வர் ஆண்கள். ஏனையோர் பெண்கள்.


நண்பர் ஒவ்வொருவராகச் சுகநலம் விசாரித்தார். பெயர்களைக் கேட்டறிந்தார். ஏராளமானோருடன் தான் சம்பந்தப்பட்டிருப்பதால் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை என்று மன்னிப்புக் கோரும் தொனியில் தெரிவித்தார். யார் யார் சாதாரண தரப் பரீட்சை எடுக்கிறீர்கள்? அடுத்த வருடம் தோற்றவுள்ளவர்கள் யார்? ஏனையோர் கற்கும் வகுப்புக்கள் யாவை? நன்றாகப் படிக்கிறீர்களா? உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினைகள் உள்ளனவா?

இவை ஒரு தந்தையின் பரிவோடும் ஒரு தாயின் பாசத்தோடும் கலந்து வெளிவந்த வினாக்கள். அவர்கள் மிகவும் மரியாதையுடன் ஒற்றை வார்த்தையில் புன்முறுவல்களினூடே பதிலளித்தார்கள். இருவர் அடுத்த ஆண்டில் க.பொ.த.ப. சாதாரண பரீட்சையும் மற்றுமிருவர் அதற்கடுத்த ஆண்டில் உயர்தரப் பரீட்சையும் எழுதுகிறார்கள்.